
சிம்பாப்வே பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் சிம்பாப்வே அணி இரண்டு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தேர்வு செய்தது. 48.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த பங்களாதேஷ் 124 ஓட்டங்கள் எடுத்தது.
ரக்புல் ஹசன் 28 ஓட்டங்களையும் முஸ்ரபுல் ரஹீம் 22 ஓட்டங்களையும் எடுத்தனர். பிறைசின் பந்து வீச்சில் பங்க ளாதேஷ் வீரர்கள் தடுமாறினார்கள். இரண்டு ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 10 ஓவர்கள் பந்து வீசிய பிறைஸ் 22 ஓட்டங்களைக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பிளேக் மூன்று விக்கெட்டுகளையும், ரெயின் ஸ்ரூட், சிக்கும்புரா, மசகட்ஸா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 48.1 ஓவர்கள் பந்து வீசிய சிம்பாப்வே வீரர்கள் ஐந்து ஓட்டங்களை மட்டும் உதிரிகளாகக் கொடுத்தனர்.
125 என்ற இலகுவான ஓட்ட எண்ணிக்கையுடன் வெற்றிக்காகக் களமிறங்கிய சிம்பாப்வே அணி 49.2 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்கள் எடுத்து இரண்டு விக்கெட்களினால் வெற்றி பெற்றது.
உல்லர் அதிகபட்சமாக 24 ஓட்டங்கள் எடுத்தார். ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.
ஆறு பந்துகளில் ஆறு ஓட்டங்கள் அடிக்க வேண்டிய சூழ்நிலையில் துடுப்பெடுத்தாடிய பிறைஸ் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து வெற்றியை தேடிக் கொடுத்தார்.
மோட்டாசா, சஹீப் அல் ஹசன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் ருபல் ஹசன், மொஹமதுல்லா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனாக சிம்பாப்வே வீரர் றைமன் பிறைஸ் தேர்வு செய்யப்பட்டார்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் சிம்பாப்வே முதல் வெற்றியை பெற்றுக் கொண்டது. பங்களாதேஷில் நடந்து முடிந்த முத்தரப்புப் போட்டியில் மூன்றாவது நாடாகக் கலந்துகொண்ட இலங்கை அணிக்கு சிம்பாப்வே பங்களாதேஷ் ஆகிய இரண்டும் கடும் நெருக்குதலை கொடுத்தன.
No comments:
Post a Comment