Friday, April 10, 2009

வடக்கேபோகும்மெயில்


கோட்டைரயில்நிலையத்தில் வடக்கேபோகும் மெயில்வண்டிக்கு வழக்கத்திலும் மாறாக அதிகம்பேர் காத்திருக்கின்றனர்.மாலை ஏழு மணிக்குவெளிக்கிடவேண்டிய ரயில் வண்டி ஒருமணித்தியாலம் தாமதமாக வெளிக்கிட்டது.வழி அனுப்பவந்தவர்கள் ரயிலுடன் சேர்ந்துஓடிப்பிரியமனமில்லாமல் மறையும்வரை கை அசைத்துவிடைகொடுத்தனர்.
விடுமுறையை யாழ்ப்பாணத்தில் கழிப்பதற்காகச் செல்பவர்கள்விடுமுறையில் எங்கெங்குபோகவேண்டுமென்று அருகில் இருந்தவர்களுக்குச்சொன்னார்கள்.
கோயில் திருவிழாவுக்குச்செல்லும்பெண்மணிகள் புதிதாக எடுத்தசேலைகளினதும்,செய்வித்த நகைகளினதும்பெறுமதிகளை கொஞ்சம் கூடுதலாகவே,கேட்பவர்கள் பொறாமைப்படக்கூடிய விதத்தில் சொன்னார்கள்.
திருமணத்திற்காகச்செல்பவர்கள்.மாப்பிள்ளயின் திறமை,பொம்பிளையின் வடிவு என்பனவற்றை அளவுக்கதிகமாகஅளந்தார்கள்.
உறவுமுறையானவர் இறந்துவிட்டார். இறுதிக்கிரியையில் கலந்துகொள்ளவேண்டும்.எனக்காகப்பிரேதத்தை வைப்பார்களாஎனயோசிக்கிறார் மரணவீட்டுக்குச்செல்லும் ஒருவர்.
புதினம்பார்த்தசிறுபிள்ளைகள் தூங்கஆரம்பித்துவிட்டனர். பெரியவர்களின் பேச்சுச்சத்தமும் வரவரகுறைந்துகொண்டுபோனது.
இப்போ அதிகமானோர் உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டனர். சிலர் குறைத்தூக்கத்தில் அடுத்தவரின் மேல் சரிந்து அப்படியே தூங்கிவிட்டனர்.இன்னும் சிலர் கண்ணைவெட்டிவெட்டி நித்திரையைப் போக்கமுயன்று முடிவில் நித்திரா தேவியின் அரவணைப்புக்கு அடிமையாகி விட்டனர்.
எஞ்சி இருப்போர் நித்திரைகொள்ளாமல் இருப்பதற்காகசிகரெட் புகைத்தும்,வெற்றிலைசப்பியும்,இங்குமங்குமாகநடந்தனர்.

பொல்காவலை சந்தியில் ரயில் நின்றதும் அனேகமானோர் விழித்துக்கொண்டனர்.கண்டியிலிருந்துவந்தவர்கள் இடம் தேடிஅலைந்தனர்.வசதியானஇடம் கிடைக்காதா என்றநப்பாசையில் சிலர் ஒவ்வொருபெட்டியாகச்சோதனையிட்டனர்.விழிப்பாகஇருந்தஒருவர்,தன்னைக்கொஞ்சம் தள்ளி இருக்கும்படி சொல்லுவார்களோ எனப்பயந்து கண்ணை மூடிக்கொண்டிருந்தார்.
"சார் கொஞ்சம் காலை எடுங்கபெட்டியை வைப்பம்"
தூக்கத்தில் இருந்தவரை எழுப்பிதனது பெட்டியை ஆசனத்துக்குக்கீழே ஒருவர் வைத்தார்.நித்திரையால் எழுப்பியவரை எரிப்பதுபோல் பார்த்துவிட்டுமீண்டும் தூங்கஆரம்பித்தார்.
கோணர் சேற்றில் இருந்தஒருவர் அப்பொழுதுதான்விழித்துப்பார்த்தார்.தனதுமனைவியின் மேல் இன்னொருவர் சாய்ந்தபடி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பதைக்கண்டார். உடனே எழுந்து தனது மனைவியை எழுப்பிகோணர் சீற்றில் இருத்திவிட்டு அவருக்கும் மனைவிக்கும் இடையில் இருந்துமனைவியின் மேல் சாய்ந்தபடிநிம்மதியாகத்தூங்கஆரம்பித்தார்.
பேராதனையில் இருந்துவந்தமாணவர்கோஷ்டி ஏறியரயில் பெட்டி ஒன்று மிகவும் கலகலப்பாகியது.இவர்களின் கலகலப்பால்ரயில் வண்டியின் சத்தம் கேட்கவில்லை.ஆடிப்பாடியகளைப்பால் மாணவர்கோஷ்டிதூங்கஆரம்பித்தது.
இப்போ ரயிலின் கடபுடாசத்தம் வெகு துல்லியமாகக்கேட்டது.மீண்டும் ஒரே அமைதி நித்திரையில் இருந்துவிடுபட்டவர்கள்நித்திரையாகினர். புதிதாகஏறியவர்கள் நின்று கொண்டும் இருந்து கொண்டும் தூங்கிவிட்டனர். நள்ளிரவு இரண்டுமணிஅனுராதபுரம்நெருங்கிக்கொண்டிருக்கிறது.இறங்க வேண்டியவர்கள் ஆயத்தமானர்கள்.அன்று அனுராதபுரநகரமே ஸ்ரேசனில் திரண்டிடுந்ததுபோல்மக்கள்வெள்ளம்நிரம்பி வழிந்தது.ரயில் நின்றதும்ஸ்ரேசனில் நின்றவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஏறினார்கள்.
எங்கும் ஒரே அமளி ஏறியவர்கள் அனைவரினதும் கைகளில் பயங்கர ஆயுதங்கள்.அவர்கள் பிரயாணிகளைத்தாக்கினார்கள்.தாக்குதலைஎதிர் பார்க்காதபிரயாணிகள் என்னசெய்வதெனத்தெரியாது தவித்தனர்.உறங்கியவர்கள் அடிவிழுந்ததும் திடுக்கிட்டு விழித்தனர்.ஒருசிலர் ரயிலை விட்டு இறங்கி இருளில் பாதைதெரியாது ஓடினர்.
ரயிலில் வந்த சில விலாங்குகள் தாக்கியவர்களின்பாஷையில் அவர்களைப்போன்று "விடாதே,வெட்டு,கொத்து"எனக் கோஷித்தனர்.
இரண்டு மணித்தியாலத்துக்குக் கொலையும்,கொள்ளையும் நடந்தன.ஒருவரைச்சூழ ஐம்பது நபர்கள் நின்று தாக்கினால் அந்த ஒருவரால் எவ்வளவு நேரத்துக்குத் தாக்குப்பிடிக்கமுடியும்.
கொள்ளைக்காரர்களில் ஒருவன்"எடே மச்சான் அந்த டைம்பாம் எங்கே?" எனக்கேட்டான்.
"அதைத்தான் நானும்தேடுறன்.இருட்டிலை எங்கையோ வெச்சிட்டன்"எனஅடுத்தவன் சொன்னான்.
தன் இனத்தையே வெறுத்து ஒதுக்கியஇனத்தை இன்னொரு இனம் அழித்துக்கொண்டிருக்கிறது.
கொள்ளையடித்த பணம்,நகை.உடுதுணி என்பனகொள்ளையரின் ஏழு தலைமுறைக்குப்போதுமானது.வண்டி நகரத்தொடங்கியது.சந்தோசமாகப்பயணத்தை ஆரம்பித்தவர்கள்பாதியில் படுசோகத்துடன் பயணமகிறார்கள்.செய்திகளையும்,கதைகளையும் பரிமாறியவர்கள் இப்போ யாருக்கு யார் ஆறுதல் கூறுவதெனத்தெரியாது போய்க்கொண்டிருக்கிறார்கள்.
அந்தவண்டியில் உயிரில்லாதஉடம்புகள்பலஉண்டு.கழுத்தில் தாலி உண்டு.கணவனின் உடம்பிலே உயிரில்லை.
கணவன் ஒருவன் அடிகாயங்களுடன் இறந்தமனைவியின் உடலைக்கட்டிப்பிடித்துக் கதறுகிறான். தெய்வாதீனமாககணவன் உயிருடன் இருக்கிறான். அவன் நல்லநாள் பார்த்துக்கடியதாலி கழுத்தில் இல்லை
குழந்தையைப்பறிகொடுத்த பெற்றோர்,கண்முன்னாலேயே பெற்றோரைப்பறிகொடுத்த பிள்ளைகள்,அண்ணா,தம்பி,தங்கச்சி,அக்கா,என உறவினைகளைப்பறிகொடுத்தவர்கள் கதறுகிறர்கள்.சிலர் கொலைகாரர்களைத்திட்டுகிறார்கள்.சிலர் தங்களை முனிவர்களாக நினைத்து சாபமிடுகிறார்கள்
வட்டிக்குப் பணம்கொடுத்து வட்டிக்குமேல்வட்டியாக ஏழைகளைத்துன்புறுத்தி காணிவேண்டுவதற்காகக்கொண்டுவந்த பணம் எங்கே என்று புலம்புகிறார். வட்டிக்கடைவடிவேல்.பாடுபட்டுசம்பாதித்து தனது ஒரேமகளின் திருமணத்தை சீரும்சிறப்புமாக நடத்தவேண்டும் என்று கொண்டுவந்த பணத்தைப்பறிகொடுத்துத்தவிக்கிறார் பரமசிவம். ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் பணத்தைஜேப்படிசெய்து அதைக்கொள்ளையரிடம் பறிகொடுத்துவிட்டு
"வல்லவனுக்குவல்லவன் வையகத்தில் உண்டு"என்று தனக்குள்சொல்லிக்கொண்டான் மாயவன்.
"என்பணத்தைப்பற்றிக் கவலை இல்லை.ஊரில் உள்ள தனதுமனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கொடுக்கும்படிதந்தபணம் என்னுடையபெட்டிக்குள் இருந்ததே அதுவும் போய்விட்டதே"என்று அடுத்தவருக்குச்சொல்லித்துயரத்தை வெளியிட்டார் கிளாக்கர் கந்தசாமி..
மிகவும் வேகமாகவண்டிபோய்க்கொண்டிருக்கிறது.ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப்பேசினார்கள்.'இதற்கு சரியானபாடம் படிப்பிகவேண்டும் "என்றார் ஒருவர்.அனேகமானோர் அதற்கு எதிர்ப்புத்தெரிவித்தார்கள்.
"நமதுபிரதேசத்தைதிவிட்டு நாம் வெளியேபோகக்கூடாது"என்றார் ஒருவர்.
"நமகென்று ஒருநாடிருந்தால் இப்படி நடக்குமா?" எனக்கேட்டார் இன்னொருவர்.அனேகர் அதை ஆமோதித்தனர்.
நமது நாட்டுக்காகப்போராடுவோம் என ஒருமித்தகுரலில் கோஷமிட்டார்கள்.
நடந்தகொடூரங்களைக்கண்ட மெயில்வண்டியும் இனிமேல் தெற்கேபோவதில்லை எனதிடசங்கற்பம் பூண்டது.இப்போவண்டி மிகவேகமாகச்சென்று கொண்டிருக்கிறது.
உயர்ந்தசாதியில் பிறந்து பரம்பரை பரம்பரையாக சாதிக்கொடுமை புரிந்த ஒருவர் "தண்ணீர் தண்ணீர்"எனத்தவித்தார்.அவருக்கு தாழ்ந்தசாதிக்காரன் தண்ணீர்கொடுக்க அமுதமென அதைப்பருகினார். பல உயிர்களைக்கப்பாற்றிய வைத்தியகலாநிதி ஒருவர் தனது உயிரையாராவதுகாப்பாற்றமாட்டார்களா என்று உயிருக்காகப்போராடுகிறார்.
அடுத்தவீட்டு ஊமைக்குழந்தையை அண்டாமல்
ஊமை என்று சிறப்புப்பெயர் சொல்லி விரட்டியவர்
இரண்டு கண்களையிம் இழந்து உலகையே இருட்டாகக்காண்கிறார். ஒருகாலத்தில்தனது பரம்பரைக்கோயிலுக்கு தாழ்ந்த சாதிப்பெண் ஒருத்தி புதுச்சேலை உடுத்துவந்ததைப்பொறுக்கமாட்டாது அவளின் சேலையை உரிந்து தீயிலிட்டவரும் மனைவியும் உடுத்த துணிகளைப்பறி கொடுத்துவிட்டு உள்ளாடைகளுடன் ஒதுங்கி இருக்கிறார்கள்.
வவுனியாவை நெருங்கும்போதுபிரயாணிகளுக்கு மற்றொரு சோதனை ஏற்பட்டது.ரயிலை நோக்கி பெரிய பெரிய கற்கள்வீசப்பட்டன.
அதனாலும் பலர் காயமடைந்தனர்.

அனுராதபுரத்தில் அநியாயத்துக்குட்பட்டரயில் எங்குமேநிற்காமல் ஓடிக்கொண்டிருகிறது.பிரயாணிகளிடையே பெரும்பரபரப்பு. யாழ்ப்பாண ரயில்நிலையத்தில் நிற்குமா இல்லையா எனத்தெரியாமல் அவதிப்பட்டார்கள்.யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் பலர் இறங்கிவிட்டார்கள். இறங்கியவர்களில் அனேகமானோர் பெரியாஸ்பத்திரியை நோக்கிப்போனார்கள்.மீண்டும் ரயில் ஓடத்தொடங்கியது. யாழ்ப்பாண ரயில்நிலையத்தை அடுத்துஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில்நின்றது.
காங்கேசந்துறையில் நின்றதும் எல்லோரும் இறங்கிவிட்டனர்."எல்லோரயும் கொண்டுவந்து சேர்த்துவிட்டேன்" என ரயில் நிம்மதிப்பெருமூச்சுவிட்டது.'படார்" பயங்கரவெடிச்சத்தம்.நின்றவர்கள் அனைவரும் திரும்பியபக்கம் ஓடத்தொடங்கினார்கள்.இனிமேல் தெற்கேபோகமாட்டேன் என்ற ரயிலின் இயந்திரம் எரிந்துகொண்டிருக்கிறது. கொள்ளைக்காரர்கள் வைத்த டைம்பொம் வெடித்ததனால் ஏற்பட்டநெருப்பு பயங்கரமாக எரிந்தது.தீ முற்றாக அணைக்கப்பட்டபோது இயந்திரத்தின் பெரும்பகுதி எரிந்து முற்றாகசாம்பலாகியது.
யாழ்ப்பாணம் எங்குமே சோகமயம்.மூன்றுமாதங்களில் எல்லாம் அமைதியாகிவிட்டது.காங்கேசந்துறையில் இருந்து தெற்குநோகிப்போவதற்கு ஒருரயில் தயாராகநிற்கிறது.
பிரயாணிகள் முண்டியடித்து ஏறினார்கள்.இனிமேல் தெற்கேபோகமாட்டோம் என்று சூளுரைத்தபலர் கோணர் சீற் தேடி அலைந்தார்கள்.அவர்களை வடக்கேகொண்டுவந்த ரயிலின் இயந்திரம் அவர்களைப்பார்த்து சிரித்தது.யாரும் அதைக்கவனிப்பதாகத்தெரியவில்லை.பேரிரைச்சலுடன் ரயில்தெற்குநோக்கிப்புறப்பட்டது. அவர்கள் ஓடிவரும் நாளை எதிர்பார்த்துவடக்கேவந்தரயில் நிற்கிறது.

சூரன்.ஏ.ரவிவர்மா
சுடர்
வைகாசி-1979

No comments: