Sunday, December 4, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 14

சினிமாவிலும் அரசியலிலும் எதிரும் புதிருமாக இருந்த மக்கள் திலகமும் நடிகர் திலகமும் இணைந்து நடித்த ஒரே ஒரு திரைப்படம் கூண்டுக்கிளி. நண்பனின் மனைவியை அடையத் துடிக்கும் துரோகியின் கதை. எம்.ஜி.ஆர் கதாநாயகனாகவும் சிவாஜி வில்லனாகவும் நடித்தனர்.
பி.எஸ்.சரோராஜாவைப் பெண் பார்த்த சிவாஜி, அவர்தான் தன் மனைவி என்று முடிவு செய்கிறார். விதி வச‌த்தால் சிவாஜியின் நண்பன் எம்.ஜி.ஆரின் மனைவியாகிறார் சரோஜா. இதை அறியாத சிவாஜி பி.எஸ்.சரோஜாவைத்தேடி ஊரெல்லாம் அலைகிறார். வாழ்க்கையில் வெறுப்படைந்த சிவாஜி ரயிலின் முன் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்தபோபாது எம்.ஜி.ஆர் காப்பாற்றுகிறார். சிவாஜியை வீட்டுக்கு கூட்டிவந்த எம்.ஜிஆர். தன் மனைவி பி.எஸ். சரோஜாவை அறிமுகப்படுத்துகிறார். தனக்கு மனைவியாக வரவேண்டிய பி.எஸ்.சரோராஜா தன் நண்பனின் மனைவியானதை அறிந்து அதிர்ச்சியடைகிறார் சிவாஜி.
சிவாஜி செய்த குற்றத்திற்காகக் சிறைக்குச் செல்லும் எம்.ஜி.ஆர் தன் மனைவியை கவனமாக பார்க்கும் படி கூறுகிறார். உயிர் கொடுப்பான் நண்பன் என்பதற்கிணங்க எம்.ஜி.ஆர் சிறைச்செல்ல நண்பனுக்கு துரோகம் செய்ய திட்டமிடுகிறார் சிவாஜி. தனக்கு தலைவலி என்று கூறி தலைக்கு தைலம் பூசும்படி பி.எஸ்.சரோஜாவிடம் கூறுகிறார். கள்ளம் கபடமில்லாத சரோஜா, சிவாஜிக்குத் தைலம் பூ"கிறார். சரோஜாவின் கைப்பட்டதும் சிவாஜியின் காமத் தீ வெளிப்படுகிறது. தன் இச்சையை சரோஜாவிடம் கூறுகிறார். தான் நண்பனின் மனைவி என்பதை சரோராஜா ஞாபகப்படுத்துகிறார்.
கடுமையான மழை பெய்த ஒருநாள் சரோஜாவை கெடுக்க முயற்சிக்கிறார் சிவாஜி. அப்போது உண்டான மின்னலால் சிவாஜியின் கண் பார்வை பறி போகிறது. தன் தவறுக்கு கடவுள் கொடுத்த தண்டணை என்று உணர்ந்த சிவாஜி ஊரை விட்டுச் செல்கிறார். சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த எம்.ஜி.ஆர் நண்பனின் துரோகத்தை மன்னித்து மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்.



இரு பெரும் துருவங்கள் நடித்த கூண்டுக்கிளி பெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படு தோல்வியடைந்தது. தியேட்டர்களில் சிவாஜி ரசிகர்களும் மோதிக் கொண்டார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இப்போது இப்படத்தை எம்.ஜி.ஆர் ரசிகர்களும் சிவாஜி ரசிகர்களும் அமைதியாக பார்க்கின்றனர்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, பி.எஸ்சரோஜா, கொட்டாபுளி ஜெயராமன், ஈ.ஆர்சகாதேவன், டிகே.கல்யாணம், குச‌லகுமாரி, டி.பி.முத்துலட்சுமி, அங்கமுத்து ஆயோர் நடித்தனர். திரைக்கதை வச‌னம் விந்தன். பாடல்கள் தஞ்சை ராமையாதாஸ். கவி.காமு.ஷெரீப், மருதகாசி, விந்தன். இசை கே.வி.மகாதேவன். கொஞ்சுங் கிளியான பெண்ணை கூண்டுகிளி ஆக்கிவிட்டு கொட்டு மேளம் கொட்டுறது ச‌ரியா தப்பா என்ற டி.எம்.எஸ்ஸின் குரல் இன்றும் மனதை வருடுகிறது. இயக்கம் டி.ஆர்.ராமண்ணா.
1954 ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்தபோது சிவாஜி, எம்.ஜி.ஆர் என்ற இரு பெரும் நட்ச‌த்திரங்கள் இணைந்து நடிக்கும் முதல் படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. விதி வச‌த்தால் அதுவே முதலும் கடைசியுமான படமானது. ரசிகர்களை அமைதிப்படுத்தி இருவரும் இணைந்து நடித்திருக்கலாம். இருவரும் இணைந்து நடிக்காததற்கு தமிழக அரசியலும் ஒரு முக்கிய காரணம்.
ரமணி
மித்திரன்13/11/11

4 comments:

A.R.ராஜகோபாலன் said...

நல்ல முன்னுதாரனம் அமைத்திருந்தால் இன்றும் பல படங்கள் வந்திருக்கும், நல்ல நினைவுப் பதிவு.

வர்மா said...

அரசியல் காழ்ப்பினால் நாம் இழந்தது ஏராளம் நண்பரே
அன்புடன்
வர்மா

vizzy said...

கூண்டுகிளியின் நாயகன் சிவாஜி தான் .கதையின் நாயகன் பழைய காதலியை மறக்கமுடியாமல்,அவள் திருமணத்திற்கு பின்னும் அவளை தொடர்ந்து துன்புறுத்துவதுதான் கதை.படம் முழுக்க சிவாஜியை சுற்றிதான் வருகிறது.காதலியின் கணவனாக வரும் MGR ஒரு துணை கதாபாத்திரம்தான்.கதாநாயகன் நல்லவனாகத்தான் இருக்கவேண்டும் என்று சாத்திரமில்லை.

வர்மா said...

தங்கள் கருத்துக்கு நன்றி
அன்புடன்
வர்மா