
திருமங்கலம் இடைத் தேர்தலின் வெற்றியினால் திராவிட முன்னேற்றக்கழகம் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளது. இந்தத் தேர்தலின் வெற்றிக்காக கடுமையாக உழைத்ததனால் மு.க. அழகிரிக்கு தென்மண்டல திராவிட முன்னேற்றக்கழக அமைப்புச் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை அரசியலில் அழகிரிøயத் தவிர்த்து எதனையும் செய்ய முடியாது. திராவிட முன்னேற்றக்கழகம் 2006 ஆம் ஆண்டு ஆட்சிப் பீடமேறியதில் இருந்து இதுவரை மூன்று இடைத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது. மூன்று இடைத்÷தர்தல்களும் மதுரையிலேயே இடம் பெற்றன. மூன்று இடைத்தேர்தல்களின் வெற்றிக்கு பின்னால் மு.க. அழகிரியின் பங்களிப்பு உள்ளது.
மதுரை மத்திய தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராக பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் மறைவினால் ஏற்பட்ட இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மதுரை மேற்குத் தொகுதியின் உறுப்பினரான அண்ணாதிராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர் சண்முகம் மரணமடைந்ததனால் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராஜேந்திரன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இப்போது மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் வீர இளவரசனின் மறைவினால் நடைபெற்ற திருமங்கலம் இடைத்தேர்தலில் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் லதா அதியமான் மிகப் பெரிய வெற்றிபெற்றுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற மூன்று இடைத் தேர்தல்களின் வெற்றியின் பின்னால் மு.க. அழகிரியின் செல்வாக்கு இருப்பதை மறுக்கமுடியாது.
திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியின் பலம் குறைந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியின் பலம் கூடிய நிலையில் லதா அதியமான் பெரு வெற்றி பெற்றுள்ளார்.
இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்காக பெரும் எடுப்பில் பிரசாரம் செய்தன. கடந்த தேர்தலின் போது தனித்துப்போட்டியிட்ட அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக்கழகம் அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றிக்காக களத்தில் இறங்கியது. கடந்த தேர்தலின் போது மூவேந் தர் முன்னேற்றக் கழகம் 7790 வாக்குகளைப் பெற்றிருந்தது. இந்தக் கட்சியின் வாக்குகள் எல்லாம் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு சென்று விட்டதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
திருமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றியை தக்கவைப்பதற்காக வைகோ சூறாவளிப் பிரசாரம் செய்தார். தலைவர்கள் அணி மாறினாலும் தொண்டர்கள் அவர்களின் பின்னால் செல்லவில்லை என்பதை திருமங்கலம் இடைத் தேர்தலின் முடிவு உணர்த்தியுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, பெற்றோல் கிடைக்காது மக்கள் திண்டாட்டம், மின் தடையால் தமிழகம் அனுபவிக்கும் அசௌகரியம், லொறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தினால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காது மக்கள் அசௌகரி யம் போன்ற காரணங்களால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றியில் சந்தேகம் ஏற்பட்டது. எனினும் இந்தத் தடைகளையும் தாண்டி திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற்றது. தமிழக அரசின் செயற்பாடுகளை திருமங்கலம் தொகுதி மக்கள் அங்கீகரித்துள்ளமையே வெளிக்காட்டுகிறது
.

திருமங்கலம் தொகுதியில் பணம் கைமாறியதாக பத்திரிகைகளில் அடிக்கடி செய்திகள் வெளியாகின. யார் பணம் கொடுத்தாலும், மக்கள் வாங்கினார்கள். ஆகையினால் வாக்காளர்களுக்கு வருமானம் தந்த இடைத் தேர்தல் என்ற விமர்சனம் பரவலாக எழுந்தது. பணம் பட்டுமாடா நடைபெற்றதாக செய்திகள் வெளியாகியதே தவிர கையும் மெய்யுமாக யாரும் அகப்படவில்லை.
திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர்கள் 38,399 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர் 40,923 வாக்குகளைப் பெற்றார். இடைத் தேர்தலில் 79,422 வாக்குகள் பெற்று மதுரை வரலாற்றில் பெரும் சாதனை செய்துள்ளõர்.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளர்கள் 4911 வாக்குகளை குறைவாகப் பெற்றுள்ளார். விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் 6834 வாக்குகள் குறைவாகப் பெற்றதுடன் கட்டுப்பணத்தையும் இழந்துள்ளார். விஜயகாந்தின் அதீத வளர்ச்சியை இந்த இடைத்தேர்தலின் தோல்வி கேள்விக் குறியாக்கி உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் அதன் தோழமைக் கட்சிகளும் திராவிட முன்னேற்றக்கழக அரசாங்கத்தை மோசமாக விமர்சித்தும் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தை தாக்கியும் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத் தன.
திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை ஒரு புறம் தள்ளி வைத்துவிட்டு தனது ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு பிரசாரத்தை நடத்தியது.
எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை மக்களுடன் தான் கூட்டணி என்று மேடை தோறும் கர்ஜித்து வந்த விஜயகாந்தின் கட்சி வேட்பாளர் கட்டுப்பணம் இழந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த முதல்வர் கனவில் மிதக்கும் விஜயகாந்துக்கு இந்தப் பின்னடைவு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஏதாவது கட்சியுடன் இணைய வேண்டும் என்ற உண்மையை திருமங்கலம் வாக்காளர்கள் விஜயகாந்துக்கு உணர்த்தியுள்ளனர்.
ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் ஆகியோருடன் முதல்வர் போட்டியில் கலந்து கொண்ட சரத்குமாரின் வேட்பாளர் வெறும் 837 வாக்குகளைப் பெற்று சரத்குமாரை அதிர்ச்சிடைய வைத்துள்ளனர். பேரம் பேசும் சக்தி எதுவும் இல்லாத சரத்குமாரின் அரசியல் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
மதில் மேல் பூனையாக இருந்த டாக்டர் ராமதாஸ் இறுதி முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். காரசாரமான அறிக்கைவிட்டு முதல்வர் கருணாதிநிதியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திய டாக்டர் ராமதாஸுக்கு திருமங்கலம் தேர்தலின் முடிவு படிப்பினையை ஊட்டியுள்ளது.
இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது சகஜம் தான். எனினும் வட மாநிலத்தில் நடந்த இடைத் தேர்தலில் ஆளும் கட்சிகள் தோல்வியடைந்துள்ளன.
ஜார்க்கண்ட் மாநில முதல்வராவதற்காக இடைத்தேர்தலில் போட்டியிட்ட சிபு சோரன் தோல்வியடைந்தார். மேற்கு வங்கத்தில் இடதுசாரி கூட்டணி வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார். நந்தி கிராமத்தில் 5000 வாக்குகளால் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி இடைத்தேர்த்லில் 40000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
எனவே வட மாநில இடைத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தமிழக அரசின் ஆட்சிக்கு திருமங்கலத்தின் மக்கள் அங்கீகாரமளித்துள்ளனர்.
திருமங்கலம் இடைத்தேர்தலின் வெற்றிக்காக பாடுபட்ட மு.கா. அழகிரிக்கு தென்மண்டலத் திராவிட முன்னேற்றக்கழக அமைப்புச் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திருமங்கலம் இடைத் தேர்தலின் வெற்றிக்குப் பின்னர் உரையாற்றிய முதல்வர் இந்த வெற்றிக்காக அழகிரிக்கு பரிசு வழங்கப்படும் என்றார். முதல்வர் உரையாற்றிய 18 மணித்தியாலயத்தினுள் அழகிரிக்கு கட்சியின் பொறுப்பான பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டாலினுக்கு கட்சியின் பொறுப்பான பதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்து சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் தான் அவருக்கு கட்சியின் பொறுப்பான பதவி வழங்கப்பட்டது. சூட்டோடு சூடாக அழகிரிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி நியமன எம்.பி.யாகி மத்திய அமைச்சராக உள்ளார். விஜயகாந்தின் மைத்துனர் சதீஷ் கட்சியின் பொறுப்பானதொரு பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். சரத்குமார் தன் மனைவி ராதிகாவுக்கு உபதலைவர் பதவி வழங்கி உள்ளார். கட்சியின் வளர்ச்சிக்காக இவர்கள் எதனையும் செய்யவில்லை.
மூன்று இடைத்தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றியைத் தேடிக் கொடுத்த அழகிரிக்கு முக்கிய பதவி கொடுத்ததை திராவிட முன்னேற்றக்கழகத்தில் உள்ள எவரும் எதிர்க்கவில்லை. தென் மண்டலத்தில் குறைந்திருக்கும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் செல்வாக்கை அழகிரி உயர்த்துவார் என்ற நம்பிக்கை கழகத்தின் தலைவர்களிடம் உள்ளது.
எதிர்க்கட்சிகள் கூட விமர்சனம் செய்ய முடியாத வகையில் மகனுக்கு பொறுப்புக்கொடுத்து அழகு பார்த்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
வர்மா
வீரகேசரி வார வெளியீடு 18 01 2009