Monday, April 27, 2009

காங்கிரஸ் கட்சியை எதிர்த்துதமிழ்த்திரை உலகம் போர்க்கொடி


தமிழகத்தில் அரசியல் கட்சிகளை வளர்த்துவிட்ட சினிமா உலகம், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக களமிறங்கத் தயாராகி விட்டது. தமிழக அரசியல் தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சினையும் தவிர்க்க முடியாததொன்றாகிவிட்டது. வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், பழ. நெடுமாறன் இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்ற ஒருமித்த குரல் கொடுத்து வந்தனர். இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் இவர்களைப் பிரித்து விட்டது.
பாரதிராஜா, அமீர், சீமான், சத்தியராஜ், மணி வண்ணன், மன்சூர் அலிகான், ரி. ராஜேந்தர் போன்ற தமிழ் இன உணர்வாளர்களும் இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக பல போராட்டங்களை நடத்தினார்கள். அரசியலுக்கு அப்பால் இவர்கள் நடத்திய இன உணர்வுப் போராட்டம் தமிழகத்தில் எழுச்சியை உண்டாக்கியது.
வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் தமது கட்சியின் வளர்ச்சியையும், மத்திய அரசில் பங்கு போடுவதையும் கருத்தில் கொண்டு இலங்கையில் நடைபெறும் யுத்தத்தை மறைமுகமாக அங்கீகரிக்கும் கட்சிகளின் முதுகில் சவாரி செய்யத் தயாராகி விட்டனர்.
தமது சாதனைகளையும் எதிர்காலத் திட்டங்களையும் முன்னெடுத்து தமிழக அரசியல் கட்சிகள் வாக்கு வேட்டையை ஆரம்பித்துள்ளன. இலங்கைப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு நாடாளுமன்றம் பொதுத் தேர்தலைச் சந்திக்க தமிழ் இன உணர்வாளர்கள் தயாராகி விட்டதாக செய்தி கசிந்துள்ளதால் காங்கிரஸ் கட்சி கலங்கிப் போயுள்ளது. தமிழக அரசியல் களத்தில் இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்ற நம்பிக்கை தமிழ் இன உணர்வாளர்களிடம் உள்ளது. இலங்கை விவகாரத்தினால் தமக்கு ஒரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என அடுத்த முதல்வர் என திராவிட முன்னேற்றக்கழக உடன்பிறப்புக்களால் வர்ணிக்கப்படும் மு.கா.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆனால், இலங்கை விவகாரம் தமிழக அரசியல் தேர்தல் களத்தில் விஸ்வரூபம் எடுக்கும் என ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய மத்திய அரசின் பூரண ஆதரவுடன்தான் இலங்கை அரசு யுத்தம் நடத்துகிறது எனவும் ஆகையினால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்போவதாகவும் திரைஉலகைச் சேர்ந்த பலர் தெரிவித்துள்ளனர்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றஞ்சாட்டி தமிழக அரசினால் சிறைக்கு அனுப்பப்பட்ட சீமான், அமீர் ஆகியோரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற விருப்பமும் தமிழ் உணர்வு ஆர்வலர்களிடம் உள்ளது.
பாரதிராஜா, அமீர், சீமான், சத்தியராஜ், ஆர்.கே. செல்வமணி, ஆர். சுந்தரராஜன் போன்றவர்கள் தமிழ் உணர்வு ஆர்வலர்கள் குழுவில் முக்கியமானவர்களாக உள்ளனர். காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் இலங்கை விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தீவிர பிரசாரம் செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சீமான், அமீர் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் வைகோ, திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் ஆகியோரின் பிரசாரம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இலங்கைத் தமிழ் மக்கள் அனுபவிக்கும் இன்னல்களைக் கண்டு கொதித்தெழும் இவர்கள் தமது தமிழ் உணர்வு ஆர்வலர்களை எதிர்த்து தமது கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்பவர்களா? அல்லது சீமான், அமீர் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் பிரசாரம் செய்யாது ஒதுங்குவார்களா?
நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் போட்டியில் தமிழகக் கட்சிகள் அனைத்தும் இலங்கைப் பிரச்சினையையும் கையில் எடுத்துக் கொண்டு பிரசாரம் செய்கின்றன. தமிழ் உணர்வு ஆர்வலர்கள் இலங்கைப் பிரச்சினையை மட்டும் முன்னிறுத்தி பிரசாரம் செய்யப் போகின்றனர். தமிழ் உணர்வு ஆர்வலர்களின் அரசியல் பிரவேசம் காங்கிரஸ் கட்சிக்கு சவாலாக உள்ளது. ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகம் கொதித்து எழுந்ததுபோன்று இலங்கைத் தமிழர் விவகாரம் காரணமாக காங்கிரஸ் கட்சியை தமிழக மக்கள் ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சமும் அக்கட்சியினருக்கு எழுந்துள்ளது.
இதேவேளை ஜெயலலிதாவுக்கும் வைகோவுக்கும் இடையிலான முறுகல் அதிகரித்துள்ளது. வேட்பாளர் மனுத்தாக்கல் செய்வதற்கு தனது ஆஸ்தான சோதிடர் மூலம் நல்லநாளை அறிவித்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்த பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளும் மறுப்பேதும் கூறாது நல்ல நாளில் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன. ஆனால், வைகோ மட்டும் அடம் பிடித்தார். ஜெயலலிதா அறிவித்த நல்ல நாளில் வைகோ வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இதன் காரணமாக ஜெயலலிதாவின் கோபம் அதிகரித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற கூட்டணி வேட்பாளர் அறிமுக விழாவில் ஜெயலலிதாவும் வைகோவும் ஒரே மேடையில் இருந்து கை உயர்த்தி சிரித்தபடி காட்சியளித்தனர். மேடையை விட்டு இறங்கியதும் பழையபடி இருவரும் எதிரும் புதிருமானார்கள்.
ஜெயலலிதா பிரசாரம் செய்யாமலே தன்னால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். வைகோ, டாக்டர் ராமதாஸ், தா. பாண்டியன், என். வரதராஜன் ஆகியோரின் உதவியுடன் அரச தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் தேர்தலில் குதித்துள்ளார் ஜெயலலிதா.
மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்ற உண்மையை அரசியல்வாதிகள் அனைவரும் அறிந்துள்ளதோடு அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றால் மத்தியில் ஆட்சி அமைக்கும் கூட்டணிக் கட்சியுடன் இணையலாம் என்ற எண்ணம் ஜெயலலிதாவிடம் உள்ளது.
நடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் கூட்டணிக்கட்சிகள் ஆளுக்கொரு திசையில் பிரிந்து விடும் என்பதை இப்பொழுதே மறைமுகமாக வெளிப்படுத்துகின்றன.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 26/04/2009

No comments: