Sunday, December 18, 2011

தமிழில் வெளியா தமிழ்ப் படங்கள்

சரித்திர, புராணப் படங்களின் ஆளுமைக்குட்பட்டிருந்த தமிழ்த் திரைப் படத்துறை சமூகப் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த போது பிறமொழிப் படங்களையே பெரிதும் நம்பியிருந்தது.பிறமொழிகளில் வெற்றி பெற்ற படத்தின் உரிமையை வாங்கி தமிழில் வெளியிட்டார்கள். மேக்கப், லொக்கேஷன் போன்றவை அப்படியே இருக்க நடிகர், நடிகை, டைரக்ரர், இசையமைப்பாளர் போன்ற கலைஞர்கள் மட்டும் மாற்றப்பட்டனர். வங்கப் படங்கள் ஒரு காலத்தில் மிக அதிகளவில் தமிழ் வடிவம் பெற்றன. பின்னர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெற்றி பெற்ற படங்கள் தமிழுக்கு மாற்றமடைந்தன. அதே போன்று தமிழில் வெற்றி பெற்ற படங்களும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்தன.
இது தவிர ஒரு கதையை இரு மொழிகளில் ஏக காலத்தில் தயாரித்து வெற்றி பெற்ற தயாரிப்பாளர்கள் உள்ளனர்.முதல் முதலில் அதிக பொருட்செலவு செய்து மிகப் பிரம்மாண்டமான செட்கள் அமைக்கப்பட்ட சந்திரலேகா ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாரானதுதமிழ் மொழி நடிகர்களை வைத்து படமாக்கப்பட்ட காட்சி மீண்டும் அதே உடையில் உள்ள ஹிந்தி நடிகர்களை வைத்து படமாக்கப்பட்டதுஜெமினி, ஏ.வி.எம், தண்டாயுதபாணி பிலிம்ஸ் என்பன தமிழில் தாம் வெளியிட்டு வெற்றி பெற்ற படங்களை ஹிந்தியிலும் வெளியிட்டன. பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் வேறு மொழிகளில் வெற்றி பெற்ற படங்களின் உரிமையை வாங்கி தமிழில் வெளியிட்டது. சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரித்த தியாகம் வெள்ளி விழா கொண்டாடியது. ~~தீபம், உத்தமன், நீதி,ராஜா,எங்கிருந்தோ வந்தாள் ஆகியன 100 நாட்களுக்கு மேல் ஓடின.என் தம்பி, எங்க மாமா,திருடன் ஆகியன முதலுக்கு மோசமில்லாமல் தயாரிப்பாளரைக் காப்பாற்றின. அமிதாப்பச்சன் மூன்று வேடங்களில் நடித்த ஹிந்திப் படம் திரிசூலம் என்னும் பெயரில் வெளியாகி 250 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது இது ஒரு வகையில் ஒப்புக் கொள்ளப்பட்ட வியாபாரம். ஆனால் தமிழில் வெளியான கதையை மீண்டும் தமிழில் வெளியிடுவதும், தமிழில் வெளியான ஒரு கதையை சிறிய மாற்றங்களுடன் மீண்டும் தமிழில் வெளியாவதும் மிக நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றது.

தமிழில் வெளியான படத்தை மீண்டும் தமிழில் வெளியிட்டுக் கையைக் கடிக்காது தப்பிய தயாரிப்பாளரும் உண்டு. முதலில் தோல்விடைந்த படம் இன்னொரு முறை வெளியாகி வெற்றி பெற்ற சம்பவமும் உண்டு. எம்.கே.ராதாவின் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் என்ற படம் இரட்டை வேடப் படங்கள் வெற்றி பெறும் என்ற எண்ணத்தை முதல் முதலில் ஏற்படுத்தியது. ஒரே உருவ அமைப்புக் கொண்ட இரட்டைப் பிறவிகள் சந்தர்ப்ப சூழ்நிலையில் பிரிந்து வாழ்கிறார்கள். ஒருவருக்கு அடித்தால் மற்றவருக்கு வலிக்கும் என்பது இப்படத்தின் சிறப்பம்சம். அபூர்வ சகோதரர்கள் என்ற படக்கதை பின்னாளில் எம்.ஜி.ஆர் நடிப்பில் நீரும் நெருப்பும் என்ற பெயரில் வெளியானது. 100 நாட்களுக்கு மேல் ஓடி எம்.ஜி.ஆருக்குப் புகழ் தேடிக் கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று. தியாகராஜ பாகவதருக்கு சவால் விட்டு நடித்தவர் பி.யு.சின்னப்பா. இவர் இரட்டை வேடத்தில் நடித்த படம் உத்தம புத்திரன் பின்னாளில் அதே கதை, அதே பெயரில் தயாரிக்கப்பட்ட போது சிவாஜி கணேசன் இரட்டை வேடத்தில் நடித்தார்இன்று ரஜினி ஸ்ரைல் அனைத்துக்கும் மூல காரணம். அன்றைய உத்தம புத்திரன் சிவாஜியின் நடிப்பு.மேன் வித் த அயன் மாக்ஸ்க் என்ற ஆங்கிலப்படத்துக்கும் உத்தம்புத்திரனுக்கும் தொடர்புள்ளது.
. கண்ணனின் பக்தராக பி.யு. சின்னப்பா நடித்த சுதர்சனம் என்ற படம் பின்னாளில் நாகைய்யாவின் நடிப்பில் சக்கரதாரியாக வெளியானது. மகன் காதலித்த பெண்ணை சந்தர்ப்ப சூழ்நிலையில் தகப்பன் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சினை தான் எதிர்பாராதது என்ற திரைப்படத்தின் கதை. ரஜினி காதலித்த ஸ்ரீதேவியை அப்பா கல்கத்தா விஸ்வநாதன் மணமுடிப்பதால் மூன்று முடிச்சு திரைப்படத்தின் கதை விறுவிறுப்பானது. எதிர்பாராதது திரைப்படத்தில் பத்மினியைக் காதலித்த சிவாஜி இறந்ததால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சிவாஜியின் தகப்பன் நாகைய்யாவை பத்மினி மணமுடிக்கிறார். கமலும் ஸ்ரீதேவியும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். ஸ்ரீதேவியை ரஜினி ஒருதலைப்பட்சமாகக் காதலிக்கிறார். கமலின் மரணத்திற்குக் காரணமான ரஜினியின் அப்பாவை ஸ்ரீதேவி திருமணம் செய்கிறார்.எதிர்பாராதது படத்தின் உணர்ச்சி மிக்க காட்சியில் பத்மினி சிவாஜிக்கு அடித்தது இன்றும் பழைய ரசிகர்களால் சிலாகித்துப் பேசப்படுகிறது. மூன்று முடிச்சில் ஆரம்பமான ரஜினி ஸ்ரைல் இன்றும் சூப்பஸ்ராராக ஜொலிக்கிறது.


அண்ணன், தங்கை உறவை விபரிக்கும் படங்கள் நு}ற்றுக் கணக்கில் வெளிவந்தாலும் பாசமலர் படத்துக்கு இணையாக எதுவுமில்லை. சாவித்திரியும் சிவாஜியும் அண்ணன், தங்கையாக பாசத்தைக் கொட்டிய பாசமலர் படத்தைப் பார்த்து அழதவர்கள் இல்லை என்றே கூறலாம்.வெள்ளி விழாக் கொண்டாடிய பாசமலரின் கதையே கிழக்குச் சீமையாக உருவானது. 1962ஆம் ஆண்டு இளைஞர்கள் பெரியவர்களுக்குப் பயந்து ரசித்த பாடல் பாவாடை தாவணியில் பார்த்த உருவமா அந்தப் பாடல் இடம்பெற்ற நிச்சய தாம்பூலம் பின்னாளில் புருஷலட்சணமாக குஷ்புவிற்குப் பெருமை சேர்த்தது. தங்கை லட்சுமியின் திருமணத்திற்காக அண்ணன்படும்பாட்டை சித்தரித்த லக்மி கல்யாணம் பொற்காலமாக உருவாகி சேரன் புகழ் பாடியது. மகாபாரதத்தில் வில்லன்களுன் சேர்ந்திருந்த கதாநாயகன் கர்ணன் செஞ்சோற்றுக் கடனைத் தீர்த்த கர்ணனின் கதையே தளபதியாக மாறியது. புராணத்தில் வலம் வந்த கர்ணன் நண்பனுக்காக உயிரைக் கொடுத்தான். ரஜினி இறப்பதை ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என்பதால் தளபதியில் ரஜினி இறக்கவில்லை. பெற்றால் தான் பிள்ளையா என்ற நாவல் பார் மகளே பார் என்ற பெயருடன் வெளியாகி வெற்றி பெற்றது. அதே கதை கொஞ்சம் மாறி இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் பைலட் பிரேம் நாத்தாக வெளியாகியது.


உள்ளத்தை அள்ளித்தா மூலம் ரசிகர்கள் மனதில் குடிபுகுந்து ரகளை செய்தவர் ரம்பா. காதல், நகைச்சுவை அனைத்தும் கனகச்சிதமாக இருந்த இப்படத்தைப் புகழாதவர்கள் இல்லை. ஆனால் சிவாஜி நடித்த சபாஷ் மீனா தான் உள்ளத்தை அள்ளித்தா என்ற பெயரில் வெளியானதை பழைய ரசிகர்கள் புரிந்து கொண்டார்கள். சபாஷ் மீனாவில் சந்திரபாபு இரட்டை வேடம், உள்ளத்தை அள்ளித்தாவில் அதே பாத்திரத்தை மணிவண்ணன் ஏற்றிருந்தார்.சிவாஜி கணேசனின் நு}றாவது படம் நவராத்திரி. ஒன்பது வேடங்களில் சிவாஜி மிகப் பிரமாதமாக நடித்திருந்தார். ஆனால் அதே போன்ற கதைதான் எம்.ஜி.ஆரின் நவரட்னம். இதில் எம்.ஜி.ஆர் ஒன்பது கதாநாயகியருடன் ஜோடி சேர்ந்தார். ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியான போது வாசகர்களால் பெரிதும் சிலாகிக்கப்பட்ட நாவல் கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள். தில்லானா மோகனாம்பாள் நாவல் திரைப்படமான போது நாட்டியப்பேரொளி பத்மினி தனது பரதக்கலையை வெளிப்படுத்தினார். நடிகர் திலகமும் நிஜமான நாதஸ்வர வித்வானாக மாறிவிட்டார். அதே கதை கரகாட்டக்காரனாக வெளியாகி வெள்ளிவிழா கண்டது. அப்படத்தின் கதாநாயகனும் கதாநாயகியும் சில நாட்களில் காணாமல் போய்விட்டனர். ஆனால் கவுண்டமணி, செந்தில் ஜோடியின் வாழைப்பழக் கதை இன்றும் சிரிக்க வைக்கிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே நேரத்தில் வெளியான முதல் தமிழ்ப் படம் வசந்த மாளிகை. யாழ்ப்பாணத்தில் வெலிங்டன், லிடோ ஆகிய இரு திரையரங்குகளில் ஒரு படப்பிரதி மூலம் காண்பிக்கப்பட்ட படம். இலங்கையிலும் இந்தியாவிலும் ஏககாலத்தில் வெள்ளிவிழாக் கொண்டாடிய படம்.வசந்த மாளிகை, கோகுலத்தில் சீதையாகவும் பாலும் தேனும், கற்பூர தீபமாகவும் படிக்காத மேதை, பேர்சொல்லும் பிள்ளையாகவும் உருமாறின.

ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 01/02/2004

No comments: