Monday, March 17, 2025

கூட்டணிக் கதவைத் திறந்து வைத்திருக்கும் விஜய்


 சினிமாவில் உச்சத்தில் இருக்கும் விஜய் அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.  அரசியல்  கட்சி ஒன்றை விஜய் ஆரம்பிக்கப்போகிறார் என்ற போதே பரபரப்புத் தொற்றிக்கொண்டது. தமிழர்  வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சி ஆரம்பமாகி ஒரு வருடம் கடந்து விட்டது. சினிமாவில் இருந்த போது விஜய் போகும் இடமெல்ல்லாம் மக்கள்  கூட்டம் அலை  மோதியது போலவே  அரசியல் கட்சிக் கூட்டங்களிலும் மக்கள் வெள்ளம் கரை புரண்டது.  அந்த மக்கள் வெள்ளம் வாக்காக  மாறுமா என்ற சந்தேகமும் தொடர் கதையாக  உள்ளது.

விஜய் எதிர்  பார்த்தது போல்  மற்றை கட்சிகளில் இருந்து யாருமே விஜயின் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. கட்சி  ஆரம்பமான போது  இருந்த  உற்சாகம்  குறைந்து விட்டது.

தனித்துப் போட்டியிட வேண்டும் என  புருஸ்லி ஆனந்த்  சொல்கிறார்.

  ஆனால்,கூட்டனிதான் வேண்டும் என பிரசாந்த் கிஷோரும், ஆதவ் அர்ஜுனாவும் சொல்கிறார்கள்.  ஆலோசகர்கள் அதிகரித்ததால் முடிவெடுக்க முடியாமல் விஜய் திணறுகிறார்.கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் இரகசியமாக நடைபெறுகின்றன.

இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்க வேண்டிய கட்டாய ம் ஏற்பட்டுள்ளது.எல்லாக் க‌ட்சிகளிலும் உள்ள  பிரச்சனையை விஜய் இப்போதுதான் எதிர் நோக்குகிறார்.  உள்ளௌக்கு உள்ளவர்களின்  பிரச்சனைகள் காரணமாக மாவட்டச் செலயாளர்களை நியமிக்கும் பணி தாமதமடைகிறது.

  25 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டிய சூழலில், இன்றும் 19 மாவட்டச் செயலாளர்களின் பட்டியலே வெளியாகும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள 6 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதில் பல்வேறு சிக்கல் எழுந்துள்ளது தெரிய வந்துள்ளது.

  நிர்வாகிகளை சந்தித்த தவெக தலைவர் விஜய், நிர்வாக வசதிக்காக மொத்தமாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதன்பின் ஒவ்வொரு நாளும் 19 மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அறிவிப்பை வெளியிட்டார். அந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தவெக சார்பாக மொத்தமாக 95 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன்பின் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தவெக சார்பாக விரைவாக பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார். இதனை ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனிடையே 25 மாவட்டச் செயலாளர்களின் நியமனத்தை விரைவாக முடிக்க தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று தவெக சார்பாக 25 மாவட்டச் செயலாளர்களின் அறிவிப்பு வெளிவரும் என்று பார்க்கப்பட்டது. ஆனால்  தவெக சார்பாக வெறும் 19 மாவட்டச் செயலாளர்களின் நியமனம் தொடர்பான அறிவிப்பு மட்டுமே வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதில் சிக்கல்கள் நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என்று சர்ச்சை எழுந்தது. ஒரே தொகுதிகள்  செல்வாக்க்கனவர்கள்  பலரும் இருப்பதால், மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் நிர்வாகிகள் நியமனத்திற்கு பின் மாவட்டச் செயலாளர்கள் அதிகரிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 இதுதொடர்பாக ஏற்கனவே தவெக தலைவர் விஜய்-க்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்கள், மக்கள் இயக்கத்தில் பணியாற்றியவர்கள், பணபலம் கொண்டவர்கள் என்று பலரும் போட்டியில் இருப்பதால், 6 மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்க முடியாமல்விஜய் திணறுகிறார்.

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைப்பதே முதல் வேலை என்றும், திமுகவை தவிர வேறு யாரும் எங்களுக்கு எதிரி அல்ல என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இப்போது கூறி வருகிறார்.

பாஜகவோடு கூட்டணி இல்லை என்று தெரிவித்து வந்தவர்,  இப்போது திமுகவை தவிர யாருமே எங்களுக்கு எதிரி இல்லை என  இறங்கிவந்துள்ளார்.

அதேநேரம் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தோடு அதிமுக நடத்திய பேச்சுவார்த்தை முறிவடைந்ததாகச்  சொல்லப்படுகிறது.

பாரதீய ஜனதாவோடு கூட்ட்டணி சேர்ந்தால்  அதிமுகவுக்கு சில சாதகங்கள் இருந்தாலும் பல பாதகங்கள் இருக்கின்றன.

சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது என்பது மட்டுமின்றி கடந்த சில மாதங்களாக திமுக கட்டமைத்து வரும் மாநில உரிமைகளுக்கான போராட்டத்தில், பாஜகவுக்கு எதிராக கடுமையான பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கே எதிரி பாஜக என முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறார். திமுக இதை மிகப்பெரிய பிரச்சார இயக்கமாக முன்னெடுக்கிறது.00

இந்த நிலையில் பாஜகவோடு சேர்ந்தால் அதிமுகவும் தமிழ்நாட்டுக்கு எதிரி என சட்டமன்றத் தேர்தலில், திமுக கடுமையாக பிரச்சாரம் செய்யும். இதன் மூலம் தனது ஆட்சியின் நிர்வாக தோல்விகளை திமுக எளிதில் மூடி மறைக்கும்.

இந்த அடிப்படையில் தான் விஜய் தரப்போடும் தொடர்ந்து பேசி வருகிறது அதிமுக.  ஆனால், விஜய்யின் நிபந்தனைகள் புதிது புதிதாக இருக்கின்றன.

பாஜகவோடு அணிசேர்வதில் அதிமுகவுக்கு இருக்கும் பாதகங்களை தனக்கு சாதகமாக்கி விஜய் தரப்பு இப்படி புதிய நிபந்தனைகளை விதித்து வருகிறது.

அதிமுகவுக்கும் தவெகவுக்கும் இந்த அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையை நடத்தி வருபவர் சமீபத்தில் விஜய் கட்சியில் இணைந்த ஆதவ் அர்ஜுனா தான். அவர் மூலமாகத்தான் இந்த நிபந்தனைகள் எடப்பாடி தரப்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாக விஜய் தரப்பு வைத்திருக்கும் புதிய நிபந்தனைகளை பற்றி, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை செய்து வருகிறார் எடப்பாடி.

டிசம்பருக்கு பிறகு தான் கூட்டணி விஷயத்தில் விஜய் முக்கிய முடிவெடுப்பார் என பிரசாந்த் கிஷோர் பேட்டிகளில் கூறி வருகிறார். அதேபோல,  ’பாஜக கீஜக எல்லாம் இப்ப கேக்காதீங்க. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது என எடப்பாடி பழனிசாமியும் கூறி வருகிறார்.

117  இடங்களை விஜய் கேட்கிறார்.இன்னமும் தேர்தலைச் சந்திக்காத விஜய் தனக்கு 25 சத வீத வாக்கு இருப்பதாகக் கணக்குக் காடுகிறார். அமைச்சரவையில் இடம் கேட்கும் விஜய் முதலமைச்சரிலும் பங்கு கேட்கிறார். இரண்டரை வருடம்  முதலமைச்சர் பதவியையை விஜய் கேட்டுள்ளார்.

சச்சிகலா சிறைக்குப் போகும்போது  நம்பிக்கையானவர் தனது சொல்லைத் தட்டமாட்டார்  அதிமுக தனது கையில் இருக்கும் என நம்பியே எடப்பாடியை முதலமைச்சரக்கினார்.கட்சிக்குள் பலமானதாக இருந்த சசிகலாவையும் ஓபிஎஸ்ஸையும் தூக்கி எறிந்த எடப்பாடிக்கு விஜய் ஒரு பொருட்டல்ல.

விஜயின் கட்சியைப் பற்றிய சர்வேவை எடப்பாடி எடுத்துள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

எடப்பாடியை அகற்றிவிட்டு அதிமுகவில் இருந்து வெளியேறிய அனைவரையும் ஒன்றாக்க பாரதீய ஜனதா திட்டமிட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில்  பல அதிரடிகள் அரங்கேறும் எனப்து நிச்சயம்.

 

ரமணி

16/3/25 

 

 

No comments: