Sunday, February 8, 2009

நவரசத்தில் ஒன்று மறைந்து விட்டது.


கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்குப் பின்னர் நகைச்சுவையால் தமிழ் ரசிகர்களைப் பரவசப்படுத்தியவர் நாகேஷ். நடிகர் திலகம் , மக்கள் திலகம், உலகநாயகன், சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, அல்டிமேட்ஸ்டார் என்று பட்டப் பெயர்களுடன் நடிகர்கள் புகழ் பெற்றுக்கொண்டிருக்கையில் நாகேஷ் என்ற மூன்றெழுத்துடன் கம்பீரமாகப் பவனி வந்தவர்.
நகைச்சுவைத் திலகம், தாய் நாகேஷ் போன்ற பட்டப்பெயர்கள் இவருக்கு இருந்தாலும் நாகேஷ் என்ற மூன்றெழுத்தே ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொண்டது.
அவருடைய பெயருக்கும் உருவத்துக்கும் பொருத்தமேயில்லை.
குண்டுராவ் என்பது அவரது இயற்பெயர். பெயரில் மட்டும் தான் குண்டு உள்ளது. உருவம் சுண்டி விட்டால் விழுந்திடக் கூடியது
.
நடிகனாக வேண்டும் என்ற ஆர்வம் அவரின் அடிமனதில் ஆழமாக ஊன்றியது. நடிகனாவது அவ்வளவு இலகுவானது அல்ல என்பதை தனது அனுபவத்தின் மூலம் தெரிந்து கொண்டார்.
நாகேஷை நகைச்சுவை நடிகனாக்கியது ரசிகர்கள்தான். காரியாலயங்களிலும் அமைச்சூர் நாடகங்களிலும் அவர் நடித்த போது ரசிகர்கள் சிரித்தார்கள். கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள். நாகேஷ் வந்தால் சிரிக்க வைப்பான் என ரசிகர்கள் முடிவு செய்தார்கள். ரசிகர்களின் விருப்பத்திற்காக நகைச்சுவை நடிகரானார் நாகேஷ்.
ஈரோடை அடுத்த தாராபுரம் என்ற ஊரில் உள்ள கன்னட இளைஞனான நாகேஷ் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு ஹைதராபாத்தில் ரேடியோ கொம்பனி ஒன்றில் வேலை பார்த்தார். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். கைநிறைய சம்பாதிக்காமல் வீடு திரும்பமாட்டேன் என்று சபதத்துடன் சென்னை சென்று இறங்கினார் நாகேஷ். கை நிறைய சம்பாதிப்பேன் என்ற சபதத்தில் நாகேஷ் வெற்றி பெற்றார். வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்ற அவரது வாழ்க்கையில் அடுத்தடுத்து சோகங்கள் அரங்கேறின. யாருக்காக அழுவது எனத் தெரியாது அழுதார்

புத்தம் புதிய காருடன் வீட்டுக்குச் சென்றபோது தாயார் மரணமாகி விட்டார். கன்னட பிராமண இனத்தைச் சேர்ந்த நாகேஷ் கிறிஸ்தவப் பெண்னை காதலித்து மணந்ததனால். குடும்பத்தவர் அவரை ஒதுக்கி விட்டனர். மகன் ஆனந்தபாபு போதைக்கு அடிமையானதால் இரண்டாவது முறை சோகத்தில் வீழ்ந்தார். மிகச்சிறந்த நடிகரான நாகேஷûக்கு மத்திய அரசும் தமிழக அரசும் உரிய அங்கீகாரம் கொடுக்கவில்லை. கலைமாமணி விருது தமிழக அரசால் நாகேஷுக்குக் கொடுக்கப்பட்டது. இரட்டை அர்த்த வசனம் பேசும் விவேக்குக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன், கப்பலோட்டிய தமிழன், வீர சிவாஜி போன்றவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நடிகர் திலகம் சிவாஜியின் மூலம் தமிழ் மக்கள் கண்டார்கள். அதேபோல் ஏழைப் புலவன், வறுமையில் வாடும் புலவன், தருமி எப்படி இருப்பான் என்பதை திருவிளையாடல் படத்தின் மூலம் வாழ்ந்து காட்டினார் நாகேஷ்.
சிவாஜியை மிஞ்சி நடிப்பதென்பது மிகவும் அபூர்வமான விடயம். திருவிளையாடல் படத்தில் தருமியாக நடித்த நாகேஷ் நடித்த காட்சிகளில் சிவாஜியை விஞ்சி நடித்தார்.
ரயில்வே அலுவலகத்தில் எழுதுவினைஞராக பணிபுரிந்த போது நடிக்க வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் நடிப்பதற்கு சந்தர்ப்பம் தேடி அலைந்தார். நாகேஷ் நடித்த நாடகம் ஒன்று எம்.ஜி.ஆரின் தலைமையில் நடைபெற்றது. நாடகம் முடிந்ததும் அந்த வயிற்று வலிக்காரனாக நடித்தவர் நன்றாக நடித்தார் என்று எம்.ஜி.ஆர். பாராட்டினார்.
தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் நாகேஷ் முதல் முதலில் திரை உலகில் அறிமுகமானார். சினிமா வாய்ப்பு தன்னைத் தேடிவரும் என்ற அதீத நம்பிக்கையினால் வேலையை விட்டுவிட்டு முழுநேர சினிமா நடிகனாக ஆசைப்பட்டார். தாமரைக்குளம் படம் தோல்வியடைந்தது. நாகேஷை தேடி தயாரிப்பாளர் யாரும் வரவில்லை. அப்போது அவருக்கு கை கொடுத்தவர்களில் பாலாஜி முக்கியமானவர். தான் நடிக்கும் படங்களில் நாகேஷûக்கு ஒரு வேடம் கொடுக்கும்படி கேட்பார். தனது சம்பளத்தில் 500 ரூபாவை நாகேஷுக்கு கொடுக்கும்படி பல தயாரிப்பாளர்களிடம் கேட்டõர். பின்னர் தயாரிப்பாளராக மாறிய பாலாஜி தனது படங்களில் நாகேஷுக்கு முக்கிய இடம் கொடுத்தார்.
வாலி, ஸ்ரீகாந்த், நாகேஷ் மூவரும் ஒரே அறையில் தங்கி இருந்தனர். கே. பாலச்சந்தரின் நாடகங்களில் ஸ்ரீகாந்த் நடித்து வந்தார். தனக்கும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும்படி ஸ்ரீகாந்த் மூலமாக வேண்டுகோள் விடுத்தார் நாகேஷ்.
சினிமாவில் நடிப்பவர்களை நாடகங்களில் சேர்க்க முடியாது. முக்கியமான வேளைகளில் சினிமாவுக்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆகையினால் சினிமாவில் நடிப்பவர்களை நாடகங்களில் நடிக்க சேர்க்க முடியாது என்றார் பாலச்சந்தர். நாகேஷ் துவண்டு விடவில்லை. பாலச்சந்தரின் மனம் மாறியது. அவரது நாடகங்களில் நாகேஷ் நடித்தார். நீர்க்குமிழி, நாணல், எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் ஆகிய நாடகங்களில் நடித்த நாகேஷ் அøவ படமாக்கப்பட்ட போது அதே வேடங்களில் நடித்தார். பாலச்சந்தர், ஸ்ரீதர் ஆகிய இரண்டு இயக்குநர்களும் நாகேஷை புடம் போட்டு தங்கமாக்கினர்.
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் அவரது குணச்சித்திர நடிப்பு பார்த்தவர்களை கண் கலங்க வைத்தது. யாருக்காக அழுதான், நீர்க்குமிழி, சாது மிரண்டால் ஆகிய படங்கள் நாகேஷின் குணச்சித்திர நடிப்பு ஏனைய நடிகர்களுக்கு சவால் விட்டது.
நடிகர் திலகம், மக்கள் திலகம் என்ற இரண்டு பெரிய நடிகர்களின் மத்தியில் தனக்கென ஒரு தனிஇடத்தை அமைத்துக் கொண்டு முன்னேறினார்.
எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் என ரசிகர் கூட்டம் இருப்பது போன்று அவர்களுக்கென தயாரிப்பாளர், இய க்குநர், கதாசிரியர் ஆகியோர் எம்.ஜி.ஆரின் விசுவாசிகளாக இருந்தனர்.
ஒரே காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடனும் சிவாஜியுடனும் நடித்து தனது புகழைப் பரப்பினார் நாகேஷ். அடுத்தவர் மனதை புண்படுத்தாத, சக நடிகருக்கு அடிக்காத, இரட்டை அர்த்த வசனம் இல்லாத நகைச்சுவையை மக்கள் முன் அரங்கேற்றிய பெருமை நாகேஷையே சாரும்.
மகளிர் மட்டும் என்ற படத்தில் பிணமாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றார். நகைச்சுவை என்றால் நாகேஷ், நாகேஷ் என்றால் நகைச்சுவை என்பது தமிழ்த் திரையுலகில் எழுதப்படாத விதி. தில்லானா மோகனாம்பாள், கௌரவம் ஆகிய இரண்டு படங்களிலும் நாகேஷ் நகைச்சுவையுடன் கூடிய வில்லன் பாத்திரத்தில் நடித்தார்.
எம்.ஆர்.ராதாவுக்குப் பின்னர் நகைச் சுவை கலந்த வில்லன் பாத்திரத்தில் கலக்கினார்.
நம்பியார், பாலாஜி, ராமதாஸ் ஆகிய வில்லன்கள் நடித்த தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் தான் வில்லன். வில்லனான நம்பியார், பாலாஜி, ராமதாஸ் ஆகியோர் திருந்தி விட்டனர்.
தில்லானா மோகனாம்பாளை திவானின் விருப்பத்துக்கு இணங்க வைக்க படாதபாடுபட்டார்.
கௌரவம் படத்தில் தகப்பன் சிவாஜிக்கும் மகன் சிவாஜிக்கும் இடையில் பிரிவினையை உருவாக்கி அவர்களைப் பிரித்த பாத்திரம் கடைசிவரை மனதில் உள்ளது.
என்.எஸ். கிருஷ்ணன், மதுரம் ஜோடிக்குப் பின்னர் தமிழ் ரசிகர்கள் அதிகம் விரும்பிப்பார்த்து ரசித்த ஜோடியாக நாகேஷ், மனோரமா விளங்குகின்றது. நாகேஷ், மனோரமா ஜோடி இல்லாத படங்கள் வெளியாவது மிகவும் அபூர்வம்.
சிவாஜி, எம். ஜி.ஆர், கமல், ரஜினி, அஜித்,விஜய் ஆகிய நான்கு தலைமுறை நடிகர்களுடன் சவால் விட்டு நடித்தவர். நாகேஷ் சிறந்த நடிகர் மட்டுமல்ல மிகச் சிறந்த எழுத்தாளர் என்பது பலருக்குத் தெரியாத உண்மை.
நாகேஷûம் வீரப்பனும் இணைந்து பல நாடகங்களுக்கு கதை வசனம் எழுதினார்கள். அவர் சொந்தமாக நாடகக் கம்பனி நடத்தி வந்தார்.
சினிமாவில் நடித்தாலும் அவரது ஆவல் குறையவில்லை. மதுவுக்கு அடிமையாகி உயிருக்குப் போராடி எம்.ஜி.ஆரின் தயவினால் உயிர் பிழைத்தார். முதலீடு முடங்கி பணப் பிரச்சினை ஏற்பட்டபோதும் எம்.ஜி.ஆர். கைகொடுத்து உதவினார்.
மிக உயரத்தில் இருந்த போதும் யாருக்கும் எந்த இடையூறும் கொடுக்காது நடித்தார். திøரயில் சிரிக்க வைத்தவர் நிஜத்தில் அழ வைத்துவிட்டு சென்று விட்டார்.
வர்மா
மெட்ரோநியூஸ்
06 02 2009

No comments: