Sunday, January 4, 2009

கெளரவப்பிரச்சினையான திருமங்கலம் இடைத்தேர்தல்


திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் நடந்து முடிந்த அதிரடி மாற்றங்கள் தந்தைக்குப் பின் தனயன் என்பதை வெளிப்படுத்தியுள்ளன. கட்சித் தலைமையை மகன் ஸ்டாலினிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி இருந்து ஆலோசனை செய்ய வேண்டும் என்றே முதல்வர் கருணாநிதி விரும்புகிறார்.
முதல்வர் கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலின் தான் என்பது எப்போதோ முடிந்த முடிவு. அந்த முடிவை அமுல்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. கலைஞருடன் இணைந்து கட்சியை வழிநடத்தும் பேராசிரியர் அன்பழகனே, ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்வதாக பல மேடைகளில் அறிவித்தார். ஆனால், கட்சியில் உள்ள சில மூத்த அரசியல்வாதிகள் சிலர் ஸ்டாலினிடம் கழகப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு எதிர்ப்புக் காட்டினார்கள். அவர்களின் எதிர்ப்பு வெளிப்படையாக இல்லாவிட்டாலும் சாதுர்யமான தமது நடவடிக்கையின் மூலம் ஸ்டாலினுக்கு கிடைக்க வேண்டிய முக்கிய விவகாரங்களை தள்ளிப்போட்டுக் கொண்டே சென்றனர்.
ஸ்டாலின் துணை முதல்வராகிறார். ஸ்டாலினுக்கு உபதலைவர் பதவி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவிச் செயலாளராக ஸ்டாலின் தெரிவாகப் போகிறார் என்று பரபரப்பாக செய்திகள் வெளியாகின.
ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சி மிகவும் அபரிமிதமானது. முதல்வர் கருணாநிதியின் மகன் என்பதைத் தாண்டி பல போராட்டங்களில் சிறைக்கு சென்று வளர்ந்தவர் ஸ்டாலின். தந்தைக்குப் பின்னர் தனயன் முடி சூடுவது என்பது இந்திய அரசியலில் சம்பிரதாயமாகி விட்டது. இதற்கு ஸ்டாலினும் விதிவிலக்கு அல்ல.
ஸ்டாலினின் வளர்ச்சிக்காக புதிய பதவி உருவாக்கப்படுமா? அன்பழகனின் பதவி பறிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தபோது யாரும் எதிர்பாராத வகையில் ஆற்காடு வீரõசாமியின் பொருளாளர் பதவி பறிக்கப்பட்டு விட்டது. அமைச்சர் ஆற்காடு வீரõசாமியின் அண்மைக்காலச் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை. அவரின் மந்திரிப் பதவி பறிக்கப்படலாம் என்ற கருத்து நிலவியது. இந்த நிலையில் ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று பதவிகளும் மிகவும் முக்கியமானவை. அந்த முக்கிய பதவிகளில் ஒன்றில் ஸ்டாலின் அமர்ந்துள்ளார். ஸ்டாலினுக்கு முக்கிய பதவியைக் கொடுப்பதற்கு அழகிரியும் மாறன் குடும்பமும் இடைஞ்சலாக இருப்பதாக ஒரு கருத்து நிலவியது.
மாறன் குடும்பத்துடன் உறவை ஏற்படுத்தக் கூடாது என்பதில் அழகிரி மிகவும் பிடிவாதமாக இருந்தார்.
அழகிரியைச் சமாதானப்படுத்தி பிரிந்த குடும்பத்தை ஒன்றாக்கியதில் ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உள்ளது.
கட்சிக்குள் ஸ்டாலினுக்கு பதவி வழங்கும் அதே வேளை அழகிரிக்கும் முக்கிய பொறுப்பு கொடுக்க வேண்டிய நிலை இருந்தது. அழகிரியைச் சமாதானப்படுத்துவது சற்று கடினமானது. உதவி செய்வதென்றõல் எவ்வளவு தூரம் இறங்கி வருவாரோ அவ்வளவு தூரம் இறங்கி வந்து உதவி செய்வார். எதிர்த்தாரென்றால் விரைவில் சமாதானமாக மாட்டார்.
திருமங்கலம் இடைத் தேர்தலின் பிரசாரத்திற்கான பொறுப்பு அழகிரியிடம் வழங்கப்பட்டுள்ளது. அண்ணன் அழகிரியும் தம்பி ஸ்டாலினும் சேர்ந்து திருமங்கலம் இடைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் ஆற்காடு வீரõசாமியின் முக்கியத்துவத்தை கட்சிக்குள் குறைத்தது ஏனைய அமைச்சர்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. ஸ்டாலினை எதிர்ப்பவர்களுக்கும் இதே நிலை வரும் என்பது சூசகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக்கழக உட்கட்சித் தேர்தலில் ஸ்டாலினுக்கு வேண்டியவர்களே பதவியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் எதிர்காலத்தில் ஸ்டாலின் தலைவராவதற்கு எந்தத் தடையும் இருக்காது.


ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் திருமங்கலம் இடைத் தேர்தல் பரீட்சைக் களமாக உள்ளது. திருமங்கலம் தொகுதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற்ற தொகுதி. ஆகையினால் வெற்றி நிச்சயம் என்று முடிவு செய்த ஜெயலலிதா தனது கட்சி வேட்பாளரை களத்தில் நிறுத்தியுள்ளார்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற்ற தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை கவிழ்ப்பேன் என்ற உறுதியுடன் அழகிரி களத்தில் இறங்கியுள்ளார். திருமங்கலம் இடைத் தேர்தலில் தோல்வியடைந்தால் மதுரையில் உள்ள அழகிரியின் செல்வாக்கும் குறைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்யும் நிலை ஏற்படலாம். ஆகையினால் தனது முழு செல்வாக்கையும் பிரயோகித்து திராவிட முன்னேற்றக்கழக வேட்பாளரின் வெற்றிக்காக அழகிரி பாடுபடுகிறார்.
விஜயகாந்தின் தேசிய முன்னேற்ற திராவிடக் கழகத்துக்கும் இந்த இடைத் தேர்தல் கௌரவப் பிரச்சினையாக உள்ளது. கடந்த தேர்தலில் பெற்ற வாக்கை விட கூடுதலான வாக்கைப் பெற வேண்டும். அதனை விட்டு குறைந்த வாக்குகளைப் பெற்றால் விஜயகாந்தின் செல்வாக்கு சரிந்து விட்டது என்ற பிரசாரம் முன்னெடுக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு திருமங்கலம் இடைத்தேர்தலில் பெறப்போகும் வாக்குகள் மிகவும் முக்கியமானதாக அமையும்.
விஜயகாந்த், அவரின் மனைவி பிரேமலதா, மைத்துனர் சதீஸ் ஆகியோர் திருமங்கலத்தில் பிரசாரம் செய்கின்றனர். விஜயகாந்தின் குடும்பமே வெற்றிக்காக பிரசாரத்தில் குதித்துள்ளது.
விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் கடந்த தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக்கழக வாக்குகளைப் பிரித்தனர். இந்த தேர்தலிலும் பிரதான கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கும் வல்லமை விஜயகாந்தின் கட்சிக்கு உண்டு. திராவிட முன்னேற்றக்கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியன வெற்றி பெறுவது விஜயகாந்தின் கையில்தான் உள்ளது. தேசிய முன்னேற்ற திராவிட கட்சியின் வேட்பாளருக்குக் கிடைக்கப் போகும் வாக்குகள் தான் திருமங்கலம் இடைத் தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கப்போகிறது.
சரத்குமாருக்கு இது முதலாவது தேர்தல். சரத்குமாரின் கட்சி சந்திக்கும் முதல் தேர்தலில் அக்கட்சி நான்காவது இடத்தைப் பிடித்தால் அதற்கு எதிர்காலம் உண்டு. இல்லையேல் அக்கட்சி வளர்வதற்கு நீண்ட நாட்கள் செல்லும்.
சரத்குமார் கைதேர்ந்த அரசியல் வாதியாக மாறி விட்டார். தனது மனைவி ராதிகாவை உப தலைவராக்கி விட்டார். தொண்டர்கள் விரும்பினார்கள் மனைவி உபதலைவராகி விட்டார் என்கிறார் சரத்குமார். சரத்குமாரும் குடும்ப சமேதாராய் பிரசாரத்தில் இறங்கி உள்ளார்.தமிழகத்தில் புதிய கூட்டணியை ஏற்படுத்துவதற்காக திருமங்கலம் இடைத் தேர்தல் முடிவு வரை சில கட்சிகள் காத்திருக்கின்றன.

வர்மா
வீரகேரரி வாரவெளியீடு 04 12 2008

No comments: