Thursday, March 17, 2016

போர்க்குற்ற விசாரணைக்கு அழைப்பு விடும் சரத் பொன்சேகா


விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது போர்க் குற்றம் நடைபெற்றதாக சர்வதேசம் குற்றம் சாட்டியது. அப்போதைய அரசங்கம் அதனை மறுத்துரைத்து பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் நடைபெற்றது. அங்கு  போர்க்குற்றம் நடைபெறவில்லை என மறுத்துரைத்தது. ஆனால், சர்வதேசம் இதனை நம்பவில்லை. ஐ.நாவில் இது தொடர்பான விவாதம் இலங்கைக்கு எதிராகத் திரும்பியது. ஐ.நாவை பகைத்துக் கொண்ட இலங்கை தனது பிடியைத் தளரவிடவில்லை. அப்பாவிகள் கொல்லப்பட்டதை அன்றைய அரசு மறுத்தது. மரணம் இல்லாத யுத்தம் இல்லை என அரசாங்கத்தின் ஆதரவளர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் ஆட்சி மாறியதும் போர்க்குற்ற விசாரணை முன்னிலைக்கு வந்தது. போர்க் குற்றத்தை யார் விசாரிப்பது சர்வதேசம் விசாரிப்பதா உள்ளக பொறிமுறையா என விவாதம் நடைபெறுகிறது. போர்க்குற்றம் நடைபெறவில்லை என்று கூறுபவர்கள் போர்க்குற்ற விசாரணை தேவை இல்லை என்பதில் இருந்து விலகவில்லை. இலங்கையில் மிக மூர்க்கமாக யுத்தம் நடைபெற்ற வேளையில் இராணுவத் தளபதியாக பதவி வகித்த சரத் பொன்சேகா சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை என பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

 முன்னாள் பாதுகப்புச்செயலாளரான  கோத்தபாய ரஜபக்க்ஷ‌வும் முன்னாள் இராணுவத் தளபதியும்  விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கு இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயற்பட்டவர்கள்.  யுத்தம் முடிந்ததும் இருவருக்கும் இடையே முறுகல் ஆரம்பித்தது. ஜனாதிபதித் தேர்தலில் சரத்  பொன்சேகா போட்டியிட்டதால் ரஜபக்க்ஷ‌ குடும்பம் அவர் மீது  கோபம் கொண்டது. வெள்ளைக் கொடி விவகாரம் பற்றி சரத் பொன்சேகா வழங்கிய பேட்டி அவரை சிறைக்கு அனுப்பியது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது  படைகளிடம் சரணடைந்தவர்களில் பலரைக் காணவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகளின் தலைவர்களான புலித்தேவன்,நடேசன் உட்பட  பலர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. வெள்ளைக் கொடியுடன் எவரும் சரணடையவில்லை என அன்றைய அரசாங்கம் அறிவித்தது. சரணடைந்த யுத்தக்  யுத்தக்கைதிகளை துன்புறுத்தக் கூடாது. சரணடைந்த அப்பாவிகளை விசாரணையின்  பின்னர் விடுதலை செய்ய வேண்டும். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படவில்லை.  சரணடைந்த அப்பாவிகளும் விடுதலைப்புலி உறுப்பினர்களும் எங்கே இருக்கிறார்கள் என்பது இன்றுவரை தெரியாது அவர்களது உறவினர்கள் தவிக்கின்றனர். சரணடைந்தவர்களில் பலர் புனர் வாழ்வின் பின்னர் விடுதலை செய்யபட்டுவிட்டனர். சிலர் சிறையில் இருக்கிறார்கள்    என முன்னைய அரசு தெரிவித்தது.

வெள்ளைக்  கொடி விவகாரம் இன்னமும் தீர்க்கப்படவில்லை வெள்ளைக் கொடி விவகாரம் உண்மையா பொய்யா என அறிவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது போர்க்குற்றங்கள் உட்பட மனித உரிமை மீறல் குற்றச்சாடுகள் தொடர்பாக  வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும்.அதில் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களையும்  ஆலோசகர்களையும் ஈடுபடுத்த வேண்டும்  என பாராளுமன்றத்தில் சரத் பொன்சேகாதெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல் நடைபெறவில்லை. போர்க்குற்ற விசாரணை தேவை இல்லை. வெளிநாட்டு தலையீட்டுக்கு  அனுமதிக்கப் போவதில்லை என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். போர் நடைபெற்ற போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா போர்க்குற்ற விசாரணை வெளிநாட்டு நிபுணர்களைக் கோரி இருப்பது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவ்ர்கள்   பற்றிய விபரங்களை காணமல் போனவர்களைக் கண்டறியும் பரணகம ஆணைக்குழு முன்னிலையில் பலர் சாட்சியமாக அத்தாட்சிபடுத்தி உள்ளனர். சரணடைந்தவர்களின் பெயர்,  மக்கள்  சரணடைந்த  இராணுவப்பிரிவு  அப்போது பொறுப்பில் இருந்த இராணுவ அதிகாரியின் பெயர் என்பனவற்றையும் சரணடைந்தவர்களின் உறவினர்கள் ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.
யுத்தம் முடிந்து விட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ  அறிவித்த போது பிரபாகரன் உயிரோடு இருந்தார்.  வெளிநாட்டில் இருந்து முன்னாள்  ஜனாதிபதி நாடு திரும்பி விமான நிலையத்தில் மண்ணை முத்தமிட்டபோது யுத்தம் முடிவடையவில்லை எனவும் சரத்  பொன்சேகா தெரிவித்துள்ளார். நான்கு மாதங்களாக தொட்ட இல்லாதபோது தனதுசெல்வாக்கினால் பாகிஸ்தானில் இருந்து தோட்டா  வரவழைக் கப்பட்டதாகவும்  அவர் தெரிவித்தார். யுத்தத்தின் போது  பெருந்தொகையான பணம் ஏப்பமிடப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.  இந்தக் குற்றச் சட்டுகளுக்கான பதிலை முன்னாள்  அரசாங்க முக்கியஸ்தர்கள்  தெரியப்படுத்த வேண்டும்.


இறுதி கட்ட யுத்தத்தின் போது  புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் பற்றி  சரத் பொன்சேகாவும் ஜே.வி.பியின் தலைவரும் முரணான தகவல்களை  பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளனர். புளிகளிடம்ம் இருந்து   200 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 110 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக பசில் தெரிவித்ததாக சரத் பொன்சேகா கூறியுள்ளார்   400 முதல் 500 கிலோ வரையான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினர்.  புலிகளுடன் இருந்து கைப்பற்றப்பட்ட  40 கிலோ தங்கம் எங்கே என ஜே..வி பியின் தலைவரும் பிரம கொறடாவுமான அனுரா  திசாநாயக்க  பிரதாமரிடம் கேட்டுள்ளார்.புலிகளிடம் இருந்துகைப்பற்றப்பட்ட  150  கிலோ   தங்கத்தில் 30 கிலோ மக்களிடம் கையளிக்கப்பட்டது. 80 கிலோ இராணுவத்திடம் உள்ளது.  மிகுதி 40 கிலோ தங்கம் எங்கே என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட தங்கம்  வடக்கு மக்களிடம் கையளிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் முரண்பாடு பற்றி  விசாரணை நடத்தப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். தமிழ்மக்கள் சிறுகச்சிறுகச்சேமித்த தங்கத்தை சிலர் ஏப்பம் விட்டுள்ளனர். நீதியான விசாரணை நடைபெற்று மிகுதித் தங்கம் மீட்கப்படுமா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.
வானதி
சுடர் ஒளி

மார்ச்15 /மார்ச் 21

No comments: