Saturday, October 7, 2023

40 வயதில் பதக்கம் வென்ற சீமா பூனியா


 சீனாவின் ஹாங்ஸு நகரில் நடந்துவரும் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான வட்டு எறிதலில் 58.42 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார் 40 வயதான இந்திய வீராங்கனை சீமா பூனியா. இதன்மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகளத்தில் பதக்கம் வெல்லும் மிகவும் மூத்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். பிடி உஷாவுக்குப் பிறகு மூன்று ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குகொண்டு தனிநபர் பதக்கம் வெல்லும் இந்தியப் பெண் என்ற பெருமையையும் அவர் வசமானது

2000-ல் சீனியர் லெவலில் போட்டிப்போட ஆரம்பித்த சீமா பூனியா இந்த 23 ஆண்டுகளில் மூன்று ஆசியப்போட்டி பதக்கங்கள், ஐந்து காமன்வெல்த் பதக்கங்கள் வென்றுள்ளார். நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்தியத் தடகள கூட்டமைப்பின் துணைத்தலைவராக இருக்கும் அஞ்சு பாபி ஜார்ஜுடன் சேர்ந்து இந்தியாவுக்காக போட்டிப்போட்டவர்களில் ஒருவர் சீமா

கடந்த இரண்டு வருடங்களில் அவரால் ஏறிய முடியாத தூரத்துக்கு வட்டை எறிந்து வெண்கலப் பதக்கத்தைத் தனதாக்கியிருக்கிறார் சீமா பூனியா. இதற்குப் பின்னணியில் நிறையச் சவால்களை எதிர்கொண்டிருக்கிறார் அவர். விளையாட்டு வீரர்கள் தங்கும் சிறப்புக் கிராமத்தில் வசிக்காமல் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியிருக்கிறார் சீமா. காரணம், குளுட்டன் அல்லாத உணவை மட்டுமே அவரால் சாப்பிட முடியும். இல்லையென்றால் ஒவ்வாமை காரணமாகத் தோளில் தடிப்புகள் ஏற்படும். இதனால் தனியாக ஏற்பாடு செய்யப்பட்ட டயட்டையே அவர் பின்பற்றுகிறார்.

No comments: