Friday, November 11, 2011

பா.ம.க.வுக்குள் பிளவுகலக்கத்தில் தொண்டர்கள்


வன்னியர்களின் வளமான வாழ்வுக்காக ஆரம்பமான பாட்டாளி மக்கள் கட்சிக்குள் உட்பூசல்கள் அதிகரித்துள்ளன. தமிழக தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் கட்சியாக ஒரு காலத்தில் விளங்கிய பாட்டாளி மக்கள் கட்சி காலத்தின் கோலம் காரணமாக தேடுவார் இன்றி அநாதையாக நின்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இணைந்து நினைத்ததை சாதித்து வந்தார் ராமதாஸ். வன்னியர் சமுதாயத்திற்காக ஆரம்பமான இயக்கம் நாளடைவில் அரசியல் கட்சியாக மாறி ராமதாஸின் மகன் அன்புமணி அமைச்சராவதற்கு பேரம் பேசியதால் வன்னியரின் மதிப்பை இழந்து நிற்கிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சி படுதோல்வியடைந்தது. இந்தக் தோல்விக்கு கட்சித் தலைவர்க கோ.சி மணி தான் காரணம் என்று கட்சியின் நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். கோ.சி மணியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள டாக்டர் ராமதாஸ் இதன் காரணமாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் துணைப் பொதுச் செயலாளருமாக இருந்தவருமான வேல்முருகன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதனால் பாட்டாளி மக்கள் கட்சியினுள் பூகம்பம் வெடித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியை வளர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவர் வேல்முருகன். வேல் முருகனின் வசீகரப் பேச்சு கட்சிக்குள் பலரை இழுத்தது. மாற்றுக் கட்சித் தலைவர்களும் அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டு பாராட்டினர். வேல் முருகன் வெளியேற்றப்பட்டதை அறிந்து அவரது ஆதரவாளர்கள் கட்சிக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். இதன் காரணமாக ஆங்காங்கே சில வன்செயல்கள் நடைபெற்றன. கட்சி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. கட்சிக் கொடிக் கம்பம் வெட்டி வீழ்த்தப்பட்டது. ராமதாஸின் கட் அவுட் அடித்து நொருக்கப்பட்டது.
கடலூர் பண்ருட்டி, நெய்வேலி ஆகிய இடங்களில் உள்ள வேல் முருகனின் ஆதரவாளர்கள் தமது வெறுப்பை வெளிப்படையாகக் காட்டியுள்ளனர். நெய்வேலி என்.எல்.சி. பாட்டாளி ஒப்பந்த தொழிற்சங்கம் கூண்டோடு கலைக்கப்பட்டு விட்டது. கடலூர், கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள அனைவரும் இராஜினமா செய்து விட்டதாக தலைமைக்கு அறிவித்துள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து பலர் வெளியேற்றப்பட்டனர். பலர் தாமாகவே வெளியேறினர். அப்போதெல்லாம் இது போன்ற பிரச்சினைகள் ஏற்படவில்லை.
தமிழக சட்ட சபைத் தேர்தலிலும் உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியடைந்து நலிந்து போயுள்ள பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து வேல் முருகன் வெளியேற்றப்பட்டது கட்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அசுர வளர்ச்சியினால் எதிர்க்கட்சிகள் தலைதூக்க முடியாத நிலையில் உள்ளன. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பூகம்பம் அக்கட்சியின் வளர்ச்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல்கட்சியிலிருந்து முக்கியமானவர்கள் வெளியேறுவதும் வெளியேற்றப்படுவதும் வாடிக்கையான சம்பவம் தான். அதனால் கட்சிக்கு ஏற்படும் பாதிப்பு காலப் போக்கில் சரியாகி விடும். இன்றைய தமிழக அரசியல் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சிக்குள் ஏற்பட்ட இப்பிரச்சினை உடனடியாகத் தீர்ந்து விடாது. சட்ட சபையின் முன்னாள் உறுப்பினர்களான திருக்கச்சூர், ஆறுமுகம், எதிரொலிமணியன், வேலுச்சாமி, பவானி ராமநாதன், செந்தமிழ்ச் செல்வன் ஆகியோர் மீதும்கட்சித் தலைமை நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராக இருந்ததாகவும் வேல் முருகனை நீக்கியதால் ஏற்பட்ட கொந்தளிப்பால் அத்திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சி மக்கள் மத்தியில் பிரபல்யமடைய முன்னின்று சேவை செய்த தலித் எழில் மலை, பேராசிரியர் தீரன், அருள்மொழி போன்றவர்கள் ஏற்கனவே கட்சியிலிருந்து விரட்டப்பட்டனர். புதுச்சேரியில் கட்சியைக் கட்டிக் காக்க பேராசிரியர் ராமதாஸ் அரசியலை விட்டு ஒதுங்கியுள்ளார். இந்த நிலையில் வேல் முருகனை கட்சி வெளியேற்றியது பாட்டாளி மக்கள் கட்சியில் மட்டுமல்ல வேறு கட்சியினர் இடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி கோ.சி. மணி, அ.கி. மூர்த்தி ஆகியோர் சுற்றியுள்ளவர்களை கட்சியில் நிலைத்து நிற்பார்கள். நியாயத்தைக் கேட்பவர்கள். கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களும் அதிருப்தியுடன் கட்சியில் இருப்பவர்களும் ஒதுங்கி இருப்பவர்களும் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சிக்குப் போட்டியாகப் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


கருணாநிதி தமிழக முதல்வராகப் பதவி வகித்தபோது காலத்தால் அழியாத பிரமாண்டமான கட்டடங்கள் சிலவற்றை அமைத்தார். ஒவ்வொரு காலத்திலும் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய கட்டடங்களாக அவை அமைந்தன. அப்படிப்பட்ட கட்டங்களில் ஒன்றான அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு இப்போது ஆபத்து வந்துள்ளது. அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு அக் கட்டடத்தை சிறுவர்களுக்கான உயர் வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப் போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். கருணாநிதியின் பெயரை வரலாற்றில் இருந்து மறைக்க வேண்டும் என்பதை தனது ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்படாத ஒரு கொள்கையாகக் கடைப்பிடிக்கிறார் ஜெயலலிதா.
திராவிடக் கட்சிகளின் வழிகாட்டி அறிஞர் அண்ணாதுரை அண்ணாவின் பேச்சால் கவரப்பட்ட இலட்சக்கணக்கான இளைஞர்கள் அண்ணா திராவிடக் கட்சியில் சேர்ந்தனர். திராவிடக் கட்சியிலிருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய போது இலட்சக்கணக்கான தொண்டர்களும் இளைஞர்களும் அவரின் பின்னால் சென்றனர். அண்ணாவின் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த எம்.ஜி.ஆர். தான் ஆரம்பித்த அரசியல் கட்சிக்கு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் சூட்டி அண்ணாவுக்குக் கௌரவம் கொடுத்தார். எம்.ஜி.ஆர்.இன் கட்சியை வழி நடத்தும் ஜெயலலிதா அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தை மூடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.
அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் ஏதாவது குறைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டியது தமிழக முதல்வரான ஜெயலலிதாவின் கடமை. அதனை மூடுவதற்கு திட்டமிட்டது கருணாநிதி மீது அவர் வைத்துள்ள பகைமையை வெளிப்படுத்துகிறது. கருணாநிதியின் நேரடிக் கண்காணிப்பில் உருவான பிரமாண்டமான கட்டிடங்களில் புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் ஆகியவை மிகவும் முக்கியமானவை. புதிய தலைமைச் செயலகத்தைக் கைவிட ஜெயலலிதா எடுத்த முடிவுக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அந்த எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காக புதிய தலைமைச் செயலகத்தை நவீன மருத்துவ மனையாக்கப் போவதாகக் கூறினார். அந்த வார்த்தை இப்பொழுதும் காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது. அதன் திசையில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தையும் சிறுவர் வைத்தியசாலையாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
நூலகத்தின் மீது அபிமானம் கொண்டவர்கள் நீதிமன்றத்தை நாடியதால் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
புதிய தலைமைச செயலகம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் ஆகிய இரண்டும் மருத்துவமனை வசதிகள் அடங்கிய கட்டிடங்கள் அல்ல. கருணாநிதி மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடே இந்த அறிவிப்புகள். கருணாநிதியின் எதிர்ப்புக்கு முன்னாள் அண்ணாவின் பெயரும் கால்தூசு என்பதை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயலலிதா.
கடற்கரையில் கம்பீரமாக நின்ற கண்ணகி சிலை வாஸ்துப் பிரச்சினையில் தூக்கி எறியப்பட்டது.
கருணாநிதி முதல்வரானதும் கண்ணகி மீண்டும் புதுப் பொலிவு பெற்றார். செம்மொழி நூலகம் புதிய தலைமைச் செயலகம் ஆகியவற்றின் பட்டியலில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகமும் இடம்பிடித்துள்ளது. கருணாநிதியின் மீள் வருகை இவற்றிற்கு நிவாரணம் வழங்கும்.
வள்ளுவர் கோட்டம் திருவள்ளுவர் சிலை என்பனவற்றை என்ன செய்யப் போகிறார் முதல்வர் ஜெயலலிதா.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு06/11/11




No comments: