Sunday, August 28, 2011

தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 1

திரைப்படங்கள் வெற்றி பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. சிறந்த கதை, சிறந்த நடிப்பு, சிறந்த இசை, சிறந்தபடம்பிடிப்பு, சிறந்த எடிட்டிங், சிறந்த டைரக்ஷன் என்பன ஒரு படத்தை உச்ச நிலைக்கு உயர்த்துகின்றன. ஆரம்பகால தமிழ்த்திரைப்படங்களைப் பாடல்களே ஆக்கிரமித்தன 85 சங்கீதங்கள் நிறைந்த படம் எனறே அறிமுகப்படுத்துவார்கள். ஹரிதாஸ், சிந்தாமணி போன்ற படங்களின் பாடல்களை அந்த காலத்து ரசிகர்கள் இன்றும் …கித்துப் பேசுவார்கள்.
பாடல்களுக்கிடையே ஒரு சில வசனங்கள் பேசப்படும் அன்பே, சுவாமி, கண்ணே, நாதா, ஆரமுதே, பிராணநாதா போன்ற சொற்கள் அடிக்கடி உச்சரிக்கப்படும் நாயகனும் நாயகியும் எட்ட நின்றே உரையாடுவார்கள். கையைப் பிடிப்பார்கள் கட்டிப்பிடிக்கமாட்டார்கள். 1935 ஆம் அண்டு வெளிவந்த மேனகா என்ற படம் இந்தக் கட்டுப்பாடுகளை உடைத்தெரிந்தது. முத்தம், கற்பழிப்பு என்பன இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகியது. முத்தம் என்றதும் கன்னாபின்னாவென்று கற்பனை செய்ய வேண்டாம். கை, கன்னம் உச்சியென்பனவற்றிலே தான். நாயகன் முத்தமிட்டான் இப்படத்தைப்பற்றிய விமர்சனங்கள் கடுமையாக இருந்தன.
பாடல்களின் ஆதிக்கத்திலிருந்த தமிழ் சினிமாவை வசனம் தன் கட்டுபாட்டில் கொண்டு வந்தது. அவ்வப்போது ஊறுகாய் போன்று கவர்ச்சி நடனங்கள் தமிழ் சினிமாவில் இடம்பெற தொடங்கின. கவர்ச்சி நடனங்களை ரசிகர்கள் வரவேற்றதனால் கவர்ச்சி நடிகைகளுக்கு மவுசு கூடியது. இன்று கவர்ச்சி நடிகையின் இடத்தை கதாநாயகி கனகச்சிதமாக செய்து முடிக்கிறார்.
வெண்ணிற ஆடை, அவள் போன்ற படங்கள் ஏ சான்றிதழுடன் வயதுக்கு வந்தவர்களுக்கு என்ற குறிப்புடன் வெளிவந்தன. இன்று வெளியாகும் அநேக படங்கள் ஏ சான்றிதழ் இல்லாது பாலியல் வக்கிரங்களுடன் வெளியாகின்றன. நகைச்சுவை என்ற போர்வையில் இரட்டை அர்த்தம் கொண்ட பாலியல் வசனங்கள் எதுவித கூச்சமும் இன்றி பேசப்படுகின்றன. அதைக் கைத்தட்டி ரசிப்பவர்களும் உள்ளனர்.
படங்கள் மட்டுமல்ல பாடல்களும் தடம் மாறிப் போயுள்ளன. கீர்த்தனைகள், பக்தி பாடல்கள் மறைந்து பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் பாடல்கள் அதிகளவில் வெளியாகியுள்ளன. இப்படிப்பட்ட மோசமான பாடல்களை வானொலிகளும், தொலைக்காட்சிகளும் போட்டிப் போட்டு விளம்பரப்படுத்துகின்றன.
மன்மதலீலையை வென்றவர் உண்டோ என்ற பாடலை அந்த காலத்தில் முணு முணுக்காதவர்கள் யாருமில்லை. அந்தக் கால இளைஞர்களின் தேசிய கீதமாக அப்பாடல் போற்றப்பட்டது. இன்றைக்கும் அந்தப் பாடலை கேட்கும் முதியவர்கள் அந்த நாள் ஞாபகத்தில் மூழ்கி வருகிறார்கள்.
வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ, நீரோடும் வைகையிலே நின்றாடும் மானே போன்ற பாடல்களில் கொஞ்சம் புகுந்து ஆராய்ந்தால் செக்ஸ் பின்னப்பட்டிருப்பதை காணலாம். ஆனால் அந்தப் பாடல்களை யாரும் வெறுத்து ஒதுக்குவதில்லை. வாராயென் தோழி வாராயோ என்ற பாடல் இன்றும் திருமண வீடுகளை ஆக்கிரமித்துள்ளது.
நேற்று ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதே, சின்ன வீடா வரட்டுமா பெரிய வீடா வரட்டுமா போன்ற அப்பட்டமான செக்ஸ் பாடல்கள் இன்று எதுவித தடையுமின்றி காற்றிலேயே மிதந்து வருகின்றன. பாலியல் வக்கிரங்கைளத் தூண்டும் காட்சிகளை வெட்டி எரியும் தணிக்கைக்குழு இப்படிப்பட்ட பாடல்களில் கைவைப்பதில்லை.
விஜயலக்க்ஷ்மி, சி.ஐ.டி சகுந்தலா, ஆலம், சில்க் ஸ்மிதா போன்ற நடிகைகள் ஆடுவதற்காகவே ஒப்பந்தங்கள் செய்யப்படுவார்கள். கிளப்டான்ஸ் வில்லனின் பாசரையில் ஒரு கவர்ச்சி நடனம் மட்டும் அந்த காலப் படங்களில் இடம்பெறும். இன்றைய நாயகிகள் பாடங்களில் போட்டிப் போட்டு கவர்ச்சியை காட்டுகிறார்கள். அதேவேளை பொது வைபவங்களிலும் கவர்ச்சி உடையில் தோன்றி பரபரப்பூட்டுகிறார்கள். முன்னால் முதல்வர் கருணாநிதி கலந்துக் கொண்ட வைபவத்தில் கலந்துகொண்ட கதாநாயகி கவர்ச்சி உடையில் வலம் வந்தால் பெரிய சர்ச்சை எழுந்தது.
தமிழ் சினிமா ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற படம் சிந்து பைரவி சிறந்த கதை, நல்ல நடிப்பு, மனதில் நிறைந்த பாடல்கள் முணு முணுக்க வைக்கும் இசை, தேசிய விருது என்ற பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட படம். பாலசந்தர், ஜேசுதாஸ், இளையராஜா, வைரமுத்து, சித்ரா, சிவகுமார், சிஹாசினி, சுலக்ஷனா இவர்களில் யார் சிறந்தவர் என்ற பட்டிமன்றம் வைத்தால் முடிவு சொல்வது மிக கடினம். பிரபல இசை மேதை ஜே.கே.பி யின் பாலியல் பலவீனம் என்ற ஒரு வரிக்கதையை யாரும் பெரிதாக எடுக்கவில்லை. மிகப்பெரிய வெற்றிபெற்ற சங்கராபரணத்தின் நிலையும் இதுதான்.
கலை, கலாசாரம் என்ற வரம்பை உடைத்து வெளிவந்த ஒரு சில தமிழ்ப்படங்களைப் பற்றிய தகவல்களை மித்திரன் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதே இத்தொடரின் நோக்கம்.
மித்திரன் 28/08/11

Tuesday, August 23, 2011

புதிய பாதை தேடுகிறார் வைகோ

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டேன். அடுத்துவரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிப்பேன் என்று டாக்டர் ராமதாஸ் சூளுரைத்துள்ளõர். வைகோவும் இதே போன்ற முடிவிலேயே இருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு பெரும் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து அரசியல் அதிகாரங்களைச் சுவைத்த வைகோவும் ராமதாஸும் இப்போது அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளனர். மீண்டும் மேலெழுந்து வருவதற்காக வைகோவும் ராமதாஸும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்பார்த்துள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழக அரசியலில் இருபெரும் சக்திகளாக விளங்குகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்திடம் தமிழக ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் மாறி மாறி கூட்டணி சேர்ந்தே தமிழ் அரசியலில் பிரகாசிக்கிறது. இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்த்து கூட்டணி அமைக்கும் துணிவு இன்னமும் காங்கிரஸுக்கு வரவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர் புதிய கட்சியை ஆரம்பித்ததும் திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எம்.ஜி.ஆர். என்ற நட்சத்திரத்தின் வலிமையினால் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற உதய சூரியன் மேலெழ முடியாது மறைந்திருந்தது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னரே உதய சூரியன் வெளிச்சம் தர ஆரம்பித்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வைகோ தூக்கி எறியப்பட்டபோது திராவிடக் கட்சிகளுக்கு மாற்றீடான புதிய கட்சி ஒன்று உதயமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. வைகோவின் பின்னால் திரண்ட தொண்டர்கள் புதிய யுகம் படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. வைகோவுக்குத் தோள் கொடுத்த தலைவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையில் திராவிடக் கட்சிகளில் ஐக்கியமானõர்கள் தனித்து நின்று தாக்குப் பிடிக்க முடியாத வைகோவும் ஜெயலலிதாவிடமும் கருணாநிதியிடமும் சரணடைந்தார்.
அரசியல் ரீதியாக நலிந்திருக்கும் வன்னியருக்காக டாக்டர் ராமதாஸ் ஆரம்பித்த இயக்கம் நாளடைவில் அரசியல் கட்சியாக மிளிர்ந்தது. மிகச்சிறந்த அரசியல் வியாபாரியான டாக்டர் ராமதாஸ் தனது கட்சியை அடகு வைத்தார். இன்று திராவிடக் கட்சிகள் இரண்டும் டாக்டர் ராமதாஸை ஒதுக்கி வைத்துள்ளன. ""சீச்சி இந்தப் பழம் புளிக்கும்'' என்ற நரியின் கதை போல் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டேன் என்று சபதமெடுத்துள்ளார்.
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றீடாக புதியதொரு தலைவனாக மேலெழுந்தார் விஜயகாந்த். திராவிடக் கட்சிகள் மீது வெறுப்புள்ளவர்கள் விஜயகாந்தை ஆதரித்தார்கள். ""மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி"" என்ற வேத வாக்குடன் அரசியல் களம் புகுந்த விஜயகாந்த் கட்சியைக் காப்பாற்றுவதற்காக ஜெயலலிதாவிடம் சரணடைந்தார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று தொண்டர்களால் போற்றப்பட்ட செல்வி ஜெயலலிதாவை முதல்வராக்கி அழகு பார்க்கிறார்.
திராவிடக் கட்சிகளை அழிக்கவேண்டும் என்ற சபதத்துடன் அரசியல் களம் புகுந்த தலைவர்கள் எல்லோரும் இறுதியில் திராவிடக் கழகங்களிடம் சரணடைந்ததே வரலாறு. திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்த வைகோவும் டாக்டர் ராமதாஸும் திராவிடக் கட்சிகளை அழிக்கப் போவதாகக் கூறிக் கொண்டு அரசியல் களத்தின் மீண்டும் தோன்றியுள்ளார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் விரும்பாதவர்களின் முதல் தெரிவாக விஜயகாந்த் இருந்தார். ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் மாற்றீடான சக்திமிக்க தலைவராக விஜயகாந்த் உருவாகுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் கூட்டணி சேர்ந்ததனால் அந்த எதிர்பார்ப்பு தவிடு பொடியானது. விஜயகாந்த் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப வைகோவும் டாக்டர் ராமதாஸும் முயற்சி செய்கின்றனர்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வைகோவும் டாக்டர் ராமதாஸும் இணைந்து போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களின் தோல்வியிலிருந்து மீள்வதற்கு உள்ளாட்சித் தேர்தலையே வைகோவும் டாக்டர் ராமதாஸும் நம்பியுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் இவர்கள் தலைமையில் இணைவதற்கு சிறிய கட்சிகள் சில தயாராகவுள்ளன.
தமிழக சட்ட மன்றத் தேர்தல் தோல்வி, 2 ஜி ஸ்பெக்ரம் ஊழல் ஆகியவற்றினால் விரிசலடைந்த திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான பூசல் விலகுவதற்கான சூழ்நிலை தமிழக சட்ட மன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து செயற்பட வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். அசுர பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்ற எதிர்க்கட்சிக் குற்றம் சாட்டியுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் கட்சியையும் ஜெயலலிதா எதிர்க் கட்சியாகவே நோக்குகிறார். தமிழக சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கு ஒரே இடத்தில் ஆசனம் ஒதுக்காமையினால் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் சட்டமன்றத்தைப் பகிஷ்கரித்தனர்.
எதிர்க்கட்சிக்கு உரிய மரியாதையை தமிழக அரசு கொடுக்கவில்லை என்று திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டியுள்ளது. திராவிட முன்னேற்ற கழகம் தனது உரிமைக்காக குரல் கொடுக்கும் போது கூட்டணிக் கடசியான காங்கிரஸும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத்தைப் பகிஷ்கரித்தது. அதேபோன்று தான் இன்று சிறு பிரச்சினையைப் பெரிதாக்கி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக சட்ட மன்ற கூட்டத்தைப் பகிஷ்கரிக்கிறது.
தமிழக சட்ட மன்றத் தேர்தல் தோல்வியினாலும் ஊழல் வழக்குகளினாலும் துவண்டு போயிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளியே வருவதற்கான சந்தர்ப்பத்தை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சமச்சீர் கல்விøயத் தடை செய்து நீதிமன்றத்திடம் குட்டுவாங்கிய தமிழக அரசு திராவிட முன்னேற்றக் கழக அங்கத்தவர்களுக்கு ஒரு பக்கத்தில் இடம் ஒதுக்காது பழிவாங்குகிறது. தமிழக அரசியலில் பலமான எதிர்க்கட்சி இல்லாமையினால் இப்படியான சம்பவங்களைப் பெரிதுபடுத்தி மக்களின் கவனத்தைப் தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு21/08/11

Tuesday, August 16, 2011

அடக்கியது நீதிமன்றம்அடங்கினார் ஜெயலலிதா

கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு அமுல்படுத்திய சாதனைகளை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற ஜெயலலிதாவின் விருப்பத்திற்கு இந்திய உயர் நீதிமன்றம் ஆப்பு வைத்துள்ளது. ஏழை, பணக்காரன் என்ற பேதம் இல்லாது தமிழகத்தில் சகல மாணவர்களுக்கும் ஒரே விதமான சிறந்த கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழக அரசினால் சமச்சீர்கல்வி அமுல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் உள்ள அரச பாடசாலைகளின் கல்வித் திட்டத்துக்கும் தனியார் கல்லூரிகளின் பாடத் திட்டத்துக்கும் பாரிய வேறுபாடு இருந்தது. இந்த வேறுபாட்டை களைந்து சகல மாணவர்களும் ஒரே விதமான கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காகவே சமச்சீர்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜெயலலிதாவின் தலைமையிலான தமிழக அரசின் "சமர்ச்சீக்கல்வி' பாடத் திட்டத்தை முடக்கி புதிய புத்தகத்தைத் தயாரிப்பதற்கு முயற்சி செய்தது. இதன் காரணமாக தமிழக மாணவர்களின் கல்வி பாதிப்படைந்தது. தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் தீர்ப்பால் அதிருப்தியடைந்த தமிழக அரசு மேன்முறையீடு செய்தது. பெரும் பரபரப்புடன் எதிர்பார்த்த தீர்ப்பு தமிழக அரசுக்கு எதிராகவே வழங்கப்பட்டது. 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமுல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமச்சீர் கல்வியில் கை வைக்க வேண்டாம் என்று புத்திஜீவிகளும் பெற்றோரும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் கூட்டணிக் கட்சியான இடதுசாரிகளும் ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். விஜயகாந் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்தார். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குக் கட்டுப்பட்ட முதல்வர் ஜெயலலிதா சமச்சீர் கல்வியை உடனடியாக அமுல்படுத்துவதாக அறிவித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக மிக வேகமாகச் செயற்படும் முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கைக்கு கடிவாள மிட்டுள்ளது உயர்நீதிமன்றம். சமச்சீர் கல்வியை மீண்டும் அமுல்படுத்துவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியதால் திராவிட முன்னேற்றக் கழகம் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை பெறுவதற்கு இச் சம்பவம் முன்னோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையின் முதல்வர் என அறிவிக்கப்பட்ட அழகிரியை மதுரையிலிருந்து அப்புறப்படுத்தும் வேலையை தமிழக அரசு ஆரம்பித்துள்ளது. அழகிரியின் கையாட்களான பொட்டு சுரேஷ், எஸ்.எஸ்ஆர், கோபி, தளபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்துக்கு பிணையில் வெளி வர முடியாதபடி குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு, கொலை போன்ற குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளனர். அழகிரியின் மனைவி காந்தியின் சொத்து விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன. நில ஆக்கிரமிப்புத் தொடர்பான வழக்கு அவர் மீது தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அழகிரியைச் சுற்றி இருப்பவர்களை அப்புறப்படுத்தி விட்டு அழகிரியை தனிமைப்படுத்த வேண்டும் என்ற திட்டம் ஓரளவு கைகொடுக்கத் தொடங்கி விட்டது. அழகிரியைச் சுற்றி மதுரையில் மையம் கொண்டிருந்த பலர் காணாமல் போய்விட்டார்கள். அழகிரியுடன் தொடர்பு வைத்தால் பொலிஸாரிடம் அகப்பட வேண்டிய நிலை ஏற்படும் என்று ஒதுங்கத் தொடங்கி விட்டார்கள்
அறுதிப் பெரும்பான்மை இல்லாது ஐந்து வருடங்கள் தமிழ்நாட்டை ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழக அரசை மைனோரிட்டி அரசு என்று ஜெயலலிதா ஏளனம் செய்தார். மைனோரிட்டி அரசு என்ற அவச் சொல்லைத் தாங்க முடியாத திராவிட முன்னேற்றக் கழகம் தனது செயற்பாடுகளின் மூலம் நல்ல பெயரை சம்பாதித்தது. அசுர பலத்துடன் ஆட்சியில் இருக்கும் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசை ""ஜெயா'' அரசு என்று திராவிட முன்னேற்ற கழகம் அழைக்கத் தொடங்கியுள்ளது. ஜெயா அரசு என்றால் அது ஜெயலலிதாவின் அரசு என்ற கருத்தே முதலில் தோன்றும்.
ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் அப்படியான அர்த்தத்தில் கூறவில்லை. ஜெயா அரசு என்றால் ஜெயிக்காத அரசு என்ற வியாக்கியானம் கூறுகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
ஜெயலலிதாவின் அரசு மேற்கொள்ளும் திட்டங்கள் அனைத்தும் தோல்வியடைய வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பமாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பப்படியே ஜெயலலிதாவின் அரசுக்கு முதலாவது அடி விழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஜெயலலிதா அரசு செய்யும் திட்டங்கள் தவிடு பொடியாகும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.
ஜெயலலிதாவின் அரசுக்கு அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தல் பெருத்த சவாலாக இருக்கும். தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகள் அனைத்திலும் கண்டிப்பாக வெற்றி பெற்றேயாக வேண்டும். இல்லையெனில் தமிழக அரசை வெற்றி பெற்ற மக்களே நிராகரித்து விட்டார்கள் என்ற பிரசாரத்தை திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்துவிடும். சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்த மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்ததால் நொந்து போயிருக்கும் ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி மூலம் தனது செல்வாக்குக் குறைவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
வர்மா

சூரன்.ஏ.ரவிவர்மா

வீரகேசரிவாவாரவெளியீடு14/08/11

Monday, August 15, 2011

வெளியேறுகிறது பா.ம.க.தனிமரமாகிறது தி.மு.க.

தமிழக சட்ட மன்றத் தேர்தலின் படுதோல்வியின் பின்னர் கூட்டணிக் கட்சிகளால் ஒதுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக்ழகம் தனிமைப்பட்டுள்ளது. தமிழக சட்ட மன்றத் தேர்தலின் தோல்விக்குப் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலே காரணமென்று தோழமைக்கட்சிகள் கருதுகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்ததனால் தான் தோல்வியடைந்ததாக காங்கிரஸும், பாட்டாளி மக்கள் கட்சியும் தெரிவிக்கின்றன.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் துவண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தூக்கிவிட காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிட காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. ஆனால் உடனடியாகக் கழற்றிவிடும் எண்ணம் காங்கிரஸுக்கு இல்லை. காங்கிரஸின் போக்கை நன்கு உணர்ந்துள்ள திராவிட முன்னேற்றக்கழகம் சற்று எட்டி நின்று போக்குக் காட்ட முயற்சிக்கின்றது. மத்திய அமைச்சரவையிலிருந்து ராசாவும் தயாநிதி மாறனும் இராஜினாமா செய்து விட்டார்கள். காலியான இரண்டு அமைச்சரவைகளையும் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு கொடுப்பதற்கு காங்கிரஸ் விரும்புகிறது. காலியாக உள்ள இரண்டு அமைச்சரவைகளையும் பொறுப்பெடுத்து காங்கிரஸின் வலையில் விழுவதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் விரும்பவில்லை.
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் நெருக்குதல் கொடுக்கின்றனர். தமிழக காங்கிரஸின் பலவீனத்தை நன்கு புரிந்துக்கொண்டுள்ள தலைமையகம், திராவிட முன்னேற்றக்கழகத்தை போன்ற பலம் வாய்ந்த கட்சி என்று தமிழகத்தில் கிடைக்கும் வரை கூட்டணியைத் தொடர்வதற்கு விரும்புகிறது.
நிலம் அபகரிப்பு, குறைந்த விலையில் நிலம், கட்டடம் ஆகியவை வாங்கியது போன்ற குற்றச்சாட்டில் திராவிட முன்னேற்றக் கழகப்புள்ளிகள் குறிவைக்கப்படுகிறார்கள். தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். அழகிரியின் வலது கைகள் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். அழகிரியின் நிழல்களாக செயற்பட்டவர்கள் பிணையில் வெளியே வரமுடியாத வகையில் குற்றஞ்சுமத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகள் வாயைத் திறக்க வில்லை. தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்ய õனவை. நீதிமன்றத்தின் மூலம் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் பொய்யானவை என்பதை நிரூபிப்போம் என்று திராவிட முன்னேற்றக்கழகம் அறிவித்துள்ளது.
திராவிட முன்னேற்றக்கழக பிரமுகர் கைது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய புள்ளி மீது பொலிஸ் நிலையத்தில் புகார் என்று தினமும் வெளியாகும் செய்தியினால் திராவிட முன்னேற்றக்கழகம் அதிர்ச்சியில் உள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவிக்கவும் பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட புகார்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதிலுமே அதிக காலத்தை செலவிடுகிறது, திராவிட முன்னேற்றக்கழகம். சி.பி.ஐ. விரித்த வலையில் இருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் தவிக்கும் திராவிட முன்னேற்றக்கழகம் தமிழக அரசின் கெடுபிடியினால் கதிகலங்கிப் போயுள்ளது. "இருதலைக் கொள்ளி எறும்பு போல்' தவிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக அரசுக்கு எதிராக் போராடுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக சுமத்தப்பட்ட பொய் வழக்குகள், கைதுகள் என்பவற்றை கண்டித்து கடந்தவாரம் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதி கோரியது. பொலிஸாரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. எனினும் திட்டமிட்டப்படி ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது திராவிட முன்னேற்றக்கழகம். ஸ்டாலின் உட்பட பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக புதிய போராட்டத்துடன் தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று திராவிட முன்னேற்றக்கழகம் விரும்புகிறது.
தமிழ சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறியுள்ள. திராவிட முன்னேற்றக் கூட்டணியில் தொடர்ந்து இருந்தால் உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வி அடையும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அச்சப்பட்டுள்ளது. கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறுவதால் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு எதுவித பாதிப்பும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் புதிய கூட்டணியுடன் களமிறங்க வேண்டிய நிலையில் உள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.
ராமதாஸின் மகன் அன்புமணிக்கு இராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்குவதற்கு ஜெயலலிதா மறுத்ததனாலேயே அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறியது. அன்புமணிக்கு இராஜ்யசபா உறுப்பினர் பதவி ஒதுக்குவதாக கருணாநிதி வாக்குறுதி வழங்கியதாலேயே திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தது. ராஜ்யசபை உறுப்பினர் ஆவதற்குரிய சட்டசபை அங்கத்துவ எண்ணிக்கை திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு இல்லை என்பதனால் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை பாட்டாளி மக்கள் கட்சி துணிச்சலுடன் எடுத்தது.
திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு திருமாவளவனும் விரும்புகிறார். காங்கிரஸ் கட்சியினுடனான உறவை திருமாவளவன் விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேற வேண்டும் என்று மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் திருமாவளவன் பல முறை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் திராவிட முன்னேற்றக்கழகம் தொடர்ந்தும் கூட்டணி வைத்தால் கூட்டணியிலிருந்து திருமாவளவன் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகளும் கூட்டணியிலிருந்து வெளியேறினால் கூட்டணி பலவீனமாகிவிடும்.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். பல கோஷ்டியாகப் பிரிந்திருக்கும் தமிழக காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெறமுடியாது என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்துள்ளது. கூட்டணியிலிருந்து எத்தனைக் கட்சிகள் வெளியேறினாலும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் பிரிவதற்குரிய சந்தர்ப்பம் இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றுடன் கூட்டணி சேராது தனியே தேர்தலில் போட்டியிடப்போவதாக வைகோ சூழுரைத்துள்ளார். திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவை இல்லாத புதிய அணியொன்றை உருவாக்குவதற்கு வைகோ முயற்சி செய்து வருகிறார்.
எதிர்க்கட்சிகள் பலவீனமான நிலையில் இருப்பதால் ஜெயலலிதாவுக்கு சாதகம் அதிகம். திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றை ஒன்று சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதால் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறும் சாத்தியம் குறைவாக இருக்கும். தமிழகச் சட்டசபைத் தேர்தலின் பிரமாண்டமான வெற்றியையும் படுதோல்வியையும் நாடி பிடித்து அறியும் களமாக உள்ளாட்சித் தேர்தல் அமைய உள்ளது.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு08/08/11

Sunday, August 7, 2011

எப்பயமும் எனக்கில்லை




ஐந்து கரங்களில் ஒரு கரத்தில்
அங்குசமும் மறு கரத்தில் பாசமும்
அபயக்கரம் காட்டி அருள்
பாலிக்கும். மறுகரத்தில் லட்டும்
தும்பிக்கையில் குடமும் கொண்டு
நம்பிக்கையாய் வந்தவர்க்கு
தும்பிக்கையால் அருள் பாலிப்பவர் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 1

ஈரேழு உலகமும் ஈன்றெடுத்த
தாய் தந்தையர் என
உலகுக்கு உணர்த்தியவரும்
அறுகம்புல்லின் புனிதமான வாசனையிலும்
சந்தனத்தின் மஞ்சளிலும் பால்
அபிஷேகத்தில் என்றும் உறைபவரும்
ஆனையின் வடிவமானவர் என்
உடனிருக்கு எப்பயமும் எனக்கில்லை. 2

வான் மதியின் முழு ஒளியையும்
தன் கண்களினுள் அடக்கி
ஆகாயம் போன்ற பரந்த மனதைக் கொண்டவரும்
தீ போன்று அசுரருக்கு கனலாயிருப்பவரும்
காற்றைப்போன்று எங்கும் கரைந்திருப்பவரும்
நிலத்தைப்போன்று நீண்டு வியாபித்திருப்பவரும்
நீரைப்போன்று நித்தியமாயிருப்பவரும் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 3

எழில் கொஞ்சும் சோலையிலே
வண்டுகள் இடும் ரீங்காரத்தில் பிரணவத்தின்
பொருளாய் திகழ்பவரும்
வள்ளியை மணம் புரிய
முருகனுக்கு உதவிய ஆனை முகத்தவரும்
பார்வதியின் பாசத்திற்குரிய
பிள்ளையாரும் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை 4

வியாசருக்கு தன் தந்தத்தை முறித்து
பார் போற்றும் பாரதம் மகாபாரதமாக
உருவெடுக்க உதவிய
வேத நாயகனாகிய விநாயகரும்
பிரம்மனின் மகள்களாகிய
கமலையையும் வல்லியையும் வல்லீஸ்வரர்
அருளால் கரம் பிடித்த கணபதியும் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 5

முதற்படை வீடாகிய திருவண்ணாமலையில்
அருணாச்சலேஸ்வரரோடு திகழும்
அல்லல்போம் விநாயகரும்
இரண்டாம் படைவீட்டிற்குரிய விருத்தாச்சல
விருத்தகிரீஸ்வரருடன் உறையும் ஆழத்துப் பிள்ளையாரும்
எமனை ஈஸ்வரன் உøத்த மூன்றாவது படைவீடான
திருக்கடவூரில் உள்ள கள்ளவாரணப் பிள்ளையாரும்என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 6

நான்காவது படைவீடாகிய மதுரை மீனாட்சியம்மனுடன்
உள்ள முக்குறுணி விநாயகரான
சித்தி விநாயகரும் பிள்ளையார் பட்டி காசியை
ஐந்தாவது படைவீடாக கொண்ட
வலம்புரி விநாயகரும் துண்டி விநாயகரும்
ஆறாவது படைவீடான திருநாரையூரில்
அருள் பாலிக்கும் பொல்லாப் பிள்ளையாரும் என்
உடனிருக்க எப்பயமம் எனக்கில்லை. 7

மனிதனைப் போல இரு கரங்களைக்
கொண்ட கற்பக விநாயகரும்
வரங்களை வாரி வழங்கும்
வரதராஜ விநாயகரும்
நம்பியின் மூலம் திருமுறைகளை உலகுக்கு
வெளிப்படுத்திய வலம்புரி விநாயகரும்
தேவர்களுக்கு அமிர்த கலசத்தைக் கொடுத்தவரும் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 8

ஈஸ்வரனின் புதல்வனே இன்பமாக
என்னுள் உறையும் ஐந்து கரத்தோனே
லம்போதர சுதனே உமைக்கு
உண்மையாயிருந்த உத்தமனே
முருகனுக்கு மூத்தவனே
மாயவனுக்கு மருமகனே
மூஷிக வாகனனே மோதகப் பிரியனே நீ என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 9

முக்காலமும் ஒரு காலமாய் முற்றாக
உணர்ந்த மூலப் பொருளோனே
எக்காலமும் அடியாருக்கு துணையாக
வருகின்ற சுந்தர விநாயகனே
ஆலமர்ச் செல்வனின் புதல்வனே
பூவற்கரையில் அருள் பாலி¬க்கும்
பூவற்கரைப் பிள்ளையாரே நீ என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை 10

தாட்ஷா வர்மா

Thursday, August 4, 2011

அதிகாரம் கோரும் அழகிரிஅடங்கிப்போன ஸ்டாலின்

தி.மு.க. காங்கிரஸ் உறவில் பாரிய விரிசல் எழுந்துள்ளது. கூட்டணியில் இருந்து வெளி யேற இரு கட்சிகளும் விரும்புகின்றன. முத லில் யார் வெளியேறுவது என்று தெரியாமல் இரு கட்சிகளும் தவிக்கின்றன
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடுத்த தலைவர் யார்? சட்டசபைத் தேர்தல் தோல் விக்கு காரணம் என்ன? வெற்றிடமாக இருக் கும் இரண்டு அமைச்சுப் பொறுப்புக்களை திரா விட முன்னேற்றக் கழகம் மீண்டும் பொறுப் பேற்குமா? காங்கிரஸுடனான கூட்டணி தொடருமா? என்பவை போன்ற மிக முக்கிய மான எதிர்பார்புகளுடன் கோவையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு பொதுக்குழு கூட்டங்கள் பரபரப் பின்றி புஸ் வாணமாக முடிவடைந்தது.
தமிழக சட்ட மன்றத் தேர்தலின் தோல்விக்கு குடும்ப ஆதிக்கம் தான் காரணம் என்பதை கோவையில் நடைபெற்ற கூட்டம் தலைவர் கருணாநிதிக்கு உணர்த்தியது. அதேவேளை ஸ்டாலின், அழகிரி என்ற இரண்டு கோஷ்டி களின் பிடியில் திராவிட முன்னேற்றக் கழகம் சிக்கியுள்ளதையும் கோவைக் கூட்டம் வெளிச் சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
திராவிட முன்னேற்றக்கழக அரசு கடந்த காலத்தில் அறிமுகப்படுத்திய திட்டங்களும் இலவசங்களும் சலுகைகளும் மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. ஆகையி னால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெறும் என்று இன்றைய உளவுத்துறை கருணாநிதி யிடம் அறிக்கை சமர்ப்பித் தது. அந்த அறிக்கையை அவர் மலைபோல் நம்பி னார். அதேவேளை, குடும்ப ஆதிக்கத்தினால் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படுமா? என்பதை அறிவதற்கு கரு ணாநிதியும் உளவுத்துறை யும் முயற்சிக்கவில்லை.
கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் என்பதை திரா விட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் ஏற்றுள்ளனர். அழகிரி, கனிமொழி என்று அவரது குடும்பத்தில் இருக் கும் மேலும் பல வாரிசுகள் அரசியலில் ஆதிக்கம் செய் வதைத் திராவிட முன்னேற் றக் கழகத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
தனக்குப்பின் அழகிரியா? ஸடாலினா? என்பதை கரு ணாநிதிதான் முடிவு செய்ய வேண்டும். கோவைக் கூட் டத்தில் ஸ்டாலினிடம் கூடு தல் பொறுப்பு ஒப்படைக்கப் படும். அதற்குப் பின் அழகிரியின் செல்வாக்கு குறைந்து விடும் என்றும் அழகிரியும் அவரது ஆதர வாளர்களும் கேவைக் கூட்டத்தைப் பகிஷ்கரிக்கப் போகின்றார்கள் என ஊடகங் கள் கட்டியும் கூறின. அரசியலில் ஸ்டாலி னுக்கு அடுத்த இடத்தில்தான் அழகிரியை வைத்திருக்கிறார் கருணாநிதி. ஸ்டாலினின் கையில் கடினமான பணியை ஒப்படைப் பதற்கு கருணாநிதி தற்போதைக்கு விரும்ப வில்லை.
தமிழக சட்டமன்றத் தேர்தல்களின் தோல்வி யில் மதிப்பிழந்துக் கிடக்கும் கட்சியை ஸ்டா லின் கையில் ஒப்படைப்பதற்கு கருணாநிதி விரும்பவில்லை. தனது தலைமைக்கு அது இழுக்கு என நினைக்கிறார். ஆகையினால் அடுத்த தலைவர் பிரச்சினையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார் கருணாநிதி.
கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் அதிகமானோர் ஸ்டாலின் தலைவராக வேண்டும் என்று தமது விருப்பத் தினை வெளிப்படுத்தினர். திராவிட முன்னேற் றக் கழகத்தில் அழகிரியை விட அதிக செல் வாக்கு ஸ்டாலினுக்கு உண்டு. தமிழக சட்ட மன்றத் தேர்தல் தோல்வியினால் திராவிட முன் னேற்றக் கழகத் தொண்டர்கள் துவண்டிருக் கும் வேளையில் நன்றி அறிவிக்கும் கூட்டம் என்ற பெயரில் தொண்டர்களின் மத்தியில் வெளிப்பட்டார் ஸ்டாலின். தோல்வியிலி ருந்து மீளவேண்டும் என்ற அவரின் எதிர்ப் பார்ப்பை தொண்டர்கள் பெரிதும் வரவேற்றுள் ளனர்.
காங்கிரஸுடனான கூட்டணி தற்போதைக்கு பட்டும் படாமலும் தொடரும். எதிர்காலத்தில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்பதை கோவையில் நடைபெற்ற கூட்டம் சூசகமாகத் தெரிவித்துள்ளது. மத்திய அரசில் வெற்றிட மாக இருக்கும் இரண்டு மந்திரிப் பதவியை பெறுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சிக்கவில்லை. ஸ்பெக்ட்ரம் விவகாரத் தில் காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிட்டு விட்டது. ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு திராவிட முன்னேற்க்கழகம் தான் முழுப்பொறுப்பு என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். தமிழக அரசின் கெடுபிடியி லிருந்து தப்புவதற்கு மத்தியரசின் துணை திராவிட முன்னேற்றக்கழகத் திற்கு தேவைப் படுகின்றது.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப் பட்ட இரண்டு அமைச்சரவையைப் பெற்று அதன் மூலம் தனது கூட்டணி உறுதிசெய் யப்படும் என்றே காங்கிரஸ் கட்சி எதிர்ப்பார்த் தது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தினால் தயாநிதி மாறன் தனது அமைச்சுப் பதவியை இராஜி னாமா செய்தார். அவரது பெயர் குற்றப் பத்திரி கையில் இணைக்கப்படலாம். அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை யில் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்று பதவிக்கு ஆசைப்படும் கட்சி என்ற பெயரைப் பெறுவதற்கு அவர் தயாராக இல்லை என்று திராவிட முன்னேற்றக்கழகம் பட்டவர்த்தன மாகத் தெரிவித்துவிட்டது.
கூட்டணியிலிருந்து வெளியேறுகிறோம் என்று காங்கிரஸ் கட்சியும் திராவிட முன்னேற் றக்கழகமும் வெளிப்படையாக அறிவிக்கப் போவதில்லை. முன்னாள் அமைச்சர்கள் செய் தவைகளை நான் செய்தேன். அமைச்சரவை யின் ஒப்புதலின் பெயரிலேயே ஸ்பெக்ட்ரம் பங்கிடப்பட்டது என்று ராசா வாதாடியுள்ளார். பிரதமர் மன்மோகனும், அமைச்சர் பா.சிதம்பர மும் ராசாவின் வாதத்தினால் நொந்து போயுள்ளனர். அவர்கள் இருவர் மீதும் ராசா நீதிமன்றத்தில் நேரடியாக குற்றம் சுமத்தியுள் ளார். ராசாவின் குற்றச்சாட்டினால் கூட்டணிக் குள் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
வட இந்தியாவில் வலுவிழந்து வருகிறதா காங்கிரஸ் கட்சி. மத்திய அரசின் எதிர் காலத்தை கடத்துவதற்கு திராவிட முன்னேற் றக் கழகத்தின் துணை தேவைப்படுகிறது. ஆகையினால் அவமானங்களையும் குற்றச் சாட்டுக்களையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. அடுத்த நாடாளு மன்றத் தேர்தல் வரை காங்கிரஸும், திராவிட முன்னேற்றக் கழகமும் பிரிவதற் குரிய நிலை இல்லை. இதேவேளை தமிழக உள்ளாட்சித் தேர்தலில் இக்கட்சிகளின் உண் மையான இணக்கப்பாடு வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாவாரவெளியீடு31/07/11