Tuesday, April 28, 2009

ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்

ராஜஸ்தானை வீழ்த்தியது பஞ்சாப்

கேப்டவுனில் நடைபெற்ற ருவன்ரி 20 போட்டியில் நடப்பு சம்பியனான ராஜஸ்தான் ரோயல்ஸை 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. கிங்ஸ்11பஞ்சாப். நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்கள் எடுத்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கோயல், ரவிபோபரா ஆகிய இருவரும் ஏமாற்றிவிட்டனர்.
11ஓட்டங்கள் எடுத்திருந்த ரவி போபரா, கம்ரன்கானின் பந்தை, பட்டேலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். கொயல் ஓட்டம் எதுவும் எடுக்காது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
அணித் தலைவர் யுவராஜ் சிங் இரண்டு ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். மஹேல ஏழு ஓட்டங்களில் வெளியேறினார்.
பஞ்சாப் அணியின் நான்கு விக்கெட்களும் 48 ஓட்டங்களில் வீழ்ந்து இக்கட்டõன நிலையில் இருந்த போது களத்தில் இணைந்த சங்கக்கார, பதõன் ஜோடி அதிரடி காட்டி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது.
9.5 ஓவர்களில் 75 ஓட்டங்கள் அடித்து அணிக்கு தெம்பூட்டியது. கம்ரன்கானின் பந்தில் பதான் ஆட்டமிழந்தார். 33 பந்துகளுக்கு முகம் கொடுத்த பதான் இரண்டு சிக்ஸர் இரண்டு பௌண்ரிகள் அடங்கலாக 39 ஓட்டங்கள் எடுத்தார்.
மிகச் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய சங்கக்கார ரன் அவுட் முறையில் ஆட்டம் இழ ந்தார். 51 பந்துகளுக்கு முகம் கொடுத்த சங்கக்கார ஒரு சிக்ஸர் ஏழு பௌண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்கள் எடுத்தார்.
பஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்கள் எடுத்தது. கம்ரன்கான், பட்டேல் ஆகிய இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 140 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
ராஜஸ்தான் ரோயலின் வீரர்கள் மளமளவென ஆட்டம் இழந்தனர். ஸ்மித் 2, ராம் கியூனோ 7, மஸ்கானாஸ் 4 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர். பதான் 10 ஓட்டங்களில் வெளியேறினார். ராஜஸ்தான் ரோயலின் முதல் ஐந்து விக்கெட்டுகளும் 36 ஓட்டங்களில் வீழ்ந்தது. ஏழாவது விக்கெட்டில் இணைந்த ஜடேஜாவும் அணித்தலைவர் ஷேன்வோனும் அணியை தோல்வியிலிருந்து மீட்க கடுமையாக போராடினார்கள். பஞ்சாப் வீரர்களின் பந்து வீச்சுக்கு முன்னால் நிலைத்து நிற்க முடியாது ஜடேஜா ஆட்டமிழந்தபோது பஞ்சாப் அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது.
44 பந்துகளுக்கு முகம் கொடுத்த ஜடேஜா 37 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அப்துல்லாவின் பந்தில் ஆட்டமிழந்தார். ஷேன்வோன் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 112 ஓட்டங்களை எடுத்தது.
அப்துல்லா மூன்று விக்கெட் டுகளையும் பதான், சவ்லா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக சங்கக்கார தெரிவு செய்யப்பட்டார்.
இந்தப்போட்டியில் சகோதரர்களான யூசுப்பதான் ராஜஸ்தான் றோயல் அணிக்கும் இர்பõன் பதான் பஞ்சாப் அணிக்கும் விளையாடினார்கள். இர்பான் பதான் தனது அண்ணனான யூசுப்பதானின் பந்துக்கு ஒரு சிக்ஸர் அடித்தார். யூசுப் பதõன் தம்பியான இர்பான் பதானின் பந்தில் இரண்டு பௌண்டரிகள் அடித்தார்.
ரமணி


000


கடைசி ஓவரில் வென்றது டில்லி

டில்லி டேர்டெவில்ஸ், பெங்களூர் ரோயல் சலஞ்ச் ஆகியவர்களுக்கிடையே போர்ட் எலிஸபெத்தில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் டெல்லி டேர்ல் டெவில்ஸ் எட்டு விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.
நானிசின் முதல் பந்தில் ஓட்டம் எதுவும் எடுக்காத கலிஸ் ஆட்டமிழந்தார். பந்து வெளியே போகும் என எதிர்பார்த்ததனால் அடிப்பதைத் தவிர்த்ததும் எதிர்பார்க்காத நிலையில் பந்து விக்கெட்டில் பட்டது. மூன்று ஓட்டங்கள் எடுத்திருந்த உத்தப்பாவை, நெஹ்ரா வெளியேற்றினார்.
மூன்றாவது இணைப்பாட்டத்தில் விளையாடிய பீட்டர்ஸன், டெய்லர் ஜோடி 62 ஓட்டங்கள் எடுத்து தெம்பூட்டியது. 25 பந்துகளுக்கு முகம் கொடுத்து இரண்டு சிக்ஸர் இரண்டு பௌண்டரி அடங்கலாக 37 ஓட்டங்கள் எடுத்த பீட்டர்ஸன் வெட்டோரியின் பந்தில் ஆட்டமிழந்தார். பீட்டர்ஸன் வெளியேறியதும் அணி நம்பிக்கை வைத்திருந்த டைலர், ஆம்ரித், மிஸ்ராவின் பந்தில் எல்.பீ. டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய மார்க் பௌச்சர் கோக்லி ஜோடி வேகமாக ஓட்ட எண்ணிக்கை உயர வழிவகுத்தது. டெல்லி அணிக்கு நெருக்கடியைக் கொடுத்த இந்த ஜோடியை சர்வான் பிரித்தார். 28 பந்துகளுக்கு முகம் கொடுத்து இரண்டு சிக்ஸர் இரண்டு பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்த மார்க் பௌச்சர், சர்வானின் பந்தை மிஸ்ராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர்.
பெங்களூர் றோயல் சலஞ்சஸ் 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது.
நெஹ்ரா இரண்டு விக்கெட்டுகளையும், நன்ஸ், சர்வான், மிஸ்ரா, வெட்டோரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
150 என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் 19.2 ஓவர்களில் நான்கு விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை வீரர் டில்ஷானின் அதிரடி டெல்லி அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
டெல்லி டேவில்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஷேவாக்கும் கம்பீரும் இம்முறையும் ஏமாற்றினார்கள். 16 ஓட்டங்கள் எடுத்த ஷேவாக் பங்கஜ் சிங்கின் பந்தை பௌச்சரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். கம்பீர் ஏழு ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். டில்லி அணியின் அதிரடி வீரர்கள் இருவரும் ஆட்டமிழந்ததனால் பெங்களூர் அணி உற்சாகமடைந்தது.
மூன்றாவது இணைப்பாட்டத்தில் விளையாடிய டில்ஷான் டிவிலியஸ் ஜோடி ஓட்ட எண்ணிக்கையை விரட்டத் தொடங்கியது. டிவில்லியஸ் நிதானமாக துடுப்பெடுத்தாட டில்ஷான் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தார். அப்பண்ணா இந்த ஜோடியைப் பிரித்தார். 23 பந்துகளுக்கு 21 ஓட்டங்கள் எடுத்த டிவில்லியஸ், அப்பண்ணாவின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கார்த்திக் நெடு நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அகிலின் பந்தை கலிஸிடம் பிடிகொடுத்து 12 ஓட்டங்களுடன் வெளியேறினார். டெல்லி அணியின் விக்கெட்கள் வீழ்ந்த போதும் டில்ஷான் தனது அதிரடியை கைவிடவில்லை. கடைசி நான்கு ஓவர்களில் 43 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. 17 ஆவது ஓவரை வீசிய கலிஸ் 19 ஓட்டங்களை வாரி வழங்கியதால் டெல்லியின் பதற்றம் குறைந்தது. மன்ஹால் அடித்த பந்தை அப்பண்ணாதவற விட்டதால் அப்பந்து பௌண்டரி எல்லையை கடந்தது. கடைசி ஓவரில் இரண்டு ஓட்டங்களை இலகுவாகப் டில்லி வெற்றி பெற்றது.
47 பந்துகளுக்கு முகம் கொடுத்த டில்ஷான் இரண்டு சிக்ஸர், ஐந்து பௌண்டரி அடங்கலாக 67 ஓட்டங்கள் எடுத்தார்.13 பந்துகளுக்கு முகம் கொடுத்த மன்ஹால் 23 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆட்டநாயகனாக டில்ஷான் தெரிவு செய்யப்பட்டார். பங்கஜ் சிங் இரண்டு விக்கெட்டுகளையும் அப்பண்ணா அகில் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஐந்து போட்டிகளில் விளையாடிய பெங்களூர் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. டெல்லி டெவில்ஸ் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
வானதி

No comments: