Saturday, December 28, 2013

“மனப்பூக்கள்” கவிதைத் தொகுதி


“வருடிய இளமைக்காற்று”(2010) “நிழலில்லா தடயங்கள்” (2011) ஆகிய கவிதை நூல்களின் மூலம் வாசகர்களின் மனதில் இடம்படித்த ஜே.ஆர். மயூரனின்” மனப்பூக்கள்எனும் கவிதைத் தொகுதி அண்மையில் மன்னாரில் வெளியிடப்பட்டது.
வாசகர்களுக்கு இலகுவாகப் புரிந்து கொள்ளும் வகையில் இலகுவான நடையில் கவிதை புனைந் துள்ளார்.இப்புத்தகத்தில் 40 கவிதைகள் உள்ளன. யதார்த்தங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் என்பன இவரது கவிதைகளில் முன்னிலை வகிக்கின்றன. தான் கல்விகற்ற மன்னார் புனித சவேரியர் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு தனது கவிதை புத்தகத்தை சமர்ப்பணம் செய்துள்ளார்.பஸ்மிபாஸில் அஹமட் வரைந்த ஓவியங்கள் கவிதைகளிடையே கதை சொல்கின்றன.

“நிறமிழக்கா ஞாபகம்” எனும் தலைப் பிலான கவிதை பாடசாலை  காலத்தை மனதில் நிழலாட வைக்கிறது.
கணிதப் பாம்பு கக்கிய உணர்வுகளில்
தழும்புகள் பாயும்
ஆங்கில முதலை தின்கிற பசியால்
தூக்கம் கண் சொருகும்கணிதமும் ஆங்கில மும் விருப்பமில்லாப் பாடங்கள் என்பதை அழகாக விபரிக்கிறார்.
“புத்தகப் பொந்துக்குள்
எழுத்துப் பறவைகள் அங்குமிங்குமாய்
சிறகடிக்கும்
சிலநேரம் சிவப்புக் குருவிகள்
எச்சமிடும்புதுமையான கற்பனை

துன்பப்படும் மனிதர்கள் கவலை எல்லை மீறும்போது அழுவார்கள். மனிதனின் துன்பம் கண்டு கடவுள் அழுததுண்டா?”கடவுளும் அழுகிறார்” என்றார் மயூரன்.
“படைத்ததை ஆழ்கவென
வழங்க,
 மனிதன்  ஆழ்கிறான்
கடவுளையும் சேர்த்து 
அறிவுதின்ற இனத்து வேஷ‌ ‌த்தினால்
தினசரி செய்திகள்
அயல் நாட்டின் தலைப்புச் 
செய்தியாக”
எதிர்காலத்தை அறிவதற்காக கைரேகை பார்ப்பார்கள்.”கைரேகை” என்ற கவிதை மூலம் மனிதனின் துன்பதுயரங்களை அழகாக வெளிப் படுத்தியுள்ளார்.

“இளமை கொழுவிய நாளில்
இயந்திரமாய்
சுழற்றினார்கள்
தோல்பையும், பேனாமுனையும்
கொண்டு சென்ற வேளையில் 
ஆயுதங்களை பரிசளித்தார்கள்.”

“உணர்வுத் துகள்கள்” என்ற கவிதையில் மயூரன் கேட்கும் கேள்விகளுக்கான விடையை யார்  தருவார் கள்.
“நாடு விட்டு நாடு
 அகதி கடந்தால் தானே
ஏன் சொந்த  நாட்டுக்குள்
நாங்கள் அகதியெனும் 
முத்திரையோடு ?
விதியின் கம்பத்தில் 
நூலறுந்த மின்குமிழாய் தமிழ் 
கழுத்தறுத்து நிற்பதேன் கூறு?”
இந்தக் கேள்விக்கான பதில்  எங்கிருந்து வரும்?

 “மனச்சிறை” என்ற தலைப்பலான கவிதையில் விலைவாசியால்  திண்டாடுவதை யுத்தம் தந்த பரிசென அழகாக விவரிக்கிறார்.
“யுத்தம்
கொப்பளித்த வடுக்கள்
விலை வாசியின்  குழந்தையால் 
இன்னும் தொடர்கிறது
எங்கள் அகதிப்பயணங்களிலே”

தீபாவளி என்றால் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் களைகட்டும்.தீபாவளி நரகத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என்ற மயூரனின் கற்பனை மூலம் வெளிப்படுகிறது.காதல் உணர்வு எப்படி  இருக்கும் என்பதை இளமையில் இன்பம் என்ற கவிதையின் மூலம் வெளிப்படுத்துகின்றார். நவநாகரிகம் என்ற பெயரில் சில பெண்கள் அணியும் ஆபரணங்கள் மயூரனின் மனதை காயப்படுத்தியுள்ளன. நக்கலான கோபத்துடன் சாட்டையடி கொடுக்கிறார்.
மனப்பூக்கள் என்ற இந்த கவிதைப் புத்தகத்தில் உள்ள 40 கவிதைகளும் சிரமமின்றி இலகுவாகப் படிக்கும் வகையில்  உள்ளன.கவிதைகளைப் போன்றே கவிதை யின் தலைப்புகளும் மனதில் அழுத்தமாகப் பதியும் வகை யில் கவிதை போல் உள்ளன.


சூரன்
ஔடர் ஒளி

15/12/13

2 comments:

கவியாழி கண்ணதாசன் said...

இன்னும் சிறந்த படைப்புகள்
இனியும் தொடர்ந்து வந்து
இனிதே வெற்றியுர வாழ்த்துக்கள்

வர்மா said...

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா