Sunday, November 27, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 12


மன்னர்களும் செல்வந்தர்களும் தாசியிடம் செல்வது அந்தக் காலத்தில் வழமையானது. ஒரு சில தாசிகள் மன்னர்களையும் செல்வந்தர்களையும் மட்டும் அனுமதிப்பார்கள். மற்றவர்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள். அபாஞ்சி சற்று வித்தியாசமானவள். வசீகரிக்கும் அழகும், மயக்கும் சிரிப்பும் கொண்ட தாசி அபாஞ்சியை யாருமே நேரடியாகப் பார்க்கக் கூடாது. அவளது சிரிப்பையோ பேச்சையோ யாரும் கேட்கக் கூடாது. அவளைப் பார்த்தால் சிரிப்பை@யா, பேச்சு ஒலியை@யா கேட்டாலும் அபராதம் கட்ட வேண்டும். அபராதம் கட்ட வசதி இல்லையென்றால் தாசி அபரஞ்சியின் வீட்டில் அடிமைபோல் வேலை செய்ய வேண்டும். தாசி அபரஞ்சியைக் கனவில் கூடக் காணக் கூடாது. கனவு கண்டாலும் அபராதம்தான். தாசி அபரஞ்சியைப் பற்றி படிக்கும் இவ்வேளையில் சின்னத்தம்பி குஷ்பு ஞாபகம்வந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல.
விக்கிரமாதித்தன் காலத்தில் வாழ்ந்த தாசி அபராஞ்சியின் ஆட்சி மன்னன் ஆட்சியை விட ஒருபடி மேலே இருந்தது. அபரஞ்சியின் அனுமதி இன்றி அவளைப் பற்றி நினைத்தால் கனவு கண்டால் ஆயிரம் பொன் அபராதம் கட்ட வேண்டும். ஆகையினால் தாசி அபரஞ்சியைப் பற்றி கதைக்கப் பயந்தனர். தாசி அபரஞ்சி மீது மோகம் கொண்ட கோயில் குருக்கள் ஒருவர் அவளை அடைவதற்காக வசியப் பொடி தயாரித்து அபரஞ்சி வீட்டில் வேலை செய்யும் சிங்காசியிடம் கோயில் பிரசாதம் பொங்கலில் கலந்து கொடுக்கிறார். வசியப் பொடியை சாப்பிட்டதும் தாசி அபரஞ்சி தன்னைத் தேடி வருவாள் என்று குருக்கள் எதிர்பார்த்தார்.
வேலைக்காரியான சிங்காரி கோவில் பிரசாதத்தை அபரஞ்சிக்குக் கொடுக்கவில்லை. பிரசாதத்தைச் சாப்பிட்ட சிங்காரியும் மிகுதியைச் சாப்பிட்ட ஆடும் கோவில் குருக்களைச் சுற்றத் தொடங்கின. தனது திட்டம் நிறைவேறாததனால் கோவில் குளத்தங்கரையில் படுத்த தாசி அபரஞ்சியைக் கனவு காண்கிறாள். குருக்களின் படி மீது தாசி அபரஞ்சி படுத்திருக்க தன்னை மறந்த நிலையில் அபரஞ்சி அபரஞ்சி எனப் புலம்புகிறார். குருக்கள்அபரஞ்சியின் அடியாட்கள் குருக்களைப் பிடித்துச் சென்று அபரஞ்சியின் முன் நிறுத்துகின்றனர். அபராதம் செலுத்த வசதி அற்ற ஏழைக் குருக்கள் தாசியின் வீட்டு வேலைக்காரனாகிறார்.
தாசி அபரஞ்சி வீட்டில் கிளி வடிவில் இருக்கும் விக்கிரமாதித்தன் தனது கூடு விட்டு கூடு பாயும் திறமையால் மீண்டும் விக்கிரமாதித்தனாக மாறி தாசி அபரஞ்சியைத் தண்டிக்கிறாள். சொத்துக்களை இழந்த தாசி அபரஞ்சி ஆலயத்தில் தஞ்சமடைகிறாள்.
ஜெமினி நிறுவனம் தயாரித்து 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தாசி அபரஞ்சி வசூலில் புதிய சாதனை படைத்தது. தாசியைப் பற்றிய கதை என்பதனால் கவர்ச்சிக் காட்சிகள் தாராளமாக புகுத்தப்பட்டன. மறு தணிக்கை செய்யப்பட்டே இப் படம் வெளியானது. தாசி அபரஞ்சியாக பிரபல தெலுங்கு நடிகையான புஷ்பவல்லி தமிழுக்கு அறிமுகமானார். சம்பூர்ண ராமாயணம் தெலுங்குப் படத்தின் சின்ன வயது சீதையாக அறிமுகமாகி பிரபல்யமான புஷ்பவல்லியை மாதச் சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்தது ஜெமினி நிறுவனம். காதல் மன்னனின் வலையில் விழுந்த புஷ்பவள்ளி ஜெமினி கணேசனின் மனைவியானார். இவரது மகள் ரேகா பிரபல ஹிந்தி நடிகை. தாசி அபராஞ்சி படத்தில் நடித்த புஷ்பல்லியின் பிரமாண்டமான கட் அவுட் அனைவரையும் கவர்ந்தது. எங்கே நின்று பார்த்தாலும் புஷ்பவல்லியின் கண்கள் தன்னையே பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.
விக்கிரமாதித்தனாக எம்.கே. ராதாவும் கோவில் குருக்களாக கொத்தமங்கலம் சுப்புவும் வேலைக்காரியாக எஸ்.எஸ். சுந்தரபாயும் நடித்தனர். என்.எஸ். கிருஷ்ணன், ரி.ஏ. மதுரம் காளி என். இரத்தினம் சி.டி. ராஜகாந்தம், கே. சாரங்கபாணி ஆகியோர் நடித்தனர். கொத்தமங்கலம் சுப்பு, சுந்தரி பாய் ஜோடியின் நகைச்சுவை இப்படத்தின் மூலம் பிரபலமாகியது.
ஒலிப்பதிவு பி.எஸ். ரங்கா. இசை எம்.டி. பார்த்த சாரதி எஸ். ராஜேஸ்வரராவ் கதை வசனம், பாடல்கள் கொத்தமங்கலம் சுப்பு, டைரக்ஷன் பி.என். ராவ்.

ரமணி
மித்திரன்20/11/11

2 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

New news about thamil movie . . .thanks

வர்மா said...

தங்கள்வருகைக்கும் பதிவுக்கும் நன்றி
அன்புடன்
வர்மா