கோவை
வேளாங்கண்ணி மாணவிகளை பஸ்ஸினுள் உயிருடன் எரித்த மூன்று குற்றவாளிகளைத் தமிழக அரசு
விடுதலை செய்ததற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. கொடைக்கானல் பிளஸண்ட் எஸ்டேட்
ஹோட்டல் வழக்கில் 2000 ஆம் ஆண்டு பெப்ரவரி
2 ஆம் திகதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு
ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தினர் தமிழகம் எங்கும் வன்செயலைக் கட்டவிழ்த்துவிட்டனர்.
ஜெயலலிதா
குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய அதேதினம் கோவை, வேளாங்கண்ணி மாணவர்கள் சுற்றுலாச்
சென்றனர். தருமபுரியில் அவர்கள் சென்ற பஸ்ஸை வழிமறித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர்
பெற்ரோல் ஊற்றி பஸ்ஸுக்குத் தீவைத்தனர். அந்த நெருப்பில் அகப்பட்ட கோகிலவாணி, ஹேமலதா,
காயத்திரி எனும் மூன்று மாணவிகள் தீயில் கருகிப்
பலியாகினர். அந்தக்கொடூர சம்பவத்துக்கு அப்போது சகலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மாணவிகளை
உயிருடன் எரித்த குற்றச்சாட்டில் 30 பேர் கைது
செய்யப்பட்டனர். நெடுஞ்செழியன்,முனியப்பன்,மாது ஆகிய மூவரை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம்,
2007 ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி அவர்களுக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மூவரும் மேன் முறையீடு செய்தார்கள். 2016 ஆம் ஆண்டு
மார்ச் மாதம் 16 ஆம் திகதி மரணதண்டனை இரத்துச்
செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்காக அந்தக்கொடூரத்தை அரங்கேற்றிய
மூன்று பேரை எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை
முன்னிட்டு தமிழக அரசு விடுதலை செய்துள்ளது.
ஜெயலலிதா
குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததால் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் தருமபுரியில்
பஸ்ஸை எரித்தனர். இது திட்டமிட்டுச் செய்யப்படவில்லை
எனக் காரணம் சொல்லப்பட்டது. மத்திய அரசின்
ஒப்புதல் இல்லாமல் அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள். தமிழக அரசும், மத்திய
அரசும் நேர்கோட்டில்தான் பயணிக்கின்றன என்பதை இச்செயல் வெளிப்படுத்துகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தை, பாரதீய ஜனதாக் கட்சி ஆட்டுவிக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
அதனை மறைப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகமும் பாரதீய ஜனதாவும் இரகசிய உடன் படிக்கை
செய்துள்ளன என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் தெரிவிக்கின்றனர்.
அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தவரின் விடுதலையில் அதிக அக்கறை காட்டிய தமிழக அரசு, ராஜீவ்
கொலையில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருப்பவர்களின்
விடுதலையில் ஆர்வம் காட்டாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மூவரும்
கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள். ராஜீவ் கொலையில் தண்டனை அனுபவிக்கும் அந்த ஏழு பேரும்
நேரடியாகக் கொலையில் சம்பந்தப்படவில்லை. அவர்களை விசாரித்த அதிகாரிகள் ஓய்வு பெற்றபின்
தாம் தப்புச் செய்ததாக ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்தைத் தவிர அனைத்துத் தரப்பினரும் மாணவிகளைக் கொலைசெய்த மூவரின் விடுதலையை வன்மையாகக்
கண்டித்துள்ளனர்.
ஆயுள்
தண்டனை விதிக்கப்பட்டு 10 வருடங்கள் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யலாம் என்ற
சரத்தின் அடிப்படையில் மூவரும் விடுதலை செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டத்திக் காரணம் காட்டி தமக்கு வேண்டப்பட்டவர்களை விடுதலை செய்சதற்கு எடப்படியின்
தலமையிலான அரசு முன்னுரிமை வழங்கியுள்ளது. ராஜீவ் கொலை செய்யபட்டபோது இறந்தவர்களின்
உறவினர்களும் பாதிக்கப்பட்டவர்களும் ஏழு பேரின் விடுதலையை எதிர்ப்பதால் அவர்களின் விடுதலை
தாமதப்படுவதாக ஒரு காரணம் சொல்லப்படுகிறது. தருமபுரியில் கொல்லப்பட்ட மூன்று மாணவிகளின்
உறவினர்களின் ஒப்புதல் இல்லாமல் ஜெயலலிதாவுக்காக் கொலை செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரியில் பஸ்ஸுக்குள் எரிக்கப்பட்ட காயத்திரியின் பெற்றோர்
இன்றும் உயிருடன் இருக்கின்றனர். மற்றைய இரண்டு மாணவிகளின் பெற்றோர் இறந்துவிட்டனர்.
தனது மகலைக் கொலை செய்தவர்களுக்குத் தண்டனை கிடைத்துவிட்டது. நீதி நிலை நாட்டப்பட்டுவிட்டது
என இத்தனைநாள் காயத்திரியின் பெற்றோர் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அரசியல் அதிகாரம்
அவர்களின் கண் முன்னாலேயே நீதியைச் சாகடித்துவிட்டது. நீதிக்குத் தலை வணங்கு என முழக்கமிட்ட
எம்.ஜி.ஆரின் பெயரால் நீதி அவமானப்படுத்தப்பட்டுள்ளது.
சேலம்
சிறையில் தண்டனையை அனுபவித்த தருமபுரி பஸ் எரிப்புக் குற்றவாளிகள் மூவரும் விடுதலை
செய்யப்படுவார்கள் என்ற செய்தி கசிந்ததும் அதற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
சேலம் சிறையில் இருந்து மூவரும் இரகசியமாக
விடுதலை செய்யப்பட்டனர். பொலிஸார் அவர்களைப் பாதுகப்பாக பஸ்ஸில் அனுப்பி வைத்துள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகரின் வீட்டில் தங்கி இருந்த அவர்கள் தமது ஊருக்குச்
சென்றுள்ளனர். சில நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் அந்த மூவரும் கட்சிப்பணியில்
இணைவார்கள். அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளைக் கொடுப்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக்
கழக நிர்வாகிகள் தயங்க மாட்டார்கள்.
ஜெயலலிதாவின்
அரசியல் வளர்ச்சிக்காக கருகிய அந்த மூன்று மலர்களின் நினைவுகளை யாராலும் மறக்க முடியாது.