Sunday, February 22, 2009

கூட்டணிக் கணக்கில் தீவிரமாயுள்ளஅரசியல் கட்சிகள்


இலங்கையில் தாக்குதலுக்குள்ளாகும் தமிழ் மக்களுக்காக காரணமாக தமிழக மக்கள் பல வழிகளிலும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். எனினும் தமிழக அரசும் மத்திய அரசும் தமது ஆட்சியை தக்கவைக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலேயே அதிக அக்கறை காட்டுகின்றன.
தமிழகத்தில் செல்வாக்குள்ள இரண்டு பெரிய திராவிடக் கட்சிகளும் இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை நிறுத்துவதற்கு அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது வழமையான பல்லவியுடன் புலி எதிர்ப்புக் கொள்கையை கையில் எடுத்துள்ளது. வன்னியில் உள்ள தமிழ் மக்கள் அழிந்தால் அது புலிகளின் அழிவாகவே ஜெயலலிதா கருதுகிறார். இதற்கு நேர்மாறான கொள்கையுடைய வைகோ, அடுத்து வரும் தேர்தலில் அடுத்த முதல்வராக ஜெயலலிதாவை அமர்த்தி அழகு பார்க்க ஆசைப்படுகிறார். இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவின் தரத்தைப் பலப்படுத்த வைகோ தன்னாலான சகல முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறார்.
பரபரப்பான அரசியல் நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் எந்தக் கூட்டணியில் இருக்கிறார் என்பதை அறிய முடியாமல் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி உள்ளார். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து காரசாரமாக அறிக்கை விடும் ராமதாஸ் தனது மகனின் மந்திரிப் பதவி நீடிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்து ராமதாஸ்தான் வெளியேறப் போகிறார், ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரப்போகிறார் என்று ராமதாஸைப் பற்றி பரபரப்பான செய்திகள் வெளிவரும். அவற்றுக்கு மறுப்பு அறிக்கை விடுவதிலேயே ராமதாஸ் அதிக கவனம் செலுத்துகிறார்.
பழ. நெடுமாறன் தலைமையிலான இயக்கம் இலங்கைத் தமிழர்களுக்காக அரசியல் இலாபமின்றி போராட்டங்களையும், விழிப்புணர்வு கூட்டங்களையும் நடத்தி வருகிறது. தா. பாண்டியன், வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் பழ. நெடுமாறனின் போராட்டங்களுக்கு உறுதுணையாக உள்ளனர். தமிழின விழிப்புணர்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களை நெறிப்படுத்துகின்றனர். ஆனால், உணர்ச்சி வசப்படும் தமிழக மக்களில் சிலர் தமது உயிரை துச்சமென நினைத்து தீக்குளிக்கின்றனர். தமிழகத்தில் கொழுந்து விட்டெரியும் தீக்குளிப்புக் கலாசாரத்தை தடுத்து நிறுத்த முயற்சி செய்கின்றார். ஆனால், தமிழகத்தின் எங்கோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளிக்கின்றார்.
தமிழக மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத தமிழக அரசாங்கம், இந்திய மத்திய அரசாங்கத்தின் ஆயுட் காலத்தை அதிகரிக்கும் திட்டங்களைத் தீட்டி வருகிறது.நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் தமிழகத்தில் போட்டியிடுவதென்று காங்கிரஸின் தலைமைப் பீடம் தீர்மானித்துள்ளது.
இந்தக் கூட்டணியின் தரத்தைப் பலப்படுத்தப்போகும் சிறிய கட்சிகள் எவை என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் இருக்கும் கூட்டணியே வெற்றி பெறுவது அண்மைக்கால வரலாறாக உள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற தமிழக முதல்வர் கருணாநிதி விரும்பவில்லை.
தமிழகத்தில் உள்ள கட்சிக்கு நிரந்தரமான வாக்கு வங்கிகள் உள்ளன. சிறிய கட்சிகளின் துணையுடன் ஆட்சி அமைக்க வேண்டிய சூழ்நிலை இந்திய மத்திய அரசிலும், தமிழகத்திலும் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் செல்வாக்கு மக்கள் மத்தியில் குறைவடைந்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. அண்மையில் நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று கருத்துக்கணிப்பை சிதறடித்துள்ளது.
தமிழக அரசியல் கட்சிகள் தமது செல்வாக்கு வங்கியைக் காட்டி கூட்டணியில் கூடிய ஆசனங்களைப் பெற காத்து நிற்கின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஓர் அணியிலும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடது சாரிகள் ஓர் அணியிலும் உள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் இடம் பிடித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி என்று இன்னமும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் வெற்றிக் கூட்டணி எதுவென்பதை அறிந்து அதன் பின்னரே கூட்டணி பற்றி டாக்டர் ராமதாஸ் இறுதி முடிவெடுப்பார்.
கட்சிகளின் வாக்கு வங்கிகளைவிட தமிழ் இன உணர்வு என்ற புதிய அலை ஒன்று தமிழகத்தில் எழுந்துள்ளது. வைகோ, டாக்டர் ராமதாஸ், தா. பாண்டியன், திருமாவளவன் ஆகியோரின் தமிழ் இன உணர்வுப் பிரசாரங்களால் கவரப்பட்ட வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று தீர்மானிக்க முடியாது குழம்பப் போகின்றனர்.
வைகோ, தா. பாண்டியன் ஆகியோரை ஆதரித்தால் ஜெயலலிதாவின் கரங்கள் பலமடைந்து விடும். திருமாவளவனுக்கு வாக்களித்தால் தமிழக முதல்வர் கருணாநிதியும் சோனியாவும் பலமடைந்து விடுவார்கள்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் தீர்க்கப்படும் என்று தலைவர் அத்வானி டில்லியிலிருந்து முழங்கியுள்ளார். இந்திய அரசியலில் இது ஒரு திருப்புமுனையாக உள்ளது.
பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழகத்தில் செல்வாக்கு இல்லை. அதனுடன் கூட்டணி சேர்வதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எவையும் தயாராக இல்லை.
தமிழக தேர்தலை தீர்மானிக்கும் சக்தியாக தமிழின உணர்வு வாக்குகள் விளங்கப் போகின்றன. அதனை கவர்வதற்கான வியூகங்களை அமைக்கும் பணியில் தமிழக அரசியல் கட்சிகள் முனைப்புக் காட்டத் தொடங்கி விட்டன.

வர்மா
வீரகேசரி வாரவெளியீடு
22/02/2009

No comments: