Friday, March 25, 2016

மனம் மாறிய விஜயகாந்த் உற்சாகத்தில் மக்கள் நலக் கூட்டணி


 தமிழக அரசியலில் நிலவிய குழப்ப நிலைக்கு விஜயகாந்த்  முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழகத் தேர்தலில் எந்தக் காலத்திலும் இல்லாத வகையில் இம்முறை பெரும் குழப்பம் ஏற்பட்டது. தமிழக  அரசியலைக் குழப்பிய விஜயகாந்த் அதனை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம்,  பட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றைத் தவிர ஏனைய கட்சிகள் அனைத்தும் விஜயகாந்தின் வரவுக்காகக் காத்திருந்தன. திராவிட முன்னேற்றக் கழக‌ம், மக்கள் நலக் கூட்டணி, பாரதீய ஜனதாக் கட்சி  ஆகியவருடன் இரகசியமாகவும்,வெளிப்படையாகவும் பேச்சுவார்த்தை நடத்திய விஜயகாந்த் தனித்துப் போட்டியிடப்போவதாக அறிவித்தார். அவரது முடிவை ஏற்றுக்கொள்ளாத கட்சிகள்  அவர் வருவார் என நம்பிக்கையுடன் காத்திருந்தன. யாரும் எதிர் பார்க்காத நிலையில் திடீரென மக்கள் நலக்  கூட்டணியுடன் தேர்தல் உடன் படிக்கையில் கைச்சாத்திட்டார் விஜயகாந்த்.
தமிழகத் தேர்தலில் இரண்டு முனைப் போட்டி நடைபெறும் போது திராவிட முன்னேற்றக் கழக‌மும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌மும் பலமான கூட்டணி அமைத்து மாறி மாறி வெற்றி பெற்றன.மும் முனைப் போட்டி என்றாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எதாவது ஒரு கட்சி வெற்றி பெற்று விடும். இம்முறை ஆறு  முனைப் போட்டி நடைபெறுவதால் ஜெயலலிதாவுக்கு சாதகமாக உள்ளது. திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு 35 சத வீத வாக்கு வங்கியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்துக்கு 37 சத வாக்கு வங்கியும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஐந்து சதவீத வாக்கு வங்கி உள்ள விஜயகாந்த் திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் இணைந்தால் வெற்றி பெறலாம் என கருணாநிதி கணக்குப் போட்டார்.
தமிழக சட்டசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்தும் வேட்பாளர் பட்டியலை   வெளியிட்டு  தேர்தல்  களத்தைச்  சூடாக்கும்  ஜெயலலிதா விஜயகாந்த்தின் முடிவுக்காகக் காத்திருந்தார்.  திராவிட முன்னேற்றக் கழக‌த்துடன் விஜயகாந்த் சேரக் கூடாது என்பதே ஜெயலலிதாவின் விருப்பம்.ஜெயலலிதாவின் விருப்பத்தை விஜயகாந்த் நிறைவேற்றியுள்ளார். விஜயகாந்தின்  முடிவு ஜெயலலிதாவுக்குச் சாதகமாக உள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிரான வாக்குகள் பல முனையில் பிரிவதால்  ஒருங்கிணைந்த வெற்றியை எதிரணிகளால் பெறமுடியாது.பலமான வாக்கு வங்கி உள்ள கட்சிகள் எவையும் ஜெயலலிதாவுடன் இல்லை.என்றாலும் தேர்தலுக்கு முன்னே வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை அவரிடம் நிறையவே உள்ளது.
 அரசியலில் பழுத்த அனுபவம் உள்ள கருணாநிதியின் நிலை பரிதாபமாக உள்ளது. விஜயகாந்தின் ஐந்து சத வீத வாக்கு கிடைத்தால் வெற்றி பெறலாம் என்ற அவரது நம்பிக்கை தவிடுபொடியாகிவிட்டது.  விஜயகாந்த் வந்தால் வெற்றி பெறலாம் என்ற மாயையை தொண்டர்களிடம் உருவாக்கிய  கருணாநிதி நொந்து போய் உள்ளார். திராவிட முன்னேற்றக் கழக‌த்தை விட்டு வெளியேறிய காங்கிரஸ் கட்சி மீண்டும் வந்ததால் சந்தோசப்பட்ட கருணாநிதியின் பார்வை விஜயகாந்தின் மீது இருந்தது. அவர் வந்தால்தான் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை கடைசிவரை இருந்தது. விஜயகந்தின் விசயத்தில் கருணாநிதி சற்று தள்ளாடினார். ஆனால், ஸ்டாலின் தனது முடிவில் உறுதியாக இருந்தார். தனித்துப் போட்டியிடப் போவதாக விஜயகாந்த்    அறிவித்ததும் அவர் இல்லாமலே வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
பாரதீய ஜனதாக் கட்சியின் நிலை மிகப் பரிதாபமாக உள்ளது.மத்திய அமைச்சரான பிரகாஷ் ஜாவடேகர் , விஜயகாந்தின் வீட்டிற்குச் சென்று அழைப்பு விடுத்தார். அதனை சற்றும் சட்டை செய்யாத விஜயகாந்த் மரியாதையை நிமித்தமான சந்திப்பு  என தெரிவித்தார். தமிழகத்தில் செல்வாக்கு இல்லாத பாரதீய ஜனதாக் கட்சி விஜயகாந்தை பெரிதும் நம்பி இருந்தது. பாரதீய ஜனதாவுடனான கூட்டணிக் கதவை விஜயகாந்த் அடித்துச் சாத்திவிட்டார் எனத் தெரிந்து கொண்டும் விஜயகாந்துடன் சேர்வதற்கான பேச்சு வார்த்தையில் அக் கட்சி நம்பிக்கை வைத்தது.  விஜயகாந்தின் முடிவால் திராவிட முன்னேற்றக் கழக‌மும், பாரதீய ஜனதாக் கட்சியும் நிலை குலைந்துள்ளன.

ஜெயலலிதாவின் ஆட்சியை முடிவுக்குக்கொண்டுவருவதற்கு விஜயகாந்தின்  அனுசரணை தேவை என்பதை அறிந்த தலைவர்கள் அவருக்குத் தூது விட்டனர். தனது மதிப்பை உயர்த்துவதற்காக சில தலைவர்களுடன் வெளிப்படையாகவும்,   சில கட்சிப் பிரதிநிதிகளுடன் இரகசியமாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார். விஜயகாந்துடன் பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் நம்பிக்கையுடன் பேட்டியளித்தனர்.  விஜயகாந்த் மெளனம் காத்தார். பேச்சுவார்த்தை பற்றி விஜயகாந்த் முச்சு விடவில்லை. ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் நடத்தும் தமிழகத் தலைவர்களை அனைவரும் ஆளுக்கொரு திசையில் இருக்கின்றனர்.இது  ஜெயலலிதாவுக்குச் சாதகமானது  எனத்தெரிந்துகொண்டும் வரட்டுக் கெளரவத்தினால் தனி ஆவர்த்தனம் செய்கின்றனர்.
விஜயகாந்தின் கட்சியின் சார்பில் தமிழகத் தேர்தலில்  போட்டியிட விரும்பும் பிரமுகர்கள் அனைவரும் திராவிடமுன்னேற்றக் கழ‌கத்துடன்  இணைந்து தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர்.விஜயகாந்தின் மனைவி பிரேமலதா திராவிடமுன்னேற்றக் கழ‌கத்தை பரம எதிரியாகக்  கருதுகிறார். தமிழகத் தேர்தலில் தனித்துப் போட்டியிடபோவதாக விஜயகாந்த் அறிவித்தார். விஜயகாந்தை முதல்வராக்க விரும்புகிறவர்கள் எமக்குப் பின்னால் வரலாம் என பிரேமலதா அழைப்பு விடுத்தார். இதனால் விஜயகாந்துக்காக காத்திருந்த திராவிடமுன்னேற்றக் கழ‌கம்,மனித நேயக் கூட்டணி,   பாரதீய ஜனதாக் கட்சி ஆகியன ஏமாற்றமடைந்தன.
விஜயகாந்தின் தலைமையில் கூட்டணி  அமைக்க பிரேமலதா விடுத்த பகிரங்க அழைப்பை அரசியல் தலைவர்கள் ரசிக்கவில்லை.அவர் அழைப்பு விடுத்து இரண்டுவாரங்கள் கடந்தபின்னரும் எந்த ஒரு அரசியல் தலைவரும் அவரைத் தேடிப் போகவில்லை.சிறுகட்சித் தலைவர்கள் தொழிற்சங்கங்கள் எவையும் விஜயகாந்தைத் திரும்பிப் பார்க்கவில்லை.விஜயகாந்துடன் கூட்டணி சேர விரும்புபவர்கள் அவரது வாக்கு வங்கியைத்தான் குறிவைத்துள்ளனர். விஜயகாந்தைத் தலைவராக ஏற்க எவரும் தயாராகவில்லை.
தமிழக தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு விஜயகாந்த்  குழுவை அமைத்தார். அந்தக்குழு சில கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்தது. அந்தக் குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு எந்த ஒரு கட்சியும் முன்வரவில்லை. வெறுத்துப் போன விஜயகாந்த் குழுவைக் கலைத்துவிட்டார்.  விஜயகாந்தை மற்றைய தலைவர்கள் தேடிச்சென்ற  காலம் போய் விஜயகாந்த் மற்றைய தலைவர்களைத் தேடிச்செல்லும் காலம் வந்துள்ளது.
தனித்துப் போட்டியிடுவது தவறான முடிவு என உணர்ந்த விஜயகாந்த் ,மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்துள்ளார்.  மறுமலர்ச்சி  திராவிட முன்னேற்றக் கழகம், மாக்சிஸ்ட் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி,விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன இணைந்து மக்கள் நலக் கூட்டணியை அமைத்தன அக் கூட்டணியில்  விஜயகாந்த் இணைந்துள்ளார். விஜயகாந்தின் கட்சிக்கு 124 தொகுதிகளும் ஏனைய நன்கு கட்சிகளுக்கு  110  தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.  . விஜயகாந்த் எதிர்பார்த்ததை விட அதிகமான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அறுதிப் பெரும்பான்மையுடன்  விஜயகாந்த் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்   30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வங்கி உள்ளது. மக்கள் நலக் கூட்டணிக்கு  20 சதவீத வாக்கு வங்கி உள்ளது.  கட்சி சாரத நடு நிலையாளர்களின் வாக்கு கிடைத்தாலும்  அறுதிப் பெரும் பான்மையை எட்ட முடியாது. கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் எதிரான  இளைஞர்களின் வாக்கு மக்கள் நலக் கூட்டணிக்குக் கிடைக்கும்.
 தேர்தல் அறிக்கை,பிரச்சாரம், பணம் என்பனவே தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம்   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   ஆகியவற்றிடம் இவை அளவுக்கதிகமாக உள்ளன.

வர்மா 
துளியம்.கொம்

2 comments:

Selvadurai said...

பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு, அன்புமணி அவர்கள் மாற்றம் முன்னேற்றம் என்கின்ற கோஷத்துடன் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு பெருகி வருவதைக் காண்கின்றோம். இதுபற்றி உங்கள் பதிவில் ஒன்றும் சொல்லவில்லையே!!

வர்மா said...

Selvadurai said...
பாட்டாளி மக்கள் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் திரு, அன்புமணி அவர்கள் மாற்றம் முன்னேற்றம் என்கின்ற கோஷத்துடன் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்கு சமூக வலைதளங்களில் பரவலான ஆதரவு பெருகி வருவதைக் காண்கின்றோம். இதுபற்றி உங்கள் பதிவில் ஒன்றும் சொல்லவில்லையே!!////

தமிழக முதல்வரைத் தீர்மனிக்கும் சக்தியக இருந்த பா.ம.க இன்று பாரிய பின்னடைவைக் கண்டுள்ளது. பல முனைப் பொட்டியின் போது அக்கட்சியால் தாக்குப்பிடிக்க முடியாது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா