Monday, March 24, 2025

ஐபிஎல் அணிகளின் பயிற்சியாளர்கள்

கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் தொடரின்  அணிகளுக்கும் அதன் வீரர்களுக்கும் பலத்த ஆதரவை ரசிகர்கள் வழங்கி வருகிறார்கள்.  சில  அணிகளின் பயிற்சியாளர்களுக்கும் ரசிகர் கூட்டம்  உள்ளது. ஐபிஎல் அணிகலின் பயிற்சியாள‌ர்களைப்  பற்றிய தொகுப்பு 

சென்னை சூப்பர் கிங்ஸ் - ஸ்டீபன் ப்ளெமிங்:


ஐபிஎல் தொடரில் 5 முறை சம்பியன் பட்டம் பெற்ற அணியாக திகழும் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெமிங். முன்னாள் சென்னை அணியின் வீரரும், நியூசிலாந்து அணியின் முன்னாள் கப்டனாகவும் இருந்தவர். நியூசிலாந்து அணிக்காக சம்பியன்ஸ் டிராபி பட்டம் பெற்று தந்தவர். இவரது பயிற்சியின் கீழே சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 51 வயதான ப்ளெமிங் டெஸ்டில் 7172 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 8 ஆயிரத்து 37ஓட்டங்களும் எடுத்துள்ளார்.


டெல்லி கேபிடல்ஸ் - ஹேமங் பதானி:

அக்ஷர் படேல் தலைமையில் களமிறங்கும் டெல்லி அணிக்கு பயிற்சியாளராக ஹேமங் பதானி களமிறங்கியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹேமங் பதானி இந்திய அணிக்காக 4 டெஸ்ட்டில் 94 ஓட்டங்களும், 40 ஒருநாள் போட்டிகளில் 867 ஓட்டங்களும்எடுத்துள்ளார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ், ஜாப்னா கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் - ஆஷிஷ் நெஹ்ரா:


முதல் சீசனிலே ஐபிஎல் பட்டத்தை பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா உள்ளார். இந்திய அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்த இவர்  17 டெஸ்ட் போட்டியில் 44 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டியில் 157 விக்கெட்டுகளையும், ரி20யில் 34 விக்கெட்டுகளையும், 88 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 106 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக நெஹ்ரா திகழ்ந்தார். 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சந்திரகாந்த் பண்டிட்:


ரஹானே தலைமையில் களமிறங்கும் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக திகழ்பவர் சந்திரகாந்த் பண்டிட். கடந்த சீசனிலும் கொல்கத்தா அணிக்கு பயிற்சியாளராக திகழ்ந்தவர் இவரே ஆவார். இந்திய அணியின் முன்னாள் வீரரான இவர் 36 ஒருநாள் போட்டிகளில் ஆடி 290 ஓட்டங்களும், 5 டெஸ்டில் ஆடி 171 ஓட்டங்களும் எடுத்துள்ளார். மும்பை அணிக்காக அடுத்தடுத்து இரண்டு முறை ரஞ்சி டிராபியை பயிற்சியாளராக வென்று தந்துள்ளார்.


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஜஸ்டின் லாங்கர்:

முதல்முறை கோப்பையை வெல்ல போராடும் லக்னோ அணிக்காக பயிற்சியாளராக இருப்பவர் ஜஸ்டின் லாங்கர். அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இவர் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஆவார். 54 வயதான ஜஸ்டின் லாங்கர் டெஸ்ட் போட்டிகளில் 7 ஆயிரத்து 696 ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர்

மும்பை இந்தியன்ஸ் - ஜயவர்தன:


5 முறை சம்பியன் பட்டம் பெற்ற மும்பை அணிக்கு அந்த அணியின் முன்னாள் வீரரும், இலங்கை அணியின் முன்னாள் கேப்டனுமாகிய மஹேல‌ ஜயவர்தன பயிற்சியாளராக உள்ளார். ஜயவர்தன டெஸ்டில் 11 ஆயிரத்து 814 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 12 ஆயிரத்து 650 ஓட்டங்களும்  எடுத்துள்ளார். மும்பை அணிக்காக 6வது முறையாக கோப்பையை வென்று தர வேண்டும் என்று இவர் களமிறங்கியுள்ளார். 

பஞ்சாப் கிங்ஸ் - ரிக்கி பொண்டிங்:


ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இந்த முறை பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங் களமிறங்கியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் கப்டனாக களமிறங்கியுள்ளார். 2000ம் காலகட்டத்தில் கிரிக்கெட்டையே கட்டி ஆண்டவராக உலா வந்தவர் ரிக்கி பொண்டிங். இவர் அவுஸ்திரேலிய அணிக்காக 2 முறை 50 ஓவர் உலகக்கோப்பை வாங்கித் தந்துள்ளார். டெஸ்ட்டில் 13 ஆயிரத்து 378 ஓட்டங்களும், ஒருநாள் போட்டியில் 13 ஆயிரத்து 704 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் - ராகுல் ட்ராவிட்:


ஐபிஎல் தொடரின் முதல் மகுடத்தை கைப்பற்றிய ராஜஸ்தான் அணிக்கு ராகுல் ட்ராவிட் பயிற்சியாளராக உள்ளார். இந்திய அணியின் தூணாக திகழ்ந்த ராகுல் ட்ராவிட் இந்திய அணிக்காக ரி20 உலகக்கோப்பையை தனது பயிற்சியாராக திகழ்ந்தவர். ராகுல் டிராவிட் டெஸ்ட்டில் 13 ஆயிரத்து 288 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரத்து 889 ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஐதரபாத் - டேனியல் வெட்டோரி:


பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதரபாத் அணிக்கு டேனியல் வெட்டோரி பயிற்சியாளராக உள்ளார். இவரது பயிற்சியின் கீழ் கடந்த சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஐதராபாத். நியூசிலாந்து அணியின் முன்னாள் கப்டனாகிய இவர் டெஸ்ட்டில் 4 ஆயிரத்து 531  ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 2 ஆயிரத்து 253 ஓட்டங்களும்எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 362 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 305 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஆன்டி ப்ளவர்:


18வது சீசனில் தங்களது முதல் கோப்பை கனவுடன் களமிறங்கியுள்ள ஆர்சிபி அணிக்கு பயிற்சியாளராக ஆன்டி ப்ளவர் உள்ளார். ரஜத் படிதார் தலைமையில் களமிறங்கும் பெங்களூர் அணி பயிற்சியாளர் ஆன்டி ப்ளவர் ஸிம்பாப்வே அணியின் முன்னாள் கப்டன். இவர் டெஸ்டில் 4 ஆயிரத்து 794 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 6 ஆயிரத்து 786  ஓட்டங்களும் எடுத்துள்ளார்.

ஐபிஎல்25,ஏகன் மீடியா,ஏகன்,ரி20,விளையாட்டு,கிறிக்கெற்

 

No comments: