Thursday, December 8, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 15

தமிழ்த்திரை வரலாற்றில் புதிய புரட்சியை ஏற்படுத்திய படம்சிந்தாமணி. 1937 ஆம் ஆண்டு வெளியான சிந்தாமணி என்ற இப்படத்தைப் பார்த்த அன்றைய இளைஞர்கள் நாயகியான அசுவத்தம்மா மீது காதல் கொண்டு அலைந்தார்கள். அசுவத்தம்மாவின் முகத்தை ஒரு முறை பார்பபதற்கு இளைஞர்கள் முன்டியடித்தார்கள். அசுவத்தம்மாவை பார்க்கும் ஆவலில் இலங்கையிலிருந்தும் பல இளைஞர்கள் கப்பல் மூலம் இந்தியாவுக்குச்சென்றார்கள். குடும்பத்தையும் மனைவியையும் துறந்து தாசி சிந்தாமணியே கதி என்று கிடந்த கோடீஸ்வர இளைஞனின் கதைதான் சிந்தாமணி.
தாசி குடும்பத்தில் பிறந்த சிந்தாமணி. விருப்பமின்றி குலத் தொழில் செய்து வருகிறாள். சிந்தாமணியின் அழகில் மயங்கிய பலர் அவளின் வீட்டுக்கு அடிக்கடி சென்றனர்.பேராசை பிடித்த சிந்தாமணியின் தாய், சிந்தாமணியைத்தேடி வருபவர்களின் பெறுமதிமிக்க பொருட்களையும்சொத்துக்களையும் அபகரித்த பின் விரட்டிவிடுவாள். சிந்தாமணியின் தாயிடம் சொத்துக்களைப் பறிக்கொடுத்து ஓட்டாண்டியானவர்களில் எம்கேக.தியாகராஜபாகவதரின் நண்பனும் ஒருவர். சொத்துக்களை இழந்தபோதும் சிந்தாமணியின் அழகில் சொக்கியுள்ள அவர் தன் நண்பனான எம்.கே. தியாகராஜபாகவதருக்கு சிந்தாமணியை அறிமுகப்படுத்துகிறார்.
கோவிலில் சிந்தாமணியின் நாட்டியத்தைப் பார்த்த எம்.கே.தியாகராஜபாகவதர் மதிமயங்குகிறார். சிந்தாமணியின் நாட்டியமும் அழகும் எம்.கே.தியாகராஜபாகவதரின் மனதைக் கிறங்கடித்தன. அழகு தேவதையின் அபிநயத்தில் மயங்கிய எம்.கே.தியாகராஜபாகவதர் சிந்தாமணியின் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினார். சிந்தாமணியின் தாய் தன் சுயரூபத்தை மெல்ல மெல்ல வெளிப்படுத்தத் தொடங்குகிறாள். எம்.கே.தியாகராஜபாகவதர் வீட்டில் உள்ள பெறுமதியான பொருட்கள் எல்லாம் சிந்தாமணியின் வீட்டுக்கு இடம் மாறுகின்றன.
தாசி வீடே கதியென எம்கே.தியாகராஜபாகவதர் கிடப்பதைக்கண்டு தகப்பன் தன் சொத்துக்களை மருமகளின் பெயருக்கு மாற்றினார். கணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற கொள்கையின் படி வாழும் எம்..கே. .தியாகராஜபாகவதரின் மனைவி சொத்துக்கள் அனைத்தையும் கணவனின் காலடியில் வைத்து தன்னுடன் சேர்ந்து வாழும்படி கெஞ்சுகிறாள். சொத்தை இழந்தாலும் சுகத்தை இழக்க விரும்பாத எம்.கே.தியாகராஜபாகவதர் தாசி சிந்தாமணியைத் தேடிச் செல்கிறார். இடியுடன் கூடிய மழை பெய்யும்போது எம்கே.தியாகராஜபாகவதரின் தகப்பன் இறந்துவிடுகிறார். தகப்பன் இறந்ததையும் பொருட்படுத்தாது சிந்தாமணியைத் தேடிச் செல்கிறார் தியாகராஜபாகவதர். தியாகராஜபாகவதரின் மனைவி கங்கையில் மூழ்கி உயிரிழக்கிறார்.
கடும் மழை கரணமாக வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அப்போது வெள்ளத்தில் மிதந்துவந்த பிணம் ஒன்றைப் பற்றிப்பிடித்து நீந்திக்கொண்டு சிந்தாமணி வீட்டுக்குச் செல்கிறார் எம்.கே.தியாகராஜபாகவதர். மதிலில் மலைபாம்பு ஒன்று தொங்கியிருக்க கொடி என நினைத்து மலைப்பாம்பைப் பிடித்து மதிலேறி சிந்தாமணியின் வீட்டுக்குள் செல்கிறார் எம்.கே.தியாகராஜபாகவதர். எம்.கே.தியாகராஜபாகவதரின் கரத்தில் உள்ள இரத்தக் கறையைக் கண்ட சிந்தாமணி இது எப்படி ஏற்பட்டது என வினவுகிறாள். வெள்ளத்தில் கட்டையைப்பிடித்து நீந்தியதாகவும் கொடியைப்பிடித்து மதிலைக் கடந்ததாகவும் கூறுகிறார் எம்.கே.தியாகராஜபாகவதர்.
தியாகராஜபாகவதர் கூறியது உண்மையா என்று பார்ப்பதற்கு சென்று பார்த்தபோது மதிலில் மலைபாம்பு இருந்தது. அவர் கரையேறிய இடத்தில் மனைவியின் பிணமும் கிடந்தது. தன் தவறை உணர்ந்த தியாகராஜபாகவதர் கிருஷ்ண பக்தராக மாறுகிறார். இதுவரை காலமும் குருடனாக வாழ்ந்ததை எண்ணி தன் கண்ணைக் குத்தி குருடனாகிறார். சிந்தாமணியும் பக்தையாகிறாள்.
சிந்தாமணி அல்லது பில்வமங்கள் என்ற பெயர் இப்படம் வெளியான போதும் சிந்தாமணி என்ற பெயரே நிலைத்துவிட்டது. சிந்தாமணியாக அசுவத்தம்மாவும், பில்வமங்களாக எம்.கே.தியாகராஜபாகவதரும் நடித்தனர். எம்.கேதியாகராஜபாகவதரின் மனைவியாக அரங்கநாயகியும், நண்பனாக வை.வி.ராவும் நடித்தனர். பாடல்கள் பாப நாசசிவன். வசனம் ஏ.அய்யாலு சோமயாஜுலு, ஒளிப்பதிவு வை.பி.வாஷிர். இயக்கம் நண்பனாக நடித்த வை.வி.ரா. இவர் நடிகை லக்ஷ்மியின் தகப்பனாவார். ஆந்திராவில் நீண்ட காலமாக நாடகமாக நடிக்கப்பட்ட கதையே சிந்தாமணி என்ற பெயரில் வெளியாகி வெற்றிபெற்றது.
53 வாரங்கள் ஓடி வெள்ளிவிழா கொண்டாடிய சிந்தாமணி திரைப்படம் வரலாற்றில் பலசாதனைகளைப் படைத்த மதுரையில் உள்ள ராயல் டாக்கீஸ் சிந்தாமணி படத்தை தயாரித்தது. சிந்தாமணியின் வெற்றியைக்கடந்து மதுரைராயல் டாக்கீஸ் சிந்தாமணி தியேட்டர் என பெயர் மாறியது. இப்படம் பின்னர் மறு தணிக்கை செய்யப்பட்டது.
மாயப்பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை, பஜனை செய்வோம் கண்ணன் நாமம், ஞானக்கண் இருந்திடும் போதினிலே, ராதே உனக்கு கோபம் ஆகாதடி போன்ற பாடல்களை முணு முணுக்காதவர்களே இல்லை.செஞ்சுருட்டியில் வர்ண மெட்டில் அமைந்த ராதே உனக்கு கோபம் ஆகாதடி என்ற பாடலே ரங்கூன் ராதா படத்தில் ரி.எம்.எஸ் பாடிய ராதை உனக்கு கோபம் ஆகாதடி என்ற பாடலின் முன்னோடியாகும்.
ரமணி



மித்திரன்04/12//11

No comments: