Sunday, March 27, 2016

ஜனாதிபதிக்கு எதிராக காய் நகர்த்தும் கூட்டு எதிரணி

 

நல்லிணக்க அரசாங்கம் பதவி ஏற்ற தினத்தில்  இருந்து  அதனை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை பொது எதிரணி என்ற பெயரில் சிலர் அரங்கேற்றி வருகின்றனர். மஹிந்த மீண்டும் உச்சத்துக்கு வருகிறார். ஜனாதிபதி  ரணிலை விட்டுக்கு அனுப்பப்போகிறார் என்ற கோஷம் முன் வைக்கப்படுகிறது. முன்னாள்  ஜனாதிபதியை முன்னிறுத்தி நடைபெறும் கூட்டங்களும் பேரணிகளும் ரணிலைக் குறிவைத்துத்தான் நடத்தப்படுகின்றன. ஜனாதிபதி மைத்திரியை தமது எதிரியாக அவர்கள் கருதவில்லை. இன்றைய ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் ஒரே கட்சியியைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கட்சியைச் சேர்ந்த   பிதமரை வெளியேற்றிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை பிரதமராக்கும் திட்டம் அவர்களிடம் உள்ளது.
புதிய கட்சி ஆரம்பமாகப் போகிறது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைவராகிறார் என்ற பூச்சாண்டி சிலகாலம் காட்டப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு  வெளியேறமாட்டேன் என்று மஹிந்த சொன்னதும் அந்தப் பூச்சாண்டி அடங்கிவிட்டது. என்றாலும்  அவருடைய ஆதரவாளர்கள் விடுவதாக இல்லை. மஹிந்தவை பிரதமராக்கியே தீருவோம் என கங்கணம் கட்டியுள்ளனர்.
பொது எதிரணியின்  கூட்டங்களை தள்ளி நின்று வேடிக்கை பார்த்த மஹிந்த கடந்தவாரம் ஹைபாக் கோணரில் நடைபெற்ற கூட்டத்தில் பங்குபற்றி தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்     அக் கூட்டத்தில் பங்கு பற்ற வேண்டாம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பீடம்   உத்தரவிட்டது அதனை சட்டை செய்யாமல் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணி உறுப்பினர்கள் 37 பேர்     கலந்து கொண்டனர்..

சி.பி. ரத்நாயக்க, குமார வெல்கம, விமலவீர திசாநாயக்க,சிறியானி விஜேவிக்கிரம, எஸ்.எம்.சந்திரசேன, நாமல் ராஜபக்ஷ,  ஷேஹான் சேமசிங்க, எச்.ஏ.முத்துக்குமாரண, வீரகுமார திசாநாயக்க, ரோஹித்த அபேகுணவர்தன, பியல் நிஷாந்த, ஜயந்த சமரவீர, , கனக ஹேரத், தாரக பாலசூரிய, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, காமினி லொக்குகே, பந்துல குணவர்தன, தினேஷ் குணவர்தன, சிசிர ஜய,டி, இந்திக அனுராதா, மோகன் டி சில்வா, சி.பி. ரத்நாயக்க, சனத் நிஷாந்த, மஹிந்தானந்த  அளுத்கமகே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாலிந்த திசாநாயக்க,  வாசுதேவ நாணயக்கார, டலஸ் அழகப்பெரும, சமல் ராஜபக்ஷ, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்றத்தில்,   கூட்டு எதிரணிசார்பில், 51 உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களில், 45 பேர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டதாக தினேஷ் குணவர்தன தெரிவித்திருக்கிறார்.
எஞ்சிய ஆறு பேரில் நால்வர் வெளிநாடு சென்றதாலும், இருவர் மருத்துவமனையில் உள்ளதாலும், கலந்துகொள்ளவில்லை  என்று அவர் கூறியிருக்கிறார்.

  பங்கேற்றவர்களில் 34 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள். அவர்களில் மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச உள்ளிட்டோரும் அடங்கியுள்ளனர்.
கட்சியின் அனுமதியின்றி வேறு கூட்டங்களில் சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கக் கூடாது என்றும், அவ்வாறு பங்கேற்பவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்சியின் பொதுச்செயலர் துமிந்த சில்வா, பொருளாளர். எஸ்.பி.திஸாநாயக்க போன்றவர்கள் எச்சரித்திருந்தனர். கொழும்பு ஹைட்பார்க்கில் கூட்டு எதிர்க்கட்சி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பை கட்சியின் மத்திய செயற்குழுவிடம் ஒப்படைக்க உள்ளதாக கட்சியின் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்பாக மத்திய செயற்குழு சமனான முறையில் முடிவு ஒன்றை எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே கூட்டு எதிர்க்கட்சியினர் எதிரிகள் அல்ல என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.குருணாகல், கல்கமுவ பிரதேசத்தில்  நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பொது எதிரணியின் கூதடத்தில் பங்கு  பற்றியவர்களின் மீது  நடவடிக்கை  எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு உடனடியாக பதில் கிடைக்காது. 

ஐக்கிய தேசியக் கட்சியை வெளியேறி விட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியை அமைக்க வேண்டும் என மஹிந்தவின் ஆதரவளர்கள் விரும்புகிறார்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர்     தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்கின்றனர்.  .ஹிக்கடுவை-சீனிகம தேவாலயம்இஇரத்தினபுரிஇ சிறிய கதிர்காமம், சிங்கக்குலிய, மொரட்டுவ, முகத்துவாரம் காளிகோவில், குளியாப்பிட்டி சிலாபம்- முன்னேஸ்வரம் ஸ்ரீபத்திரகாளி கோவில்  ஆகிய இடங்களிலுள்ள ஆலயங்களில் தேங்காய் உடைத்து அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை வெளிக்காட்டினர்

 எந்த வழியிலாவது  ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அவர்கள் துடிக்கின்றனர். இன்றைய நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவளர்களை  வெளியேற்றினால் அது அவர்களுக்கு சாதகமாகிவிடும் என்பதை ஜனாதிபதி மைத்திரி உணர்ந்துள்ளார். ஆகையினால் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது  என்ற நம்பிக்கை  எதிரணியிடம் உள்ளது.அந்த நம்பிக்கை நீடிக்கும்வரை அவர்களின் போராட்டம் சலசலப்பை ஏற்படுத்தும். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்தால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது முன்னாள் ஜனாதிபதிக்கு தெரிந்த உண்மை.
ஊர்மிளா
சுடர் ஒளி
 மார்ச்23/மார்ச்30No comments: