Wednesday, March 2, 2016

சுதந்திரம் என்ற பெயரில் மறக்கடிக்கப்படும் கலாசாரம்

கலை,கலாசாரம்,பண்பாடு,உடை என்பன ஒரு இனத்தின் அடையாளங்களை உலகுக்கு எடுத்தியம்பும் பண்புகள். இனக்குழுமத்தின் வாழ்வியல் அடையாளங்களை இவற்றின்  மூலம் உணர்ந்துகொள்ளலாம். நாகரிகம்,சுதந்திரம்  என்ற போர்வையில் இவை சிறிது சிறிதாக கரைந்து போகின்றன. கலை,கலாசாரம்,பண்பாடு என்பவற்றை வெளிப்படுத்துவதற்கு ஒரு நாளைத் தெரிவுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.    கூத்து,நாடகம் என்பனவற்றை  நாம் மறந்து விட்டோம். அடிக்கடி நடைபெற்ற கூத்துகள், நடக்க விழாக்கள்  அருகிப்போய் நாடகம் பார்ப்பதற்காக சிவராத்திரியை எதிர் பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழரின் தேசிய உடை என்ன என்பதை எதிர்கால சந்ததி அறிய முடியாத நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் சகல ஆசிரியர்களும் தேசிய உடையைத் தான் அணிந்தனர்.காலப்போக்கில் தமிழ் ஆசிரியர்கள் மட்டும் தேசிய உடையில் வலம் வந்தனர். இன்று தேசிய உடை அணியும் ஆசிரியர்களை இன்று காணமுடியாதுள்ளது. வேட்டி,சேலைஉடுக்கத் தெரியாத சந்ததி உருவாகி விட்டது. கோயில்,திருவிழா,திருமணம்,பூப்புனித நிராட்டு  விழா போன்றவற்றில் மட்டும்தான்  சிலரை வேட்டி,சேலையில் காணமுடிகிறது.   வேட்டி உடுப்பது சிரமம் என்பதனால் வேட்டியைக் கண்டுபிடித்தவன் யார் என பேஸ் புக்கில் கேள்வி கேட்கிறார்கள்.

பாடசாலையில் படிக்கும் போது  சீருடையில் சென்று வந்தவர்கள். பாடசாலையை விட்டு வெளியேறியதும் நாகரிக உடைக்கு மாறினார். வித்தியாசமாக உடை அணிய வேண்டும்  என்ற ஆசை சில சமயங்களில் விபரீதத்தை உருவாக்கி விடுகின்றன.   நகர்ப்புறக் கோயில்களுக்குச்செல்லும் ஆண்கள்  வேட்டி அணிவது மிகக்குறைவு. வயது போன சிலர் மட்டும்தான்  வேட்டி அணிகிறார்கள். இளைஞர்கள்  எவரும் வேட்டி அணிவதில்லை. சிலர் முழங்காலுக்கு   கிழே  நீளமான களிசானுடன் கோயிலுக்குச் செல்கின்றனர். கிராமத்துக் கோயில்களில் இன்றும் வேட்டி தான் இடம்  பிடித்துள்ளது.


கோயிலுக்கு வருபவர்கள் எப்படியான உடை அணிய வேண்டும் என அறிவிக்க வேண்டிய  இக்கட்டான நிலை தோன்றியுள்ளது. பாவாடை,சட்டை, சல்வார் போன்ற உடைகளில் கோயிலுக்கு வர வேண்டாம் என சில கோயில்களில் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. சேலை கட்டச்சொன்னால் சில பெண்களுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. சேலையுடன் வரச்சொன்னதல் வருமானம் குறைவு என அழும் கோயில் நிர்வாகங்கள் வருமானத்தைத் எதிர்பர்த்து  கோயிலின் பண்பாட்டு விழுமியங்களை  குழி தோண்டிப் புதைத்து விட்டனர்.  
 வழிபாட்டு தலங்களுக்கு எப்படிச்செல்ல வேண்டும் என சகல மதங்களும் வரையறை செய்துள்ளன. இந்துக்களில் சிலர் அந்த வரையறையை மீறிய  உடையுடன் கோயிலுக்குச்செல்கின்றனர்.  ஆலய  நிர்வாகங்களும் அதனைக் கண்டும் காணததுபோல விட்டுவிடுகின்றன.  கோயிலுக்கு எப்படிச்செல்ல வேண்டும் என கொழும்பில் உள்ள பாடசாலை ஆசிரியை மாணவனைக் கேட்டபோது, “ குளிச்சு, புது உடுப்பு போட்டு சப்பாத்து போட்டு கோயிலுக்குச் செல்ல  வேண்டும் என்றான். கொழும்பில் உள்ளவர்கள்  சப்பாத்து,செருப்பு போடாமல் கோயிலுக்குச்செல்வதில்லை.

சில பாடசாலைகளுக்கு  பிள்ளைகளை கூட்டிச்செல்லும்  பெற்றோர்  எந்தவகையான உடையுடன் வரவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விச்சலைகளில் இருந்தே நமது கலாசாரம் ஆரம்பமாக வேண்டும். அரசாங்கப் பாடசாலைகளின்  சீருடை வெள்ளை நிறம். தனியார் பாடசாலைகளின் சீருடைகள் வேறுபட்ட நிறங்களில் உள்ளன. அந்த மாணவர்கள் எங்கே படிக்கிறார்கள் என்பதை சீருடை மூலம் அறிய முடியும். பாடசாலையில் படிக்கும்  போது அழகாக இருந்த சீருடை சிலருக்கு  பாடசாலை முடிந்தது. சுமையாக மாறுகிறது. சீரான உடையை உடுத்தச்சொன்னால்   அதனை தம் மீதான  திணிப்பு என சிலர் நினைக்கின்றனர்.

பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு அரைகுறை ஆடைகளும் ஒரு காரணம். சினிமா நடிகைகள் பணத்தை வாங்கிக்கொண்டு  போடும் அரை குறை உடைகளை பணம் கொடுத்து வாங்கிப்போடுகிறார்கள். நாய் கிழித்ததுபோல உடை உடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேல் நீதிபதி இளஞ்செழியன் ஒரு வைபவத்தில் கூறியுள்ளார்.  நீதிபதி தலையிட்டு உடையை தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 சேலை அபாச  உடை என சிலர் கருதுகின்றனர். ஆபாசம் உடையில் அல்ல பார்ப்பவர்களின் கண்களில் தான் ஆபாசம் இருக்கிறது என்பதை அவர்கள் உணரவில்லை. குழந்தைக்கு பாலூட்டும்  தைப் பார்க்கும் போது ஆபாசம் தெரிவதில்லை. அதனை தய்மையகப் பார்க்காது  ஆபாசமாகப் பார்த்தால் அவனை மனிதனாக ஏற்றுக்கொள்ள முடியாது. சேலை ஆபாசம் என்றால் ஆபாசம் இல்லாத உடை எது என்பதை வரையறை செய்ய முடியாது.  சேலை உடுக்க விருப்பம் இல்லை என்றால் விட்டு விடுங்கள் அதற்காக எமது பாரம்பரியமான சேலையை ஆபாசம் என கூறமுடியாது.

ஆடை இன்றி மனிதன் வாழ்ந்த காலம் போய்விட்டது. நாகரிக வளர்ர்சியில் பலவகையான ஆடைகள் தோன்றிவிட்டன. தமிழரின் கலை,பண்பாடு,கலாசாரம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஆடையை துறப்பது நாகரிகமல்ல.
ஊர்மிளா.
சுடர் ஒளி
 மார்ச் 02/மார்ச் 08


No comments: