Sunday, March 2, 2025

மோடியை எதிர்க்கத் தயங்கும் விஜய் ஸ்டாலினுக்கு எதிராகச் சீறிப் பாய்கிறார்.


  மோடியை எதிர்க்கத்  தயங்கும்  விஜய்

ஸ்டாலினுக்கு எதிராகச் சீறிப் பாய்கிறார்.

தமிழ்நாட்டு அரசியலின்  புதிய வரவான  தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு விழா   மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரியில்  கிராமத்தில் நட்சத்திர விடுதியில்  நடைபெற்றது.அரசியல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோருடன் இணைந்து மேடையில் தோன்றினார் விஜய். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து  வெளியேறிய ஆதவ் அர்ஜுனாவும் விஜயுடன்  இணைந்தார். விஜயின் நிழலாகக் கருதப்பட்ட புஸ்ஸி ஆனந்  ஓரமாக நடந்தார். 

 நடிகர் விஜய்க்கு சினிமாவில் மிகுந்த செல்வாக்கு உள்ளது. அரசியலிலும் அதே செல்வாக்கு இருப்பதை   வெளிக்காட்டவே இது போன்ற எழுச்சிகள் உதவுகின்றன. .

தனது வீட்டிலிருந்து கிளம்பி விழா நடக்கும் இடத்திற்கு புறப்பட்டு மாமல்லபுரம் நோக்கி வந்த விஜய்க்கு வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் வரவேற்பு அளித்தனர். ஏற்றுக்கொண்ட விஜய் ரசிகர்களுக்கு கை அசைத்து கொண்டே வந்தார்.

விழா மேடைக்கு விஜய் வந்ததும், அவருக்கு கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு பிரஷாந்த் கிஷோருடன், இணைந்து மேடையில் இருந்தபடி தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார் விஜய். 

  இந்திய மதிய அரசுக்கும், தமிழக அரசுக்கும் எதிரான  ,கெட் அவுட் என்ற ஹேஷ்டேக் இயக்கத்தை விஜய் கையெழுத்துப் போட்டுத் தொடங்கி வைத்தார்.

கூடவே மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும் சில அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. விஜய் சில நொடிகள் அந்த பேனரை உன்னிப்பாக பார்த்துவிட்டு கையெழுத்திட்டார். பிரசாந்த் கிஷோரைக் கையெழுத்திடுமாரு ஆனந்த் புஸ்லி பேனையைக் கொடுத்தார். அவர் மறுத்துவிட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்து வைத்த "கோ பாக் மோடி" ஹேஷ்டேக்  இயக்கத்தை அப்படியே திருப்பி விட்டார் விஜய்.

இது வெறும் கெட் அவுட் தான்.கெட் அவுட் மோடி அல்லது கெட் அவுட் ஸ்டாலின் எனப் பதிந்திருந்தால்  இன்னும் கொஞ்சம் வீரியமாக       இருந்திருக்கும். ஸ்டாலினையும் உதயநிதியையும் மிகவும் காட்டமாக விமர்சிக்கும் விஜய், மோடியை விமர்சிக்கத் தயங்குகிறார்.

ஆண்டு விழாக் கூட்டம் தள்ளு  முள்ளுடன் ஆரம்பமாகியது. தொண்டர்களை நிரைப் படுத்துவதற்காக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் காதுக்குள் விசில் ஊதியதால் அவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

 செய்தி சேகரிக்கச் சென்ற  சில செய்தியாளர்கள் மீது விஜயின் பாதுகாவலர்கள்  திடீர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு செய்தியாளரின் வயிற்றில் ஓங்கிக் குத்தி கெட்ட வார்த்தையில்   திட்டியதாக கூறப்படுகிறது. இதில் நிலை குலைந்த அந்த செய்தியாளரை அம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

தாக்குதல் நடத்திய பாதுகாவலர்கள்   விழா அரங்குக்குள் புகுந்து கதவுகளையும் மூடிக் கொண்டனர். இதனால் செய்தியாளர்கள் அனைவரும் திரண்டு கடுமையாக வாதிட்டனர். இதையடுத்து அங்கு வந்த கட்சி நிர்வாகிகளும், பிற  பாதுகாவலர்களும்  மன்னிப்பு கேட்டனர். செய்தியாளர்கள் என்று தெரியாததாலும்,  அவர்கள் வேற்று மொழிக்காரர்கள் என்பதால் மொழி தெரியாமல் தாக்கி விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

கிடாக்குழி மாரியம்மாளின் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. 'விஜய் தம்பியை இதுவரை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன். இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அற்புதமான தலைவரை, அழகான தலைவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்.' என விஜய்யை குளிர்விக்கும் வகையில் பேசி, 'தலைவர் விஜய் வாழ்க, தமிழக வெற்றிக்கழகம் வளர்க' என பாட நிர்வாகிகளும் குஷியாகிவிட்டார்கள்.

விஜயின்  பேச்சைக் கேட்க அனைவரும் ஆர்வமாக  இருந்தனர். அவரது  உரை மிக நீண்டதாக இருக்கும் என எதிர்பாக்கப்பட்ட போது, சுருகமாகப் ஏசி முடித்தார்.தன்னுடைய நிலைப்பாட்டைத் தெளிவாகக்கூறிய விஜய் தனைப் பற்றிய விமர்சனங்களுக்கும்  பதிலடி கொடுத்தார்.

  மும்மொழிக் கொள்கையை தங்களின் கட்சி எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். ப‌னையூர் பண்ணையார் என விஜயைதிமுகவினரும்,அ திமுகவினரும்   விமர்சித்து வந்ததற்கு பதிலளித்த விஜய், " தவெக கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தனர்கள் என ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இது சாமானியர்களுக்கான கட்சி என்பதால் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் தான் இதில் இருப்பார்கள். இது ஒன்றும் பண்ணையார்கள் கட்சி கிடையாது. முன்பெல்லாம் பண்ணையார்கள் தான் பதவியில் இருப்பார்கள். ஆனால் இப்போது பதவிக்கு வந்த உடனேயே அனைவரும் பண்ணையார் ஆகி விடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு சாதாரண  கட்சிகள் பதவிக்கு வருவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை" என தன் மீதான விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் பக்கமே திருப்பி விட்டுள்ளார்.

 திமுக, பாஜக., வை தான் விமர்சிக்கவோ, அவர்கள் பற்றி குற்றச்சாட்டுக்களை முன் வைக்கவோ விஜய் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. சுருக்கமாக மக்களுக்கு எல்லாம் தெரியும் என முடித்து விட்டார்.

 மொழித் திணிப்பு குறித்து அவர் பேசியபோது இந்தி என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. அதாவது இந்தித் திணிப்பு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. மாறாக எந்த மொழியையும் திணிக்காதீங்க என்று மட்டுமே சொன்னார். 

 நடிகர் விஜய் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை. அவருக்கு எல்லாமே தெரியும். அவர் சாதிப்பார். அடுத்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் இருக்கும் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார்.

விஜய்க்கு உதவ நான் வரவில்லை. எந்த உதவியும் விஜய்க்கு தேவையில்லை. விஜய்க்கு எல்லாமே தெரியும். அவரே சாதிக்க முடியும். சாதிப்பார். அவர் இன்னும் ஒரு தலைவர் இல்லை. அவர் தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை. அதனால்தான் நான் இங்கு வந்துள்ளேன். புதிய அரசியல் சகாப்தத்தை விஜய் தொடங்கி வைத்துள்ளார். மாற்றத்திற்கான நேரம் இது. விஜய் தலைமையில் தவெக இந்த மாற்றத்தை, நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையை முழுமையாக மாற்றப் போகிறார் விஜய் அதை அவரிடம் பேசும்போது நான் உணர்ந்து கொண்டேன். அனைத்து சமூகங்களின் நலனுக்காக, சமத்துவத்திற்காக நிறைய திட்டங்களை வைத்துள்ளார் விஜய். அதனால்தான் விஜய்க்கு உதவி செய்ய நான் வந்துள்ளேன். அடுத்த ஆண்டு தவெக வெல்லும்போது, இங்கு நடைபெறும் நன்றி அறிவிப்பு விழாவில் நான் தமிழில் பேசுவேன்  என பிரசாந்த் கிஷோர் கூறினார். 

கடன் வாங்கி ஊழல் செய்கிறார்கள். எங்கள் தலைவரை நடிகர் எனக் கூறிவிட்டு எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை போட்டு நடிக்கிறார்கள்.' என ஆதவ்வும் தன் பங்குக்கு திமுக மீது பாய்ந்தார். 'வாரிசு அரசியலை நீங்கள் அவ்வளவு சீரியசாக நினைக்கவில்லை. ஆனால், யோசித்துப் பாருங்கள். கபில்தேவ், கவாஸ்கர் போன்றோரின் மகன்கள் மட்டுமே கிரிக்கெட் ஆட வேண்டுமெனில் சச்சினும் டோனியும் கிரிக்கெட் ஆடியிருக்க முடியுமா?' என உதயநிதியைதாக்கிப் பேசினார்.

 

நடிகராகவும், அரசியல்வாதியாகவும் பருணமிக்கும் விஜயைச் செதுக்கியவர்களி ஒருவரான புஸ்லி ஆனந்த்தின் மீது எந்த  ஊடக வெளிச்சமும்பரவவில்லை.

விஜயின் கட்சியில் இணைந்த  நடிகை ரஞ்சனா நாச்சியார் பேசுகையில்

தமிழக வெற்றிக் கழகத்தில் தளபதி விஜய் அவர்களின் தலைமையில் நான் இணைகிறேன். இனி என் கொள்கைகளும் கோட்பாடுகளும் தளபதி அவர்களின் வழியில் இருக்கும் என்பதை எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகை ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்

மத்திய அரசு அறிவித்த புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது. அதாவது புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதியை தருவோம் என்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம் எனவும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் பாஜகவில் கலை கலாசார பிரிவு மாநில செயலாளராக பணிபுரிந்து வந்த, நடிகை ரஞ்சனா நாச்சியார் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். மேலும் இது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்

தமிழக வெற்றி கழகத்தில் தளபதி விஜய் அவர்களின் தலைமையில் நான் இணைகிறேன். இனி என் கொள்கைகளும் கோட்பாடுகளும் தளபதி அவர்களின் வழியில் இருக்கும் என்பதை எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்  என்றார்.

 ஆண்டுவிழாவில்  விஜய்  ஆற்றிய  உரைக்கு  தமிழக அரசியல் வாதிகள் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 விஜயின் அரசியல் மாநாடு அட்டகாசமாக நடந்தது.வாகாளர்களின்    நாடித்துடிப்பு தேர்தலின்  பின்னரே தெரியவரும். 

ரமணி.

2/3/25   

No comments: