Friday, April 24, 2009

பெங்களூர் ரோயல் சலஞ்சை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பெற்றது டொக்கான்


கேப் டவுணில் நடைபெற்ற ஐ.பி.எல். 20/ 20 போட்டியில் கில்கிறிஸ்ட் தலைமையிலான ஐதராபாத் டெக்கான் அணி, பீட்டர்சன் தலைமையிலான பெங்களூர் ரோயல் அணியை 24 ஓட்டங்களினால் வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸிடம் 92 ஓட்டங்களினால் தோல்வியடைந்து ராஜஸ்தான் ரோயலை 75 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற பெங்களூர் ரோயலும், கொல்கத்தாநைட்ரைடரை வீழ்த்திய டெக்கான் சார்ஜஸும் வெற்றியை நோக்கி களமிறங்கின.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெக்கான் சார்ஜஸ், கில்கிறிஸ்ட், ரோகித் சர்மா ஆகியோரின் அதிரடியுடன் 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களை எடுத்தது.
பிரவீன் குமார் வீசிய முதல் ஓவரில் மூன்று பௌண்டரிகளை அடித்து தனது விஸ்வரூபத்தை ஆரம்பித்தார் கில்கிறிஸ்ட். கில்கிறிஸ்ட்டை வீழ்த்த முடியாது தவித்த பிரவீன் குமார் எல்.பி.டபிள்யூ மூலம் கிப்ஸை ஆட்டமிழக்கச் செய்து ஆறுதலடைந்தார். ஏழுபந்துகளைச் சந்தித்த கிப்ஸ் ஒரு சிக்ஸர் ஒரு பௌண்டரி மூலம் 13 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய லக்ஷ்மன் ரைடரின் பந்தை ஸ்ரெயினிடம் பிடிகொடுத்து ஐந்து ஓட்டங்களில் வெளியேறினார்.
மூன்றாவது விக்கெட்டில் கில்கிறிஸ்ட் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா தன் பங்குக்கு அதிரடி காட்டினார். இந்த ஜோடி 20 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து எதிரணி வீரர்களை திக்குமுக்காடச் செய்தது.
தன்னை நோக்கி வந்த பந்துகளை பௌண்டரி, சிக்ஸருக்கு விரட்டிய கில்கிறிஸ்ட் பீட்டர்ஸனின் பந்தை கோக்லியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 45 பந்துகளைச் சந்தித்த கில்கிறிஸ்ட் ஆறு சிக்ஸர் ஆறு பௌண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்கள் எடுத்தார்.
கில்கிறிஸ்ட் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸரும் ஊனமடைந்த சிறுவன் ஒருவனுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பதனால் இந்தத் தொடரில் 25 சிக்ஸர் அடிக்க உத்தேசித்திருப்பதாக கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஊனமுற்ற சிறுவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைத்த பிரத்தியேக பைக் ஒன்றினை கில்கிறிஸ்ட் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் வழங்கப்போவதாக ஆம்வே, ஊனமுற்றோருக்கு தொழில் நுட்ப உதவி வழங்கும் நிறுவனம் ஆகியன அறிவித்துள்ளன.
எட்டு பந்துகளுக்கு முகம் கொடுத்த ஸ்ரெய்ன் ஒரு சிக்ஸர் அடங்கலாக 14 ஒட்டங்கள் எடுத்தார். கில்கிறிஸ்ட் வெளியேறியதும் தனது அதிரடி ஆட்டத்தைக் குறைக்காத ரோகித் சர்மா ஸ்ரெயினின் பந்தை பீட்டர்ஸனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவின்போது டெக்கான் சார்ஜஸ் ஆறு விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்கள் எடுத்தது.
பீட்டர்ஸன் இரண்டு விக்கெட்களை
யும், பிரவீன் குமார், ஸ்ரெயின், ரைடர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
185 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் ரோயல் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 160 ஓட்டங்கள் எடுத்தது. ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் ஓட்டமெதுவும் எடுக்காது எட்வேட்டின் பந்தில் ஆட்டமிழந்தார்.
கலிஸ் 15, உத்தப்பா 12, பீட்டர்ஸன் 11, ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஐந்தாவது விக்கெட்டில் இணைந்த ட்ராவிட், பிராட்கோக்லி ஜோடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தி தோல்வியின் ஒட்ட விகிதத்தைக் குறைத்தது.
27 பந்துகளுக்கு முகம் கொடுத்த ட்ராவிட் இரண்டு சிக்கஸர், ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்கள் எடுத்தார். அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த உதவிய கோக்லி 32 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஏழு பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆறு பந்துகளுக்கு முகம்கொடுத்த பிரவீன்குமார் இரண்டு சிக்ஸர் அடங்கலாக 14 ஓட்டங்கள் எடுத்தார்.
ஸ்ரைஸ் மூன்று விக்கெட்டுகளையும், ஆர்.பி.சிங் இரண்டு விக்கெட்டுகளையும், எட்வேட் ஒஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக கில்கிறிஸ்ட் தெரிவானார்.
ரமணி

No comments: