Sunday, December 1, 2013

பிலிப்பைன்ஸை புரட்டிய புயல்


ஹயான் என்ற கொடூரமான் புயலின் தாக்கத்தினால் பிலிப்பைன்ஸ் சின்னாபின்னமாகி சீரழிந்துள்ளது. ஆயிரக்கணக்கான தீவுகளைக்கொண்ட பிலிப்பைன்ஸ், உல்லாசப்பயணிகளைக்கவரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. அருகருகே தீவுகளும் போக்குவரத்தில் ஈடுபடும் விதவிதமான படகுகளும் பிலிப்பைன்ஸுக்கு தனி இடத்தை வழங்கி உள்ளன.
 வருடாந்தம் சுமார் 20 புயல்களைச் சந்திக்கும் பிலிப்பைன்ஸ் மக்கள் ஹயான் புயல் பற்றிய எச்சரிக்கையை வழமையானஎச்சரிக்கையாகவே கருதினர். கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஹயான் புயலின் அகோரத்தாண்டவத்தைக்கண்ட பிலிப்பைஸ் மக்கள் துடிதுடித்துப் போயினர்.அதிகாலை 4.30 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை நர்த்தன்மாடிய ஹயான் புயலின் கோரத்தாண்டவம் பிலிப்பைன்ஸ் நகரங்களை நிர்மூலமாக்கியது. சமர்லிஸ்தே தீவுகள்,லித்தே நகர், லக்போவன் ஆகியன மிக மோசமாகப்பாதிகப்பட்டுள்ளன.313முதல் 328 கி மீற்றர் வேகத்தில் வீசிய புயலின் தாகக்த்தினால் 36 மாகாணங்கள் உருக்குலைந்தன. 580 கி. மீற்றர் தூரத்துக்கு ஹயான் புயல் நர்த்தனமாடியது.
 ஹயானின் கோரத்தாண்டவத்திலால் 10,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாமென அஞ்சப்படுகிறது பிலிப்பன்ஸின்  நிர்வாகம் ஸ்தம்பிதமடைந்துள்ளது. துரித நிவாரணம் மீட்புப்பணி என்பனவற்றுக்காக  போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. 11 முகாம்களில் 8,83,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 50 இலட்சத்துக்கும் அதிகமானோர் வீடிழந்துள்ளனர்.

 புயலின் தாக்கத்தினால் கடல் சீறி எழுந்தது. 20 அடி உயரமானஅலையினால் கடலோரக்கிராமங்கள் நிர்மூலமாகின.தொடர் மழை காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம் வீதியில் ஆறாக ஓடியது. வெள்ளப்பெருக்கினால் வீடுகளும் பொருட்களும் அள்ளுண்டு போயின.இறந்தவர்களை அடக்கம் செய்யமுடியாத நிலை இருப்பதனால்  வீதி ஓரம் பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

உணவு,குடி நீர் இன்றி மககள் தவிக்கின்றனர்.சுகாதாரச்சீர்கேடு காரணமாக தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.உணவுப்பொருட்களுக்காக சில கடைகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டன. 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப்பின்னர்.மிக மோசமானஅழிவை பிலிப்பைன்ஸ் சந்தித்துள்ளது.இந்த அனர்த்தத்தினால் குழந்தைகள் மிக மோசமாகப்பாதிக்கப்பட்டிள்ளனர்.

 மிக மோசமாகப்பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மீட்புப்பணியாளர்கள் செல்லமுடியாத நிலை உள்ளது. உறவினர்களையும், உடைமைகளையும் இழந்தவர்கள் எதுவும் செய்யமுடியாது கையறு நிலையில் உள்ளனர். உணவுப்பொருட்களைப்பறுவதற்கு மிகநீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கினறனர்.

 அமெரிக்கா,அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஜப்பான்,ஐரோப்பிய நாடுகள்,.நா  என்பன பிலிப்பைன்ஸுக்கு உதவிசெய்ய விரைந்துள்ளன.விமாங்களும் கப்பல்களும் நிவாரணப் பொருட்களுடன் சென்றுள்ளன. அமெரிக்கா தனது பெண்டகன் கப்பலை பிலிப்பைன்ஸுக்கு அனுப்பி உள்ளது.

பிலிப்பைன்ஸைப் புரட்டிப்போட்ட புயல் வியட்நாமையும் எட்டிப்பார்த்தது.முன் எச்சரிக்கை டவடிக்கையினால் ஹயான் செல்லும் பாதையில் உள்ள சுமார் ஆறு இலட்சம் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டதனால் குறைந்தளவு மக்களே பாதிக்கப்பட்டனர்.வீரியம் குறைந்த ஹயானின் தாக்கத்தினால் ஹொலோ,குவாங்ஷி,ருவாங்டோங்,ஹனானி தீவுகள் பாதிக்கப்பட்டன. வியட்நாமின் விமானசேவைகளும் போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன.

 பிலிப்பைன்ஸ்,வியட்நாம் ஆகிய நாடுகளில் அழிவை ஏற்படுத்திய ஹயான் செவ்வாய்க்கிழமை நண்பகல் சீனாவை எட்டிப்பார்த்தது. சினாவின் ஹீனான் மாநிலம், தென் கிழக்கு வாங்சி சுவாங் சான்ஸி ஆகிய இடங்களில் புயலின் பாதிப்பினால் எட்டுப்பேர் உயுரிழந்தனர். ஆற்று நீர் உயர்ந்து படகுகள் கவிழ்ந்தன. பாடசாலைகளில் வெள்ளம் புகுந்ததனால் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.ஹயான் சீனாவுக்குள்ளும் நுழையும் என்று எதிர்பார்க்கப்பட்டதனால் தகுந்த முன்னேற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஹயானின் கோபப்பார்வையினால் உருக்குலைந்த பிலிப்பைஸ் மீண்டும்பழைய நிலைக்குத் திரும்புவதற்கு மிக நீண்ட காலம் எடுக்கும். இடிந்துபோன கட்டடங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு வெளிநாடுகள்தான் உதவி செய்ய வேண்டும்புயல்கள் உருவாகப்போவதை தொழில் நுட்ப உதவியுடன் முன் கூட்டியே அறிவிக்கலாம்.இயற்கை அழிவுகளில் ஒன்றான புயலின் அழிவை தடுக்க எதுவும் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

வானதி
சுடர் ஒளி
17/11/13


No comments: