Sunday, April 12, 2009

வைகோவின் பொறுமையும்ஜெயலலிதாவின் அலட்சியமும்


ராமதாஸ், தா. பாண்டியன், என். வரதராஜன் ஆகியோர் கலைஞர் கருணாநிதி தலைமையில் காங்கிரஸின் கையை பலப்படுத்தியபோது ஜெயலலிதாவுடன் இணைந்து இரட்டை இலைகளில் ஒன்றாய் மிளிர்கின்ற வைகோ பின்னர் ராமதாஸ், தா. பாண்டியன், என். வரதராஜன் ஆகியோர் முதல்வரின் தலைமையிலான கையை உதறிவிட்டு இரட்டை இலையில் ஒட்டிக் கொண்டதும் வைகோவின் மீது வைத்திருந்த மதிப்பை ஜெயலலிதா குறைத்தார்.
வைகோவின் ஒப்புதல் இல்லாமல் ஒருதலைப்பட்சமõக ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட தொகுதிப் பங்கீடு இருவருக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. ஐந்து வருடங்கள் மத்திய அரசில் அமைச்சராகப் பவனி வந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டபோது தனது செல்வாக்குக்கு பங்கம் வராது அதிக தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று வைகோ எதிர்பார்த்தார். வைகோவுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் பின்னர் மனமிரங்கி ஒரு தொகுதி கூடுதலாக நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் அறிந்து வைகோ மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களும் அதிர்ந்து விட்டனர்.
புரட்சிப் புயலான வைகோவை ஜெயலலிதா அவமானப்படுத்தியதாகவே வைகோவின் மீது மதிப்பு வைத்திருப்பவர்கள் கருதுகிறார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படும் வைகோ என்ன செய்வதெனத் தெரியாது தடுமாறுகிறார்.
ஜெயலலிதாவே எனது முதல் எதிரி, வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்ற கோஷங்களுடன் 1993ஆம் ஆண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த வைகோ பின்னர் ஜெயலலிதாவிடமும் கலைஞர் கருணாநிதியிடமும் சரணடைந்து தனது கட்சியை வளர்க்க முயற்சி செய்தார்.
வைகோவின் அனல் பறக்கும் பிரசாரம் தேவைப்பட்டபோது அவரை அரவணைத்த கலைஞர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் தமது தேவை முடிந்ததும் அவரை ஒதுக்கினார்கள். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளை எதிர்த்து அரசியல் நடத்த முடியாத வைகோ, காலப்போக்கில் இரண்டு கட்சிகளையும் அனுசரித்துப் போகக் கற்றுக் கொண்டார். தனது சுய மரியாதைக்கு களங்கம் ஏற்படும்போது அதிரடியாக வெளியேறிய வைகோ இப்போது காட்டும் பொறுமையை தனக்கு சாதகமாக மாற்றியுள்ளார் ஜெயலலிதா.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றின் மீது வெறுப்படைந்தவர்களின் வாக்குகளைக் கவரும் சக்தி வைகோவுக்கு உள்ளது. ஆகையினால் கூட்டணியில் அவர் நீடிக்க வேண்டும் என்று ராமதாஸ், தா. பாண்டியன், என். வரதராஜன் ஆகியோர் கருதுகின்றனர்.
வைகோவுக்கு தமிழகத்தின் மத்தியில் மதிப்பும் மரியாதையும் உள்ளது. அவரது அரசியல் நேர்மையில் யாரும் சந்தேகப்பட முடியாது. ஆனால், அவரது கட்சி வாக்கு வீகிதம் குறைந்து வருவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ வெளியேறியபோது அவருடன் வெளியேறியவர்களில் பலர் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சென்றடைந்ததும் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதனால் அவருக்கான தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளன.
நேர்மையான அரசியல்வாதியான வைகோவினால் டாக்டர் ராமதாஸைப் போன்று அரசியல் ராஜதந்திரத்தின் மூலம் காய்களை நகர்த்தத் தெரியாததால் அவருடன் இருந்தவர்கள் அவரை விட்டு வெளியேறி விட்டனர்.
கொலை அச்சுறுத்தல் விடுத்து பிணையில் வெளிவர முடியாத வகையில் கைது செய்யப்பட்ட காடு வெட்டி குருவை பிணையில் விடுதலை செய்வதற்கான சூழøல உருவாக்கிய டாக்டர் ராமதாஸ் போன்று செயற்பட வைகோவால் முடியாது.
முதல்வர் கருணாநிதியுடன் சேர்ந்து இரட்டைக் குழல் துப்பாக்கி போல் செயற்பட்ட வைகோ இப்போது இரட்டை இலைகளில் ஒன்றாக மாறிவிட்டார். இரட்டை இலையை விட்டு வைகோ வெளியேறினால் அவரை தாமரையில் வைத்து அழகுபார்க்க பாரதிய ஜனதாக் கட்சி தயாராக இருக்கிறது.
வைகோவுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த ஜெயலலிதா மார்க்சிஸ்ட் ஒருவருக்கு அதிர்ச்சியளித்தார். வேட்பாளர்களை அறிவிப்பதற்காக தமது தொகுதிகள் எவை என்று கூறும்படி மார்க்சிஸ்ட்கள் நெருக்கடி கொடுத்தனர். அதனை பெரிதாக எடுக்காத ஜெயலலிதா லாவகமாக தொகுதிகளை அறிவித்தார். ஜெயலலிதா தொகுதிகளை அறிவிக்காததனால் மத்திய குழுக் கூட்டத்தை மார்க்சிஸ்ட்கள் ஒத்தி வைத்தனர்.
தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்க முன்னமே தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினை ஆரம்பமாகி விட்டது. இத்தனை களேபரத்தின் மத்தியில் நடைபெறப் போகும் தேர்தல் பிரசாரம் ஒரே குரலில் இருக்குமா என்ற சந்தேகம் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கட்சிகள் கூட்டணிக் குழப்பத்தில் தவிக்க முதல்வர் கருணாநிதி சுமுகமாக கூட்டணிக் கட்சிகளுக்குரிய தொகுதிகளை அறிவித்ததுடன் தனது மகன் அழகிரியையும் வேட்பாளராக்கி விட்டார்.
தன் அன்பு மகனுக்காகவே மதுரையை கையிலெடுத்துள்ள முதல்வர் கருணாநிதி ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் இடையே பிரச்சினை அடுத்த முதல்வர் அழகிரியா, ஸ்டாலினா என்ற பட்டிமன்றம் கழகத்துக்குள் கிலியை ஏற்படுத்தியது. அழகிரி நாடாளுமன்ற வேட்பாளரானதால் இந்தப் பிரச்சினைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் அதி கவனத்திற்கு உரியதொரு தொகுதியாக மதுரை மாறியுள்ளது. அழகிரியின் வெற்றியை தடுப்பதற்கு தன்னாலான சகல முயற்சிகளையும் செய்வதற்கு ஜெயலலிதா தயாராக உள்ளார். மதுரையின் நிழல் முதல்வராக இருக்கும் அழகிரி சரியான பதிலடி கொடுப்பார் என அவரது உடன் பிறப்புகள் கருதுகின்றனர்
வர்மா
.வீரகேசரி 12/04/2009

1 comment:

Bala said...

இப்போது ஈழ‌த்தில் உள்ள‌ நிலையில் த‌மிழ‌க‌த்தில் திமுக‌ காங்கிரஸ் கூட்ட‌ணி வென்றால் ஈழ‌த்தில் ந‌டைபெரும் கொடுமைக‌ளுக்கு த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஆத‌ர‌வு அளிப்ப‌து போல் ஆகிவிடும். இது வ‌ர‌லாற்றில் மிக‌ப் பெரிய‌ அவ‌மான‌மாக‌ க‌ருத‌ப்ப‌டும். இத‌னால்தான் வைகோ கூட்ட‌ணியில் நீடிக்க‌ வேண்டிய‌ நிலை. இதை ம‌திமுக‌ தொண்ட‌ர்க‌ளும் ஏற்றுக்கொண்டார்க‌ள்.. ஆனால் ஜெய‌ல‌லிதாவின் செய‌ல்க‌ளுக்கு அவ‌ர் வ‌ருந்த‌க்கூடிய‌ கால‌ம் வ‌ரும். ஒன்று ம‌ட்டும் நிச்ச‌ய‌ம். வைகோவின் முடிவுக‌ள் வ‌ரும் கால‌த்தில் மிக‌ க‌டுமையான‌தாக‌வும் ம‌க்க‌ள் ஏற்றுக் கொள்ள‌க்கூடிய‌தாக‌வும் இருக்கும்..