Sunday, April 5, 2009

பந்திக்கு முந்திய ராமதாஸ்அந்தரத்தில் தவித்த வைகோ



அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமான பாட்டாளி மக்கள் கட்சி தான் விரும்பிய தொகுதிகளை கேட்டுப் பெற்றுக் கொண்டதனால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் மனமுடைந்து போயுள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி மதில் மேல் பூனையாகக் காத்திருக்கிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கிறது என்று செய்திகள் வெளியான போதெல்லாம் அதனை மறுத்து அறிக்கை விட்டார் டாக்டர் ராமதாஸ்.
அரசியல் அவதானிகள் எதிர்பார்த்தது போன்று ஜெயலலிதாவைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியையும் தன் பக்கம் இழுப்பதற்கு ஜெயலலிதா முயற்சி செய்தார். அதன் காரணமாக டாக்டர் ராமதாஸைச் சந்திப்பதை தவிர்த்தவர்கள் காங்கிரஸை திராவிட முன்னேற்றக் கழக அணியிலிருந்து பிரிக்க முடியாது என்று உணர்ந்த ஜெயலலிதா டாக்டர் ராமதாஸைச் சந்திப்பதற்கு பச்சைக் கொடி காட்டினார்.
ஜெயலலிதா குறிப்பிட்ட நல்ல நாளில் டாக்டர் ராமதாஸ் போயஸ் கார்டன் சென்று சந்தித்தார். எட்டு வருடத்தின் பின்னர் இருவரும் சிரித்தவாறு புகைப்படங்களுக்கு காட்சியளித்தனர். முன்னர் நடைபெற்ற கசப்பான அனுபவங்களை இருவரும் மறந்து விட்டனர். ஆனால் பத்திரிகைகள் அவற்றை மறக்காது அவ்வப்போது தமது கட்டுரைகளில் குறிப்பிட்டு வருகின்றன.
ஜெயலலிதாவும் டாக்டர் ராமதாஸும் சந்தித்து ஒருசில மணித்தியாலங்களுக்குள் தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு விட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 23 தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சி ஏழு தொகுதிகளிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நான்கு தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு தொகுதியிலும் மார்க்ஸிஸ்ட் கட்சி மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் என்று ஜெயலலிதா அறிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மேல் சபைக்குத் தெரிவாவார் என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை வைகோவால் ஜீரணிக்க முடியவில்லை. ஜெயலலிதாவுக்காக மத்திய அரசையும் தமிழக அரசையும் கண்டித்து உரையாற்றும் வைகோவுக்கு நான்கு தொகுதிகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆறு தொகுதிகளை வைகோ எதிர்பார்த்தார். இரண்டு தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் வைகோ இருந்தபோது சட்டமன்றத் தேர்தலில் கோரியதை விட ஒரு தொகுதி குறைக்கப்பட்டதனால் அணிமாறி ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தார் வைகோ. மத்திய அரசில் ஐந்து வருடங்கள் அமைச்சுப் பதவியை அனுபவித்து விட்டு தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தோற்றுவிடும் என்று கருதி அணி மாறிய டாக்டர் ராமதாஸுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வைகோவுக்கு ஜெயலலிதா கொடுக்கவில்லை.
வைகோவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான இரண்டாம் கட்டத் தலைவர்கள் அவரைக் கைவிட்டு தமது தாய்க் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்ததனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜெயலலிதாவும் வைகோவை ஒதுக்குவதை அவரது ஆதரவாளர்களினால் தாங்கிக் கொள்ள முடியாதுள்ளது.
வைகோவின் அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் டாக்டர் ராமதாஸுக்கும் இல்லை. ஆனால் அணி அவருக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை வைகோவுக்கு யாரும் கொடுப்பதில்லை.
எட்டு வருடங்களின் முன்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தபோது தனக்குரிய தொகுதிகளை முதலில் பேசித் தீர்த்தவர் டாக்டர் ராமதாஸ். இப்போதும் ஜெயலலிதாவைச் சந்தித்து ஒரு சில மணித்தியாலயத்தினுள் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது.
உண்மையிலேயே இரகசியப் பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டபின்பே ஜெயலலிதாவும் டாக்டர் ராமதாஸும் சந்தித்து தமது முடிவை அறிவித்தனர். பாட்டாளி மக்கள்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆறு தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் காங்கிரஸ் கட்சியை அது எதிர்த்துப் போட்டியிடுகிறது. ஏனைய ஆறு தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினை எதிர்த்தே பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சியுடன் மோதுவதை கூடுமானவரை பாட்டாளி மக்கள்கட்சி தவிர்த்துள்ளது. புதுச்சேரி, காங்கிரஸ் கட்சியின் கோட்டை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியிடமிருந்து புதுச்சேரியை பாட்டாளி மக்கள் கட்சிக்கும் பெற்றுக் கொடுத்தார் கருணாநிதி.
இதன் காரணமாக காங்கிரஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இடையே சில விரிசல்கள் ஏற்பட்டன. அதையெல்லாம் பொருட்படுத்தாது புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியை வெற்றி பெற வைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த முறையும் புதுச்சேரியை டாக்டர் ராமதாஸ் கேட்டுப் பெற்றுள்ளார். புதுச்சேரியை பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்ற அடங்காத ஆசை டாக்டர் ராமதாஸிடம் உள்ளது. அதன் எதிரொலியாகத் தான் புதுச்சேரியை மீண்டும் பெற்றுள்ளார்.
ஆனால் இந்த முறை புதுச்சேரியில் வெற்றி பெறுவதென்பது முடியாத காரியம். பாட்டாளி மக்கள் கட்சி போட்டியாளரை தோற்கடிப்பதற்காக காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் கைகோர்த்துள்ளன. சிதம்பரம் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரத்தில் திருமாவளவன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாக்டர் ராமதாஸுக்கும் திருமாவளவனுக்கு இடையேயான உறவு மிகவும் இறுக்கமானது. இவர்கள் இருவரும் வேறு வேறு அணியில் இருந்தாலும் கொள்கைக்காக ஒரே மேடையில் ஏறி குரல் கொடுப்பார்கள். ஆனால் சிதம்பரத்தில் இருவரும் எதிரும் புதிருமாக பிரசாரம் செய்யப் போகிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளரான காடுவெட்டி குருவை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்பதில் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக உள்ளது. டாக்டர் ராமதாஸின் நம்பிக்கைக்குப் பாத்திரமான காடு வெட்டி குருவை தோல்வியடையச் செய்வதன் மூலம் டாக்டர் ராமதாஸை அவமானப்படுத்தலாம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.
தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிரான வாக்குகளை விஜயகாந்த் கவர உள்ளதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாதுள்ளது.
விஜயகாந்த் தனித்துப் போட்டியிடுவதால் வாக்குகளைப் பிரிக்க முடியுமே தவிர ஒரு தொகுதியில் கூட விஜயகாந்தின் வேட்பாளர் வெற்றி பெற முடியாது. கட்சிகளினதும் வேட்பாளரினதும் செல்வாக்குத்தான் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன.
விஜயகாந்துக்கு 12 சதவீத வாக்குகளே கிடைக்கும் என்று கருத்துத் கணிப்பில் தெரியவந்துள்ளது. 12 சதவீத வாக்குகளால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு 39 சதவீத வாக்குகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணிக்கு 39 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்று என்.டி.பி. தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு கூறுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி 20 முதல் 22 இடங்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி 18 முதல் 20 இடங்களிலும் வெற்றி பெறும் என்று அந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. வேட்பாளர் தெரிவும் இறுதி நேரப் பிரசாரமும் இந்தக் கருத்துக் கணிப்பைப் பொய்யாக்கி விடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
வர்மா
வீரகேரசரி 05/04/2009

1 comment:

Anonymous said...

After result of this election Jayalalitha and Ramadoss will support either Congress Govt or BJP Govt.