Thursday, March 10, 2016

ஈழத்து இலக்கிய ஆளுமை செங்கை ஆழியான்

  காலத்தை வென்ற படைப்பாளியான  செங்கை ஆழியான், ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஆழமாக தடம் பதித்தவர். குணராசா என்ற நிஜப்பெயரை விட செங்கை ஆழியான் என்றால் தான் அவரை தெரியும். அரச உயர் அதிகாரியான அவரை இலக்கியம் தான் உலகுக்கு அறிமுகம் செய்தது. சிறுகதை,நாவல்,இலக்கியம்,கட்டுரை, விமர்சனம், திறனாய்வு ,திரைப்படம் என பல பரிமாணங்களில் தந்து முத்திரையை ஆழமாகப் பதித்தவர். தான்பதவி வகித்த பிரதேசங்களின்  வாழும்  சமூகத்தை மக்களின் மனதில் நிறுத்தியவர்.

எத்தனை நூற்றாண்டு  கடந்தாலும் வாடைக்காற்று  என்ற நாவலும் திரைப்படமும் அவரது புகழை நினைவுபடுத்தும். செங்கை ஆழியான்     ஒரு  நடமாடும்  நூலகமாக -  தகவல் களஞ்சியமாக   வாழ்ந்தவர்.   அதனால்     பலரும் பயன்பெற்றனர்.    பலருக்கும்    அவரது கட்டுரைகளினால்  அறிமுகம் கிடைத்தது

செங்கை ஆழியான்    தனது  தொழில்    துறைகளிலும்  மிகவும் சுறுசுறுப்பாக    இயங்கியவர்.   கண்டனங்கள்,   அவதூறுகளுக்கும் ஆளானவர்.   அதற்காக  அவர்  சோர்ந்து துவண்டுவிடவில்லை.
உதவி  அரசாங்க  அதிபராக,   யாழ். மாநகர  ஆணையாளராக, பல்கலைக்கழக  பதிவாளராக,    பின்னாட்களில்  உலக  வங்கியில் இலங்கைக்கான   ஆலோசகராகவெல்லாம்  பதவி வகித்தவர். புவியியல்  ஆசிரியரான அவரது  புத்தகங்கள் இன்றும் மாணவர்களுக்கு உதவுகின்றன.
ஈழத்துத் தமிழர் வரலாற்றின் பக்கங்களில் அழிக்கவியலாத தடங்களைப் பதித்திருக்கும் "செங்கை ஆழியான்' என்ற புனைபெயரால் தமிழ் உலகம் அறிந்த, நயந்த, நேசித்த கலாநிதி க.குணராசா மீண்டும் திரும்ப முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்திருந்தவர் செங்கை ஆழியான், நாவல், சிறுகதை, கட்டுரைகளென படைப்புகள் யாவுமே ஈழத்துத் தமிழ் மக்களின் பண்பாட்டை, கலாசாரத்தை, வரலாற்றை, அரசியலை வெளிப்படுத்தும் காலத்தின் கண்ணாடியாகத் திகழ்கின்றன. சமூகப் பிரச்சினைகளை தனது நாவல்கள் சிறுகதைகள் மூலமாக யதார்த்தபூர்வமாக வெளிப்படுத்தி வந்த செங்கை ஆழியானின் படைப்புகளில் ஒவ்வொன்றுமே புதிய புதிய தகவல்களைக் கொண்ட பொக்கிஷங்களாக விளங்குகின்றன. 
 குறிப்பாக மாணவர் சமூகத்திற்கு அவரின் ஆக்கங்கள் அதிகளவுக்கு உசாத்துணை நூல்களாக உதவிக் கொண்டிருக்கின்றன. தமிழ்மொழி மூலம் கற்கும் மாணவர்களின் வரலாற்றுப் பாட நூல்களில் தமிழ் மக்களின் வரலாறு தொடர்பான விபரங்கள் உரியளவிற்கு இடம் பெற்றிருக்கவில்லையெனவும் ஐரோப்பியர் வருகைக்கு முன்னரான யாழ்ப்பாண இராச்சியம் பற்றி ஓரிரு பந்திகளுடன் வரலாற்றுப் பாட நூலில் தமிழர் விவகாரம் நிறைவடைந்துள்ளதாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கப்படும் நிலையில்

 செங்கை ஆழியானின் நந்திக்கடல், கந்தவேள் கோட்டம், காதல் கோட்டை, குவேனி, நல்லைநகர் நூல், ஈழத்தவர் வரலாறு, யாழ்ப்பாண கோட்டை வரலாறு, தமிழர் தேசம் போன்ற நூல்கள் எதிர்காலத் தலைமுறையினர் கற்று அறிந்து கொள்வதற்கான அரிய தகவல் பெட்டகமாக காணப்படுகின்றன.  அன்னாரின் வாடைக் காற்று நாவல் திரைப்படமாக்கப்பட்டதுடன் இரவின் முடிவு, பிரளயம், காட்டாறு, கனவுகள் கற்பனைகள், ஆசைகள், கங்கைகரையோரம், அலைகடல் தான் ஓயாதோ, முற்றத்து ஒற்றைப் பனை, யானை, மழையில் நனைந்து; வெயிலில் காய்ந்து, மழைக்காலம், மண்ணின் தாகம், ஜன்மபூமி, யாககுண்டம், ஆறுகால் மடம், கிடுகுவேலி, ஓ அந்த அழகிய பழைய உலகம், காற்றில் கலக்கும் பெரு மூச்சுகள்,ஒரு மைய வட்டங்கள், மரணங்கள் மலிந்த பூமி, வானும் கனல் சொரியும், போரே நீ போ போன்ற சமூக நாவல்களும் அக்கினிக் குஞ்சு யாழ்ப்பாணத்து இராத்திரிகள், சித்திரா பௌர்ணமி, இதயமே அமைதி கொள்,  இரவு நேரப் பயணிகள், கூடில்லாத நத்தைகளும் ஓடில்லாத  ஆமைகளும், சாம்பவி போன்ற சிறுகதைகளும் ஆச்சி பயணம் போகிறாள், கொத்தியின் காதல் போன்ற  நகைச்சுவை நாவல்களும் தமிழ் மக்களின் குறிப்பாக யாழ். குடா நாட்டு மற்றும் வன்னிப் பிராந்திய மக்களின் சமூக பொருளாதாரப் பிரச்சினைகள், ஏக்கங்கள், அபிலாஷைகள், கனவுகள், கற்பனைகளை படம் பிடித்துக் காட்டுபவையாக அமைந்திருந்தன.  தனது இலக்கிய படைப்புகளின் ஊடாக அவர் தமிழ் சமூகத்திற்கு வழங்கிய  செய்திகள் ஏராளம். அதேவேளை புவியியல் பாடநூல்களை  எழுதியதன் மூலம் மாணவர்களின் கல்விக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தார். உதவி அரச அதிபராக, மேலதிக அரச அதிபராக, யாழ். பல்கலைக்கழக பதிவாளராக  கடமையாற்றியிருந்த கலாநிதி குணராசாவின் ஆளுமைப் பதிவு பன்முகம் கொண்டதாகும்.  இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் உலகத் தமிழர் மத்தியிலும் தனக்கென தனியான இடத்தை சுமார் அரை நூற்றாண்டுக் காலம் வசப்படுத்தி வைத்திருந்தவர்

செங்கை ஆழியான் மறைந்தாலும் அவர் விட்டுச்சென்ற புத்த்தகங்களில் அவர் வாழ்கிறார்.



No comments: