Wednesday, February 19, 2025

பாகிஸ்தானில் மினி கிறிக்கெற் திருவிழா


 கிறிக்கெற் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கத் துடிக்கும்  மினி உலக கிறிகெற் திருவிழாவான சம்பியன் கிண்ணப் போட்டி இன்று புதன் கிழமை பாகிஸ்தானில் ஆரம்பமாகிறது.

  இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ்  ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும் அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மறு பிரிவிலும்  போட்டியிடுகின்றன.இந்திய அணி ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கிறது. 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பாகிஸ்தானில் நடக்கும் சர்வதேச கிறிக்கெற் போட்டி என்பதனால்  மிக முக்கியத்துவம்  பெறுகிறது.

ச‌ம்பியன் கிண்ணத்தை  வெல்லும் அணிக்கு 2.24 மில்லியன் டொலரும், , இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 1.12 மில்லியன் டொலரும் பரிசாக வழங்கப்படும்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தப் போட்டியில், உலகின் முதல் எட்டு ஒருநாள் அணிகள் பங்கேற்கும்.

இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடக்கும் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சம்பியன்' பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. சொந்த மண்ணில் களமிறங்கும் பாகிஸ்தான் அணியிந்துடுப்பாட்டம் பலமாக உள்ளது. சமீபத்தில் கராச்சியில் நடந்த முத்தரப்பு தொடரில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 355 ஓட்டங்களைத் துரத்தி வென்றது. கீப்பர், கப்டன் ரிஸ்வான், பாபர் ஆசம், பகர் ஜமான், சல்மான் அகா, உஸ்மான் கான் தமது பலத்தி நிரூபிப்பார்கள். பந்துவீச்சில் ஷாகீன் ஷா அப்ரிதி, நசீம் ஷா, 'ஸ்பின்னர்' அப்ரார் அகமது அசத்துவார்கள்.

புதிய கப்டன் சான்ட்னர் தலைமையில் நியூசிலாந்து அணி அசத்துகிறது. முத்தரப்பு தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது. பின் கராச்சியில் நடந்த பைனலில் மீண்டும் பாகிஸ்தானை சாய்த்து, கோப்பை வென்றது. இன்றும் அசத்தினால், 'ஹட்ரிக்' வெற்றியை பதிவு செய்யலாம். டேரில் மிட்சல், கிளன் பிலிப்ஸ், ரச்சின் என நிறைய 'ஆல்-ரவுண்டர்கள்' இருப்பது பலம். அனுபவ வில்லியம்சன், கான்வே, லதாம் ரன் மழை பொழியலாம். பந்துவீச்சில் ரூர்க்கே, மாட் ஹென்றி, சான்ட்னர் மிரட்டலாம்.

இரு அணிகளும் 118 ஒருநாள் போட்டியில் மோதின. பாகிஸ்தான் 61, நியூசிலாந்து 53ல் வென்றன. 3 போட்டிக்கு முடிவு இல்லை. ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது.

* சம்பியன்ஸ் டிராபி அரங்கில் 3 முறை மோதின. பாகிஸ்தான் இரண்டு முறையும்,நியூசிலாந்து ஒரு போட்டியிலும்  வென்றன.


 * கராச்சி மைதானத்தில் 9 போட்டிகளில்  மோதின. நியூசிலாந்து 5 முறை வெற்றி பெற்றது.

* கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டிகளில்  நியூசிலாந்து 3,  மூன்றுமுறை  வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது.

1998ம் ஆண்டு முதல் நடக்கும் இந்த மினி உலகக்கோப்பையை இதுவரை வென்ற அணிகள் விபரம்

1998ம் ஆண்டு - தென்னாப்பிரிக்கா

200ம் ஆண்டு - நியூசிலாந்து

2002ம் ஆண்டு - இந்தியா, இலங்கை

2004ம் ஆண்டு - வெஸ்ட் இண்டீஸ்

2006ம் ஆண்டு - ஆஸ்திரேலியா

2009ம் ஆண்டு - ஆஸ்திரேலியா

2013ம் ஆண்டு - இந்தியா

2017ம் ஆண்டு - பாகிஸ்தான்

இன்று நிலவும் கிரிக்கெட் சூழலுக்கு நேர் எதிரான சூழல் தான் 1996ம் ஆண்டில் காணப்பட்டது.  சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தங்களை வலுவாக நிலைநிறுத்த தேவையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துக்கொண்டு இருந்தது. ஆனால், இன்றைய நிலவரத்தை போன்று அன்று பொருளாதார ரீதியாக பிசிசிஐ வலுவாக இல்லை. அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி, 1996 உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற இந்தியாவிற்கு உதவி தேவைப்பட்டது. அந்த நேரத்தில் தான், இந்தியாவிற்கு ஆதரவாக இணைந்து செயல்பட அப்போதைய பாகிஸ்தான், இலங்கை ஆகியன முன்வந்தன.

 1987ம் ஆண்டிலேயே இந்தியாவிலும்  பாகிஸ்தானிலும்  ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. இங்கிலாந்திற்கு வெளியே நடைபெற்ற முதல் உலகக் கோப்பை இதுவாகும். அந்த போட்டியில் இந்தியா பெரும்பங்கு வகித்த நிலையில், 1996 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் முக்கிய பங்கு வகித்தது.

   1996ம் ஆண்டு இந்திய கிரிக்கெட்சபை   பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்ற தீவிரமாக விரும்பியது.அந்த காலத்தில் ஒவ்வொரு முடிவும், நடவடிக்கையும் லாப நோக்கத்தை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக அவுஸ்திரேலியா இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய மறுத்தபோது, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இணைந்து சென்று அங்கு ஒரு போட்டியில் பங்கேற்றன. இதன் மூலம், இலங்கை பாதுகாப்பான நாடுதான் என்பதை உறுதி செய்தன. இன்றும் இலங்கைக்கு பயணம் செய்து, அர்ஜுனா ரணதுங்கா போன்றவர்களிடம் கேட்டால், இது ஒரு மறக்க முடியாத ஒரு செயல் என்று குறிப்பிடுவர்.

  கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் அபாய நாட்களுக்கு பதிலளித்த நாட்கள் அவை. ஆனால் இன்று, பலவீனத்தின் எந்த அறிகுறியும் அதிகமாக சுரண்டப்படுவதற்கான அழைப்பாக உள்ளது.

 , காலங்கள் உருண்டோடி இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரெதிர் துருவங்களாக உருவெடுத்துள்ளன. அரசியல் சூழல் காரணமாக, இந்தியா பாகிஸ்தானுக்குச் சென்று விளையாடுவதற்கான வாய்ப்பு ஒருபோதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. பாதுகாப்பு காரணமாகவே பாகிஸ்தானுக்கு செலவதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், எல்லை தாண்டி கிரிக்கெட் விளையாட இந்தியாவை அனுமதிப்பதில்லை என்பதில்  அரசியல் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. விளையாட்டும் அரசியலும் கலக்கக்கூடாது என்று சொல்பவர்கள் இருப்பார்கள், ஆனால்  விளையாட்டு தனியாக இயங்காது.

  

No comments: