Wednesday, March 5, 2025

சம்பியன் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா


  துபாயில் நடைபெற்ற சம்பியன் கிண்ண அரை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடிய இந்தியா வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி அவுஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 264 ஓட்டங்கள் எடுத்தது. 48.1 ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்த இந்தியா 267 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.   

இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. அவுஸ்திரேலிய அணியில் ஷார்ட், ஸ்பென்சர் ஜான்சனுக்கு பதில் கூப்பர் கொனாலி, தன்வீர் சங்கா இடம் பெற்றனர். நாணயச் சுழற்சியில் வென்ற கப்டன் ஸ்டீவ் ஸ்மித் துடுப்பாட்டத்தைத்  தேர்வு செய்தார்.

அவுஸ்திரேலிய அணிக்கு துவக்கத்தில் அதிர்ச்சி கொடுத்தார் ஷமி. இவரது 'வேகத்தில்' கூப்பர் கொனாலி ஓட்டம் எடுக்காமல் வெளியேறினார். பின் டிராவிஸ் ஹெட் அதிரடியில் இறங்கினார். . ஹர்திக் பாண்ட்யா ஓவரில் ஒரு பவுண்டரி சிக்சர் அடித்தார். ஷமி ஓவரில் 'ஹட்ரிக்' பவுண்டரி விளாசினார். குல்தீப் பந்தையும் சிக்சருக்கு அனுப்பினார்.

இந்த சமயத்தில் 'சுழல் மாயாவி' வருண் சக்ரவர்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார். இவரது முதல் ஓவரின் 2வது பந்தை அவசரப்பட்டு துாக்கி அடித்தார் ஹெட். 'லாங்-ஆன்' திசையில் இருந்து முன்னோக்கி 3.81 வினாடியில் 23 மீ., ஓடி வந்த சுப்மன் கில், கலக்கல் 'கேட்ச்' பிடிக்க, ஹெட்  39 ஓட்டங்களுடன் வெளியேறினார். 'கேட்ச்' பிடித்த அதே வேகத்தில் பந்தை எறிந்தார் கில். இது சர்ச்சையானது. சிறிது நேரம் பந்தை கையில் வைத்திருக்க வேண்டும் என கில்லை அம்பயர்கள் எச்சரித்தனர்.

 இந்தியாவின் வில்லனான ஹெட், விரைவில் நடையை கட்டியதால், இந்திய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.  கப்டன் ஸ்மித், லபுசேன் சேர்ந்து பொறுமையாக விளையாடின.


 29 ஓட்டங்கள் எடுத்த  லபுசேன் ர‌விந்திர ஜடேஜாவின் வலையில்  சிக்கினார். ஸ்மித் 68 பந்தில் அரைசதம் எட்டினார். ஜோஷ் இங்லிஸ் 11 ஓட்டங்களில் ஜடேஜாவின்  பந்தில் ஆட்டமிழந்தார்.  மீண்டும் பந்துவீச வந்த ஷமி  73 ஓட்டங்களில்  ஸ்மித்தை  போல்டாக்கினார். அவுஸ்திரேலியாவுக்காகப் போராடிய அலெக்ஸ் கேரி 61 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெற்களையும்  இழந்து 264 ஓட்டங்கள் எடுத்தது.

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணி துவக்கத்தில் திணறியது. சுப்மன் கில் 8 மட்டும் அடித்தார். இரண்டு முறை 'கேட்ச்' வாய்ப்பில் இருந்து தப்பிய கப்டன் ரோஹித் 28 ஓட்டங்கள் மட்டும் அடித்தார்.   கோலி, ஸ்ரேயாஸ் சேர்ந்து அசத்தினர்.   கோலி 53 பந்தில், ஒருநாள் அரங்கில் 74வது அரைசதம் எட்டினார். ஸ்ரேயாஸ் 45, அக்சர், 27  ஓட்டங்கள்  எடுத்தனர். ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் 'சேஸ் கிங்' கோலி அசராமல் ஆடினார். இவர், 84  ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் ராகுல், ஹர்திக் பாண்ட்யா மிரட்டினர். ஜாம்பா ஓவரில் வரிசையாக இரண்டு இமாலய சிக்சர் விளாசிய பாண்ட்யா பதட்டத்தை தணித்தார். பாண்ட்யா 28  ஓட்டங்கள் அடித்தனர். மேக்ஸ்வெல் பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ராகுல், வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 48.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 267 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் (42), ஜடேஜா (2) ஆட்டமிழக்காது  இருந்தனர்.

இந்திய அணிக்கு நேற்றும் 'டாஸ்' ராசி இல்லை. ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 14வது முறையாக 'டாஸ்' வெல்ல தவறியது. ரோகித் தலைமையில் 11 முறை (2023 நவ.- 2025, மார்ச்) 'டாஸ்' வெல்லவில்லை. அதிக முறை 'டாஸ்' வெல்ல தவறிய கப்டன் பட்டியலில் ரோகித் (11) இரண்டாவது இடத்தை நெதர்லாந்தின் பீட்டர் போரன் (11, 2011 மார்ச்-2013 ஆக.) உடன் பகிர்ந்து கொண்டார் முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் லாரா (12, 1998 அக்.-1999 மே) உள்ளார்.


* ஐ.சி.சி., உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபியின் 'நாக்-அவுட்' போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா 7வது முறையாக நேற்று மோதின. இதில் 6 முறை இந்தியா 'டாஸ்' இழந்தது. 2003ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த உலக கோப்பை பைனலில் மட்டும் 'டாஸ்' வென்றது.

ஐ.சி.சி., தொடரில் (ஒருநாள் போட்டி) அறிமுகமான இளம் அவுதிரேலிய வீரர்கள் பட்டியலில் நான்காவது இடம் பெற்றார் ஸ்பின்னர், ஆல்-ரவுண்டர் கூப்பர் கொனாலி (21 ஆண்டு, 194 நாள்). முதல் 3 இடங்களில் ஆன்ட்ரூ ஜெசர்ஸ் (20 ஆண்டு, 225 நாள், எதிர், இந்தியா, 1987), பாண்டிங் (21 ஆண்டு, 66 நாள், எதிர், கென்யா, 1996), வாட்சன் (21 ஆண்டு, 90 நாள், எதிர் நியூசி., 2002) உள்ளனர்.

ஜடேஜாவுக்கு என்ன பிரச்னை

ஜடேஜா பந்துவீசிய போது (18.1 வது ஓவர்) அவரது இடது கையில் கட்டியிருந்த பெரிய 'டேப்'பை அகற்ற சொன்னார் அம்பயர் இல்லிங்வொர்த். இதை ஏற்று அகற்றினார். கிரிக்கெட் விதிமுறைப்படி கீப்பர் தவிர மற்ற வீரர்கள் அம்பயர் அனுமதி இல்லாமல் கையில் எதையும் அணியக் கூடாது. பின் ஸ்மித் அடித்த பந்தை தடுத்த போது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து மீண்டும் 'டேப்' அணிந்து கொள்ள அம்பயர் அனுமதி அளித்தார்.

அக்சர் காயம்

அக்சர் பந்தில் (15.4வது ஓவர்) ஒரு எடுத்தார் ஸ்மித். இதை தடுத்து, பந்தை எறிய முயன்ற போது அக்சரின் கழுத்து பகுதியில் வலி ஏற்பட்டது. 'பிசியோதெரபிஸ்ட்' சிகிச்சை அளித்தார். இதிலிருந்து விரைவாக மீண்டு பந்துவீசினார்.

கோலி 161 'கேட்ச்'

ஒருநாள் அரங்கில் அதிக 'கேட்ச்' பிடித்த பீல்டர் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் கோலி (161 கேட்ச், 301 போட்டி). நேற்று 2 கேட்ச் பிடித்த இவர், அவுஸ்திரேலியாவின் பொண்டிங்கை (160, 375 போட்டி) முந்தினார். முதலிடத்தில் ஜெயவர்தனா (இலங்கை, 218, 448 போட்டி) உள்ளார்.

* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று 50வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார் கோலி. சச்சின் (71), தோனிக்கு (55) அடுத்து இம்லைகல்லை எட்டிய மூன்றாவது இந்திய வீரரானார்.

'சேஸ் மாஸ்டர்' 8,000

* நேற்று அரைசதம் விளாசிய கோலி, ஒருநாள் அரங்கில் 'சேஸ்' செய்யும் போது 8000 ரன் (159 இன்னிங்ஸ்) எட்டிய உலகின் 2வது வீரரானார். சராசரி 64.54 வைத்துள்ள ஒரே வீரர் இவர் தான். முதலிடத்தில் சச்சின் (8,720 ரன், சராசரி 42.33, 232 இன்னிங்ஸ்)) உள்ளார்.

நழுவிய கைகள்   '

ஆஸ்திரேலிய பீல்டிங் எடுபடவில்லை. ஜாம்பா பந்தில் 51 ரன்னில் கோலி கொடுத்த 'கேட்ச்சை' மேக்ஸ்வெல் கோட்டைவிட்டார். இதை பயன்படுத்தி 84 ரன் எடுத்தார். ரோகித் சர்மா (13, 14) அடித்த பந்தை கொனாலி, லபுசேன் நழுவவிட்டனர். 

முதல் கப்டன் 

ஐ.சி.சி., நடத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023), ஒருநாள் உலக கோப்பை (2023), 'டி-20' உலக கோப்பை (2024), சாம்பியன்ஸ் டிராபி (2025) என நான்கு தொடர்களிலும் பைனலுக்கு முன்னேறிய முதல் கேப்டன் என்ற பெருமை பெற்றார் இந்தியாவின் ரோகித் சர்மா. 

மூன்றாவது முறை

 சாம்பியன்ஸ் டிராபி 'நாக் அவுட்' போட்டிகளில் மூன்றாவது முறையாக இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வென்றது. கடந்த 1998ல் காலிறுதி (44 ரன் வித்தியாசம், தாஹா), 2000ல் காலிறுதியை (20 ரன், நைரோபி), தொடர்ந்து நேற்று அரையிறுதியில் (4 விக்., துபாய்) இந்தியா வெற்றி பெற்றது.

அஷ்வின் சொன்னது நடந்தது

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கூறுகையில்,''புதிய பந்தில் பவுலிங் செய்ய வருண் சக்ரவர்த்திக்கு வாய்ப்பு தர வேண்டும். இவரது பந்தை டிராவிஸ் ஹெட் துாக்கி அடிப்பார். விரைவில் அவுட்டாவார்,' என்றார். இவர் சொன்னது அப்படியே நேற்று நடந்தது.

போட்டியின் 9வது ஓவரை வீசினார் வருண். முதல் பந்தில் ஸ்மித் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை ஹெட், துாக்கி அடிக்க, சுப்மன் கில் கேட்ச் செய்து அசத்தினார்.

* இதையடுத்து, ஒருநாள் அரங்கில் முதல் 10 ஓவருக்குள், ஹெட்டை அவுட்டாக்கிய முதல் பவுலர் ஆனார் வருண்.

ஐந்தாவது முறை

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பைனலுக்கு இந்தியா, ஐந்தாவது முறையாக முன்னேறியது. இதில் 2002, 2013ல் கோப்பை வென்றது. 2000, 2017ல் இரண்டாவது இடம் பிடித்தது. 

சரியான பதிலடி

ஐ.சி.சி., 'நாக் அவுட்' போட்டியில் கடைசியாக இந்திய அணி 2011, உலக கோப்பை (50 ஓவர்) காலிறுதியில், ஆஸ்திரேலியாவை வென்றது. இதன் பின், 2015, உலக கோப்பை அரையிறுதி, 2023, உலக கோப்பை பைனல், 2023ல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் என அனைத்திலுஅவுஸ்திரேலியாவிடம் தோற்றது.

தொடர்ச்சியான தொல்விக்கு ஒரு வழியாக நேற்று முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, சரியான பதிலடி கொடுத்தது.

 சச்சினை முந்தினார்

ஐ.சி.சி., ஒருநாள் தொடரில் (உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி) அதிக அரைசதம் அடித்த இந்திய வீரர்களில் சச்சினை (23) முந்தினார் கோலி. இவர் 24 அரைசதம் அடித்துள்ளார். ரோகித் (18) 3வது இடத்தில் உள்ளார்.

69 அரைசதம்

ஒருநாள் அரங்கில் சேஸ் செய்த போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர்களில் சச்சினுடன் (242 போட்டி, 69 அரைசதம்) இணைந்து முதலிடம் பிடித்தார் கோலி. இவர் 170 போட்டியில் 69 அரைசதம் அடித்தார். இந்தியாவின் ரோகித் (158ல் 53), தென் ஆப்ரிக்காவின் காலிஸ் (158ல் 50) அடுத்த இரு இடத்தில் உள்ளனர்.

735

சம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர் ஆனார் கோலி. இவர் 17 போட்டியில் 735 எடுத்துள்ளார். தவான் (701), கங்குலி (665) அடுத்து உள்ளனர்.

நேற்று 33  ஓட்டங் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் 2000  ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டினார் இந்தியாவின் ராகுல். இவர் 84 போட்டியில் 2009  ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

கருப்பு பட்டை

இந்திய உள்ளூர் கிரிக்கெட் ஜாம்பவான் பத்மாகர் ஷிவல்கர் 84. சுழற்பந்து வீச்சாளரான இவர், மும்பை அணிக்காக 124 முதல் தர போட்டிகளில் பங்கேற்று 589 விக்கெட் சாய்த்தார். பிஷன் சிங் பேடி உள்ளிட்டோர் ஆதிக்கத்தால், கடைசி வரை இந்திய அணியில் பத்மாகர் இடம் பெற முடியவில்லை. வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர்.

நான்காவது 'சேஸ்'

துபாயில் நடந்த ஒருநாள் போட்டிகளில் முதலில் பேட் செய்து 250 ரன்னுக்கும் மேல் எடுத்த அணிகள் 12ல் வென்றன. 3ல் தான் தோற்றன. நேற்று ஆஸ்திரேலியாவின் 264 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்தியா வெற்றிகரமான சேஸ் செய்து அசத்தியது.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் , ஒருநாள் உலகக் கோப்பை ,ரி20 உலகக் கோப்பை 2024, சம்பியன்ஸ் டிராபி 2025 ஆகிய நான்கு இறுதிப் போட்டிகளில் அணிய வழிநடத்திய கப்டன் என்ற பெருமை பெற்றார் ரோஹித்

   

No comments: