Sunday, February 16, 2025

எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி


 

  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் எடப்பாடி. ஓ.பன்னீர்ச்செல்வம்,சசிகலா,தினகரன் ஆகியோரை மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தி சேர்க்க வேண்டும் என்ற குரலை எடப்பாடி அடக்கி ஒடுக்கிவிட்டார். எடப்பாடி சொல்வது தான்  பொதுச் சபையில் நிறவேறும் என்ற எழுதப்படாத விதியை அமுல் படுத்தியுள்ளார். எடப்பாடிக்கு  எதிரானவர்களும், பாரதீய ஜனதாவுடன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  இணைக்கப்பட வேண்டும் என நினைக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர்  பேசாமடைந்தைகளாக  இருக்கிறார்கள்.

  எம்ஜிஆர் காலத்து மூத்த அரசியல் தலைவரான செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி இருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்துள. எடப்பாடி பழனிசாமியையே அரசியலுக்கு கொண்டு வந்த குருநாதர்தான் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலத்திலேயே மாவட்ட செயலாளர். எம்.எல்.ஏ. என பதவி வகித்தவர்; ஒரு கால கட்டம் வரை ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தவர்; அவரது வாழ்க்கையில் சறுக்கல் ஏற்பட ஜெயலலிதா ஒதுக்கி வைத்தார்; ஆனால் சசிகலா குடும்பம், அதிதீவிர உண்மையான விசுவாசி செங்கோட்டையனை இன்று வரை கைவிடவில்லை. இத்தனை ஆண்டுகள் கனத்த அமைதி காத்த செங்கோட்டையன் இப்போது திடீரென கலகக் குரல் எழுப்பி இருப்பது மிக சாதாரணமாக கடந்து போய்விடக் கூடியது அல்ல என்பதுதான் அனைத்து அரசியல் பார்வையாளர்களின் கருத்து.   அண்ணா திராவிட முன்னேற்ற்க் கழகதில் போர்க்கொடி எழுப்பியவர்கள் தூக்கி எறியப்பட்டனர்.  செங்கோட்டையன் கலகக் குரல் எழுப்பியதுமே 30-க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் பலரும் அவரை தொடர்பு கொண்டு  ஆதரவு தெரிவித்தனர்.

ஒருங்கிணைந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில்பாரதீய ஜனதா,பாட்டாளி  மக்கள் கட்சி, தேசிய முன்னேற்ற திராவிடக் கட்சி,தமிழ்  மாநிலக் கட்சி ஆகியவைஒன்றிணைந்து  மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே டெல்லியின் கணக்காகும். 

டெல்லியின் கனவுக்கு எடப்பாடி முட்டிக்கட்டை போடுகிறார்.செங்கோட்டையனின் போர்க்கொடிகுப் பின்னால் சசிகலா  இருப்பதாகக் கருதப்படுகிறது. எடப்பாடிக்கு ஆதர்வானவர்களின் வீடுகளிலும் நிறுவனங்களிலும்  வருமான வரித்துறை திடீர் தேடுதல் நடத்தியும் அவர் அசரவில்லை.அதனால்தான் செங்கோட்டையன் உசுப்பிவிடப்பட்டுள்ளார்.

  செங்கோட்டையன் விவகாரத்தை முன்வைத்து மீண்டும் எடப்பாடி பழனிசாமியை காட்டமாக விமர்சித்து வருகிறார் டிடிவி தினகரன்.  ஜெயலலிதாவால் ஓரம்கட்டப்பட்டு ஏறத்தாழ அரசியல் அத்தியாயத்தின் இறுதி கட்டத்தில் இருந்தவர்தான் செங்கோட்டையன். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மீண்டும் உயிர் பெற்றது செங்கோட்டையன் அத்தியாயம். சசிகலா குடும்பத்தின் மீதான 'மாறாத' விசுவாசம்  இன்றும் தொடர்கிறது.

 சசிகலா சிறைக்குப் போகும் நிலையில் கூவத்தூரில் செங்கோட்டையனை முதல்வராக்க அவரது குடும்பம் தீவிரமாக முயன்றது.காலமும் நேரமும் எடப்பாடிக்கு ஆதர்வாக நின்றதால் அவர் முதலமைச்சரானார்.

 சசிகலா குடும்பத்தின் நெருக்கடியால் தனது குருநாதரான செங்கோட்டையனை வேண்டா வெறுப்பாக அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார் எடப்பாடி   எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு எதிரியாகிவிட்டார்; ஆனால் செங்கோட்டையனோ சசிகலா குடும்பத்திடம் இருந்து இம்மியளவும் விலகாமல் இன்று வரை தொடர்பில்தான் இருந்து வருகிறார்.

கோவை அன்னூர் அருகே அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக   பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினர். இந்த விழாவை மேற்கு மண்டல சீனியரான முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் புறக்கணித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், எங்களை வளர்த்து அடையாளம் காட்டியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா. இந்த இருவரது படமுமே எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழா நிகழ்வுகளில் இடம் பெறவில்லை. இத்தனைக்கும் அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்தவர் ஜெயலலிதா. இதனை எப்படி எங்களால் ஏற்க முடியும்? என்றார். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெயக்குமாரோ, எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தியது அதிமுக அல்ல; விவசாயிகள் அமைப்புதான் என மழுப்பலாக மட்டுமே பதிலளித்துள்ளார். செங்கோட்டையனின் போர்க்கொடுக்கு இதுதான் முக்கிய காரணம்.

   கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட அவரின் ஆதரவாளர்கள் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே அவருக்கு துப்பாக்கி ஏந்தியபொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது  கழகத்தினுள் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தினால்  கோபிசெட்டிப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் பெயரை தவிர்த்து வேறு அனைவரின் பெயர்களையும் கூறினார்.

டெல்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  அலுவலகத்தை, சென்னை ராயப்பேட்டையிலுள்ள   தலைமை நிலைய அலுவலகத்தில் இருந்தபடி, காணொளி வாயிலாக பழனிசாமி திங்கள்கிழமை காலையில் திறந்து வைத்தார்.  மூத்த தலைவர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றனர் யில், செங்கோட்டையன் அதிலும் பங்கேற்கவில்லை.  கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் செங்கோட்டையன் பரிந்துரைத்த சிலரை, எடப்பாடி பழனிசாமி போடாததும், புதிய நிர்வாகிகள் நியமனத்தில் அவரிடம் கலந்து பேசாததுமே அதிருப்திக்கு காரணமென்று தெரிகிறது.

 அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், கட்சியை ஒன்றிணைக்கும் வேலையில் ஆறு  தலைவர்கள் ஈடுபட்டதாக செய்தி ஒன்று சமீபத்தில் வெளியானது. அதில் செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அடங்குவர். இவர்கள் கடந்த ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கட்சியை ஒன்றுபடுத்தாவிட்டால் வருங்காலத்தில் பெரிய தோல்விகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.இப்படி ஒரு விஷயம் நடக்கவே இல்லை என்று ஊடகங்களிடம் தெரிவித்தார். எனவே இந்த ஆறுபேர் மட்டுமின்றி, கட்சியின் பல்வேறு தலைவர்களும் எடப்பாடி மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.  செங்கோட்டையன் தற்போது அளித்துள்ள விளக்கம் என்பது அதிருப்தியின் நீட்சி தான்.

எடப்பாடியின் தலைமையில் 10 தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியடைததால் அடுத்த கட்டத்த் த‌லைவர்கள்  நொந்து போயுள்ளனர்.  செங்கோட்டியன் பூனைக்கு மணி கட்டியுள்ளார்.

 

ரமணி

16/2/25    

No comments: