Monday, January 19, 2009

அந்தக்காலத்து எஸ்.எம்.எஸ்


எஸ்.எம். எஸ். என்பது இன்றைய சமுதாயத்துடன் ஒன்றி விட்டது. 1940 களில் எஸ்.எம்.எஸ்.என்றால் பிரபல இசை அமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவைக் குறிக்கும் வார்த்தையாக அமைந்தது.
கவியரசு கண்ணதாசனின் முதல் பாடலுக்கு இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் திறமையை இனம் கண்டவர் ரி.எம். சௌந்தரராஜனின் முதலாவது பாடலுக்கு இசை அமைத்தவர். எம்.ஜி.ஆரின் முதலாவது கொள்கை விளக்கப் பாடலை உருவாக்கியவர் போன்ற பெருமைகளை உடையவர் எஸ்.எம்.சுப்பையாநாயுடு.
மூன்று தலைமுறை நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்த இவரின் குடும்பத்துக்கும் இசைக்கும் எதுவித தொடர்பும் இல்லை.
முத்து சாமி நாயுடு என்ற பொலிஸ்காரனுக்கு 1914 ஆம் ஆண்டு பிறந்தவர் சுப்பையா நாயுடு. திருநெல்வேலி மாவட்ட கடையநல்லூரில் பிறந்த சுப்பையா நாயுடு சிறுவயதில் அடங்காத பிள்ளையாக இருந்தார். சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தால் மகன் திருந்துவான் என்ற நம்பிக்கையில் சுப்பையா நாயுடுவை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அழைத்துச் சென்றார் தகப்பன்.
சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் பொறுப்பதிகாரி சுப்பையா நாயுடுவின் மேல் இரக்கப்பட்டு சிறுவனை சீர்திருத்தப்பள்ளியில் அனுமதிக்காது தனது பொறுப்பில் வளர்த்தார்.
துடுக்குத்தனம் மிகுந்த அடங்காத சிறுவன் சுப்பையா நாயுடு அங்கும் தன் கை வரிசையைக் காட்டினார். சுப்பையா நாயுடுவின் நடவடிக்கை
பிடிக்காததனால் அவரை மீண்டும் தகப்பனிடம் அனுப்பி வைத்தார் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியின் பொறுப்பதிகாரி.
அடங்காத பிள்ளையைஅடித்து வளர்த்தார் தகப்பனார். வீட்டிலே இருந்தால் பிரச்சினைஅதிகமாகும் என்பதனால் 100 ரூபா காசுடன் வீட்டை விட்டு வெளியேறினார். சுப்பையா நாயுடு. சிங்கப்பூருக்குச் சென்றால் கை நிறைய சாம்பாதிக்கலாம் என்று அறிந்ததும் சிங்கப்பூர் செல்வதற்காக தஞ்சாவூருக்குச் சென்றார்.
தஞ்சாவூரில் முகாமிட்டிருந்த ஜகந்நாத ஐயரின் நாடகக் கம்பனியில் இருந்த இரண்டு சிறுவர்கள் ஓடி விட்டனர் என்ற செய்தி பரபரப்பாக இருந்த வேளையில் தான் சுப்பையா நாயுடு தஞ்சைக்குச் சென்றார். சிறுவனான சுப்பையா நாயுடுவைப் பார்த்த ஒருவர் நாடகக் கம்பனியில் இருந்து ஓடி வந்த சிறுவன் என்று நினைத்து அவரைப் பிடித்துக் கொடுக்க முயற்சி செய்தார். நிலைமையை உணர்ந்து சுப்பையா நாடக கம்பனி எங்கே இருக்கிறது என்று கேட்டு சென்று அங்கு தஞ்சமடைந்தார்.
விதி சுப்பையா நாயுடுவை நாடகக் கம்பனியில் இணைத்தது. அதன் காரணமாக மிகச் சிறந்த இசை அமைப்பாளர் ஒருவர் தமிழகத்திரை உலகுக்கு கிடைத்தார். சுப்பையா நாயுடுவின் குரல்வளம் நன்றாக இருந்ததால் அவருக்கு நாடகக் கம்பனியில் இடம் கிடைத்தது. ஜாகந்நாதையரிடமிருந்து நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை பிறந்தபோது சுப்பையா நாயுடு அவருடன் சென்றார். சுவாமி ராஜமாணிக்கப்பிள்ளையின் ஆசியுடன் தனது சங்கீத அறிவை வளர்த்தார் சுப்பையா நாயுடு
.
நவõப்ராஜ மாணிக்கம் பிள்ளையின் நாடகக் கம்பனியில் நடிகராக இருந்த சி.எஸ். ஜெயராமன் தந்தையிடம் இசைப்பயிற்சி செய்யும் போது அதனை கவனமாகக் கேட்டு சங்கீத அறிவை வளர்த்தார் சுப்பையா நாயுடு. இசைக்கலைஞர் டி.என். சுப்பிரமணிய பாகவதரிடம் கீர்த்தனையும், ராஜகோபால் அய்யரிடம் ஆர்மோனியமும் கற்று தனது சங்கீத அறிவை வளர்த்தார். சுப்பையா நாயுடு கம்பனியின் முழு நேர ஆர்மோனியக் கலைஞரானார். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் பக்த ராமதாஸ் என்ற நாடகம் 1935 ஆம் ஆண்டு திரைப்பட மானது. அப்போது எம்.எஸ். சுப்பையா நாயுடுவின் ஆர்மோனிய இசை திரையில் ஒலித்தது. அதன் பின்னர் கோவை சென்றல் ஸ்டூடியோவில் மாதச் சம்பளத்துக்கு ஆர்மோனியக் கலைஞராக கடமையாற்றும் சந்தர்ப்பம் எம்.எஸ். சுப்பையா நாயுடுவுக்குக் கிடைத்தது. ரம்பையின் காதல், பிரகலாதா, ஆர்யமாலா, ஜதகல பிரதாபன், சாலிவாகனன் என்மகன் ஆகிய படங்களில் சுப்பையா நாயுடுவின் ஆர்மோனிய இசை ஒலித்தது.எம்.ஜி.ஆர். முதன் முதலாக நடித்த ராஜகுமாரி என்ற படத்தில் சங்கீத டைரக்ஷன் மெட்டுக்கள் எம்.எஸ். சுப்பையா நாயுடு என்ற பெயர் ஜொலித்தது
ஜுபிடரின் அபிமன்யு படத்தின் காதல் காட்சிக்காக எழுதப்பட்ட பாடலுக்கு எஸ்.எம். சுப்பையா நாயுடு பலவிதமான மெட்டுக்களை அமைத்தார் எனினும், சரியாகப் பொருந்தவில்லை. ஸ்ரூடியோவில் உதவியாளராக இருந்த பையன் போட்ட மெட்டை தற்செயலாக கேட்ட சுப்பையாநாயுடு அந்த மெட்டை பயன்படுத்தினார். திருச்சி லோகநாதனும் ஜீவரத்தினமும் இணைந்து பாடிய புது வசந்தமாமே வாழ்விலே என்ற பாடல் மிகவும் பிரபல்யமானது. அப்பாடலுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் என்று போற்றப்படும் எம்.எஸ். விஸ்வநாதன். இப்பாடலுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் தான் இசையமைத்தார் என்ற உண்மையை பின்னர் சுப்பையா நாயுடு வெளியிட்டார்.
எம்.ஜி.ஆர். முதன் முதலாக கதாநாயகனாக நடித்த "ராஜகுமாரி' படத்துக்கு சங்கீத் டைரக்ஷன், மெட்டுக்கள் எஸ்.எம்.சுப்பையா நாயுடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பழைய படங்களுக்கு ஒருவர் இசையமைக்க இன்னொருவர் மெட்டமைப்பார். கன்னியின் காதலி படத்தின் 10பாடல்களுக்கு சுப்பையா நாயுடுவும் ஐந்து பாடல்களுக்கு சுப்ப ராமனும் இசையமைத்தனர். மோகினி படத்துக்கு சுப்பராமனும் சுப்பையா நாயுடுவும்இசை அமைத்தனர். திகம்பர சாமியார் படத்துக்கு ஜி.ராமநாதனும், சுப்பையா நாயுடுவும் இசை அமைத்தனர்.
கிருஷ்ண விஜயம் படத்துக்கு சுப்பையா நாயுடுவும். சி.எஸ். ஜெயராமனும் இசையமைத்தனர். பாப நாசம் சிவன் எழுதிய ஐந்து பாடல்களுக்கு அவரே மெட்டமைத்தார். சுப்பையா நாயுடுதான் வாத்திய இசையை சேர்த்தார்.
எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்களையும், பிரசாரப்பாடல்களையும் பாடியவர் ரி.எம். சௌந்தரராஜன் எம்.ஜி. ஆருக்காக ரி.எம். சௌந்தரராஜன் பாடிய முதலாவது பாடல் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார். மலைக்கள்ளன் படத்தில் இடம் பெற்ற இப்பாடல் இந்தக் காலத்துக்கும் பொருத்தமாக உள்ளது. இப்பாடலுக்கு இசை அமைத்தவர் சுப்பையா நாயுடு.
பட்டுக்கோட்டையார் பாப்பாக்களுக்குக் கூறிய அறிவுரை திருடாதே பாப்பா திருடாதே எம்.ஜி. ஆரின் கொள்கை விளக்கப்பாடல்களில் ஒன்றான இப்பாடலை தமிழ்த் திரையுலகுக்குத் தந்தவர் சுப்பையா நாயுடு.
19ஆம் நூற்றாண்டில் தமிழை வாழவைத்த தெய்வீகக்கவிஞர் வள்ளலார். இவருøடய பெருமையுடன் "நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்' என்ற விருத்தத்தை மிகவும் நேர்த்தியாக சூல மங்களம் ராஜ லக்ஷ்மியின் குரலில் தவளவிட்டவர்.
கொஞ்சும் சலங்கை படத்தில் சிங்கார வேலனே தேவா என்ற பாடல் காலத்தால் அழியாது சாகாவரம் பெற்ற பாடல்களில் ஒன்று. காரைக் குறிச்சி அருணாச்சலத்தின் நாதஸ்வர இசைக்கு போட்டியாக ஜானகியின் குரல் ஒலித்தது.
சிங்கார வேலனே தேவா என்ற பாடலுக்கான நாதஸ்வர இசையை ஒலிப்பதிவு செய்து விட்டு நாதஸ்வர ஸ்ருதிக்கேற்ப பெண் குரலைத் தேடினார்கள். பி.லீலா, லதா மங்கேஸ்கர் எனப்பலரும் நாயனத்தின் சுருதிக்கு இசைவாக பாட தங்களால் முடியாது எனக் கூறிவிட்டனர். நாதஸ்வர இசைக்கு லீலாவின் குரல் இசைவாக இருக்கும் என்று மீண்டும் ஒருமுறை அவரிடம் சென்று கேட்டார்கள். ஜானகியின் குரல் நாதஸ்வர இசைக்கு பொருத்தமானதாக இருக்கும் என்று லீலா கூறினார்.
லீலாவின் கூற்று பொய்க்கவில்லை. நாதஸ்வர இசைஎது ஜானகியின் குரல் எது என்ற வேறுபாடு காண முடியாத வகையில் இரண்டும் இணைந்துள்ளன.1962ஆம் ஆண்டு தனித்தனியாக ஒலிப்பதிவு செய்யப்பட்ட நாதஸ்வர இசையையும், ஜானகியின் பாடலையும் ஒன்றாக ஒலிப்பதிவு செய்த ஒலிப்பதிவாளர் ஜீவா பாராட்டுக்குரியவர்.
ஆமேரி ராகத்தில் அமைந்த சிங்கார வேலனே தேவா என்ற பாடல்தான் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலின் வெற்றிக்கு மூல காரணமாக அமைந்தது.
தியாகராஜா பாகவதர் பாடிய "ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற வர்ண மெட்டில் "ராதே நீ என்னை விட்டுப் போகாதடி' என்ற பாடலை ரி.எம். சௌந்தரராஜனின் குரலில் வெளியிட்டார். இன்றைய ரீ மிக்ஸ்பாடல்களுக்கு இப்பாடல் முன்னோடியாக உள்ளது.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார். திருடாதே பாப்பா திருடாதே. சிங்கார வேலனே தேவா மட்டுமல்ல 1969 ஆம் ஆண்டு மன்னிப்பு படத்தில் சுப்பையா நாயுடுவின் இசையில் உருவான "நீ எங்கே என் நினைவுகள் அங்கே', "வெண்ணிலா வானில் வரும் வேளை' போன்ற பாடல்களும் அவரின் திறமைக்கும் சான்றாக உள்ளன.
ரமணி
மித்திரன் 04/ 11.01.2009

No comments: