Sunday, February 1, 2009
விஜயகாந்த் பக்கம் சாய்கிறது காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி இழுக்கிற இழுப்புக்கெல்லாம் வளைந்து நெளிந்து செல்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால், காங்கிரஸ் கட்சியோ திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேண்டுகோள்களை எல்லாம் புறந்தள்ளி வருகிறது.
இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும்படி தமிழகக் கட்சிகள் அனைத்தும் பலமுறை பல வழிகளிலும் வேண்டுகோள் விடுத்துக் களைத்து விட்டன. இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்தவித ஆக்கபூர்வமான முயற்சியைக் கூட இந்திய அரசு இதுவரை எடுக்கவில்லை.
தமிழக அரசின் மிரட்டல் கெஞ்சலாக தாழ்ந்தபோதும் கண்டு கொள்ளவேயில்லை. காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படத் தொடங்கியுள்ளது. கட்சி பேதமின்றி தமிழக அரசியல் தலைவர்கள் விடுத்த வேண்டுகோள்கள் அனைத்தும் புறக் குடத்தில்வார்த்த நீர் போல வீணாகிப் போனது.
பிரதமர் மன்மோகன் சிங் நல்லவர், வல்லவர். காங்கிரஸ் தலைவி இரக்கமுள்ளவர் என்று கனவு கண்ட தமிழக முதல்வர் கருணாநிதி நிஜத்தைப் புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டார் போல் தோன்றுகிறது.
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா, தமிழக அரசியல் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வேண்டுகோள் விடுத்தது, சட்டமன்றத் தீர்மானம் எல்லாம் வெற்றுக் கோஷங்களாக அடங்கிப் போயின.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து அடுத்த நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கலாம் என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. இடதுசாரிகள், பாட்டாளி மக்கள்கட்சி ஆகியன கூட்டணியில் இப்போது இல்லையென்று தெரிந்து கொண்டும் காங்கிரஸுடன் கரம் கோர்க்க முதல்வர் கருணாநிதி தயாராக உள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் கணக்கு வேறு விதமாக உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் சிலர் விரும்புகின்றனர்.
ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து பட்ட அவமானங்கள் போதும் என்பதால் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பீடம் விரும்பவில்லை.
விஜயகாந்துடன் கூட்டணி சேரும் விருப்பம் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் விரும்புகிறார்கள்.
விஜயகாந்தின் பிரதிநிதியான பண்ருட்டி ராமச்சந்திரன் டில்லியில் முகாமிட்டு முக்கிய தலைவர்களைச் சந்தித்து உரையாடினார். காங்கிரஸ் கட்சி விலகிச் செல்வதை உணர்ந்த தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையில் யுத்தத்தை நிறுத்துவதற்கு இந்திய மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்திய மத்திய அரசின் விருப்பத்துக்கு மாறாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
இலங்கைத் தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது வெளிப்படுவதும் பின்னர் அடங்கிப் போவதும் வழமை.
இவ்விடயத்தில் திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என்பன ஓரணியில் உள்ளன. விடுதலைப்புலிகளை ஜென்ம விரோதிகளாகக் கருதும் ஜெயலலிதாவின் நிழலில் ஒதுங்கியுள்ளார் வைகோ.
இலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழகக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது. கருணாநிதி தலைமையில் ஒன்று சேர்வதற்கு டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், தா.பாண்டியன் ஆகியோர் தயாராக உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குவதற்கு தயங்கி நின்றார். காங்கிரஸ் கட்சியின் நோக்கம் புரியத் தொடங்கியதால் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேற திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள்கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் ஆகியன ஓரணியில் நின்று தேர்தலைச் சந்தித்தால் வெற்றி பெறுவது நிச்சயம்.
காங்கிரஸ், விஜயகாந்த் இணைப்பு உறுதி என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தை காங்கிரஸ் கட்சி கை கழுவி விடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் தமிழகத்தில் புதியதொரு கூட்டணி உருவாகும். காலத்தின் கட்டாயம் காரணமாக வைகோவும் அதில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அப்போது கூட்டணி இல்லாது தனித்து இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சி அணியும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்றிணையும் ஒரு நிலை உருவாகும்.
இந்நிலையில் இலங்கை தமிழ் மக்கள் மீதான அனுதாப அலையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கவர்ச்சியான திட்டங்களும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கப் போகின்றன.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு
25 01 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment