Sunday, February 2, 2025

எகிறிய எடப்பாடி அடங்கிய அண்ணாமலை


  அண்ணா திராவிட முன்னேற்றக்  கட்சிக்கும், பாரதீய ஜனதாக் கட்சிக்கும் இடையே  இருந்த பிரச்சனைகள் வெடித்துக் கிளம்பி உள்ளது. தேனும் பாலும் ஓட தேன் நிலவு கொண்டாடிய எடப்பாடிக்கும் , மோடிக்கும் இடையே புகுந்த அண்ணாமலையால் எடப்பாடி தனிக்குடித்தனம் போய்விட்டார்.

 திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கடுமையாக விமர்சித்த அண்னாமலை சந்தர்ப்பம் கிடைக்கும்  போதெல்லாம் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் விட்டு வைக்கவில்லை.  தமிழகத்தின் எதிர்க்கட்சியாக அண்னா திராவிட முன்னேற்றக் கழகம்  இருக்கையில் பாரதீய ஜனதாக் கட்சிதான் தமிழகத்தின் எதிர்க் கட்சி என அண்ணாமலை அறித்தார். இதனால் எடப்பாடி கொதிப்படைந்து  பாரதீய ஜனதாக் கட்சியுடனான தொடர்பைத் துண்டித்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வரும் என  இலவு காத்த கிளியாகக் காத்திருந்த  பாரதீய ஜனதாக் கட்சி ஏமாற்றமடைந்தது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள்  இருக்கும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவாளர்களை கட்டம் கட்டும் நடவடிக்கையை எடப்பாடி எடுத்துள்ளார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் கோவை வேலுச்சாமி, மைத்ரேயன், முல்லைவேந்தன், சின்னச்சாமி ஆகியோரை அதிரடியாக நியமித்தார் எடப்பாடி. இந்த நியமனம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வட்டாரங்களில் பேசு பொருளாகியிருக்கிறது. கோவையில் கோலோச்சும் நிர்வாகி ஒருவர்  முடக்கும் விதமாகவே கோவை வேலுச்சாமியை கட்சியின் மாநில பொறுப்புக்குள் கொண்டு வந்திருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் விஅரம் அறிந்தவர்கள்.  கோவையில் கோலோச்சும் நிர்வாகிக்கு எதிரானவர்கள் இந்த விவாதத்தை பேசு பொருளாக்கி வருகின்றனர்.

கோவையின் நிர்வாகி பாரதீய ஜனதாவின்  மேலிடத்துடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். பாரதீய ஜனதாவின் நிகழ்ச்சி நிரலை அவர் நிறைவேற்றி   எடப்பாடிக்கு குடைச்சல்  கொடுக்கிறார்.  அவர் இல்லாமல் கோவையி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலை நிமிர முடியாது என அவர் ஒரு மாயையை  உருவாக்கி உள்ளார்.  அவரின் நடவடிக்கைகளால் எடப்பாடி பல  பிரச்சனைகளை எதிர் நோக்குகிறார்.  அவ்வப்போது சமாதானங்கள் நடந்தாலும், உள்ளுக்குள் எடப்பாடிக்கு எதிராக கட்சிக்குள் அந்த கோவை புள்ளி செயல்படுவதாக எடப்பாடி திடமாக நினைக்கிறார்.   அந்த கோவை புள்ளிக்கு எதிராக இன்னும் சில சீக்ரெட் தகவல்கள் எடப்பாடி யிடம் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், அந்த கோவை புள்ளியை மட்டுமே நம்பி சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது கோவையில் முழு வெற்றியை பெற முடியாது என நினைக்கிறார். அதனால்தான், அந்த கோவை புள்ளிக்கு இணையாக கோவையில் செல்வாக்கு வைத்திருக்கும் வேலுச்சாமிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

 வேலுச்சாமியை நியமிக்கும் விவகாரம் இத்தகைய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்,   அண்ணா திராவிட முன்னேற்றக் கழ்க‌ அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள நான்கு பேரில் மூன்று பேர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது, அண்ணா திராவிட் முன்னேற்றக் கழகத்தின் ஏனைய  சமூகத் தலைவர்களிடம் அதிருப்தியை உருவாக்கி வருவதாகவும் கருதப் படுகிறது.

 பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முடிவு செய்துள்ளது. பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பிரஷாந்த் கிஷோர் இப்போது வெளிப்படையாக பணிகளை செய்வது இல்லை. அவரின் நிறுவனம் மட்டுமே பணிகளை செய்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் இப்போதும் பிரஷாந்த் கிஷோர்தான். அவர் நேரடியாக பணிகளை செய்ய மாட்டார். ஏனென்றால் அவர் தனியாக அரசியல் கட்சி நடத்தி வருகிறார். ஆனாலும் பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் திட்டங்களை ஐபேக் நிறுவனத்திற்காக வகுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த நிறுவனத்துடன் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே இதற்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடந்தது. இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  234 தொகுதிகளிலும் ஜனவரி இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய முடிவு செயப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல்,  நாடாளுமன்றத்  தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் செய்யப்பட்டன ஒன்றரை ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பொதுக்குழு கூடியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தி இருந்து வெளியேறிய   தலைவர்கள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்று மூத்த  தலைவர்கள் பலர் நினைக்கிறார்களாம்.

  முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய பெரிய தலைகள் எல்லாம் இந்த கோரிக்கையை வைக்க தொடங்கி உள்ளனராம்.   இது புதிய பூகம்பத்தை கிளப்பி உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த 2021ஆம் ஆண்டு பதவியேற்றார். அன்று முதல் பல அதிரடி முடிவுகளை எடுத்தார். கண்டதையும் பேசி தன்னுடைய இருப்பை காட்டிக்கொண்ட அண்ணாமலையை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள்  கடுமையாக எதிர்த்தார்கள்.

தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி வளர்ந்துவிட்டது. தாமரை மலரப் போகிறது என அண்ணாமலை சொன்னதை டெல்லி மேலிடம் முற்று முழுதாக நம்பியது.தேர்தலின் படு தோல்வி உண்மையை வெளிக்கொண்டு வந்தது. இனிமேலும் விட்டு வைத்தால் கட்சி தமிழகத்தில் வளராது என எண்ணிய அமித்ஷா, அண்ணாமலையை மாற்ற முடிவு செய்துள்ளார்.

இதனால் தமிழக பாரதீயச் ஜனதாவின்  மூத்த தலைவர்கள் குஷியாகி தலைவர் கனவில் மிதந்தனர்.    வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்திரராஜன் என மூத்த தலைவர்கள் அனைவரும் தலைவர் பதவிக்கு போட்டா போட்டி போட்டனர்.

இதையெல்லாம் கண்காணித்த அண்ணாமலை  சாட்டையடி சம்பவத்தை அரங்கேற்றினார். திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் இருந்து விரட்டும் வரை  காலில்  செருப்பை அணியமாட்டேன் எனவும் கூறி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். ஆனால் டெல்லி மேலிடம் மட்டும் அவர் பக்கம் திரும்பவே இல்லை.  சண்டைக்காரன் பக்கம் செல்வோம் என எடப்பாடி காலில் விழுந்தார் அண்ணாமலை.

எடப்பாடியின் மகன் மிதுனை சந்தித்து அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து ஒன்று கூடுவோம் என அவரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு  மிதுன் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 சமீபத்தில் எடப்பாடிக்கு சொந்தமான நெருங்கிய வட்டாரத்தில் வருமானவரி சோதனை நடந்துள்ளது. இதை உடனடியாக நிறுத்தி விடலாம் என்றும் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது தொடர்பாக மிதுனை அழைத்துக்கொண்டு டெல்லி பறந்த அண்ணாமலை அமித்ஷாவிடமும் பேசியுள்ளார்.ஆனால் ஒரு மூன்று மாதம் மிதுன்  அவகாசம் கேட்டதாக தெரிகிறது. ஏனென்றால் விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாகவும் அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மீண்டும் அண்ணா திராவிடக் கழகமும், பாரதீய ஜனதாக் கட்சியும்  பாஜக கூட்டணி மலர இப்பதாக மிகவும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறது.   அண்ணா திராவிட முன்னேற்றக் கழ்கத்  தலைவர்களை பற்றி இனி பேசமாட்டேன் என அண்ணாமலை சரணாகதி அடைந்துள்ளதால் எடப்பாடியும் சற்று குளிர்ந்துள்ளார்.

ரமணி

2/2/25

No comments: