Showing posts with label அழகிரி. Show all posts
Showing posts with label அழகிரி. Show all posts

Monday, September 3, 2018

நிழல் தலைவர் ஸ்டாலின் நிஜத் தலைவரானார்


திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவராக ஸ்டாலின்  பொறுப்பேற்பார்  என்ற செய்தி  கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே வரையறை செய்யப்பட்டு விட்டது. சிறந்த ஒரு தலைவரால் வழி நடத்தப்படும் அரசியல் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை தொண்டர்களும் ஏனையவர்களும் ஊகித்து வைத்திருப்பார்கள். சடுதியாக நடைபெறும் சம்பவங்கள் அந்த ஊகங்களை உடைத்தெறிந்தமை வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.

நேருவின் மறைவுக்குப் பின்னர் அவருடைய மகள் இந்திரா காந்தியை காமராஜர் அரசியலுக்கு அறிமுகப்படுத்தினார். இந்திரா காந்தி கொல்லப்பட்டபின் அவருடைய மகன் ராஜீவ் தலைவரானார்.. ராஜீவ் கொல்லப்பட்டபின் அவருடைய மனைவி சோனியா தலைவரானார்.  ராஜீவ், சோனியா ஆகியோரின் மகன் ராகுல் இப்போ காங்கிரஸ் தலவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.வாஜ்பாய்க்குப் பின்னர் பாரதீய  ஜனதாக் கட்சியை  அதவானி வழி நடத்துவார் என எதிர்பார்த்திருந்த வேளை மோடி அலையில் அவர் அடித்துச்செல்லப்பட்டார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில்  அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு இடமில்லை. கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்கள் ஸ்டாலினைத் தலைவராக நினைத்டுக் கொண்டனர். கருணாநிதி நோய் வாய்ப்பட்டிருந்தபோதும், செயற்படாதிருந்த போதும் ஸ்டாலின் சொன்னதையே மூத்த தலைவர்கள்  வழிமொழிந்தார்கள். ஆகையினால் ஸ்டாலின் தலைவரானது ஒன்றும் புதுமையல்ல.

அண்ணாத்துரை மறைந்தபோது நெடுஞ்செழியனா, கருணாநிதியா என்ற போட்டி ஏற்பட்டது. சகல எதிர்ப்புகளையும் தகர்த்து கருணாநிதி தலைவரானார். அப்போது கருணாநிதிக்கு 45 வயது. இப்போது கருணாநிதி மறைந்த பின்னர் எதுவித சலனமும் இன்றி  65 வயதில் ஸ்டாலின் தலைவரானார். கருணாநிதியைப் போன்றே ஸ்டாலினும் அடிமட்டத் தொண்டனாகப் போராடி சிறை சென்று கட்சியின் உயர் பதவியைப் பிடித்துள்ளார்.

கருணாநிதி கட்சித் தலைவனான போது திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் கட்சியாக இருந்தது. தமிழக எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். இந்திய அரசியலில் ஒரு கட்சித் தலைவராக 50 வருடம் வழி நடத்தியவர் கருணாநிதி மட்டும்தான்.

ஸ்டாலினின் முன்னால் மிகப்பரிய பொறுப்புகள் காத்திருக்கின்றன.  சென்னைமேயராகவும் துணை முதல்வராகவும் கடமையாற்றிய அனுபவம் அவருக்குக் கைகொடுக்கும். ஊழலுக்கு அப்பாற்பட்ட தலவராக ஸ்டாலின் விளங்குகிறார். அவருடைய மென்மையான் அரசியல் போக்கை  சிலர் விரும்பவில்லை.
அதிரடி அரசியலில் விருப்பம் கொண்ட அண்ணன் அழகிரி, தம்பி ஸ்டாலினுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கி உள்ளார். கருணாநிதியின் விசுவாசிகள் அனைவரும் தனக்குப் பின்னல் இருப்பதாக அழகிரி அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள யாரும் அழகிரிக்கு ஆதரவாக இல்லை. 

திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அனைவரும் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருக்கின்றனர். கட்சிய விட்டு வெளியேறியவர்களை மீண்டும் இணைப்பதற்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். கட்சியைப் பலப்படுத்தித் தனது தலைமைப் பதவியை வலுப்படுத்துவதற்கு ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

  மு..ஸ்டாலின் கடந்த 1953-ஆம் ஆண்டு மார்ச்  1 ஆம் திகதி கருணாநிதி - தயாளு அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார்.   1967ல் முதல் முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தில்  சேர்ந்தார். அதே ஆண்டு 14 வயதாக இருந்த போது,  திராவிட முன்னேற்றக் கழகத்துக்காகப்  பிரசாரம் செய்தார். இதுவே ஸ்டாலினின் முதல் பிரசாரம் ஆகும். 1968ல் திராவிட முன்னேற்றக் கழக  இளைஞர் அணிக்கு முன்னோட்டமாக இளைஞர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார்.

  அதன்பின் சென்னை நியூ கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்றார். 1973-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக  பொதுக்குழுவில் உறுப்பினர் ஆனார். 1975-இல் எமர்ஜென்சி காரணமாக சிறைக்கு சென்றார். இந்த சிறை வாழ்க்கை ஸ்டாலினின் அரசியல் வாழ்வில் திருப்பு முனையாக  இருந்தது.   1975-இல் துர்காவை மணந்தார். 1977 இல் உதயநிதி ஸ்டாலின் பிறந்தார். 1978 இல் முதல் திரைப்படத்தை தயாரித்தார்  சில காட்சிகளில் நடித்தார்.

1984 இல் ஆயிரம் விளக்கு தொகுதியில் முதல்முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தார் ஸ்டாலின்.   1988 இல் ஒரே ரத்தம் படத்தில் நடித்தார். 1989 இல் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991 இல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 1993-ஆம் ஆண்டு இளைய சூரியன் என்ற இதழை தொடங்கினார்.   1996 இல் மீண்டும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிபெற்றார்.

 1996 சென்னையின் 37 ஆவது மேயராக ஸ்டாலின் தேர்வானார். அவர் அப்பதவியில் 2002-ஆம் ஆண்டு வரை நீடித்தார். சென்னையின் மேயரானது ஸ்டாலின் அரசியல் பயணத்தில் மற்றொரு திருப்பு முனையானது. ஜெயலலிதா அமுல் படுத்திய சட்டத்தால் மேயர் பதவிய இழந்தார்.  2001 இல் மூன்றாவது முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் வென்றார். 2001 இல் ஊழல் குற்றச்சாட்டில் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார்.  2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளூர் நிர்வாக துறை அமைச்சரானார். கொளத்தூர் தொகுதியில் வெற்றி 2008 இல்  திராவிட முன்னேற்றக் கழகத்தில்  பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. 2009 இல் தமிழகத்தின் துணை முதல்வரானார். அவர் அப்பதவியில் 2011-ஆம் ஆண்டு வரை நீடித்தார். 2011 இல் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வென்றார். 2016 இல் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் வென்றார்.

 2016 இல் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.  கருணாநிதி நோய்வாய்ப்பட்டதால் 2017 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.  இதைத் தொடர்ந்து  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.  . ஸ்டாலினை தவிர்த்து வேறு  எவரும்  வேட்புமனுவை தாக்கல் செய்யாததால் அவர்   தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திராவிட மூன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஸ்டாலின், தனது   முதல் உரையில் மாநில சுயாட்சி, மதசார்பின்மை ஆகியவற்றை வலியுறுத்திப் பேசினார். இந்தியாவுக்கு காவி பூசுபவர்களை எதிர்ப்பேன் என மத்திய அரசையும், முதுகெலும்பில்லாத அரசு என தமிழக அரசையும் கண்டித்துள்ளார். அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பாதையில்  செல்லப்போவதாக ஸ்டாலின் சூழுரைத்துள்ளார்.
”என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே” என்பது கருணாநிதியின் கரகரத்த குரல். “ என் உயிரினும் மேலான கலைஞரின் அன்பு உடன் பிறப்புகளே” எனக் கூறி ஸ்டாலின்  தனது உரையை ஆரம்பித்தார்.

திருப்பரம்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் ஸ்டாலினின் தலைமைத்துவத்துக்கு சவால் விடும் களமாக உள்ளது. திருப்பரம் குன்றம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டை.. திருவாரூர் கருணாநிதியின் சொந்த ஊர். இந்த இரண்டு தொகுதிகளையும் ஸ்டாலின் எப்படிக் கையாளப் போகிறார் என்பதை அறிய அரசியல் ஆய்வாளர்கள் ஆவலாக உள்ளனர்.

Monday, October 26, 2015

இடம்மாறிய தமிழகசட்டசபை


இராமர் இருக்கும் இடம் அயோத்தி என்பதுபோல ஜெயலலிதா இருக்கும் இடம்தான் தமிழக அரசு இயந்திரம் இயங்கும் இடம் என்பது எழுதப்ப‌டாத விதியாக உள்ளது. ஒய்வெடுப்பதற்காக கொடநாடு பங்களாவுக்கு ஜெயலலிதா சென்றுள்ளார்.அங்கிருந்தபடியே தமிழக அரசு இயந்திரத்தை அவர் இயக்குவார்.தமிழக மக்கள் பலபிரச்சினைகளுக்கு முமம் கொடுக்கமுடியாது தடுமாறுகிறார்கள் முதல்வர் ஜெயலலிதா கொடநாடு பங்களாவில் உல்லாசமாக ஓய்வெடுக்கிறார் என எதிர்க்கட்சியின கூப்பாடுபோடுகின்றனர். ஜெயலலிதா கொடநாடு பங்களாவில் இருந்தபடியே தமிழக அரசை இயக்கும் அதேவேளை கழகத்தையும் கட்டுக்கோப்பாகப் பார்க்கிறார்.

அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தின் ப‌தினேழாவ‌து ஆண்டுவிழா கோத்த‌கிரிக்கு இட‌மாற்ற‌ம் பெற்றுள்ள‌து. ஜெய‌ல‌லிதா கொட‌நாட்டில் த‌ங்கி இருப்ப‌த‌னால் சென்னையில்  ந‌ட‌க்க‌ வேண்டிய‌ க‌ழ‌க‌த்தின் ஆண்டு விழா கோத்த‌கிரியில் மிக‌ மிக‌ எளிமையாக‌ ந‌டை பெற்ற‌து. எந்த‌வித‌மான‌ ப‌க‌ட்டும் இல்லாம‌ல் ஐந்து நிமிட‌ங்க‌ளில் ஆண்டுவிழா முடிவ‌டைந்த‌து. ஆனால் ஜெய‌ல‌லிதாவுக்கு பிர‌மாண்ட‌மான‌ வ‌ர‌வேற்ப‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து. திரும்பும் இட‌மெல்லாம் அவ‌ரை வாழ்த்தி ப‌ன‌ர்க‌ள் க‌ட்ட‌வுட்டுக்க‌ள் வைக்க‌ப்ப‌ட்ட‌ன‌.கூடைகூடையாக‌ பூக்க‌ள் தூவி ஜெய‌ல‌லிதா வ‌ர‌வேற்க‌ப்ப‌ட்டார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆண்டுவிழாவா ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழாவா என்ற சந்தேகம் ஏற்பட்டது. கழகத்தைப்பற்றிய அறிவிப்பு வாழ்த்து எவையுமே அங்கு காட்சிப்படுத்தப்படவில்லை.

அண்ணா திராவிட‌  முன்னேற்ற‌க் க‌ழ‌க  ஆண்டுவிழாவுக்கு முந்தைய நாள்வழக்கம்போல் தொண்டர்களுக்குக் கடிதம் எழுதினார் ஜெயலலிதா. தமிழக மக்களின் மகிழ்ச்சிதான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும்வளமான வாழ்வும்தான்நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்’ என கடிதத்தில் உருகியிருக்கிறார் ஜெயலலிதா. சட்டமன்றத் தேர்தலில் பெரு வெற்றி பெற்றிட இன்றே பணிகளைத் தொடங்க வேண்டும்’ என்றும் சொல்லியிருக்கிறார்.

த‌மிழ‌க‌ அமைச்ச‌ர்க‌ள்ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர்கள்நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர்கள்,மாவட்ட நிர்வாகிகள்  ஆகியோர் கொட‌நாட்டில் குவிந்தார்க‌ள். ஜெய‌ல‌லிதாவின் க‌டைக்க‌ண் பார்வை ப‌ட‌வேண்டும் என்ப‌தே இவ‌ர்க‌ள‌து முக்கிய‌ நோக்க‌ம். போக்குவ‌ர‌த்து நெருக்க‌டியில் கோத்த‌கிரி திண‌றிய‌து.ப‌ய‌ண‌ப்பாதை மாற்ற‌ப்ப‌ட்ட‌த‌னால் பொது ம‌க்க‌ள் சிர‌ம‌ப்ப‌ட்டார்க‌ள்.


த‌மிழ‌க‌ முத‌ல‌மைச்ச‌ராக‌ப் ப‌த‌வி ஏற்ற‌பின்ன‌ர் ஜெய‌ல‌லிதா ப‌ல‌ க‌டித‌ங்க‌ள் எழுதிவிட்டார்.பிர‌த‌ம‌ர் மோடியின் விலாச‌த்துக்கு  அவர் எழுதிய‌ க‌டித‌ங்க‌ளுக்கு என்ன‌ ந‌ட‌ந்த‌தென‌த்தெரியாது. க‌ருணாநிதி முத‌ல‌மைச்ச‌ராக‌ இருந்த‌போது  அன்றைய‌ பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங்குக்கு ப‌ல‌ க‌டித‌ங்க‌ள் எழுதினார். அவற்றுக்கும் என்ன‌ந‌ட‌ந்ததென  இன்றுவ‌ரை தெரியாது. இந்திய‌ மீன‌வ‌ர்க‌ள் மீது இல‌ங்கைக் க‌ட‌ற்ப‌டை ந்ட‌த்திய‌ தாக்குத‌ல் ப‌ற்றி க‌ருணாநிதி அன்று ப‌ல‌க‌டித‌ங்க‌ளை பிர‌த‌ம‌ரின் விலாச‌த்துக்கு அனுப்பினார். அன்று க‌ருணாநிதியைக் கேலிசெய்த‌ ஜெய‌ல‌லிதா இன்றைய‌ பிர‌த‌ம‌ருக்கு க‌டித‌ங்க‌ள் எழுதுகிறார்.
தமிழக மீனவர் பிரச்சினை பற்றி பேசுவதற்கு பிரதமரைச் ச்ந்தித்துப்பேச அண்ணா திராவிட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் விண்ணப்பம் கொடுத்து ஒரு வாரமாகியும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வரவில்லை.  வழமையாக ஓரிரு நாட்களில் பதிலளிக்கப்படுவது வழமை.
இதனால் அண்ணா திராவிட முன்னேற்ற‌க் கழகத்தை மத்திய அரசு உதாசீனம் செய்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு விஜயம் செய்த பிரதமர் சம்பிரதாயங்களை மீறி ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்தார். பிரதமரை சந்திக்க ஜெயலலிதாவின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் முடியவில்லை.மத்திய அரசின் அரசியல் சதுரங்கத்தில் இதுவும் ஒன்று

கொட‌நாட்டில் ஜெய‌ல‌லிதா ஒருமாத‌ம்த‌ங்கி  இருப்பார் என‌றுதெரிவிக்க‌ப்ப‌டுகிற‌து.ஒருமாத‌ நிக‌ழ்ச்சிநிர‌ல் அனைத்தும் கொட‌நாட்டைச்சுற்றியே ந‌டைபெறும். சும்மா இருக்கும் எதிர்க்க‌ட்சிக‌ளுக்கு ந‌ல்ல‌ தீனி கிடைத்து விட்ட‌து. த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் வ‌ழ்மையாக‌ ந‌டைபெறும் ச‌ம்ப‌வ‌ம்தான் இது.இவ‌ற்றுக்கெல்லாம் ஜெய‌ல‌லிதா அசைந்து கொடுக்க‌ மாட்டார். அவ‌ர் கொட‌நாட்டில் இருந்த‌ப‌டியே தான் நினைத்த‌தை ந‌ட‌த்துவார்.

அண்ணா திராவிட‌ முன்னேற்ற‌க் கழ‌க ஆண்டு விழாவில் ஜெய‌ல‌லிதா ஏதாவ‌து முக்கிய‌ அறிவிப்பை வெளியிடுவார் என‌ நினைத்திருந்த தொண்ட‌ர்க‌ள் ஏமாந்துவிட்ட‌ன‌ர். அவ‌ர‌து உட‌ல்நிலை ச‌ரியில்லை என்ப‌த‌னால்தான் ஆண்டு விழாவில் பேச‌வில்லை என‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.

சென்னையில் இருந்த‌போதுகூட‌ ஜெய‌ல‌லிதா  வெளியில் ந‌ட‌மாட‌வில்லை. முக்கிய‌ நிக‌ழ்ச்சிக‌ளை  அலுவ‌ல‌கத்தில் அ‌ல்ல‌து வீட்டில் இருந்த‌ப‌டி ஆர‌ம்பித்து வைத்தார். அப்போதே அவ‌ருடைய‌ உட‌ல்நிலை ப‌ற்றி  அர‌ச‌ல்புர‌ச‌லாக‌ செய்திக‌ள் வெளியாகின‌.இதெல்லாம் எதிர்க்க‌ட்சிக‌ளுக்குக் கிடைத்த அவல்,‌ இத‌னால் தொண்ட‌ர்க‌ள் சோர்வ‌டைய‌ மாட்டார்க‌ள்.

ந‌ம‌க்கு நாம் என்ற‌ ஸ்டாலினின் ந‌டைப்ப‌ய‌ண‌ம் தொண்ட‌ர்க‌ளை உற்சாக‌ப்ப‌டுத்தி உள்ள‌து. உட‌ல்நிலை கார‌ன‌மாக‌  க‌ருணாநிதி வெளியூர் போக‌ முடியாத‌ நிலையில் ஸ்டாலின் க‌ள‌த்தில் இற‌ங்கிய‌து அவ‌ர் மீது ந‌ம்பிக்கையை உருவாக்கி உள்ளது. ஸ்டாலினின் ந‌டைப்ப‌ய‌ன‌ம் ம‌‌க்க‌ளுட‌னான‌ ச‌ந்திப்பு என்ப‌ன‌ அவ‌ர்மீதான் எதிர்பார்ப்பை ஏற்ப‌டுத்தி உள்ள‌ன.


ஸ்டாலினுட‌ன் செல்பி எடுக்க‌ முற்ப‌ட்ட‌ ஒருவ‌ர் அவ‌ரால் தாக்க‌ப்ப‌ட்ட‌ வீடியோ வைர‌சாக‌ ப‌ர‌விய‌து. மெட்ரோர‌யில்ப‌ய‌ண‌த்தின் போது ஸ்டாலினால் ஒருவ‌ர் தாக்க‌ப்ப‌ட்டார். இன்னொரு சந்தர்ப்பத்தில் ஸ்டாலினை நெருங்கிய‌ ஒருவ‌ர் தாக்க‌ப்ப‌ட்டார். இப்போது மூன்றாவ‌து முறையாக‌ ஸ்டாலின் மீது குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து.செல்பி எடுக்க‌ முற்ப‌ட்ட‌போது ஸ்டாலினால் தாக்க‌ப்ப‌ட்ட‌தாக‌க் கூற‌ப்ப‌டுப‌வ‌ர் ஸ்டாலினுட‌ன் இணைந்து எடுத்த‌ செல்பி ம‌றுநாள் ஊட‌க‌ங்க‌ளில் முக்கிய‌ இட‌த்தைப்பிடித்த‌து. முன்னைய‌ தாகுத‌ல்க‌ளின் போது அப்ப‌டி எதுவும் ந‌ட‌க்க‌வில்லை என‌ ஸ்டாலின் தெரிவித்தார். இப்போது ஒருப‌டி முன்னேறி  த‌ன்னால் தாக்க‌ப்ப‌ட்ட‌தாக‌க்கூறிய‌வ‌ரையே அழைத்து செல்பி எடுத்து மற்ற‌வ‌ர்க‌ளுக்கு அதிர்ச்சிய‌ளித்துள்ளார்.

ஸ்டாலினின் நடைப்ப‌ய‌ணத்தை திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தில் உள்ள‌‌ சில‌ர் ர‌சிக்க‌வில்லை. அழ‌கிரி மீண்டும் வ‌ருவார் என‌ நினைப்ப‌வ‌ர்க‌ள்  ஸ்டாலினின் வ‌ள‌ர்ச்சியை விரும்ப‌வில்லை. நடைப்ப‌ய‌ண‌த்தால் ம‌க்க‌ளின் ம‌ன‌தைக் க‌வ‌ர்ந்த‌ வைகோவும்  ஸ்டாலின்மீது சீறிவிழுந்துள்ளார்.வைகோவின் ந‌டைப்ப‌ய‌ண‌ம் ம‌க்க‌ளைத் திரும்பிப்பார்க்க‌ வைத்த‌து உண‌மைதான். தேர்த‌லில் வெற்றி பெறுவ‌தற்கு  அவ‌ர‌து ந‌டைப்ப‌ய‌ண‌ம் உத‌வ‌வில்லை.  ஸ்டாலினின் நிலையும் அப்ப‌டித்தான் இருக்கும் என‌ அவ‌ர் சாடியுள்ளார்.


க‌ருணாநிதியின் உட‌ல்நிலை பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌‌து என்ப‌து அனைவ‌ருக்கும் தெரியும். ச‌க்க‌ர‌ நாற்காலியில் இருந்த‌ப‌டி ச‌க‌ல‌ அலுவ‌ல்க‌ளையும் செய்து  முடிக்கிறார். ஜெய‌ல‌லிதாவின் உட‌ல்நிலை ப‌ற்றி அவ்வ‌ப்போது த‌க‌வ‌ல்க‌ள் வெளிவ‌ந்தாலும் உண்மை நிலைவ‌ர‌ம் எவ‌ருக்கும் தெரியாது.முத‌ல்வ‌ ர்ப‌த‌வியை பிடிக்கும் போட்டியில் இருக்கும் ஸ்டாலினின் உட‌ல்நிலை ந‌டுநிலையான‌ வாக்காள‌ர்க‌ளை க‌வ‌ரும். இது தேர்த‌ல் முடிவை மாற்றும் கார‌ணியாக‌வும் அமைய‌லாம்.

திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தில் இருந்து அழ‌கிரி  வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌நிலையின் ஸ்டாலினின் ந‌டைப்ப‌ய‌ன‌ம் அவ‌ர‌து ஆத‌ரவாள‌‌ர்க‌ளூக்கு  புதிய‌ உற்சாக‌த்தைக் கொடுத்துள்ள‌து.
வர்மா
தமிழ்த்தந்தி
25/10/15



Saturday, October 10, 2015

திமுக புள்ளிகளை நெருங்குமா பொலிஸ்?

  கூடல் மாநகர்,மீனாட்சியின் ஆட்சி,சங்கம் வளர்த்த மதுரை என்ற சிறப்புகளுடன் பெருமை பெற்ற மதுரையை தனது  பிடிக்குள் வைத்திருந்தவர்  கருணாநிதியின் மகன் அழகிரி. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வைகோ வெளியேறிய‌போது த‌‌மிழ‌க‌த்தின் தென்ப‌குதியில் க‌ட்சியை வள‌‌ர்ப்ப‌த‌ற்காக‌ சென்னையில் இருந்து ம‌துரைக்கு ந‌க‌ர்ந்தார் அழ‌கிரி. க‌ருணாநிதி எதிர்பார்த்த‌துபோல் க‌ட்சியை வ‌ள‌ர்த்த‌ அழகிரி அவ‌ர் எதிர்பார்க்காத‌வ‌கையில் த‌ன்னையும் வ‌ள‌ர்த்துக்கொண்டார்.

திராவிட முன்னேற்றக்கழகத்தின் மதுரைக் கிளைபோலவே அவரது செயற்பாடுகள் அமைந்திருந்தன. கழகத்லைமைக்கு கட்டுப்படாத அவரது செயற்பாடுகளால் இருதலைக்கொள்ளி எறும்பாக கருணாநிதி கலங்கினார்.  எல்லை மீறிய அழகிரி  தனது விசுவாசிகளுடன் இ ணைந்து கழகத்தை எதிர்த்தார். அழகிரியுன் கொட்டத்தை அடக்குவதற்காக அவரும் அவரது ஆதரவாளர்களும் சிலகாலம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அழ‌கிரி இல்லாம‌ல் ம‌துரையில் வெற்றிபெற‌முடியாது என்ப‌த‌னால்  அவ‌ருக்கு ம‌ன்னிப்பு வ‌‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

த‌மிழ‌க‌த்திலும் ம‌த்தியிலும் இருந்த‌ அர‌சிய‌ல் செல்வாக்கினால் அழ‌கிரியின் ஆட்சி ம‌துரையில் கொடிக‌ட்டிப்ப‌ற‌ந்த‌து.த‌மிழ‌க‌த்திலும் ம‌த்தியிலும் திராவிட‌ முன்னேற்ற‌க்க‌ழ‌க‌த்தின் அர‌சிய‌ல் செல்வாக்கு ச‌ரிந்த‌த‌னால் அழ‌கிரியின் ஆட்ட‌ம் அட‌ங்கி விட்ட‌து. ஸ்டாலினுக்கும் அழ‌கிரிக்கும் இடையிலான‌ வாரிசுப்போராட்ட‌த்தின் உச்ச‌க்க‌ட்ட‌ மோத‌லால் க‌ட்சியில் இருந்து அழ‌கிரி தூக்கி வீச‌ப்ப‌ட்டார்.இந்த‌ நிலையில் பொட்டு சுரேஷின் கொலையின் சூத்திர‌தாரி என‌ பொலிஸாரால் தேட‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ அட்டாக் பாண்டி இர‌ண்ட‌ரை வ‌ருட‌ங்க‌ளின் பின்ன‌ர் கைது செய்ய‌ப‌ட்டுள்ளார்.


பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி ஆகிய‌ இரண்டுபேரும் அழ‌கிரியின் மிக‌த்தீவிர‌மான் விசுவாசிக‌ள்.அழ‌கிரி நினைத்த‌தை க‌ன‌க‌ச்சித‌மாக‌ செய்துமுடிக்கும் ஆற்ற‌ல் உள்ள‌‌வ‌ர்க‌ள்.அழ‌கிரியின் அர‌சிய‌ல் வ‌ள‌ர்ச்சியில் இவ‌ர்க‌ளின் ப‌ங்கு முக்கிய‌மான‌து. அழ‌கிரியின் அர‌சிய‌ல் அத்திபார‌ம் ஆட்ட‌ம் க‌ண்ட‌தும் ந‌க‌மும் ச‌தையும் போல‌ இருந்த‌ அட்டா‌க் பாண்டியும்,பொட்டு சுரேஷும் கீரியும் பாம்பும் போல் மாறின‌ர்.த‌மிழ‌க‌ ஆட்சி திராவிட‌ முன்னேற்ற‌க் க‌ழ‌க‌த்தின் கையை விட்டுப்போன‌தும் அர‌சிய‌ல் ரீதியாக‌ இருவ‌ரும் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர்.


 குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட பொட்டுசுரேஷ் பிணையில் விடுதலையானதும் அழகிரியைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து விட்டு ஸ்டாலினுடன் இணைந்தார்.அழகிரியின் வலது கரம்தென் தமிழகத்தின் துணை முதல்வர் என ஜெயலலிதாவல் அடையாளம் காட்டப்பட்ட பொட்டுசுரேஷ் அவரை விட்டு வெளியேறியதும் மதுரையின் கழகத்தொண்டர்கள் கலங்கினர். பொட்டுசுரேஷும் அட்டாக்பாண்டியும் ஒரே அணியில் இருந்தாலும் அவர்களுக்கிடையில் யார் பெரியவன் என்ற போட்டியும் மறைமுகமாக இருந்தது. அட்டாக் பாண்டியின் கை ஓங்கியதும் பொட்டுசுரேஷ் தன‌து பாதையை  மாற்றினார்.

பாதை மாறிய பொட்டுசுரேஷ் 2013 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி  மர்மகும்பலால் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டார்.அவரது உடலில் முப்பத்தி ஏழு வெட்டுக்காயங்கள் இருந்தன சம்பவ இடத்திலேயெ அவரது உயிர் பிரிந்தது.  பொட்டு சுரேஸ் கொல்லப்பட்ட ஜனவரி 31ம் தேதிக்கு மறுதினம் அட்டாக் பாண்டியின் ஆதரவாளர்களான கீரைத்துறையைச் சேர்ந்த சபா என்ற சபாரத்தினம்சந்தானம்ராஜா என்ற ஆசா முருகன்லிங்கம்சேகர்செந்தில்கார்த்திக் ஆகிய 7 பேர் நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.  ஆனால் போலிஸார். இன்னும் சிலரை தேடினார்கள். அவர்களின் அட்டாக் பாண்டி முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார்.

அட்டாக்பாண்டியின் அக்கா மகன் விஜயபாண்டியும் நண்பர் பிரபுவும் சேலம்நீதிமன்றத்தில் சரணடைந்தனபொலிஸாரின்  கண் அட்டாக்பாண்டிமேல்தான் இருந்தது. தமிழக பொலிஸுக்கு தண்ணிகாட்டிய அட்டாக்பாண்டி மும்பையில் கைது செய்யப்பட்டார். தமிழக சட்டமன்றத்தேர்தலுக்காக கட்சிகள் தயாராகும்வேளையில் அட்டாக்பாண்டியின் கைதுக்கும் அரசியல் சாயம் பூசப்பட்டுள்ளது.

அழகிரியின் பக்கத்தில் இருந்த பொட்டுசுரேஸ் ஸ்டாலினின் பக்கம் சென்றதை அழகிரியின் ஆட்கள் விரும்பவில்லை. அழகிரியின் மகன் துரைத‌யாநிதியும் ராமகிருஷ்ணனும் சென்னையில் பொட்டுசுரேஷை சந்தித்த தகவல் ஏற்கெனவே பொலிஸாருக்குத்தெரியும். இதுபற்றிய வாக்குமூலம் அப்போது பெறப்பட்டபோது மேலித்து  அழுத்தம் கார ணமாக விசாரனை கைவிடப்பட்டது. அந்த விசாணையை மீண்டும் தொட‌ங்க வேண்டும் என கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி தெரிவித்துள்ளார்.

பொட்டுசுரேஷ் கொல்லப்பட்ட அன்று தான் சென்னையில் இல்லை என அட்டாக் பாண்டி கூறி உள்ளார்.அட்டாக்பாண்டியை கொலைசெய்வதற்கு பொட்டுசுரேஷ் திட்டமிட்டதால்தான் தாம் அவரை கொன்றதாக சரண்டைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். பொட்டுசுரேஷ் கொல்லப்பட்டதற்கு தனிப்பட்ட பகையே காரண்ம் .ஆனால் அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்ட பின்னணியில்   அரசியல் உளளது.

ஜெயலலிதா  முதல்வரானதும்  கருணாநிதிஸ்டாலின்அழகிரி ஆகியோரைக்  கைது செய்ய முயற்சிசெய்தார் போதிய ஆதாரங்கள் இல்லாமையினால் அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டது. ஸ்டாலின் ஒருபடிமேலேபோய் கமிசனர் அலுவலகத்துக்குச் சென்று தன்னைக் கைது செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார்.  தனது அரசியல்  எதிரிகளை  ஏதாவ்து ஒரு வழக்கில் சிக்கவைக்க வேண்டும் என்பது ஜெயலலைதாவின் விருப்பம்.அந்த விருப்பத்தை நிறைவு செய்வதற்குரிய சந்தர்ப்பம் இன்னமும் அமையவில்லை.

அட்டாக்பாண்டி கைது செய்யப்பட்டதும்  விசாரணை வளை யத்தில் ஸ்டாலின் என்று பரபரப்பன் செய்திகள் வெளியாகின் .அந்தசெய்திகள்  எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட ஸ்டாலின் மக்களை சந்திக்கும் பயணத்தை தொடர்கிறார்.மேலிடத்து அழுத்தத்தினால் கைவிடப்பட்ட விசாரணையை பொலிஸார் மீண்டும் கையில் எடுத்ததனால் அழகிரி கலக்கத்தில் உள்ளார். அட்டாக்பாண்டி கைது செய்யப்பட்ட பின்னர் பொட்டுசுரேஷின் கொலை பற்றிய மர்ம முடிச்சு அவிழ்வதற்கிடையில் உள்ளே போகப்போகும் திராவிட முன்னேற்றக் கழகப் புள்ளி யார் என்ற கேள்விக்கான் விடை கிடைத்துவிடும்.
வர்மா
தினத்தந்தி
11/10/15

Monday, May 4, 2015

கும்மி அடிக்கும் குஷ்பு

தமிழக அரசியலில் அநாதையாக நிற்கும் தமிழக காங்கிரஸுக்கு மின்னும் நட்சத்திரமாக குஷ்பு கிடைத்துள்ளார். திராட  முன்னேற்றக்கழகத்தில் அரசியலை ஆரம்பித்த குஷ்பு இப்போது காங்கிரஸில் தஞ்சமடைந்திருக்கிறார்.குஷ்புவுக்கு  மதிப்பு கொடுத்து அவரை  வரவேற்றுள்ளது காங்கிரஸ்.

வாசனின் வெளியேற்றத்தால் துவண்டிருந்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு குஷ்புவின் வரவு புதிய தெம்பைக்கொடுத்துள்ளது;தமிழகத்தில் காங்கிரஸின் இருப்பை வெளிக்காட்ட ஏதாவது செய்ய வேண்டும்  என விரும்பிய  தமிழக காங்கிரஸ் தலைவர்  இளங்கோவன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கையில் எடுத்துள்ளார்.  


தமிழக ஆளுனரைச் சந்தித்த இளங்கோவந்தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை கையளித்தார்முன்னாள் அமைச்சர் சிதம்பரம் குமரி அனந்தன் ஆகியோருடன் . குஷ்புவும் அவருடன் சென்றார். தமிழக அமைச்சரவையில் உள்ள 25 துறைகளில் ஊழல் நடைபெற்றதாக அப்பட்டியலில்கூறப்பட்டுள்ளது. ந்த ஊழலை விசாரித்து தமிழக அரசை கலைக்க வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். காங்கிரஸ்யின் ஊழல்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் கசிந்தவண்ணம் இருக்கையில் தமிழக மைச்சர்களின் ஊழல் பட்டியலை  ஆளுனரிடம் கையளித்தார் இளங்கோவன்.
தமிழக காங்கிரஸில்  குஷ்புவை சுற்றி ஒரு கூட்டம் உருவாகி உள்ளது. இதனால்மூத்த தலைவர்கள்  கடும் அதிருப்தியில் உள்ளனர்குஷ்புவின் கூட்டத்துக்கு  அதிகளவான மக்கள் சேர்வதனால்; தமது இருப்பு இல்லாமல் போய்விடுமோ என அவர்கள் அஞ்சுகின்றனர்

 திராவிட முன்னேற்றக் கழகத்தில் குஷ்பு சேர்ந்த போதும் இதேபோல் தான் மூத்த தலைவர்கள் எரிச்சலடைந்தனர். சர்ச்சைகள்  பிரச்சினைகள் என்பன குஷ்புவுக்கு புதியதல்ல. அழகிரிக்கு ஆதரவாககருத்துத்  தெரிவித்ததனால் ஸ்டாலினின் ஆதரவாளர்கள் அவரை வறுத்தெடுத்தனர். சுவாமிப்படத்துக்கு முன்னால் மேடையிலே காலுக்கு மேல் கால் போட்டு செருப்புடன் இருந்ததனால் ஆன்மீகவாதிகள் பிடித்து உலுக்கினார்கள்.திருமணத்துக்கு முன்னைய உடல் உறவு பற்றிய கருத்தினால் நீதிமன்றப்படி  ஏறினார்உருத்திராட்ச மாலையில் தாலி கோர்த்த பிரச்சினை இன்னமும் ஓயவில்லை.

பிரச்சைனைகளின் உறைவிடமான குஷ்புவுக்கு தமிழக காங்கிரஸிலும் வெளித்தெரியாத பிரச்சினைகள் உள்ளன. அதுவரை குஷ்புவை அங்கிருந்து அசைக்க முடியாது.

Monday, February 3, 2014

மதுரைக்கு வந்த சோதனை

ஓர் உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்கக்கூடாது என்பதைக் கருணாநிதி மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். ஸ்டாலினா,அழகிரியா முக்கியம் என்று முடிவெடுக்க முடியாமல் தவித்த கருணாநிதி காலம் கடந்து உறுதியான முடிவை எடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து எம்.ஜி.ஆர். வெளியேறியபோது மதுரைக்கு  எம்.ஜி.ஆரை வரவிடமாட்டேன் எனச் சபதம் செய்த மதுரை முத்து பின்னர் எம்.ஜி.ஆரிடம் சரணடைந்தார்.
திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து வைகோ விரட்டியடிக்கப்பட்ட போது தமிழகத்தில் தென்பகுதியில் கழகத்தின் செல்வாக்கை உயர்த்துவதற்காக களம் இறக்கப்பட்ட அழகிரி மதுரையில் தன்னை வளர்த்துக்கொண்டார். அழகிரியின் செயற்பாடுகளினால் துவண்டுபோன கருணாநிதி மீண்டும் சென்னைக்கு வரும்படி அவருக்கு விடுத்த கெஞ்சல்கள்  எல்லாம் நிராகரிக்கப்பட்டன.
மதுரையில் இருந்தபடியே சென்னையை ஆட்டிப்படைக்கும் சக்தி அழகிரிக்கு உள்ளது. அழகிரியின் அதிரடியான நட வடிக்கைகளினால் அஞ்சா நெஞ்சன் என்ற பட்டத்தை தகப்பன் கொடுத்தார். அழகிரி கோபிப்பதும், கருணாநிதி சாந்தப்படுவதும்  வழமையான நடவடிக்கைகள்தான். இம் முறையும் அப்படித்தான் நடைபெறும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். குடும்பமா கழகமா என்ற கேள்வி வந்தபோது குடும்பத்தைவிடக் கழகம்தான் முக்கியம் என்று முடிவெடுத்துள்ளார் கருணாநிதி.  எதையும் எதிர்பார்க்காமலே அரசியலில் தனது ஆளுமையைப் பதித்தவர் ஸ்டாலின்; தகப்பனைப்போல் அஞ்சாது இளம் வயதிலேயே அரசியலில் கால்பதித்தவர் ஸ்டாலின். கருணாநிதிக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின் தான் என்று இரண்டாம்கட்டத் தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். தனது வாரிசு ஸ்டாலின்தான் என்று கருணாநிதி பட்டம் சூட்டாமலே இளவரசராக  வலம் வருகிறார் ஸ்டாலின்.
அரசியலில் உயர்ந்த நிலைக்கு ஸ்டாலின் வந்தபின்னர் மகன் அழகிரியை யும் மகள் கனிமொழியையும் நாடாளு மன்ற உறுப்பனராக்கியது கருணாநிதி செய்த பெரும் தவறு. தமிழக அரசியல் வேறு. மத்திய அரசியல் வேறு  என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்துள்ளார். ஆனால், அழகிரி அதனை சரிவரப்புரிந்து கொள்ளவில்லை.அதன் காரணமாக முட்டல்கள், மோதல்கள், உரசல்கள் தொடர் ந்தன.


கறிவேப்பிலை போன்று கருணாநிதி தன்னைத் தூக்கி எறிந்து  விடுவார் என்று அழகிரி கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.
தமிழக அரசியலில் தனிமையாக இருக்கும் திராவிட முன்னேற்றக்கழகம், விஜயகாந்த்துடன்  கூட்டணி சேரத் துடித்தது. அந்தத் துடிப்பு  அழகிரிக்குப் பதற்றத்தை உண்டாக்கியது.  விஜயகாந்த் தலைவரே  அல்ல. அவருடன் கூட்டணி சேரக் கூடாது. கருணாநிதியைத் தவிர வேறு யாரையும்  தலைவராக  ஏற்க மாட்டேன் என்று  தொலைக் காட்சிக்குப் பேட்டியளித்தார். கருணாநிதியும், ஸ்டாலினும் இதனைக் கண்டித்தார்கள். குமுறிக்கொண்டிருந்த பிரச்சினை அழகிரியின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் விஸ்வரூபம் எடுத்தது. ஸ்டாலி னின் ஆதரவாளர்களுக்கு எதிராக அழகிரியின் ஆதரவாளர்கள் பொலிஸில் புகார் செய்ததால் உட்கட்சிப் பிரச்சினை வெடித்துச் சிதறியது.மதுரையில் உள்ள அழகிரியின் ஆதர வாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்கள். அப்போது அழகிரி வெளி நாட்டில் இருந்தார். அழகிரி  நாடு திரும்ப யதும் பரச்சினை தீர்க்கப்பட்டுவிடும்  என்றே கட்சியில் இருந்து வெளியேற்றப்பட் டவர்கள் நினைத்தார்கள்.தன் ஆதரவாளர்களுக்காக நியாயம் கேட்பதற்காக மதுரையிலிருந்து சென்னைக்குச் சென்ற அழகிரி, தற்காலிகமாக கழகத்திலிருந்து நீக்கப்பட்டார்.  பரச்சினையை முடித்து விட்டார் கருணாநிதி. ஆனால், இருவரும் வரம்பு மீறி  தமது தரப்பு நியாயங்களைத் தொலைக்காட்சிகளுக்கு வழங்கி குடும்பச் சண்டையை உலகறியச் செய்துள்ளார்கள்.

எம்.ஜி.ஆரும், வைகோவும் கழகத்திலிருந்து வெளியேறியபோது முக்கியமான தலைவர்களும் தொண்டர்களும் அவர்களின் பின்னால் சென்றனர். திராவிட முன்னேற்றக்கழகத்தின்  தலைவர்கள் எவரும் அழகிரியுடன் நெருக்கமாக இல்லை. மதுரையில் செல்வாக்குச் செலுத்தும் அழகிரியின் பின்னால் மதுரையின் தலைவர்கள்  எவருமேயில்லை.
1989ஆம் ஆண்டு கட்சியை முன்னேற்றுவதற்காக மதுரைக்கு அழகிரியை அனுப்பியது கழகம். பதவி எதுவும் இல்லாத நிலையில் மதுரையில் தனக்கென்று ஒரு கோஷ்டி யைஉருவாக்கி  படிப்படியாக மதுரையைத் தனது கைக்குள் கொண்டுவந்தார் அழகிரி. அழகிரியுடன் கலந்தாலோசனை செய்தபின்பே மதுரையில் தனது நடவடிக்கைகளை ஆரம்பக்கவேண்டிய நிலை கழகத்துக்கு ஏற்பட்டது.
தென் மண்டல திராவிட முன்னேற்றக் கழக அமைப்பின் பொதுச் செயலாளராக  அழகிரி 2008ஆம் ஆண்டு நியமிக்கப் பட்டார். 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சரானார். அமைச்சரான பின்னர் அழகிரியின் வாழ்வில் மாறுதல் ஏற்படும் என்று  கருணாநிதி எதிர்பார்த்தார். அழகிரியின் துடுக்குத்தனம் கூடிக்கொண்டே போனது.

மதுரையின் திராவிட முன்னேற்றக்கழகப் பிரமுகரானதா.கிருஷ்ணன் கொலை, தினகரன் மதுரை அலுவலகம் எரிந்து மூவர் கருகி மரணம் ஆகிய சம்பவங்கள் நடைபெற்ற போது அதனைக் கண்டும் காணாததும் போல் இருந்தார் கருணாநிதி. அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் போன்ற அடியாட்கள்தான் அழகிரியின் பின்னால் நின்றார்கள். பொட்டு சுரேஷ் கொல்லப்பட்டபின் அட்டாக் பாண்டி தலை மறைவானார்.
அரசியலில் முன்னேறக்கூடிய பல சந்தர்ப்பங்களை  அழகிரி தவறவிட்டுள்ளார். அழகிரியின் பிறந்தநாளன்று மதுரையில் போஸ்டர் ஒட்டி உற்சாகப்படுத்துவார்கள்  அவரது  ஆதரவாளர்கள். நக்கலும் நளின மும் நிறைந்த போஸ்டர்தான் அழகிரியின் அரசியலில் புயலைக் கிளப்பயுள்ளது.
2001ஆம் ஆண்டு அழகிரியை கட்டம் கட்டி ஒதுக்கிவைத்தது கழகம்.அப்போது நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அவரது ஆதரவாளர்கள் அழகிரி பேரவையின் பெயரில் தேர்தலில் போட்டியிட்டு  திராவிட முன்னேற்றக் கழகத்தைத்  தோல்வியடையச் செய்தனர். மதுரையின் செல்வாக்குமிக்க பி.ரி.ஆர். பழனிவேல்ராஜனே தேர்தலில் தோல்வியடைந்தார். அன்றைய செல்வாக்கு இன்றைய அழகிரியிடம் இல்லை. அன்று நடந்தது  தமிழக சட்டசபைத்  தேர்தல். இப்போது நடக்கப்போவது நாடாளுமன்றத் தேர்தல். ஆகையினால், அழகிரியின் வெளி யேற்றத்தால் பாதிப்பு ஏற்படாது என நம்புகிறார் கருணாநிதி.

வர்மா 
 சுடர் ஒளி 02/01/14

Tuesday, January 14, 2014

விஜயகாந்துக்காக காத்திருக்கும் கட்சிகள்


விஜயகாந்தின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார் கருணாநிதி.  விஜயகாந்தை வரவேற்க தாமரைப் பூவுடன் தயாராக இருக்கிறது பாரதீய ஜனதா கட்சி.  யாருடன் கூட்டணி சேர்வது எனத் தெரியாது தமிழக அரசியல் தலைவர்கள் குழம்பிப்போயுள்ள நிலையில்,  தனது முடிவை வெளியிடாது மர்ம முடிச்சுப் போடுகிறார் விஜயகாந்த்.

தமிழகத்தில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்பதில் காலதாமதம் செய்யும் விஜயகாந்த் தனது  கோரிக்கையை அதிகரிக்கிறார்.  விஜயகாந்த் தனது கட்சியின் பொதுக்குழுவை கடந்த வாரம் கூட்டினார். அன்று  கூட்டணி பற்றிய முடிவு அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஏனைய  அரசியல் கட்சிகளைப்போன்று கூட்டணி பற்றி பேச்சு நடத்துவதற்கு ஆறுபேர் கொண்ட குழுவை அமைத்ததுடன் பரபரப்பன்றி கூட்டம் முடிவடைந்தது.திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரக்கூடாது என்பதில் விஜயகாந்தின்  கட்சியினர்  மிகவும் உறுதியாக உள்ளனர். வடிவேல்  மூலம் விஜயகாந்தை கேலி  பண்ணியதை பிரேமலதாவால் ஜீரணிக்க முடியவில்லை. ஆகையால், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் விஜயகாந்த் இணைவது சந்தேகமாக உள்ளது. 

விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக நிற்பதனால் விஜயகாந்தின் நிலையும் அதுவாகத்தான் இருக்கும். திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் விஜயகாந்துடன்  பேச்சு  நடத்துகிறார்கள்.  ஆனால், அவர்களை முற்றுமுழுதாக நம்பிப சிபாரிசு செய்ய எவரும் விஜய காந்தின் கட்சியில் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்த வியூகத்தை கருணாநிதியின் மகன் அழகிரி விரும்பவில்லை.  விஜயகாந்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் இணைவதை அழகிரி ஏற்றுக்கொள்ள வில்லை. இந்திய நாடாளுமன்றத் தேர்தலின்போது தனித்துத் தேர்தலில் போட்டியிட்டால்  வெற்றிபெற முடியும் என்று அழகிரி கருதுகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது என்பதை விஜயகாந்த் அறிவார்.  கடந்த தேர்தலின்போது வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விஜயகாந்த்   இருந்துள்ளார்.  2005ஆம் ஆண்டு விஜயகாந்த்  கட்சியை ஆரம்பத்தார்.  2006ஆம் ஆண்டு  சட்ட சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 27 இலட்சத்து 64 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது விஜயகாந்த் கட்சி.  2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளில் தனித்துப்  போட்டியிட்டு 31 இலட்சத்து 26 ஆயிரம் வாக்குகளைப்  பெற்று இது சட்டசபைத் தேர்தலை விட 1.75 சதவீதம் அதிகமானது.  2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் திராவிட  கட்சிகளுக்கு  சவாலாக அமைந்தது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் விஜயகாந்தை ஆதரித்ததனால் இரண்டு கட்சிகளினதும் வெற்றிவாய்ப்பு  பாதிக்கப்பட்டது.  விஜயகாந்தின் வளர்ச்சியை உற்றுக் கவனித்த ஜெயலலிதா,  அவருடன்  கூட்டணி அமைத்தார்.  கருணாநிதியைப் பழிவாங்குவதற்காக விஜயகாந்த் முரசு கொட்டி ஜெயலலிதாவை முதலமைச்சராக்கினார்.
ஜெயலலிதாவின் தயவால் எதிர்க்கட்சித் தலைவராகிய விஜயகாந்த் இப்போது அவரையே பழிவாங்கத் துடிக்கிறார்.  அதே வேளை, தனது கட்சிக்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுடன் தான் கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதை விஜயகாந்தின மனைவி பிரேமலதா விரும்பவில்லை. பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர்வதையே அவர் விரும்புகிறார்.
பாரதீய ஜனதாவுடன் கூட்டணி சேர்வதற்கு டாக்டர் ராமதாஸ் விரும்புகிறார். விஜயகாந்த் பாரதீய ஜனதாவுடன் சேர்வதை அவர் விரும்பவில்லை. டாக்டர் ராமதாஸின்  பாட்டாளி மக்கள்  கட்சிக்கு   செல்வாக்குள்ள தொகுதிகளில் விஜயகாந்தின் கட்சிக்கு  சம அளவு  அல்லது அதிகமான செல்வாக்கு உள்ளது.    விஜயகாந்த்  இருக்கும் கூட்டணியில் சேர்ந்தால் தனக்குரிய செல்வாக்கு குறைந்துவிடும் என்று ராமதாஸ் கருதுகிறார். அவரை ஓரம் கட்டி முன்னிலை பெறவேண்டும் என்று விரும்புகிறார் விஜயகாந்த்.  

நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 15 தொகுதிகளை இனம் கண்டுள்ளார் விஜயகாந்த். கூட்டணி சேர்ந்த பின்பே தொகுதிப் பங்கீடு நடை பெறுவது வழமை. காங்கிரஸை  வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் எவ்வித நிபந்தனையும் இன்றி  பாரதீய ஜனதா  கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்  வைகோ. கூட்டணி பற்றிய முன்னேற் பாடாக பாரதீய ஜனதா  கட்சித் தலைவரை அன்புமணி சந்தித்தார்.ஆனால், விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த  முக்கியஸ்தர்கள் எவரும் பாரதீய ஜனதா  கட்சித் தலைவர்கள் எவரையும் இது வரை சந்திக்கவில்லை.  இடைத்தரகர்கள் மூலம் பேச்சு  நடைபெறுகிறது. இடையிடை யே விஜயகாந்தின் சார்பாக பாரதீய ஜனதாவிலிருந்து    கருத்துகள் வெளிவருகின்றன.

கூட்டணிப் பேச்சுக்கு முன்பே தொகுதிப் பங்கீடு பற்றி விஜயகாந்தின் தரப்பு அறிவித்துள்ளது. ஏனைய கட்சிகள் இதற்கு ஒப்புதல் வழங்குவது    கடினம்.  விஜயகாந்தின் மைத்துனர்  சுதீஷ் இரண்டு தொகுதிகளில்  போட்டியிடப்போவதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.  அரசியல் அரங்கிலே இது மிகமிகச் சிரமமான வேண்டுகோளாகும்.  மாற்றுக் கட்சிகள்  இதற்கு ஒப்புதல் வழங்கமாட்டா. ஏனைய கட்சிகளும் தமது முக்கியஸ்தருக்கு இரண்டு தொகுதிளை ஒதுக்க முன்வந்தால் கட்சிக்குள்ளேயே பிரச்சினை வெடிக்கும். கூட்டணி பலமானதாக இருக்கவேண்டுமானால் விஜயகாந்த் சில விட்டுக்கொடுப்புகளைச் செய்யவேண்டிய நிலை ஏற்படும். இல்லையேல்,  விஜயகாந்த் தனித்து  விடப்படலாம்.
 திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட் பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.  இது வரைகாலமும் மெளனமாக இருந்த கருணாநிதி இம்முறை அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.  திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தலையிடியாக  இருப்பது மதுரை. கழகத்துக்கு எதிராக வெளிப்படையாகப் பேசி கழகத்தின் முடிவுகளை உதாசீனம் செய்யும் அழகிரிக்குப் பாடம் படிப்பக்க களம் இறங்கியுள்ளார் கருணாநிதி. கழக நிகழ்ச்சிகள் எதிலும் ஒட்டாது ஒதுங்கியிருக்கும் அழகிரியின் பேட்டியும், அழகிரியின் ஆதரவாளர்கள் வெளியிட்ட சுவரொட்டியும் திராவிட முன் னேற்றக்கழகத்தைக் கொதிப்படைய வைத் துள்ளது.

விஜயகாந்துக்கு அரசியல் தெரியாது. விஜயகாந்த் தலைவரே அல்ல. கருணாநிதி மட்டும்தான்  எனது தலைவர். அவர்  இருக் கும்வரை இன்னொருவரைத்  தலைவராக  ஏற்கமாட்டேன். என்று அழகிரி பேட்டியளித்துள்ளார். விஜயகாந்த் , ஸ்டாலின் ஆகிய இருவரையும் தனது பேட்டியில் சாடியுள்ளார். அழகிரியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அவரது ஆதரவாளர்கள் வெளியிட்ட சுவரொட்டிகள் சென்னையில் சலசலப்பை உண்டாக்கின. கிங் ஒவ் தமிழ் நாடு,   ஜன. 30 பொதுக்குழுக் கூட்டம் என்ற  சுவரொட்டிகளால் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.

விஜயகாந்தை வளைப்பதற்குத் திராவிட முன்னேற்றக்கழகம் தீவிர முயற்சிசெய்து வருகிறது.  இந்நிலையில், கட்சியின் மிக முக்கிய பிரமுகர் அவரை அவமானப்படுத்தியதை கருணாநிதியால் தாங்கமுடியவில்லை.  சுவரொட்டிகள் மதுரையின் விபரீதப்போக்கை  வெளிப்படுத்தியுள்ளன. மதுரையின் நடவடிக்கைகள் சென்னையில்  எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. யாராவது ஒருவர்மீது நடவடிக்கை பாயும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த தலைமை,  மதுரையிலுள்ள திராவிட முன்னேற்றக் கழக அமைப்புகள் அனைத்தையும் அதிரடியாகக் கலைத்தது.

மதுரையில் அழகிரியின் ஆட்டத்துக்கு ஆப்பு வைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் இதனை இப்படியே விட்டால் விபரீதமாகி விடும் என்பதை கருணாநிதி உணர்ந்துள்ளார்.  திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ள ஏனைய கோஷ்டித் தலைவர்களுக்கு இதன் மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறியதையும்  அழகிரி விரும்பவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அழகிரி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோரை சந்திப்பதைத் தவிர்த்துவந்த அழகிரி,  திடீரென  கடந்த புதன்கிழமை சென்னைக்குச் சென்று தாயாரைச்  சந்தித்துள்ளார். ஜெயலலிதாவின் பரம  எதிரிப்பட்டி யலில் முதலிடத்தில்  இருப்பவர் அழகிரி. அரசியல் ரீதியாக கருணாநிதி  எதிரி என்றா லும்  அழகிரியின் அதிரடி நடவடிக்கைகளால் மதுரையில் அண்ணா திராவிட முன்னேற் றக்கழகம் கால்பதிக்க முடியாதநிலை இருந் தது. அழகிரி சிக்குவாரா என்று தமிழக  அரசு கண்கொத்திப் பாம்பாக அவதானித்து வருகிறது. இந்நிலையில்,   கருணாநிதியின்  பாதுகாப்பு இல்லையென்றால் அழகிரி தனி மரமாகிவிடுவார். ஆகையால், நாடாளு மன்றத் தேர்தல் வரை அவர் மெளனமாக இருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
திராவிட முன்னேற்றக்கழகத்தில் ஸ்டாலினின் கை ஓங்கிவிட்டது. கருணாநிதிக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான்  என்பது உறுதியாகிவிட்டது.
வர்மா  
சுடர் ஒளி 12/01/14