Showing posts with label ராகுல் காந்தி. Show all posts
Showing posts with label ராகுல் காந்தி. Show all posts

Friday, December 20, 2024

அமித்ஷாவுக்கு எதிரான போராட்டத்தால் போர்க்களமான இந்திய நாடாளுமன்றம்

  இந்தியாவின் அனைத்து அரசியல் தலைவர்களும்  போற்றும் அண்ணல் அம்பேத்காரை அமைச்சர்  அமித்ஷா நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டி எதிர்க் கட்சிகள்  போராட்டம் நடத்தியதால் இரண்டு அவைகளும் முடங்கின.அமித்ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என எதிர்க் கட்சி எம்பிக்கள் அனைவரும் ஆக்கோரஷத்துடன்  உரையாற்றினார்கள்.

அமித்ஷவுக்கு எதிரான போராட்டங்கள் நாடாளுமன்றத்துக்கு  வெளியேயும்  பரந்தளவில் நடைபெறுகின்றன.

ஆளும் கட்சி எம்பிக்கள் அமித்ஷாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். கடந்த வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றம் போர்க்களமாக மாறியது.

நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய கூட்டணி எம்பிக்களுக்கும் பாஜக எம்பிக்களும் இடையே வியாழக்கிழமை  கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாஜக எம்பி பிரதாப் சாரங்கியின் மண்டை உடைந்து இரத்தம் வழிந்தோடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இம்மோதலில் படுகாயமடைந்த மற்றொரு பாஜக எம்பி முகேஷ் ராஜ்புத்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற தம்மை பாஜக எம்பிக்கள் தடுத்து தள்ளிவிட்டதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் ராகுல் காந்திதான் தம்மை தடுத்து தள்ளிவிட்டதாக பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி புகார் கூறினார்.

 நாடாளுமன்றம்   கூடுவதற்கு முன்பாக பாஜக எம்பிக்கள் ஒன்று திரண்டு, அம்பேத்கரை காங்கிரஸ் இழிவுபடுத்துகிறது; அவமானப்படுத்துகிறது என குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தலைமையில் இந்திய கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா இருவரும் நீல நிற உடை அணிந்திருந்தனர். அம்பேத்காரின் ஆதரவாளர்கள்  நில நிற  உடை அணிவது  வழமையானது.

இதனையடுத்து நாடாளுமன்றத்துக்குள் ராகுல் காந்தி செல்ல முயன்றார். அப்போது பாஜக எம்பிக்கள் அவரை சிலர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதற்றமும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

  ராகுல் காந்திதான் தம்மை கீழே தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால்   நாடாளுமன்றத்துக்குள் நுழைய இருப்பது ஒரு வழிதான்.. அந்த வழியே செல்லவிடாமல் பாஜக எம்பிக்கள் தடுத்து தள்ளிவிட்டனர் என ராகுல் காந்தி தெரிவித்தார். அரசியல் சாசனத்தையே தாக்குகிறவர்கள் எங்களை தாக்குகின்றனர்; இது எங்களுக்கு பிரச்சனை அல்ல. அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுக்கு முக்கியம் என்றார்.

  நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு தின சிறப்பு விவாதம் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசியிருந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்திய அரசு மீது சரமாரியான விமர்சனங்களை அடுக்கியிருந்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்து பேசிய  அமித்ஷா   "அம்பேத்கரை காங்கிரஸ் புறக்கணித்தது எப்படி? பாஜக பெருமைப்படுத்தியது எப்படி?  எனப் பட்டியலிட்டு  "அம்பேத்கர், அம்பேத்கர் என்று முழக்கமிடுவது இப்போது ஃபேஷனாகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாரதிய ஜனதா கட்சி மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்" என்றார்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சி எரியும் நெருப்பில் எண்ணெயை விட்டது போல் மாறிவிட்டது.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

  அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அவர் பதவி விலக வலியுறுத்தி  நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டத்தை நடத்தி யது. தமிழ்நாட்டில் திமுக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. சென்னை மாநில கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடந்தது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு செவி கொடுத்து கேட்காமல் இருந்து வருகிறது. குறிப்பாக அதானி விஷயத்தில் உரிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தல்கள் எழுந்த போது, அவையை ஒத்திவைத்து அதற்கு மத்திய அரசு தனது பாணியில் பதிலளித்ததாக காங்கிரஸ் எம்பிக்கள் விமர்சித்துள்ளனர்.

  அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று தமிழக‌ முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  அம்பேத்கர் குறித்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹசான் தெரிவித்துள்ளார். 

டாக்டர் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும். நிச்சயமாக மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அம்பேத்காரைப் பற்றிய அமித்ஷாவின் பேச்சு தமிழகத்தைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில்  கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் - பாஜக எம்பிக்கள் போராட்டம் நடத்தியதால் திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜகவின் இரண்டு எம்பிக்களின் மண்டை உடைந்தது. ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நாடாளுமன்றக் கலவரத்துக்கு ராகுல்தான் காரணம் என்று குற்றம் சுமத்திய  பாரதிய ஜனதா  குற்றம் சாட்டியது. ராகுல் காந்தி மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக   புகார்  கொடுத்தது.  அதனை பொலிஸ் நிராகரித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ம் திக‌தி தொடங்கியது. இந்த குளிர்கால கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமையுடன்  முடிவ்டைந்தது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் அம்பேத்கர் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அமித்ஷா மன்னிப்பு கோரி தனது மத்திய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது

   இந்நிலையில் தான் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி சபாநாயகர் ஓம்பிர்லா அலுவலகம் சார்பில்,‛‛நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களிலும் போராட்டம், தர்ணா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சியினருக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷாவுக்கு  எதிரான போராட்டம்  இப்போதைக்கு ஓய்வு பெறாது போல் தெரிகிறது. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கும்போது அமித்ஷாவுக்கு எதிரான போராட்டம் மீண்டும் உயிர்  பெறும்.

Wednesday, December 4, 2024

அதானியால் முடங்கியது இந்திய நாடாளுமன்றம்


 உலககோடீஸ்வரர்களில் ஒருவராகக் கருதப்படும் அதானிக்கு அமெரிக்கா  பிடியாணை பிறப்பித்துள்ளதால்  இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகளின்  கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய வங்கிகளில்  கோடிக்கணக்கான பணத்தை கடனகப் பெற்ற அதானி குழுமம் அதனை இன்னமும் திருப்பிச் செலுத்தவில்லை. அதானிக்கும் , மோடிக்கும்  இடையிலே நிலவும் நல்லுறவே அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு உதவுவதாக எதிர்க் கட்சிகள்   குற்றம் சாட்டியுள்ளன.இந்த நிலையில்  இலஞ்சம் கொடுத்த குற்றச் சாட்டில் அதானிக்கு அமெரிக்கா  பிடியாணை பிறப்பித்துள்ளது.

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகவும் கவுதம் அதானி மீது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்கா வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்கா நீதிமன்ற நீதிபதி, அதானி லஞ்சம் கொடுக்க சம்மதித்தது உண்மை தான் என்ற பரபரப்பு கருத்தை தெரிவித்து, அதானிக்கு பிடியாணை பிறபித்து உத்தரவிட்டுள்ளார்.நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அரசு வழக்கறிஞர் ( US Attorney) அலுவலகம் பதிவு செய்துள்ள குற்றச்சாட்டின்படி, "இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சூரிய ஒளி மின் விநியோக ஒப்பந்தங்களுக்காக, தோராயமாக 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை, (கிட்டத்தட்ட ரூ. 2 ஆயிரம் கோடி) இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்க அதானி ஒப்புக்கொண்டுள்ளார்''

''இதனை மறைத்து, அமெரிக்காவில் உள்ள ஊழலுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் வழக்கங்களை மீறி, அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து கடனாகவும், பத்திரங்கள் மூலமாகவும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதானி குழுமம் பெற்றுள்ளது'' என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அதானி மட்டுமின்றி, வினித் எஸ் ஜெய்ன் ரஞ்சித் குப்தா, ரூபேஷ் அகர்வால், சௌரப் அகர்வால், தீபக் மல்ஹோத்ரா உட்பட 7 நபர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. இந்த வழக்கில் அதானி குழுமம் மட்டுமின்றி அஜூர் என்ற நிறுவனத்தின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.

"இந்தியாவில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக பொய்களைக் கூறி அதானி குழுமம் அமெரிக்காவிலும், உலக நாடுகளில் இருந்தும் முதலீடுகளைப் பெற முயற்சி செய்துள்ளது," என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

 அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடியாணை  கொடுத்திருப்பதையடுத்து, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் அதானியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்

இந்த நிலையில், அதானி மீதான லஞ்ச குற்றச்சாட்டில் இருந்து அதானி விடுவிக்கப்பட்டுள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதானி குழும நிறுவனமான கிரீன் எனர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் அமெரிக்காவின் நீதித்துறையின் (US DOJ) குற்றப்பத்திரிகை அல்லது அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் (US SEC) சிவில் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையில் வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தை( FCPA) மீறுவதாகக் குற்றம் சாட்டப்படவில்லை.

பத்திர மோசடி சதி, கம்பி மோசடி சதி மற்றும் பத்திர மோசடி ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் இயக்குநர்கள் மீது தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை  குற்றப்பத்திரிகை மற்றும் அமெரிக்கா செக்யூரிட்டீஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷனின் (SEC) சிவில் புகார்களில் கவுதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோருக்கு எதிரான  ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்று தெரிவித்துள்ளது.

அதானி மீது அமெரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது குறித்து விரிவான விசாரணை நடத்தி, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டபோது, அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அதானி மீது எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. குறிப்பாக நாட்டின் வளங்களை அதானி எனும் தனி நபருக்காக மத்திய அரசு வாரி வழங்குகிறது என்றும், அவரை பிரதமர் மோடி பாதுகாக்கிறார் எனவும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இப்படி இருக்கையில்தான் அமெரிக்காவில் அதானி குழுமம் மீதும், அதானி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. அதிகாரிகளுக்கு ரூ.2000 கோடி வரை லஞ்சம் கொடுக்க அதானி முன்வந்ததாக அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டியிருந்தது.

 அதானி ஊழல் புகார், மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்க வேண்டும், நாடாளுமன்ற கூட்டுக்குழு இதனை விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைவர்கள் இக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். எனவே இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் முழுக்கம் எழுப்பினர். இதனால் இரு அவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் நேரத்தை எதிர்க்கட்சிகள் வீணடிப்பதாக ஆளும் கட்சி குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால், ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த கேட்டால், அதை அரசு புறக்கணிக்கிறது என்றும், அவர்கள்தான் நேரத்தை வீணடிக்க எங்களை உந்தி தள்ளுகிறார்கள் எனவும் எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மூன்று நாட்கள் தொடர் போராட்டத்தின் பின்னர் நாடாளுமன்ற‌ம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடும்போது போராட்டம் வெடிக்கும்.

இதே வேளை தமிழகத்திலும் அதானி விவகாரம் சூடுபிடித்துள்ளது.அதானிக்கு எதிரான வழக்கு ஆவணத்தின் 50-ஆம் பத்தியில்,'' ஜுலை 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான காலத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், ஒதிஷா, ஜம்மு - காஷ்மீர், தமிழகம், சத்தீஸ்கர், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் மின்சார வாரியங்கள் இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்திடமிருந்து உற்பத்தியுடன் இணைந்த திட்டத்தின்படி சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களை (Power Sale Agreement PSA) செய்து கொண்டிருக்கின்றன. இவற்றில் ஆந்திர மின்சார வாரியத்திற்கு 7 ஜிகா வாட் சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதற்காக ஒப்பந்ததைப் பெறுவதற்காக அம்மாநில மின்சார வாரிய அதிகாரிக்கு ரூ.1750 கோடி கையூட்டு வழங்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

தமிழக மின்சார வாரியத்தின் அதிகாரிகளுக்கு எவ்வளவு கையூட்டு கொடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் அதில் இடம் பெறவில்லை என்றாலும் கூட கையூட்டு பெற்றதில் தொடர்புடைய நிறுவனங்கள் பட்டியலில் தமிழக மின்சார வாரியத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது.

 அதானியின் விவகாரம் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் 10ம் திஅதி தமிழக முதல்வர் ஸ்டாலினை, சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ரகசியமாக சந்தித்து பேசியிருக்கிறார். இந்த ரகசிய சந்திப்பின் நோக்கம் என்ன? அதானி குழுமத்தால் கையூட்டு வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். ஸ்டாலின் - அதானி ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார். 

ராமதாஸின் குற்றச்சாட்டுப் பற்றி முதலமைச்சர் ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட போது 'ராமதாசுக்கு வேறு வேலை இல்லை'   என்று சொன்னார். 

இதனால் ஆத்திரமடைந்த ராமதாஸின் கட்சித் தொண்டர்கள் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, தமிழகம் முழுதும்  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.முதல்வர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என அவர்கள் போராட்டம் ந‌டத்தினர். தமிழக பாரதீய ஜனதாத்  தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை,   சீமான்,  வாசன் ஆகியோரும் ராமதாஸுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்கள்.அதானி விவகாரம் மீண்டும் தலைதூக்கி உள்ளது.

Friday, October 18, 2024

பாரதீய ஜனதாவை காஷ்மீரில் இருந்து அகற்ற ஒமர் அப்துல்லா தொடுத்த அஸ்திரம்


 

  இந்தியாவின் மொத்தப் பார்வையும் ஜம்மு காஷ்மீர் தேர்தலின்  மீது  கண்வைத்திருந்தது.ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சலுகை இரத்து செய்யப்பட்டு, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு  சுமார் ஒன்பது வருடங்களின்  பின்னர்  நடைபெற்ற தேர்தல்.

அசுர பலத்துடன்  இருந்த மோடியின் அரசு ஜம்மு காஷ்மீர்  மக்கலின் விருப்பத்துக்கு மாறாக ஜனநாயகம்  என்ற போர்வையில் தான் நினைத்ததைச் சாதித்தது. இன்று சிறுபான்மை ஆட்சி நடத்தும்  பாரதீய  ஜனதாவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள்  பாடம்  புகட்டியுள்ளனர். இந்து,முஸ்லிம் மோதல், பாகிஸ்தானில் இருந்து  இயங்கும்  தீவிரவாதக் கும்பல் ஆகியனவற்றை தேர்தலில்  மூலதனமாக்க  முயற்சித்த  மோடிக்கு அதிர்ச்சியளிக்கப்பட்டது.

 ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற  தேர்தலில்  காங்கிரஸ்-தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. புதிய முதல்வராக ஒமர் அப்துல்லா  பதவியேற்றுள்ளார்.     இந்து மதத்தைச் சேர்ந்த  சுரேந்தர் செளத்ரி என்பவர்  துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்தப்பதவி பாரதீய ஜனதாவுக்கு வைக்கப்பட செக் ஆகும்.  முஸ்லிம்கள் அதிகமாக வகிக்கும் ஜம்மு காஷ்மீரில்  இந்து மக்களின் பாதுகாவலர்  என்ற பாரதீய ஜனதாவின்  பிம்பம் இதனால் உடைக்கப்பட்டுள்ளது.

 இதில் ஒரு சுயேட்சை உள்ளிட்ட ஐந்து எம்எல்ஏ.,க்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர். தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த நான்கு பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்காமல் மத்தியில் ஆளும் பாஜக அரசு இழுத்தடித்து வந்தது அக்கட்சிக்கு மிகப் பெரிய பாதகமாக அமைந்து விட்டது. அதே சமயம் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து பெற்று தரும் வரை ஓய மாட்டோம். தொடர்ந்து மத்திய அரசை எதிர்த்து போராடுவோம் என காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வாக்குறுதி அளித்து, அதை மையமாக வைத்து தேர்தல் பிரசாரத்தை முன் வைத்தது அவர்களின் வெற்றிக்கு சாதமாக அமைந்து விட்டது. 

  90   தொகுதிகள் உள்ள ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 42 இடங்களில் வெல்ல வேண்டும். இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி இருந்தது. காங்கிரஸ் - ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து களமிறங்கியது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி  ஆம்ஆத்மி ஆகியவை தனித்து போட்டியிட்டன.   காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி, 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றது. பாஜக 29 இடங்களிலும், மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 இடத்திலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜேபிசி கட்சிகள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.

சுரிந்தர் சவுத்ரி ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். இவர் 1987 ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் 12ம் வகுப்பை படித்து முடித்தார். ஜாட் சமுதாயத்தை சேர்ந்த இவர் இந்து மதத்தில் பிறந்தவர். ஜம்மு காஷ்மீரில் உள்ள முக்கியமான இந்து மதத்தை சேர்ந்த அரசியல்வாதிகளில் இவர் மிகவும் முக்கியமானவர்.

இவர் தொடக்கத்தில் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சியில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். கடந்த 2014 சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காதபோது பாஜகவும் -பிடிபி கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றின. இந்த கூட்டணி அமைய முக்கியமாக இருந்தவர் சுரிந்தர் சவுத்ரி தான். இதனால் மெகபூபா முப்தியின் நம்பிக்கைக்குரிய தலைவராக உயர்ந்தார். அதன்பிறகு இந்த கூட்டணி ஆட்சி கலைந்த பிறகு சுரிந்தர் சவுத்ரி மெகபூபாவின் பிடிபி கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்தார். அதன்பிறகு கடந்த ஆண்டு ஜூலை 11ம் திகதி பாஜகவில் இருந்து விலகி ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியில் சேர்ந்தார். ஜம்மு காஷ்மீரின் பாஜக தலைவராக இருக்கும் ரவீந்தர் ரெய்னாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் பாஜகவில் இருந்து வெளியேறினார்.

 ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தலைவர் ரவீந்தர் ரெய்னா நவ்ஷாரா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். இங்கு வெற்றியை நிர்ணயம் செய்வது இந்து மக்களின் ஓட்டுகள் தான். இதையடுத்து ரவீந்தர் ரெய்னாவை எதிர்த்து சுரிந்தர் சவுத்ரி களமிறக்கப்பட்டார். சுரிந்தர் சவுத்ரி தேசிய மாநாட்டு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். கடந்த 2014 தேர்தலில் இநு்த தொகுதியில் ரவீந்தர் ரெய்னா பாஜக எம்எல்ஏவாக இருந்தார். இதனால் மீண்டும் அவர் வெற்றி பெறுவார் என்று பாஜக நம்பிக்கை வைத்தது. ஆனால் தேர்தல் முடிவு என்பது முற்றிலும் மாறுபட்டது.

 இந்த தேர்தலில் சுரிந்தர் சவுத்ரி மொத்தம 35,069 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளரான ரவீந்தர் ரெய்னா 27,250 வாக்குகள் மட்டமே பெற்றார். இதனால் ரவீந்தர் ரெய்னாவை 7,819 வாக்குகள் வித்தியாசத்தில் சுரிந்தர் சவுத்ரி வீழ்த்தி வெற்றி பெற்றார்.

பாரதீய ஜனதா தொகுதிகளில் வென்றாலும் கூட அதன் தலைவர் ரவீந்தர் ரெய்னாவை வீழ்த்தி இருப்பது காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணிக்கு  உற்சாகமளித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் பாரதீய ஜனதா வளர்ந்து வருகிறது.இந்து என்ற மூன்றெழுத்தால் இந்தியாவைப் பிரிக்கும் பாரதீய ஜனதாவின்  முன்னேற்றத்தைத் தடுப்பதே ஒமரின்  நோக்கமாகும்.

  2014 ஆம் ஆண்டு ல் 25 தொகுதிகளில் வென்ற  பாரதீய ஜனதா தற்போது 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இப்போதும் ஜம்மு காஷ்மீரில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற 29 எம்எல்ஏக்களில் 28 பேர் இந்துக்கள், ஒருவர் சீக்கியர் ஆவார். மறுபுறம் பார்த்தால் தேசிய மாநாட்டு கட்சி இந்த தேர்தலில் ஒரு பெண் உள்பட மொத்தம் 9 இந்து வேட்பாளர்களை நிறுத்தியது. இதில் 2 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். அதேபோல் காங்கிரஸ் சார்பில் 19 இந்து வேட்பாளர்கள், 2 சீக்கியர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இதில் அவர்கள் அனைவரும் தோல்வியடைந்தார். இப்படியான சூழலில் பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய வேண்டும் என்றால் இந்து மதத்தை சேர்ந்த ஒரு வலிமையான தலைவர் வேண்டும் என்பதை உணர்ந்து தான் ஓமர் அப்துல்லா தனது கட்சி சார்பில் வெற்றி பெற்ற  இரண்டு இந்து வேட்பாளர்களில் ஒருவரான சுரிந்தர் சவுத்ரிக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்துள்ளார். இவரை வைத்து இந்துக்களின் ஓட்டுகளை வசப்படுத்த முடியும் என்பதோடு, பாஜகவின் வளர்ச்சியை தடுக்கலாம் என்று ஓமர் அப்துல்லா நம்புகிறார்

ரமணி

20/10/24

Saturday, October 12, 2024

பாஜகவை கைவிட்ட காஷ்மீர் காஷ்மீரை கோட்டைவிட்ட காங்கிரஸ்

இந்திய நாடளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர்  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  ஜம்மு காஷ்மீர்,ஹரியானா   தேர்தல் முடிவுகள் இந்திய கூட்டணிக்கும், பாரதீய ஜனதாக் கட்சிக்கும் பாடம் எடுத்துள்ளன.

இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் இந்தியக் கூட்டணி, வெற்றி பெறும் எனவும்  பாரதீய ஜனதா படு  தோல்வியடையும் எனவும்  கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

தேர்தல் முடிவும் எதிர்பார்த்தது போல வெளியாகின.    மாநிலமாக இருந்த ஜமு காஷ்மீரை ஜூனியன் பிரதேசமாக மாற்றிய பாரதீய ஜனதாக் கட்சிக்கும் அந்த மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

ஹரியானாவில் காலையில் காங்கிரஸ் பக்கம் இருந்த வெற்றி வாய்ப்பு நேரம் செல்லச் செல்ல பாரதீய ஜனதாவின் பக்கம் சாய்ந்தது.

ஹரியாணா, ஜம்மு - காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஹரியாணாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைத்திருக்கிறது பாரதீய ஜனதா

ஜம்மு - காஷ்மீரில் மொத்தமுள்ள 90 இடங்களில் ஜம்மு - காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி 42 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் பா... 29 இடங்களிலும் மக்கள் ஜனநாயகக் கட்சி 3 இடங்களிலும் ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஆம் ஆத்மி ஆகியவை தலா ஒரு இடத்திலும், சுயேச்சைகள் ஏழு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.

 ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 இடங்களில், 48 இடங்களில் பாரதிய ஜனதா கட்சியும் 37 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் இந்திய தேசிய லோக் தளம் இரண்டு இடங்களிலும் சுயேச்சைகள் மூன்று இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. ஹரியானாவில் தனித்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி, வாக்குகளைப் பிரித்ததால் காங்கிரஸின் வெற்றி எட்டாமல் போனது.

மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் காங்கிரம் ஹரியானா தேர்தலில் மோசடி அநபெற்றிருக்கிறதென்ற குற்றச் சாட்டுடன் தேர்தல் திணைக் களத்தில் புகார் செய்துள்ளது.

இந்தியாவில் ஜம்மு - காஷ்மீருக்கு  மட்டும்சிறப்பு அந்தஸ்தை அளித்துவந்த அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட பிறகு, அங்கு நடந்த முதல் தேர்தல் இது என்பதால், இந்த நடவடிக்கைகள் குறித்த மக்களின் மனநிலையை அறியத் தரும் தேர்தலாக இந்த சட்டமன்றத் தேர்தல் பார்க்கப்பட்டது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரான ஒமர் அப்துல்லா அதிர்ச்சி தரத்தக்க வகையில் தோல்வியடைந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. ஒமர் அப்துல்லா மாநிலத்தின் புதிய முதல்வராகத் தேர்வுசெய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரை மீண்டும் மாநிலமாக்குவோம் என்ற கோஷத்துடன் காங்கிரஸ் தேர்தலைச் சந்தித்தது.

திமிருடன் ஜம்மு காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தைப் பறித்த பாரதீய ஜனதாவும் மீண்டும் மாநில அந்தஸ்து தருவதாக  உறுதியளித்தது. மக்கள் நம்பவில்லை என்பதை தேர்தல் முடிவு எடுத்துக் காட்டியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர்  அந்த மாநிலத்தில் ஐந்து நியமன எம்.எல்.ஏக்கள் இருப்பார்கள் என அறிவித்துவிட்டதால், வாக்கு எண்ணிக்கை துவங்கும் முன்பே அவர்களிடம் ஐந்து எம்.எல்.ஏக்கள் இருந்தார்கள். மேலும், தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்துக்கள் அதிகமுள்ள ஜம்முவில் அதிக இடங்களும் முஸ்லிம்கள் அதிகமுள்ள பள்ளத்தாக்கு பகுதியில் தொகுதிகள் குறைவாகவும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார்கள். அப்படியிருந்தும் முடிவுகள் தீர்க்கமாக பா..கவுக்கு எதிராக வந்திருக்கின்றன. 370 நீக்குவதன் மூலமாக காஷ்மீரிகள் என்ற உணர்வை அம்மாநில மக்களிடம் நீக்க முடியவில்லை.

  நீண்ட நாட்களுக்கு ஜம்மு - காஷ்மீரை யூனியன் பிரதேசமாக வைத்திருக்க முடியாது. விரைவிலேயே அதன் மாநில அந்தஸ்தை திரும்பத் தர வேண்டியிருக்கும். 370வது பிரிவை திரும்ப கொண்டுவர மாட்டார்கள் என்றாலும் சில அம்சங்களாவது திருப்பியளிக்கப்படும். ஜம்மு - காஷ்மீரில் நாங்கள் எடுத்த முடிவை மக்கள் ஆதரிப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், மக்கள் அதற்கு நேரெதிராக, தீர்க்கமாக வாக்களித்திருக்கிறார்கள்.

2014ல் இருந்து பாரதீய ஜனதாவுக்கு ஆதரவளித்தஅம்மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி  இந்தத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. 81 இடங்களில் போட்டியிட்டு, சுமார் 9 சதவீத வாக்குகளையும் மூன்று இடங்களையும் மட்டுமே அக்கட்சி பிடித்திருக்கிறது.

: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாடு, காங்கிரஸ் கூட்டணி வென்று ஆட்சியை பிடித்தது. பல்வேறு வியூகங்களை வகுத்த பாஜகவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பாஜக ஜம்மு காஷ்மீரின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் காங்கிரஸ் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு சட்டசபை தேர்தல் நடக்காமல் இருந்தது. இந்தாண்டு தான் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும். இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டது. பரபரப்பாக நடைபெற்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவியது.

காங்கிரஸ் கட்சியும், முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியும் கூட்டணி அமைத்தது. பாஜக தனித்து களமிறங்கியது. அதேபோல முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்து களமிறங்கின.

 பாரதீய ஜனதா  இதுவரை ஜம்மு காஷ்மீரில் தனித்து வெற்றி பெற்றது இல்லை. இதனால் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற நினைத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இருப்பினும்   வாக்கு சதவீதம் உயர்வை கண்டுள்ளது.

அதேநேரத்தில் தேசிய மாநாடு கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தாலும், காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 18% வாக்குடன் 12 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் அங்கு 38 தொகுதிகளில் போட்டியிட்டது.

அதில் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் வாக்கு 12% ஆக குறைந்துள்ளது. பாஜகவை பொறுத்தவரை காஷ்மீர் பள்ளத்தாக்கில் தோல்வியை சந்தித்தாலும், ஜம்மு மாகாணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது.

அங்கு பாஜக போட்டியிட்ட 43 தொகுதிகளில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடு கட்சிக்கு அடுத்த பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பாஜக பெற்றுள்ளது. தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் வாக்கு சதவீத அடிப்படையில் மொத்தமாக பாஜக 25%, தேசிய மாநாடு கட்சி 23% பெற்றுள்ளன.

பாரதீய ஜனதாவைத் தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியால் மட்டும்தான் முடியும் என்பதை ஆம்  ஆத்மி இன்னமும் உணரவில்லை என்பதால் ஹரியானாவின் வெற்றி  கையை விட்டுப் போனதுஇந்தத் தேர்தல் முடிவுகள் அடுத்தடுத்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். விரைவிலேயே மகாராஷ்டிர மாநிலத்திலும் ஜார்க்கண்டிலும் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. மகாராஷ்டிராவில், காங்கிரஸ் - தேசியவாதக காங்கிரஸ் - உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கூட்டணியில் தானே பலம் வாய்ந்த கட்சி என்ற காங்கிரஸின் இமேஜ், இந்தத் தோல்வியால் சற்று மங்கக்கூடும். இது இடங்களைப் பகிர்ந்து கொள்வதிலும் எதிரொலிக்கக்கூடும்.

"ஆனால், மகாராஷ்டிராவில் தேர்தலை நடத்தாமல் தேர்தல் ஆணையம் தள்ளிப்போடுவதே, காங்கிரஸ் கூட்டணிக்கு இருக்கும் வாய்ப்பை உறுதிப்படுத்துகிறது.

ரமணி

13/10/24