Friday, April 24, 2009

திரைக்குவராதசங்கதி 8


ஏ.வி.எம். நிறுவனத்தின் மிகச் சிறந்தபடங்களில் ஒன்று அன்னை. அப்படத்தில் பானுமதியின் நடிப்பைப் புகழாதவர்களே இல்லை. தனது வளர்ப்பு மகன் பெற்ற தாயிடம் போய்விடக் கூடாது என்று பதை பதைப்புடன் இயல்பாக நடித்து பாராட்டுப் பெற்றார் பானுமதி. பானுமதியின் வளர்ப்பு மகனாக நடித்தவர் உருண்டைக் கண்களும் குழந்தை சுபாவமும் உடைய ஹரிநாத். பானுமதியின் வளர்ப்பு மகனாக நடிப்பதற்கு முதலில் ஜெய்சங்கரைத்தான் மேக்கப் டெஸ்ட் செய்து பார்த்தார்கள். ஜெய்சங்கரின் சிறிய கண்களினால் அவர் நிராகரிக்கப்பட்டார். ஏ.வி.எம்.மால் நிராகரிக்கப்பட்ட ஜெய்சங்கரை ஜோசப் தளியத் கததாநாயகனாக்கினார். "இரவும் பகலும்' படத்தில் இரட்டை வேடத்தில் அறிமுகமாகி மக்கள் கலைஞர், தென்னகத்து ஜேம்ஸ் பொன்ட் ஆகிய பட்டங்களுடன் மக்கள் மத்தியில் அமோக ஆதரவைப் பெற்றார்.ஜெய்சங்கரும் சிவகுமாரும் ஒரே நேரத்தில்தான் திரை உலகில் அறிமுகமானார்கள். சிறிய நிறுவனத்தில் கதாநாயகனாக நடித்த ஜெய்சங்கரின் படம் வெற்றி பெற்றதால் அவரைத் தேடி பல வாய்ப்புகள் சென்றன. பெரிய நிறுவனத்தில் சிறிய வேடத்தில் நடித்த சிவகுமாருக்கு அதிகளவில் கிடைக்கவில்லை. சகலருடனும் சகஜமாகப் பழகும் ஜெய்சங்கர், சிவகுமாரைச் சந்திக்கும் சமயங்களில் உற்சாகப்படுத்துவார்.
ஜெய்சங்கரும் சிவகுமாரும் இளமைக் காலப் பள்ளிச்சகாக்கள். இருவரும் இணைந்து முதன் முதலில் எங்க பாட்டன் சொத்து என்ற படத்தில் நடித்தார்கள். பிரபல ஒளிப்பதிவாளரான கர்ணன் தயாரித்து இயக்கிய படம் ஆங்கிலப் படங்களுக்கு நிகராக சண்டைக்காட்சிகள் பல நிறைந்த திரைப்படம்.
ஜெய்சங்கர் கதாநாயகனாக நடித்தார். கதாநாயகனை குற்றவாளி என நினைத்து அவரைக் கைது செய்யும் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் சிவகுமார் நடித்தார். ஜீவனாம்சம், சூதாட்டம், கன்னிப் பெண் ஆகிய படங்களில் ஜெய்சங்கரும் சிவகுமாரும் இணைந்து நடித்தார்கள்.
"இன்று நீ நாளை நான்' என்ற படத்தில் சிவகுமார் கதாநாயகனாகவும் அவருடைய அண்ணனாக ஜெய்சங்கரும் நடித்தார். நான் கதாநாயகனாக நடித்த போது என்னுடன் சிறிய பாத்திரத்தில் நடித்த சிவகுமார் கதாநாயகனாக நடிக்க நான் முக்கியமில்லாத பாத்திரத்தில் நடிப்பதா என்ற பந்தா இன்றி சிவகுமாருக்கு அண்ணனாக குணசித்திர வேடத்தில் நடித்தார்.புகழ்பெற்ற கதாநாயகனாகவும் வெற்றிப் பட நாயகனாகவும் நடித்த ஜெய்சங்கர் முரட்டுக் காளை என்ற படத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க வில்லனாக நடித்தார். கதாநாயகன், வில்லன் என்ற பாத்திரத்தை மறந்து எனக்குத் தொழில் நடிப்பு என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் அவரால் வில்லனாகவும் பிரகாசிக்க முடிந்தது.ஏ.வி.எம். மால் முதலில் நிராகரிக்கப்பட்ட ஜெய்சங்கரை "குழந்தையும் தெய்வமும்' என்ற படத்தில் நடிக்க அழைத்தது ஏ.வி.எம்.. ஜமுனா, குட்டி பத்மினி இரட்டை வேடத்தில் நடித்த குழந்தையும் தெய்வமும் வெற்றி விழா கொண்டாடியது. அனல் தெறிக்கும் வசனம், கண்ணீர் சிந்தும் காட்சிகளுடன் ஜெய்சங்கரை அணுகினால் இந்த மாதிரி படத்துக்கு நம்மசிவாஇருக்கிறான் அவனைஅவனை யூஸ் பண்ணுங்க என்று சிவகுமாரின் பக்கம் கையை காட்டி விடுவார். ஜேம்ஸ் பொண்ட் பாணியிலான படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தார் ஜெய்சங்கர்.
வல்லவன் ஒருவன், களத்தூர் கண்ணாயிரம், ஜக்கம்மா, வல்லவனுக்கு வல்லவன் போன்ற படங்களில் ஆங்கிலப் படநாயகனுக்கு இணையாக நடித்து புகழ்பெற்றார் ஜெய்சங்கர். ஜெய்சங்கரை நம்பி பல தயாரிப்பாளர்கள் உருவானார்கள். யாரும் தோல்வியடைந்ததில்லை. படம் திரையிடப்பட்ட பின்னும் பேசிய பணம் கொடுக்கவில்லை என்றால் அதனைப் பற்றிப் பேச மாட்டார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் ஜெய்சங்கரிடம் படம் வெளியானதால் பிரைடே ஹீரோ என்ற பெயர் பெற்றார்.
ஜெய்சங்கரைச் சுற்றி நண்பர் பட்டாளம் நிறைந்திருக்கும், படப் பிடிப்பிலும் வீட்டிலும் நண்பர்களை உபசரிப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை. மேர்ஸி ஹோம் என்ற அனாதை இல்லத்துக்கு நிறைய உதவி செய்தார். ஜெய்சங்கரின் வேண்டுகோளால் அவரது நண்பர்கள் பலர் மேர்ஸி ஹோமுக்கு உதவி செய்தனர்.வியட்னாம் வீடு சுந்தரத்தின் மனைவிக்கு பிரசவ காலம் நெருங்கியது.
அப்போது அவரின் கையில் பணம் இல்லை. இதனை அறிந்த ஜெய்சங்கர் ஒரு தயாரிப்பாளருக்கு போன் செய்து வியட்னாம் வீடு சுந்தரத்துக்கு கதை, சனம் எழுத சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்தார். இதேவேளை சுந்தரத்தின் மனைவி அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலைக்கு பணம் அனுப்பினார்.
ரமணி
மித்திரன் 12/04/2009