தமிழக அரசியலில் தலைவர்களின் நிலைப்பாடும்
தொண்டர்களின் எதிர்பார்ப்பும்
இந்திய விடுதலைக்காக தியாகத் தீயில் மூழ்கி எழுந்த காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்காக தீக்குளித்த தனது கட்சித் தொண்டரை கொச்சைப்படுத்தியுள் ளது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றைப் படித்து உணர்ச்சி வசப்பட்ட இலங்கைத் தமிழர்கள் தமது விடுதலைக்காக இந்தியா குரல் கொடுக்கும் என்று நினைத்து ஏமாந்துவிட்டனர்.இலங்கையில் நடைபெறும் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்ற தமிழக அரசியல் வாதிகள் ஆளுக்கு ஒரு பக்கமாக நின்று உரத்துக் குரல் கொடுத்தும் அக்குரல் இன்னமும் டில்லியைச் சென்றடையவில்லை.
அரசியல்வாதிகளின் குரல் அலட்சியப்படுத்தப்பட்டு வருகையில் முத்துக்குமாரின் தீக்குளிப்பு சகலரையும் ஒரு கணம் திடுக்கிடச் செய்தது.
முத்துக்குமாரின் வழியில் பள்ளப்பட்டி ரவி, சீர்காழியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், சென்னையைச் சேர்ந்த அமரேசன் ஆகியோரும் இலங்கைப் பிரச்சினையை காரணம் காட்டி தீ மூட்டி தற்கொலை செய்தனர்.இலங்கைப் பிரச்சினை இந்தியாவில் கனன்று கொண்டிருக்கையில் மலேசியாவில் ரவி என்பவர் வாகனத்தின் முன்விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாட்டிலும் மலேசியாவிலும் ஐந்து பேர் தற்கொலை செய்துள்ளனர். தமிழக ஆளுங்கட்சி தனது அரசாங்கத்தை காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ளது.
இதேவேளை இப்பிரச்சினைக்காக தமிழக அரசை வலு இழக்கச் செய்யும் சகல முயற்சிகளையும் ஜெயலலிதா செய்து கொண்டிருக்கிறார்.இலங்கைத் தமிழர்களுக்கு உதவி செய்தால்தான் அது புலிகளுக்கு செய்யும் உதவியாக அமைந்து விடும் என்று காங்கிரஸ் கட்சி பயப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் நிலைப்பாடு வேறு, காங்கிரஸ் தொண்டர்களின் நிலைப்பாடு வேறு என்பதை ரவிச்சந்திரனின் தற்கொலை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ரவிச்சந்திரனின் குடும்பமே காங்கிரஸ் கட்சி யின் தீவிர ஆதரவானது. ரவிச்சந்திரன், அவருடைய தாய், தந்தை எல்லோரும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களாக உள்ளனர். இலங்கையில் தமிழர்கள் துன்பப்படுவதை தடுப்பதற்கு மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழுணர்வு இல்லை என ஏனைய கட்சிகள் கூறுகின்றன. காங்கிரஸ் கட்சித் தொண்டனுக்கு தமிழுணர்வு உள்ளது என்பதை வெளிப்படுத்தவே தன்னைப் பலியாக்கியுள்ளார் ரவிச்சந்திரன்.
ரவிச்சந்திரனின் தீக்குளிப்பு காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த அவமானத்தைத் தோற்றுவித்துள்ளது. கட்சிகளும் தலைவர்களுக்கும் விசுவாசமாக இருப்பதை வெளிக்காட்டுவதற்காக தீக்குளிப்பது தமிழகத்தில் அடிக்கடி நடைபெறும் ஒரு சம்பவம். அப்போது அந்த வேளையில் அந்த உடலை வைத்து அரசியல் நடைபெறுவதும் வாடிக்கையானது என்று தனது கட்சித் தொண்டனின் உணர்வுகளை ஏற்றுக் கொள்ளாத காங்கிரஸ் கட்சி ரவிச்சந்திரனின் மரணத்தை கண்டு கொள்ளவே இல்லை. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தக்கூட காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கூட செல்லவில்லை.
திராவிட முன்னேற்றக்கழக தொழிற்சங்க உறுப்பினராக ரவிச்சந்திரன் இருப்பதாகக் கூறி அவரது உடலை கைப்பற்றி அரசியல் நடத்த திராவிட முன்னேற்றக்கட்சி முயற்சித்தது. தமிழர் பாதுகாப்பு இயக்கம் அந்த முயற்சியை முறியடித்து சகல மரியாதைகளுடனும் இறுதிச் சடங்கை நடத்தியது.
தியாகத்தால் வளர்ந்த காங்கிரஸ் கட்சி தனது தொண்டனின் தியாகத்தை உதாசீனம் செய்துள்ளது.
இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் சூடுபிடித்திருக்கும் வேளையில் தமிழகத்தின் பிரதான இரண்டு திராவிட கழகங்களும் தமது கூட்டணியைப் பலப்படுத்தும் முயற்சியில் ஒரளவு வெற்றி கண்டுள்ளன.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், இடதுசாரிகள் ஆகியவை இணைந்து தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.என்ன பிரச்சினை ஏற்பட்டாலும் அவமானங்களை தொடர்ந்தும் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரிவதில்லை என்று காங்கிரஸும் திராவிட முன்னேற்றக்கழகமும் உறுதி மொழி எடுத்துள் ளன.
மக்களுடன் தான் கூட்டணி என்ற கோசத்துடன் அரசியல் நடத்தும் விஜயகாந்த் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் பச்சைக் கொடி காட்டியுள்ளார். தனித்துப் போட்டியிட்டதால் அவருக்கு கிடைத்த வாக்குகளின் விகிதாசாரம் அவரது கட்சியை அங்கீகரிக்க போதுமானதாக இல்லை.
தேர்தலில் போட்டியிடும் கட்சியென அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு அதற்குரிய நிரந்தர சின்னம் ஒதுக்கப்பட வேண்டுமானால், இந்திய தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதாசாரத்துக்கு அதிகமான வாக்கைப் பெற வேண்டும். தமிழக அரசியலில் திடீரென சலசலப்பை ஏற்படுத்திய விஜயகாந்தின் கட்சி தேர்தல் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள வாக்கு விகிதத்தை இன்னமும் எட்டவில்லை. ஆகையினால் அவரது கட்சி அரசியல்கட்சியாக இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை.அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமானால், பெரிய கட்சியுடன் கூட்டணி சேர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜயகாந்த். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச்சேர விஜயகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். இடது சாரிகள், பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் இல்லாத இடைவெளியை விஜயகாந்த் நிரப்புவார் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.முதல்வர் கருணாநிதி, விஜயகாந்த், சோனியா என்ற புதிய கூட்டணி ஜெயலலிதாவுக்கு சவாலாக உள்ளது. முதல்வர் கருணாநிதியை போற்றியும், தூற்றியும், அறிக்கை விடும் டாக்டர் ராமதாஸ், ஜெயலலிதாவுடன் இணையும் சாத்தியக் கூறு அதிகமாக உள்ளது.இந்தியப் பொதுத் தேர்தலுக்கான அறிவித்தல் வெளியிடப்பட்டால் இலங்கைப் பிரச்சினை பின்னுக்கு தள்ளப்பட்டு விடும். கூட்டணிப் பேரமும் மந்திரிப்பட்டியலும் முதலிடம் பிடித்துவிடும்.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு
15 02 2009
No comments:
Post a Comment