Sunday, March 27, 2016

தமிழக தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி


தமிழக சட்ட சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து அரசியல் தலைவர்கள் பம்பரமாக சுழன்று வெற்றிக்கான வியூகங்களைத்  தேர்வு செய்கின்றனர். வாக்கு வங்கி அதிகம் உள்ள கட்சிகள்   ஒன்றிணைந்தால் வெற்றி பெறலாம் என்ற எழுதப்படாத விதியால் ஐந்து சத வீத வாக்குவங்கி உள்ள கட்சி கூட மிடுக்குக் காட்டுகிறது. வெற்றிக்கனிக்கு ஆசைப்பட்டு பலம் நழுவி பாலில் விழும் என  பழுத்த அரசியல் தலைவர் காத்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி  இணைந்துள்ளது. இவற்றுடன் மேலும் சிறிய கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்துகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் சிறிய கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்துகின்றன. விஜயகாந்துக்காக காத்திருந்த பாரதீய ஜனதாக் கட்சி  நடிகர் ஒருவர் தேவை என்பதனால் சரத்குமாரை வளைத்துப் பிடித்துள்ளது. மறுமலர்சி திராவிட முன்னேற்றக் கழகம,விடுதலைச்சிறுத்தைகள், கொம்யூனிஸ்ட் கட்சி, மாக்சிஸ்ட் கட்சி என்பன மக்கள் நலக் கூட்டணி அமைத்துள்ளன. சிறிய கட்சிகள் எவையும் இக் கூட்டணியைத் திரும்பியும் பார்க்கவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி வீம்புக்காக தனித்துப் போட்டியிடுகிறது. தனி ஆவர்த்தனம் செய்ய முடிவெடுத்த விஜயகாந்துக்கு கட்சியில் உள்ளவர்கள் கூட்டணி சேருமாறு குடைச்சல் கொடுக்கிறார்கள்.

தமிழக அரசியல்  கட்சிகள் அனைத்தும் ஆளுக்கு ஒருபக்கமாக சிலிர்த்துக் கொண்டிருப்பதால் ஜெயாலலிதா நிம்மதியாக இருக்கிறார். ஜெயலலிதாவுக்கு எதிராக பலமான கூட்டணி அமையாததால் அவர் நிம்மதியாக நம்பிக்கையுடன் இருக்கிறார். விஜயகாந்தை எதிர்பார்த்து ஏமாந்த கருணாநிதி விரக்தியில் இருக்கிறார்.  மக்கள் நலக் கூட்டணி விஜயகாந்தைக் கைகழுவி விட்டது. பாரதீய ஜனதாக்  கட்சியும் விஜயகாந்தை வளைக்க முயற்சிக்கிறது.

 இளைய தலைமுறையின்  வாக்கும் தேர்தல் அறிக்கையும் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.  கருணாநிதி அறிவித்த இலவசங்கள்  2006  ஆம்  ஆண்டு  ஜெயலலிதாவை வீழ்த்த உதவியது.   2011  ஆம் ஆண்டு ஜெயலலிதா அறிவித்த  இலவசங்கள் கருணாநிதியை பதவி   இழக்கச் செய்தன.  தமிழக  அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கைதயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  வெற்றிக்கு அக்கட்சி வெளியிட்ட  தேர்தல் அறிக்கை பெரிதும் உதவியது.  குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ வீதம் 20 கிலோ அரிசி வழங்கப்படும். இலவச தொலைக்காட்சி என்ற அறிவிப்பால் மக்கள் மயங்கினர்.   அந்த தேர்தல் பிரசாரத்தின்போது  திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தேர்தல் அறிக்கையை 'கதாநாயகன்' என அக்கட்சித் தலைவர் கருணாநிதி வர்ணித்தார். கருணாநிதி வாக்களித்த இலவசங்களுகாக வாக்காளர்கள் வாக்களித்து அவரை முதல்வராக்கினர். ஏனைய மாநிலங்கள் இலவச அறிவிப்பைப் பார்த்து வாயைப் பிளந்தன. 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும்   திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல்வேறு இலவச அறிவிப்புகள் இடம் பெற்றன.. இந்த தேர்தல் அறிக்கையை 'கதாநாயகி' என்றனர்.

 கருணாநிதியின் இலவச அறிவிப்பால் ஆட்டம் கண்ட ஜெயலலிதா   2011  தேர்தலில் அவருக்குப் போட்டியாக இலவசங்களை அள்ளி வழங்கினர்.
20 கிலோ அரிசி  . மிக்சி கிரைண்டர் மின் விசிறி இலவசமாக வழங்கப்படும். திருமணமாகும் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திருமண உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தது.இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தது.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. .

  தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், 40 வயதுக்கு உட்பட்டவர்கள், 38 சதவீதம்; 30 வயதுக்கு உட்பட்டவர்கள், 26 சதவீதம்; புதிய வாக்காளர்கள், 12.6 சதவீதம் பேர். இதில், இளைய சமுதாயத்தினரின் வாக்குகளைக்  கவர, அனைத்து கட்சியினரும், புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

'வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களை, இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவதால், அதில் பிரசாரம் மேற்கொள்வதில், கட்சியினர் முனைப்பு காட்டுகின்றனர்.தமிழகத்தில் தினமும், 2.5 கோடி பேர், சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாக, தொலைத்தொடர்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், சட்டசபை தேர்தலில், சமூக வலைதளங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. இதில் மேற்கொள்ளும் பிரசாரத்துக்காக, கட்சிகள், கணிசமான தொகையை ஒதுக்கியுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுமட்டுமின்றி, இளைஞர்களை கவரும் வகையில், பிரதான கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்வெளியிடும்  தேர்தல் அறிக்கையில், 'ஸ்மார்ட் போன்' வழங்கும் திட்டம், முக்கிய இடங்களில், இலவச 'வை  பை' சேவை, இலவச கேபிள் இணைப்பு, கேபிள் இணைப்பில் இன்டர்நெட் பயன்பாடு உட்பட, பல முக்கியஅறிவிப்புகள் இடம்பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழக வாக்காளர்களில், 18 முதல், 49 வயதினர், 3.98 கோடி பேர்; 50 முதல், 80 வயதுக்கு மேற்பட்டவர், 1.81 கோடி பேர். எனவே, அடுத்து யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை, இளைய தலைமுறை வாக்குகள்  தான்தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. அந்த இளைய சக்தி, யார் பக்கம் என்பது தான் மிகப் பெரிய கேள்வி.

50 சதவீத இளைய தலைமுறை வாக்காளர்கள், சமூக வலைதளங்களின் உதவியால், நாட்டு நடப்பை தெரிந்து, ஊழலுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.அவர்கள் ஒருங்கிணைந்து, ஒரு கட்சியை ஆதரித்தால்,
அதற்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆனால், ஊழலுக்கு எதிரான அணி என சொல்லிக் கொள்பவர்கள், தனித்தனியாக பிரிந்துள்ளதால், ஊழலுக்கு எதிரான இளைய தலைமுறையின் வாக்குகள் , சிதறும் சூழல் உள்ளது.

முதன் முதலில்,1967 ஆம் ஆண்டு  மாணவர் சக்தியால், ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தால்   இளைஞர்களின் ஆதரவை தக்கவைக்க முடியவில்லை.   '2ஜி' குற்றச்சாட்டால் . 2011 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் ; 2014 ஆம் ஆண்டு  இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற முடியவில்லை. அப்போதைய தேர்தல்களில் , தோல்விக்கு இதுவே காரணம்.
இதனால்இளைஞர்களின்  வாக்குகளைக் கவர  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திட்டமிட்டது. பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு சைக்கிள், 'ப் டாப்' உதவிகள், இளைஞர் பாசறை அமைப்பு ஆகியவற்றில், அதிககவனம் செலுத்தி உள்ளது. ஆனாலும், வெள்ள பாதிப்பை தடுக்கத் தவறியது, அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் போன்றவற்றால், ஒட்டுமொத்த இளைஞர்களின் ஆதரவை, இக்கட்சியால் பெற முடியாத நிலைமை உள்ளது.மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு என பேசும், மக்கள் நலக் கூட்டணியினரும், இளைஞர்களை முழுவதுமாக ஈர்க்கும் சக்தியாக இல்லை.


இளைஞர்களின் ஆதரவால் வேகமாக வளர்ந்த விஜயகாந்தின் மீது அதிருப்தி உள்ளது., அவரின்  விஜயகாந்தின் சமீபத்திய மோசமான பேச்சு, தள்ளாட்டமான செயல்பாடுகளை, இளைய தலைமுறையினர் ரசிக்கவில்லை. எனவே, இந்த முறை தேர்தலில், இளைய தலைமுறையினர் வாக்குகள் யாருக்கு செல்லும் என்பது தெளிவாகவில்லை.

அம்மா உணவகம்,அம்மா குடி தண்ணீர், அம்மா பேருந்து , அம்மா உப்பு என்று தமிழகத்தை அம்மா மாயையில் சிக்க வைத்துள்ளார் ஜெயலலிதா. கருணாநிதியும் ஜெயலலிதாவும் போட்டிபோட்டு அறிவித்த இலவசங்களினால் தமிழக மக்கள் சோம்பேறிகளாக மாறிவிட்டனர். தமிழக அராசுக்கு கடன் சுமை ஏறிவிட்டது என பொருளாதார  வல்லுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  என்றாலும் இலவசங்களுக்கு அடிபணிய வாக்காளர்கள் தயாராக உள்ளனர். இலவச அறிவிப்பு இலத்திரனியல் தொழில் நுட்பம் ஆகியவற்றில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் முன்நிலையில் இருப்பதால் ஏனைய கட்சிகள் கலக்கத்தில் உள்ளன. யாருடைய தேர்தல் அறிக்கை மக்களைக் கவர்ந்தது என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும.
வர்மா
தினத்தந்தி.
27/03/16
/////////////////////////////////////////////////////////

மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் இணைய முன்பு எழுதப்பட்ட கட்டுரை.



No comments: