Monday, December 30, 2013

விஜயகாந்துக்கு வலைவீசும் கருணாநிதி


இந்திய நாடாளுமன்றத் தேர்தலை  நடத்துவதற்கான காலம் கனிவதற்கு முன்னர் தொகுதிப்பங்கீடு கூட்டணி என்பன பற்றிய உத்தியோக பூர்வமற்ற பேச்சுக்களைத் தமிழக அரசியல் கட்சிகள் ஆரம்பித்துள்ளன.என் வழி தனி வழி  என அறிவித்துவிட்டு 40 தொகுதி களுக்குமான வேட்புமனுக்களை கோரியுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் வழியை அடியையொற்றி தனிவழி என கருணாநிதியும் அதிரடியாக அறிவித்துள்ளார். இடதுசாரிகள், சரத்குமார் ஆகியோரைப் புறந்தள்ளி விட்டு 40ம் நமக்கே  என்ற கோஷத்துடன் களமிறங்கியுள்ளார் ஜெயலலிதா. 

ஜெயலலிதாவைப் போன்று 40 தொகுதிகளையும் கருணாநிதி கட்டிப் பிடிக்கவில்லை.விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம்லீக், மனித நேயக்கட்சி, புதிய தமிழகம் ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியை விட்டுக்கொடுக்க கருணாநிதி தயாராக உள்ளார்.காங்கிரஸுடனான உறவை முறித்துக் கொண்ட கருணாநிதி  பாரதீய ஜனதாக்கட்சிக்காக ஒரு கதவைத் திறந்து வைத்துள்ளார்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றபோது முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.உத்தியோக பூர்வமான முடிவெடுப்பதற்காக இக் கூட்டம் கூடப்படவில்லை என்றாலும் பொதுத்தேர்தல் சம்பந்தமான சில முக்கிய முடிவுகள்அங்கு எடுக்கப்பட்டன. தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்கு  டி.ஆர்.பாலு,ராசா, இளங்கோவன்  கனி மொழி ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கூட்டணி சம்பந்தமாக கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த ஸ்டாலின், துரை முருகன், பொன்முடி, வேலு ஆகியோர் அடங்கிய குழு அமைக் கப்பட்டது
.   
காங்ரகிஸுடனான உறவை முற்றாக துண்டித்த பின்னர் பாரதீய ஜனதாக்கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என சிலர் விரும்புகின்றனர்.மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் கூட்டணி  சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு அதிகம்  என்பது அவர்களின் கருத்து. காங்கிரஸுடன்  கூட்டணி இல்லை என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. காங்கிரஸுடனான தொடர்பை  முன்னரே துண்டிக்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் கருத்து.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெளியேற்றம் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கருணாநிதியைப் பிடிக்காத ஒரு சில தலைவர்கள் வாய்ச் சவடால் விட்டு அறிக்கை வெளியிடுகின்றனர். தாம் தனிமைப்பட்டுள்ளதாக பா.சிதம்பரம் மனம் நொந்து  தெரிவித்துள்ளார். காங்கிரஸை தமிழக மாநிலக் கட்சிகள் தேடிப்போன காலம் மாறி மாநிலக்கட்சிகளைத் தேடி காங்கிரஸ்  செல்லும்  காலம் வந்துள்ளது.

தமிழக சட்ட மன்றத் தேர்தலின்போது விஜயகாந்தைத் தம் பக்கம் இழுப்பதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் பெரும் முயற்சி செய்தது. திராவிட முன்னேற்றக்கழக ஆட்சிக்காலத்தில் விஜயகாந்தின் திருமண மண்டபம் இடிக்கப்பட்டதனால் கருணா நிதியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சபதமெடுத்து இரட்டை இலையில் ஒதுங்கினார். அவர் நினைத்தது போன்று கருணாநிதி பதவி இழந்தார்.அதன் பின் நடந்த அரசியல் திருப்பு முனைகளினால் விஜயகாந்த் அவமானப்பட்டார்.பலமான கூட்டணி மூலம் ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டு மென  சூளுரைத்துள்ளார். 
பிரதமர் கனவில் உள்ள ஜெயலலிதாவின்  வெற்றியைத் தடுப்பதற்கான பலமான கூட்டணி அமைக்க வேண்டிய தேவை விஜயகாந்துக்கு உள்ளது.ஒரு சில விட்டுக் கொடுப்புகள்  மூலம் அரசியல் ரீதியான நகர்வுகளைச் செய்தால்தான் சாத்தியமாகும். ஜெயலலிதாவுக்கு எதிரான கட்சித் தலைவர்களை அனுசரித்துச் செயற்பட்டால் தான் விஜயகாந்த்  நினைத்தது நிறை வேறும்.
விஜயகாந்தின் விருப்பத்தை  நிறை வேற்ற இரண்டுபேர் தயாராக இருக்கிறார்கள். அவர்களில்இருவரும் வேறு பாதையில் விஜயகாந்தை அழைத்து செல்ல முனைகின்றனர்.பாரதீய ஜனதாக்கட்சியுடன் விஜயகாந்த் சேர  வேண்டும் என காந்தீய க்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஆசைப்படுகிறார்.கருணாநிதியும், விஜயகாந்தும் இணைய வேண்டும் என்று பேராயர் எஸ் ரா. சற் குணம் விரும்புகிறார். பேராயர் எஸ்ரா சற்குணம் விஜயகாந்துடன் மிக நீண்ட காலம் தொடர்பில் இருப்பவர். 

நாளுமன்றத் தேர்தல் கூட்டணி தனது தலைமையிலேயே இருக்க வேண்டும் என்று விஜயகாந்த் விரும்புகிறார்.தனது கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை விட்டுத்தர வேண்டும்,செலவுக்குப் பணம் தர வேண்டும், முக்கிய அமைச்சுப் பொறுப்புகள் ஒதுக்க வேண்டும் போன்ற விஜயகாந்தின் நிபந்தனைகளினால் திராவிட முன்னேற்றக்கழகமும், பாரதீய ஜனதாக் கட்சியும் கலங்கிப் போயுள்ளன.
பாரதீய ஜனதாக்கட்சியுடன் கூட்டுக் சேர்ந்தால் விஜயகாந்த் கேட்பதுபோல்  சிலவேளை கூட்டணிக்கு தலைமை வகிக் கலாம்.ஆனால்,கேட்கும் தொகுதிகள் கிடைப்பது கடினம்.திராவிட முன்னேற்றக்கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால் கருணாநிதி தலை மையின் கீழேதான் செயற்பட வேண்டும். கருணாநிதியும் விஜயகாந்தும் இணைந்தால் தமிழகத்தில் அதிக தொகுதிகளைக் கைப்பற் றலாம். பாரதீய ஜனதாக்கட்சியும் இவர்களுடன் சேர்ந்தால் ஜெயலலிதாவின் நிலை சிக்கலாகி விடும்.அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில்  கூட்டணி பற்றிய உறுதியான முடிவை எடுக்க வேண்டும். ஆகையால், அடுத்த  ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழக அரசியல் பரபரப்பாகிவிடும்.

திராவிட முன்னேற்றக்கழகத்துடன் விஜயகாந்த் சேர்வதை  அவருடைய கட்சியைச் சேர்ந்த சிலர் விரும்பவில்லை. பாரதீய ஜனதாக்கட்சியில் விஜயகாந்த் இணைவதை டாக்டர் ராமதாஸ் விரும்பவில்லை. யாருடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்த டாக்டர் ராமதாஸ் பாரதீய ஜனதாக் கட்சியுடன் இணைந்து போட்டியிட விரும்புகிறார். ஆகையினால்,விஜயகாந்த் அங்கு செல்வதை அவர் விரும்பவில்லை. பாரதீய ஜனதாக் கட்சியுடன்  சேருவதற்கு தயாராக இருக்கும் வைகோ நடப்பவற்றை உன்னிப்பாக  அவதானித்துக் கொண்டி ருக்கிறார்.
எதிரணி அரசியல் தலைவர்கள்  இரண்டு பேர் சந்தித்தால் தமிழகத்தில் அது பரபரப்பான செய்தியாகிவிடும்.
சோவீட்டுத் திருமணத்தில்  கருணாநிதி குடும்பத்துடன் கலந்துகொண்டதால் புதிய கூட்டணிக்கு அச்சாரம் என்றார்கள். திரைப் பட விழாவில் ஸ்டாலினும் அன்பு மணியும் கலந்து கொணடதால் கூட்டணி பற்றிப்பேசி இருப்பார்கள் என்றார்கள்.கருணாநிதிக்கு சோனியா வாழ்த்து கூறியதால் பழைய உறவு துளிர்க்கிறது என்றார்கள்.சின்னச் சின்னச் செய்திகள் எல்லாம் பரபரப்பான செய்தியாக வெளியாவதால் தமிழக அரசியல்  சூபடிக்கத் தொடங்கிவிட்டது.


வர்மா  
சுடர் ஒளி 26/12/13

No comments: