Tuesday, November 22, 2011

அ.தி.மு.க. விசுவாசிக்குபதவி கொடுத்த சோனியா

தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக ராஜ்ய சபா எம்.பி. யான பி.எஸ். தேசிகன் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலில் தோல்வியின் பின் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து தங்கபாலு ராஜினாமாச் செய்தார். தங்கபாலு ராஜினாமாச் செய்ததும் உடனடியாகப் புதிய தலைவரைத் தெரிவு செய்யாது இழுத்தடித்து வந்த காங்கிரஸ் தலைமை மிக ஆறுதலாகப் புதிய தலைவரின் பெயரை அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சிக்கு ஒருவர் நியமனம் பெற்றால் அல்லது தேர்தலில் போட்டியிட அனுமதியளிக்கப்பட்டால் அவர் யாருடைய ஆள் என்று தான் பார்ப்பார்களே தவிர காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு பதவி கிடைத்துள்ளது என்று சந்தோசப்படமாட்டார்கள். தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக பி.எஸ். ஞானதேசிகன் நியமிக்கப்பட்டதனால் ஜி.கே. வாசனின் கோஷ்டி மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து தங்கபாலு ராஜினாமாச் செய்ததும் அப்பதவியைக் கைப்பற்றப் பலர் முயற்சித்தனர். தமிழக காங்கிரஸைப் பற்றி மிக நன்றாக அறிந்து வைத்துள்ள மேலிடம் புதிய தலைவரை நியமிக்க அவசரப்படவில்லை.
தமிழர் காங்கிரஸுக்கு உயிரூட்ட ராகுல்காந்தி எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்ததனால் அவசரப்பட்டு புதியதொரு பிரச்சினையை உருவாக்க தலைமைப்பீடம் விரும்பவில்லை. தமிழக சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைவதற்கு தங்க பாலுதான் முக்கிய காரணம் என தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் கூறுகிறார்கள்.
இந்த நிலையில் கருணாநிதிக்கு நெருக்கமான தங்கபாலுவுக்குப் பதிலாக ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய ஞானதேசிகன் நியமிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நகர்வைக் கோடி காட்டியுள்ளது.
ஸ்பெக்ரம் ஊழல் காரணமாக காங்கிரஸ் கட்சியை விட்டுத் தூரப் போகிறார் கருணாநிதி. அடுத்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர கருணாநிதி விரும்பமாட்டார். ஸ்பெக்ரம் விவகாரத்தில் கனிமொழி சிக்கியதிலிருந்து கட்சியின் செயற்பாடுகளை விட குடும்பத்தின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார் கருணாநிதி. தானும் மகன் ஸ்டாலினும் எதிர்க்கட்சிகளால் பழிவாங்கப்பட்ட போது கலங்காத கருணாநிதி கனிமொழி சிறையில் இருப்பதனால் துவண்டு போயுள்ளார். கனிமொழி பட்ட வேதனைகளும் துன்ப துயரங்களும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டணியில் பிரதிபலிப்பை ஏற்படுத்தும்.
ஜி.கே. மூப்பனாரின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர் ஞானதேசிகன். காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய மூப்பனார் புதிய கட்சி ஆரம்பித்தபோது அவருடன் சென்றவர் ஞானதேசிகன். ஸ்ரீ வல்லிபுரத்தூரைச் சேர்ந்த இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி புரிந்தவர். கர்நாடக காங்கிரஸில் இருந்த கட்சிப் பூசலுக்கு மத்தியில் உட்கட்சித் தேர்தலை நடத்தி சோனியாவிடம் நல்ல பெயரைப் பெற்றவர். தமிழக காங்கிரஸில் உள்ள கோஷ்டிகளை சமாளித்து கட்சியை முன்னேற்றுவõர் என்ற நம்பிக்கையிலேயே சோனியா இவரைத் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமித்துள்ளார்.
தமிழக சட்ட மன்றத்தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் படுதோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி அடுத்து வரப் போகும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் போது கருணாநிதி கைவிட்டால் ஜெயலலிதாவுடன் அல்லது விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டிய நிலை ஏற்படலாம். அதற்கு முன்னேற்பாடாகவே ஞானதேசிகன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
தமிழக ஆட்சி மாற்றத்தை அடுத்து பரபரப்பாக அரங்கேறிய நில மோசடி வழக்குகள் இடையில் சற்றுத் தொய்வடைந்திருந்தன. இப்போது மீண்டும் வேகம் பெறத் தொடங்கிவிட்டன. நில மோசடி வழக்கில் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் ரித்தீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். நில மோசடி அபகரிப்பு வழக்கின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நில மோசடி வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது மீண்டும் ஒரு நில மோசடிப் புகார் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மீதும் நில மோசடிப் புகார் எழுந்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடம் ஏறியதும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக நில மோசடி நில ஆக்கிரமிப்பு பற்றிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் உட்படப் பலர் கைது செய்யப்பட்டனர். ஒரு சிலர் பிணையில் விடுதலையாகியுள்ளனர். பலர் இன்னமும் சிறையிலேயே உள்ளனர். நில அபகரிப்பு, ஆக்கிரமிப்புப் பற்றிய ஆயிரத்துக்கும் அதிகமானோர் புகார் செய்ததனால் அதற்காகத் தனிப் பிரிவு அமைக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மிக முக்கிய புள்ளிகள் இதில் சிக்குவார்கள் என்று பரபரப்பாகச் செய்திகள் வெளியாகின. இன்னமும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்களைச் சிக்க வைப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் நடைபெறுகின்றன.
தோல்வியடைந்த கட்சியிலிருந்து வெளியேறும் கைங்கரியத்தைத் தமிழக அரசியல்வாதிகள் ஆரம்பித்து விட்டனர். காங்கிரஸ் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கட்சி ஆகியவற்றின் நிர்வாகிகள் சிலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற சிலர் கட்சி தாவியுள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அதிலிருந்து வெளியேறிய பலர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். இப்போது வெற்றி பெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நோக்கி தோல்வியடைந்த கட்சியின் முக்கியஸ்தர்கள் தாவத் தொடங்கிவிட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலூர் சம்பத் விஜயகாந்தின் கட்சியில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள சுமார் 200 பேர் இவருடன் கட்சிமாறியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் போது கட்சி மாறுபவர்களைத் தடுத்து நிறுத்தும் வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டிய நிலை உண்டாகும்.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு20/11/11

No comments: