Monday, August 28, 2017

ஒருநாள் போட்டித் தொடரை வென்றது இந்தியா

கண்டி பலேகல்ல மைதானத்தில் 27 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்றதன் மூலம் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. ரோஹித்தின் சத்தமும் டோனி ரோஹித் இணையின் நிதானமான துடுப்பாட்டமும் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய வெற்றி பெற்றதால் இலங்கைக்கு கடும் நெருக்கடி தோன்றியது.


நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடி 50  ஓவர்களில் 9 விக்கெற்களை   இழந்து  217  ஓட்டங்கள் எடுத்தது. பும்ராவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது இலங்கை வீரர்கள் ஆட்டமிழந்தனர். திரிமானே 80,சண்டிமால்  36,சிரிவர்தன 29  ஓட்டங்கள் எடுத்தனர். மூன்றாவது இணைப்பாட்டமாக விளையாடிய சண்டிமால் ,திரிமானே  ஜோடி 72 எடுத்தது. இந்திய வீரர்களின் ஆதிக்கத்தை இலங்கை வீரர்களால் தகர்க்க முடியவில்லை. இலங்கை துடுப்பெடுத்தாடுடியபோது  47 ஆவது ஓவரில்  7 விக்கெற்களை இழந்து 192   ஓட்டங்கள்  எடுத்த போது மழை பெய்தது. 10 ஓவர்கள் பந்து வீசிய பும்ரா  27ஓட்டங்களைக் கொடுத்து முதல் முறையாக 5 விக்கெற்களை வீழ்த்தினார் 2016  ஆம் ஆண்டு  ஸிம்பாப்வேக்கு எதிராக அதிக பட்சமாக நான்கு விக்கெற்களை வீழ்த்தினார்.   நெஹ்ரா, ஹர்பஜன் ,இர்பான் பதான் ஆகியோருக்குப் பின்னர் இலங்கையில் ஐந்து விக்கெற்களை விழ்த்திய வீரராக விளங்குகிறார்.
 இலங்கை நிர்ணயித்த  218 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 15.1 ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்து  61 ஓட்டங்கள்  எடுத்ததால் இலங்கை அணி  ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். நான்காவது இணைப்பாட்டமாக விளையாடிய ரோஹித்தும் டோனியும் நிதானமாகத் துடுப்பெடுத்தாடி இந்தியாவுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். ரோஹித் டோனி  ஆகிய இருவரும் ஆட்டமிழக்காது முறையே 124  67  ஓட்டங்கள் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருத்தப் பெற்ற ரோஹித் தனது 12 ஆவது சதத்தைப் பதிவு செய்தார். இலங்கை மண்ணில் இவரது முதலாவது சதம் இதுவாகும்.. 
 

இந்தியாவுக்கு எதிராக   1997    ஆம் ஆண்டு இலங்கை அணி ஒருநாள் தொடரை வென்றது.   20  வருடங்களாக இந்தியாவின் கை கேலோங்கு இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற  10தொடர்களில்  8 தொடர்களை இந்தியா வென்றது. இரண்டு தொடர்கள் சமநிலையில் முடிவடைந்தன.  இலங்கை துடுப்பெடுத்தாடும் போது பும்ரா வீசிய 17 ஆவது ஓவரில் சண்டிமாலின் வலதுகை கட்டை விரலில் காயமேற்பட்டது.மருத்துவ பரிசோதனையின் போது விரலில் முறிவு ஏற்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. இதனால் இத் தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
மைதானத்தைநோக்கி தண்ணீர்ப் போத்தல்களையும் வேறுசில பொருட்களையும் எறிந்தனர். இந்திய அணி 44 ஆவது ஓவரில் விக்கெற்களை இழந்து  210  ஓட்டங்கள்  எடுத்தபோது  ஆட்டம் நிறுத்தப்பட்டு ரகளை செய்த ரசிகர்கள் வெளியேற்றப்பட்ட பின் போட்டி  நடைபெற்று இந்திய வெற்றிபெற்றது.

நான்காவது ஒருநாள் போட்டி  எதிர்வரும் 31 திகதி  வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறும்.
 சூரன்.ஏ.ரவிவர்மா






Sunday, August 27, 2017

கட்சிக்கு உரிமை கோரும் தலைவர்கள் நடுத்தெருவில் தொண்டர்கள்

தமிழக அரசியலில் யாராலும்  அசைக்கக் முடியாதா கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தைத்  தனது ஆயுள் உள்ளவரை எதிர்க் கட்சியாக வைத்திருந்த எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று மூன்று துண்டாக சிதறிப்போய் இருக்கிறது. கட்சிக்கும் ஆட்சிக்கும் உரிமை கோரி நிர்வாகிகள் போராட்டம் நடத்துகின்றனர். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தொண்டர்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர்.  

சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதாவின் விசுவாசியான பன்னீர்ச்செல்வம் ஜெயலலிதாவால் விரட்டப்பட்டு சசிகலாவால் அரவணைக்கப்பட்ட தினகரன் ஆகிய மூவரின் தலைமையில் கழகம் துண்டுபட்டுள்ளது. இவர்களின் பதவிப் போட்டியால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் சின்னமாகிய   இரட்டை இலையும் முடக்கப்பட்டுள்ளது.

இரட்டை  இலை இல்லை என்றால் தேர்தலில் வெற்றி பெறமுடியாது என்பது யதார்த்தம். தமிழக அரசு பிரிவுபட்டு நிற்கிறது. மக்களின் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்தி செய்யாது பதவிக்காகத் தலைவர்கள் அடிபடுகிறார்கள், அமைச்சரும் பொலிஸ் உயர் அதிகாரிகளும் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பதற்காக இலஞ்சம் பெறுகின்றனர், நீட் தேர்வால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது இந்த நிலையில் மக்களைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு தமிழக அரசைக் காப்பாற்ற  வியூகம் வகுக்கிறது.
ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட வேண்டும் என தர்ம யுத்தம் நடத்திய பன்னீர், தனது எதிரியான எடப்படியுடன் கைகோர்த்துள்ளார்.  தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தா சாகர் ராவ் பிரிந்திருந்த தலைவர்களின் கைகளைப்   பிடித்து இணைத்திருக்கிறார். அடுத்த நிமிடம் பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவிக்கிறார். பிரிந்திருந்தவர்கள் இணைந்ததில் எனது பங்களிப்பு எதுவும் இல்லை என மத்திய அரசு கூறுகிறது. அதனை நம்ப யாரும் தயாராக இல்லை.கட்சியில் இருந்த சகோதரர்கள் சிலகாலம் பிரிந்திருந்து மீண்டும் இணைந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்த இணைப்பு அப்படியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தவில்லை. ஏதோ ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இரண்டு கட்சிகள் இணைந்திருப்பது என்பதே உண்மை.

ஜெயலலிதாவின் மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய சிபிஐ விசாரணை வேண்டும், சசிகலாவைக் கட்சியில் இருந்து வெளியேற்ற   வேண்டும் என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை ஜெயலலிதாவின் மரணத்துக்குரிய காரணத்தைக் கண்டறிய விசாரணைக் கமிஷன் மைக்கப்படும் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியில் இருந்து தூக்கி ஏறிய நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி உத்தரவாதம் கொடுத்துள்ளார். பன்னீரைத் திருப்திப்படுத்த துணை முதல்வர்பதவி  உருவாக்கப்பட்டுள்ளது. பன்னீரின் அணியைச்சேர்ந்த மஃபாண்டியராஜனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. எடப்பாடியை எதிர்க்கும் தினகரனின் ஆதரவாளர்களிடம் இருந்த கூடுதல் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பதவிகளை எதிர்பர்க்காது  இணைந்திருந்தால் அது நியாயமான இணைப்பாக இருந்திருக்கும்.

எடப்படியும்  பன்னீரும் இனைந்ததை விரும்பாத தினகரன் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். தனக்கு ஆ தரவான 19 சட்டசபை உறுப்பினர்களை  ஓரிடத்தில் சகல வசதிகளையும் கொடுத்து தங்க வைத்துள்ளார். அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தின் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியுட்டு வெற்றிபெற்ற சிறுகட்சிகளின் தலைவர்களான தமீம் அன்சாரி,தனியரசு,கருணாஸ் ஆகியோரும் இந்த இணைப்பை விரும்பவில்லை 19 உறுப்பினர்களுடன் மேலும் இருவர் இணைந்துள்ளனர். இவை எல்லாம்  குதிரை  பேரத்துக்கான முன்னேற்பாடு இதனைத் தடுக்க வேண்டிய மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.

தமிழக முதலமைச்சரான எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என தினகரனின் ஆதரவாளர்களான 19சட்டசபை உறுப்பினர்களும் தனித்தனியாக தமிழக  பொறுப்பு ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். எடப்படியும் பன்னீரும் இனைந்தாலும் அறுதிப்பெரும்பன்மையை தமிழக அரசு இழந்துவிட்டது.  அறுதிப்பெரும்பான்மைக்கு 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை இப்போது 113 பேர் மட்டுமே உள்ளனர். நம்பிக்கை  இல்லாப்பிரேரணைக்கு உத்தரவிடக்கோரி திராவிட முன்னேற்றக் கழகமும் ஆளுனருக்குக்  கடிதம் அனுப்பி உள்ளது. தமிழகம் வந்திருக்கும் ஆளுனர் என்ன்ன செய்யப்போகிறார் என்பதை அனைவரும் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக எடப்படியும் பன்னீரும் பாரதீய ஜனதாவுடன் சேர்ந்து சதி செய்யும் என  தமிழக அரசியல்வாதிகள் நம்புகின்றனர். தமிழக அரசைக் காப்பாற்றும் நடவடிக்கையை முன்னெடுக்கும் என்பதி எதுவித சந்தேகமும் இல்லை.
சூரன்.ஏ.ரவிவர்மா

 



Friday, August 25, 2017

தோல்வியை வெற்றியாக்கியது இந்தியா

இந்தியா இலங்கை  ஆகியவற்றுக்கிடையே கண்டியில் நடைபெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் டக்வெர்த் லீவிஸ் முறைப்படி மூன்று விக்கெட்களால் இந்தியா வெற்றி பெற்றது.  நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் துடுப்பட்டத்தைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி  50   ஓவர்களில் 8  விக்கெட்களை இழந்து  236  ஓட்டங்கள் எடுத்தது. மழை  பெய்ததால்   1 மணி 15   நிமிடம் தாமதமாக போட்டி ஆரம்பமானது 47  ஓவர்களில்  231  ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என இந்திய அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 44.2  ஓவர்களில்  7 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது. டோனி, புவனேஸ்வர்  ஆகிய இருவரும் பொறுமையாக விளையாடி  இந்தியாவுக்கு வெற்றியைப்பெற்றுக் கொடுத்தனர்.

 ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களம் இறங்கிய டிக்வெல, குணதிலக ஆகிய இருவரும் நிதானமாக ஆடினர். டிக்வெல31,ஓட்டங்களிலும்  குணதிலக 19  ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.இலங்கை அணி  5 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்கள் எடுத்தபோது ஆறாவது இணையாகக் களம் இறங்கிய கபுகெதர, சிரிவர்தன ஆகிய இருவரும் 91  ஓட்டங்கள் அடித்து ஓட்ட எண்ணிகையை அதிகரித்தனர்.  கபுகெதர 58, ஓட்டங்களிலும்  சிரிவர்தன  40 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்ததும் இலங்கையின் வேகம் தடைப்பட்டது. இலங்கை அணி  50   ஓவர்களில் 8  விக்கெட்களை இழந்து  236  ஓட்டங்கள் எடுத்தது. பும்பரா  4 விக்கெட்களும்  சாகல் 2 விக்கெட்களும்  பட்டேல் யாதவ் ஆகியோர் தலா ஒரு  விக்கெற்றையும் கைப்பற்றினர்.


இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான  தவான், ரோஹித் சர்மா ஆகிய இருவரும் மிரட்டினர். இருவரும் இணைந்து  109   ஓட்டங்கள் எடுத்தனர். ரோஹித் சர்மா 54  ஓட்டங்களிலும்  தவான் 49 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா 43 பந்துகளில் அரைசதமடித்தார் ஒருநாள் போட்டியில் இவர் அடித்த அதி வேக அரைசதம் இதுவாகும். இந்தியா இலகுவாக வெற்றி பெற்றுவிடும் என நினைத்திருந்த வேளையில் 18 ஆவது ஓவரை வீசிய தனஞ்ஜெய, இந்திய அணிக்கு வில்லனாக மாறினார். முதலாவது மூன்றாவது ஐந்தாவது பந்தில்  முறையே கேதர் யாதவ், [1]கோஹ்லி[4] ராகுல் [1]ஆகிய மூவரும் விக்கெற்றைப் பறிகொடுத்தனர். 10  ஓட்டங்களில் 5 ஐந்து விக்கெற்களை இந்தியா இழந்தது. 
 தனஞ்ஜெயவின் 20  ஆவது ஓவரில் பொறுப்பற்ற  முறையில் விளையாடிய பண்டையா ஓட்டம் எடுக்காது ஆட்டமிழந்தார்.பட்டேல் நான்கு ஓட்டங்களுடன் வெளியேறினார். இந்தியா   7    விக்கெற்களை இழந்து 131    ஓட்டங்களை எடுத்தபோது எழாவது விக்கெற் இணையாக டோனியும் புவனேஸ்வரும் களம் இறங்கினர். 22 ஓட்டங்களில் 7 விக்கெற்களை இழந்து இந்தியா தவித்துக் கொண்டிருந்தது. இலங்கை ரசிகர்களின் வெற்றி முழக்கம் அரங்கை அதிர வைத்தது. தோல்வியை நோக்கிச்சென்று கொண்டிருந்த இந்தியாவை டோனியும்  புவனேஸ்வரும் இணைந்து வெற்றிப் பாதையை  நோக்கித் திருப்பினர்.மிக நிதனமாகவும்  பொறுமையாகவும்  விளையாடியதால் 44.2  ஓவர்களில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்தது.100  இவர்கள் இருவரும்  இணைந்து  100 ஓட்டங்களைப் பெற்றனர்.
டோனி 45 ஓட்டங்களையும்   புவனேஸ்வர்     53  ஓட்டங்களையும் பெற்றனர். ஐந்து ஒருநாள் போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று இந்தியா முன்னிலையில் உள்ளது. தான் மீதான விமர்சனங்களுக்கு டோனி பதிலளித்துள்ளார். ஒருநாள் போட்டியில்  புவனேஸ்வர் தனது முதலாவது அரைசதத்தைப்  பதிவு  செய்துள்ளார். டெஸ்ட் ஒருநாள் போட்டியில் ஒன்பதாவது வீரராகக்  களம் இறங்கி  அரை  சதம் அடித்த இரண்டாவது வீரராக புவனேஸ்வர் விளங்குகிறார்.  டோனி 29   ஓட்டங்கள் எடுத்திருந்தபோது  பெர்னாண்டோ வீசிய பந்து டோனியின் கால்களுக்கிடையில் சிக்கி விக்கெற்றில் பட்டது  பெயில்ஸ் விழாததால் அவர் தப்பினார். இப்போட்டியின் போது 99 ஆவது  ஸ்டம்பிங் செய்த  டோனி,சங்ககாரவின் சாதனையை சமன் செய்தார். சங்ககார  400  ஆவது போட்டியிலும் டோனி 298  ஆவது போட்டியிலும் இச்சாதனையைச் செய்தனர்.


நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடிய தனஞ்ஜெய  10  ஓவர்கள் பந்து வீசி  54  ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி அட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

 மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி கண்டியில் நடைபெறும்.


Monday, August 21, 2017

பூவற்கரையில் விநாயகன்

 பூவற்கரையில் விநாயகன்
 வதிரிகாவனம் பூவற்கரையில் கோயில் கொண்டருளும்
 விநாயக விக்னேஸ்வரப் பிள்ளையார் மகத்துவப்
 பிரார்த்தனைப் பிரபந்தம்

பிரபந்தம்
ஆனைமுகன் ஆறுமுகன் அம்பிகை பொன்னம்பலவன் 
ஞானகுரு வாணிபதம் நாடு.

கலித்துறை
அன்று சிவன் பெயர் அண்ணலெனும் பதியாய்த் திகழ்ந்து
இன்று விநாயக தத்துவ மூர்த்தமெழுந்தருளி
தொன்று தொட்டேயிவ் வதிரிப்பதியினைத் தூய்மை செய்ய
நன்னும் பூவற்கரையில் வதிந்த விநாயகனே.

பதிகம்
பரவெளி ஒளியில் ஒலியென் நாதம்
   பண்புடனோங்காரமானது உலகில்
அரனது நோக்கில் பிரணவ மெய்ப்பொருள்
    ஆனை முகத்துடனான முதல்வன்
பரன்பரை விண்கணங்கள் பணிந்து வணங்கியதால்
     பரகணபதியெனத் திருநாமம் பெற்றவர்
வரமருள இந்த வதிரிகா வனந்தனில்
    வதிந்தனர் பூவற்கரையில் விநாயகன் 1
அகர முதலெழுத்தெல்லாம் உயிர்மெய்யாய்

    ஆனசராசரம்  தோற்றமளித்ததில்
பிரணவமாகவே முன்னுக்குத் தோற்றிய
   பிள்ளையா ரேனுந் தெய்வம் முன்னவனே
நரரெனவுதித்த நம் வினையறுக்க
   நாதத்திலிருந்து தோன்றிய  வைங்கரன்
பரமன் பராசக்தி பண்புடனருளிய
   பண்ணவன்  பூவற்கரையில் விநாயகன்  2

 
படைப்புக்கு முதலில் தோற்றிய பிரணவம்
     பண்புடன் ஓங்காரம் திருமுகமாகவும்
உலக அமைப்பையே பெருவயிராகவும்
    ஊணுயிர் காத்தலீர் காலுருவாகவும்
கலைகளை எழுதத் திருக்கரத்திலோர் கொம்பும்
    கையினில் மோதகம் சராசர ஒடுக்கம்
அங்குச பாசங்கையில் ஆணவச் செருக்கை
    அடக்கியாளப் பூவற்கரையில் விநாயகன் 3

முத்தமிழ் வளர்திடக்கிரிதனி லெழுதிய
     மத்தக மததுத லொற்றைக் கொம்புடையவன்
தோத்திரக் கரத்துயர் தும்பி முகத்தவன்
      நேத்திர நுதலுடைய நிர்மல தேவன் 
அம்மையப்பனைச் சுற்றிய ருங்கனி பெற்றவன் 
     ஆறுமுகக் கடம்பன் அண்ணலாயானவன்
புண்ணிய வழிகாட்டிப் பாவத்தைப் போக்கிடப் 
      பூவற்கரைத் தலத்திலுறைந்த விநாயகன் 4

முப்புரமெரித்த சிவன் மூத்த குமாரன்
    இப்புவியோர் ஏற்று முதல் வழிபடு கடவுள்
அயன் முதல் தேவர்கள் அதிதியானவன்
    கயமுகக் கடவுள் கணபதி நாமன்
எத்தலத்திலும் முதல் பூசை ஏற்பவன்
    ஏரம்பனாக விளங்கிய மூர்த்தி
பந்தமறுக்க இந்த வதிரிகா வனத்துறை
    பண்பாளன் பூவற்கரையில் விநாயகன் 5

வாதாபி கணபதி வடபாலராய் விளங்கி 
மேதாவியாகவுலகெங்கும் பிரகாசித்து 
தாதாமல் தேவதத்துவங்களுக்கும் மேல்
பூதாரம் முதற்பல அண்டங்களையும் கடந்தோன் 
வேதாகம புராண இதிகாசங்களையுந்தந்த 
நாதாந்த மெய்ப்பொருளான கடவுள் 
பேதாதண்மை யகற்றிட இவ்வதிரிகாவனத்துறை
போதனன் பூவற்கரையில் விநாயகன் 6

வாரண வதனமும் மனித அவையமும்
      பூரண வயிறும் பூத உடலமைப்பும்
மாரண மற்றவராய் வலிமையுடையவராத்
      தாரகா சுரரைக் கொன்று தாரகமானவர்
தாமரைக் கண்ணன் மருகனென வானவர்
      தம்பி சுப்பிரமணியற்காக வள்ளியை வெருட்டியவர்
தாமத குணமகற்ற வதிரிகா வனந்தனில்
     தரித்தனர் பூவற்கரையில் விநாயகன் 7

 எண்டிசைப் பாலகற்கும் ஏகாதிபனாய் விளங்கி
   ஏறும்பெருச்சாளி சிவனின் மகன்
பண்டிசை கங்கைமைந்தன் பாவலர் களாரம்பிக்கும்
   பாங்கான நூல் முகத்தில் பதியுங் கணேசன்
முத்தமிழுக்கும் நாயகன் முதலெழுத்துமானவன்
   சித்தம் வைத்த தன் பக்தர்களை சிதையாது பாதுகாப்பவன்
பக்தகோடி மக்கட்குப் புரிந்தருட்பார்வை நல்க
   இத்தலமும் பூவற்கரையில் விநாயகன்  8

வேதவியாச முனிவர் பாரதஞ்சொல்ல

    வெற்பா வட மேருவை ரடாகக்கொண்டு
கோடான தன தொரு காம்பாலெழுதிய
   லம்போதரன் தலைவன் களிற்றுவதனன்
பாதாளம் விண்ணுலகம் பரற்தேக மாக நின்று
   பேதாதி பேத வினையெல்லா மகற்றும்
நாதாந்த மெய்ப்பொருள்  ஞான‌  விக்னேஸ்வரன்
   நாடி நடுவன் பூவற்கரையில் விநாயகன்  9

 போதாரன் நம்பிவைத்த நைவேத்திய மெல்லாமுண்டு
    பொல்லாப் பிள்ளையாரென்ற பூனை நாமம் பெற்றவர்
தேவாரம் மூவர் தமிழைத் தேடிக்காணாமையால்
   திருநாரைப் பதியிலிருந்து தில்லையிலென் றருளினார்
மாதா உமையாள் குமரன் பீதாம்பரன் மருமகன்
   மூதாதெயாங்கடவுள் மூலவிக்னேஸ்வரன்
ஆதாரமாய் வதிரி பூவற்கரையில் விநாயகன்  10

வாழி
வானவரந்தணரானிரை மரசசெங்கோல் நிறை
வழுவாது வையகமோங்க - வாழி
தானவர் செந்தமிழ்ப் புலவரோடு புனல் சொரிந்து
தழைத்திட மறை நான்குமே - வாழி
மானமுடனிருந்து வாழ் மக்கள் மதிப்புயர்வு
மலர்ந் திருகவே - வாழி
மாதர்களின் கற்புநிலை திறம்பாது நின்றொழுதி
மனமகிழ்நது வலிவருகவே - வாழி
பேதமையகற்று நம் சைவசமயம் சொல்வழிப்
பெருநீதி வழுவாதுலவவே - வாழி
பெருமை தரு திருநீறைந்தெழுத்தும் பரந்து
பெருகியோங்கிடவே - வாழி
மோதமொளிர் வதிரிகா வனமெங்கும் தங்குபுகழ்
பொங்கி பெருமாண்பு போற்றி - வாழி
பொருந்து பூவற்கரைப் பிள்ளையார் திருவருள்
பொலிந்திறங்கியருள் பூவற்கரையோனே - வாழியவே

திரு.கா.சூரன்
[தேவரையாளி இந்துக் கல்லூரி ஸ்தாபகர் ]
யாழ்ப்பாணம் வடமராச்சியில் உள்ள வதிரி பூவற்கரை பிள்ளையார் ஆலய பதிகம்  

Thursday, August 17, 2017

அரசியல் நாடகத்தால் அகற்றப்பட்ட சிவாஜி சிலை



இசையில் மூழ்கிக் கிடந்த தமிழ் சினிமாவை வசனத்தின் பக்கம் திசை திருப்பி சாதனை புரிந்தவர் வி.சி.கணேசன். அறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜியாக வாழ்ந்ததால்பெரியாரால்  சிவாஜி கணேசன் என அழைக்கப்பட்டார். பின்னர் கணேசன் என்ற அவரது பெயர் மறைந்து சிவாஜி என்ற அடையாளம் ஒட்டிக்கொண்டது. சிவாஜியின் நடிப்பைப் பார்த்துத்தான் சினிமாவில் நடிக்க வந்தேன் என்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை பலரும் ஒப்புவித்தார்கள். சிவாஜிக்கு முன் சிவாஜிக்குப் பின் என்றே தமிழ் சினிமா பிரிக்கப்பட்டுள்ளது.  கலைஞர் கருணாநிதியின் வசனங்களுக்கு உயிரூட்டியவர் சிவாஜி. கட்சி வேறுபாடின்றி இருவரும் நெருக்கமாக இருந்தனர். சிவாஜி இறந்தபின்னர் அவரது  உருவச்சிலையை சென்னையில் நிறுவி தினமும் அதனைப் பார்வையிட்டு சிவாஜியைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை அனைவருக்கும் வழங்கியவர் கருணாநிதி.  அந்தச்சிலைதான் இரவோடு இரவாக அகற்றப்பட்டது.
சிவாஜி சிலையால் அடிக்கடி விபத்தும் போக்குவரத்து இடைஞ்சலும் ஏற்படுகிறது. என வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் சிவஜிசிலையை அகற்ற உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்ட சிலை சிவாஜி மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது மேலோட்டமாகப் பார்த்தால் நீதிமன்ற உத்தரவால் சிவாஜிசிலை அகற்றப்பட்டது போன்று தோற்றமளிக்கிறது. இதன் அரசியல் பின்புலத்தை அலசி ஆராய்ந்தால் உண்மைத்தோற்றம் வெளிப்படும். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான அரசியல் பகமையின் உச்சக்கட்டமே சிவாஜிசிலை அகற்றம். கருணாநிதி ஆட்சி புரிந்தபோது இருந்த அடையாளங்கள் எவையும் இருக்கக்கூடாது என்பதே ஜெயலலிதாவின் கொள்கை.

.  கருணாநிதியால் நிறுவப்பட்ட கண்ணகிசிலை ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில்பட்டபாடு நாடே அறியும். ஜெயலலிதாவின் உத்தரவால் தூக்கி மூலையிலே போடப்பட்ட கண்ணகிசிலை கருணாநிதி ஆட்சிபீடம்   ஏறியதும் உரிய இடத்துக்கு வந்தது. புதிய சட்டசபை அமைப்பதற்கு ஜெயலலிதா பகீரத முயற்சி செய்தார். முடியவில்லை. கருணாநிதியால் கட்டப்பட்ட புதிய தலமைச்செயலகத்துக்குள் செல்லமாட்டேன் என ஜெயலலிதா உறுதிமொழி எடுத்தார். ஜெயலலிதா முதலமைச்சரானதும் மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதியால் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகம் வைத்தியசாலையாக மாற்றப்பட்டது. இவை இரண்டும் சிறு உதாரணங்கள் தான்..
 தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் சிலைகள் இருப்பதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அவற்றில்  சிவாஜிசிலையால் மட்டும் தான் இடைஞ்சலா? மற்றையவற்றால் எதுவித தடங்கலும் இல்லையா? சிவாஜிசிலைக்கு அருகே நடந்த அனைத்தும் உணமையிலேயே நடைபெற்ற விபத்துகளா அல்லது அச்சிலையை அகற்றுவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்துகளா என்பதை யாரும் ஆராய்ந்து பார்க்கவில்லை..ஜெயலலிதாவின்  ஆட்சிக்காலத்தில் கண்ணகிக்கு நேர்ந்தகதிதான் சிவாஜிக்கும் நேர்ந்துள்ளது.  கருணாநிதி ஆட்சிக்கு வந்தபின்னர்தான் நீதி கேட்டுபோராடிய கண்ணகிக்கு  நீதி கிடைத்தது.இப்போது கருணாநிதி மெளனித்துப்போயுள்ளார். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் எதாவது நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர்,என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய இரண்டு நடிகர்களுக்கு மட்டும் தான் சென்னையில் சிலை இருந்தது. இந்த வரிசையில் சென்னையில் சிவாஜிக்கு சிலை அமைக்கப்பட்டது. அது இப்போது அகற்றப்பட்டுவிட்டது. சிவாஜியின் சிலை  அகற்றப்பட்டதால் அவரது ரசிகர்கள் கொந்தளித்துப்போய் உள்ளனர். ஆனாலும் அமைதியாகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கமல் சீமான் போன்றவர்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். உறக்கத்தில் இருந்த நடிகர் சங்கம் எல்லாம் முடிந்தபின்னர் அறிக்கை விட்டுள்ளது. ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் தஞ்சமடைந்திருந்தால் சிவாஜிசிலை காப்பாற்றப்பட்டிருக்கும். அவரது பிள்ளைகளான ராம்குமாரும் பிரபுவும்  அதனை விரும்பவில்லை.  சென்னையில் சிவாஜிக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர்கள் கூறியதால் சிவாஜி ரசிகர்கள் ஆறுதலடைந்துள்ளனர். 
சிவாஜியின் தகப்பன் சுதந்திரப்போராட்ட காலத்தில் காந்தி மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை வைத்தவர். திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பமானபோது சிவாஜி அக்கட்சியில் சேர்ந்து பிரசாரம் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடவுள் மறுப்புக் கொள்கையை அவர் மீறியதால் அக்கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கர்மவீரர் அடிபட்டு எல்லாவற்றையும் இழந்து கரை ஒதுங்கினார். அரசியலில் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் கருணாநிதி ,சிவாஜி-எம்.ஜி.ஆர்,சிவாஜி ஆகியோரின் நட்புக்குப் பாதகம் ஏற்படவில்லை.


செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன்,கொடி காத்த குமரன்சாம்ராட்அசோகன்,  அரிச்சந்திரன், சாஜகான்,சலீம்,கர்ணன், கர்ணன்,ராஜராஜ சோழன்,திருநாவுக்கரசர், சோக்கிரடீஸ், மகாகவி காளிதாஸ் போன்ற புராண இதிகாச பாத்திரங்களை கண்முன்னே நிறுத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்து மரியாதை செய்தவர். அப்படிப்பட்ட ஒருவரின் சிலையை அகற்றுமாறு கோரி ஒருவர் நீதிமன்றத்தை அணுகியபோது ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது. இந்தியாவே வியப்புடன் திரும்பிப்பார்த்த வைபவம் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுடைய திருமணம். தனது வளர்ப்பு மகனின் திருமணத்தின் மூலம் சிவாஜி வீட்டு சம்பந்தியானார் ஜெயலலிதா. கருணாநிதியின் பகைக்கு முன்னால் சிவாஜியின் உறவு அவருக்குப் பெரிதாகப்படவில்லை.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சென்னையில் சிவாஜிக்கு சிலை அமைக்கப்படும் என ஆளுநரின் அறிவிப்பு வெளியானது. 2006   ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி   750 கிலோ நிறை உடைய 8 அடி உயரமுள்ள கம்பீரமான  சிவாஜியின் சிலை திறக்கப்பட்டது  சிவஜிக்குச்சிலை வைக்கும் எண்ணம் உதயமானபோது பண்டிச்சேரிக்குச்சென்ற கருணாநிதி அங்குள்ள சிவாஜியின் சிலையை பார்த்தார். அச்சிலை அவரின் மனத்தைக் கவர்ந்தது. அதனை வடித்த ஸ்தபதி மணியிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அவர் வெளிநாடு  செல்ல நேர்ந்ததால் அவருடைய உதவியாளர் ஸ்தபதி ரவி சிலையை நிறைவு செய்தார்.
காந்தியவாதி சீனிவாசன் என்பவர் சிவாஜியின் சிலையை அகற்ற வேண்டும் என வழக்குத் தாக்கல் செய்தார். காந்தி எனும் வழக்கறிஞர் வாதாடி சிலையை அகற்றும் ஆணையைப் பெற்றார். சிலையை அகற்றக்கூடாது என்பதற்கான காரணம் எதனையும் தமிழக அரசு முன்வைக்கவில்லை. 2015  ஆம் ஆண்டு தீர்ப்பு  வழங்கப்பட்டது.  அரசியல் கட்சி அல்லது சாதி அமைப்புத் தலைவரின் சிலை என்றால் தமிழகத்தில் வன்செயல் வெடித்திருக்கும். சிவாஜி ரசிகர்கள் இன்று முதியவராகிவிட்டனர். ஆனாலும் சிவாஜியின் மீதான அவர்களது பற்றும் பாசமும் சிறிதளவும் குறையவில்லை.


சென்னையில் தலைவர்களின் சிலைகள் இருக்கும் இடத்தில் சிவாஜிக்குச்சிலை வைக்க வேண்டும் என்ற கோஷம் வலுவாக எழுந்துள்ளது. கட்சி பேதமற்று அனைவரும் ஒருமித்துக் குரல் கொடுத்துள்ளனர்.இனி ஒரு விதி செய்வோம் சிவாஜிக்குச்சிலை அமைப்போம் அரசியலுக்கு அப்பால் என கமல் தெரிவித்துள்ளார். சிவாஜிக்கு இன்னொரு சிலை வைக்கலாம். அது நடிகருடைய நட்புக்கு இலக்கணமாக கலைஞர் அமைத்த சிலைக்கு ஈடாகாது என்பது நிதர்சனம்.

சூரன்.ஏ.ரவிவர்மா