
கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க அதிபராக இருந்த புஷ் வெள்ளை மாளிகையில் இருந்து புறப்படுவதற்கு முன் கடைசி நாளில் என்னென்ன செய்தார் என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் பதவி வகிப்பவர்கள் தங்கள் பதவி காலத்தின் கடைசி நாளில் குற்றவாளிகளின் தண்டனை குறைப்புக்கு உத்தரவிடுவது வழக்கம். அதன்படி, 189 பேரை மன்னித்து விடுதலை செய்யவும். 9 பேரின் தண்டனையை குறைக்கவும் புஷ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இங்கிலாந்து, ரஷ்யா, ஜார்ஜியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், தென் கொரியா, இஸ்ரேல், பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் புஷ் பேசினார்.
முன்னாள் அதிபர் புஷ் தனது டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் குடியேறி உள்ளார்.
அதிபர் பதவியை ஏற்பதற்கு முன் நேற்று காலையிலேயே ஒபாமா, மனைவி மிஷெலுடன் வெள்ளை மாளிகைக்கு சென்றார். அங்கு அவர்களை புஷ் தனது மனைவி லாராவுடன் வரவேற்றார். துணை ஜனாதிபதியாக பதவி ஏற்க இருந்த ஜோ பிடனும் தன் மனைவியுடன் வந்திருந்தார். அவர்களுக்கு புஷ் தேநீர் விருந்து கொடுத்தார்.
பின்னர் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின்னர், ஒபாமாவும், புஷ்சும் பதவி ஏற்பு விழா நடக்கும் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு காரில் சென்றனர். புதிய அதிபராக ஒபாமா பதவி ஏற்றதும், புஷ், தனது மனைவி லாராவுடன் விடைபெற்றார். அவர்களை புதிய அதிபர் ஒபாமா, துணை அதிபர் ஜோ பிடன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.
வாஷிங்டனில் உள்ள ஆன்ட்ரூஸ் விமானப்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் புஷ், மனைவியுடன் புறப்பட்டார். அங்கிருந்து விமானப்படை பயணிகள் விமானத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மிட்லாண்ட் நகருக்கு சென்றனர். அங்கு அவருக்கு உள்ளூர் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து கார் மூலம் க்ராவ்போர்டு நகரில் உள்ள பண்ணை வீட்டில் புஷ் குடியேறினார்.
1 comment:
தகவலுக்கு நன்றி.
Post a Comment