Wednesday, March 11, 2020

விஜயகாந்தைக் கைவிட்ட அ.தி.மு.க, கொந்தளிக்கும் பிரேமலதா


இந்திய ராஜ்யசபை உறுப்பினருக்காக அதிமுக தலைவர்களுடன் முட்டிமோதிய பிரேமலதா தோல்வியடைந்துள்ளார். இந்தியாவில்  பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உருப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக உள்ளனர். இந்திய மாநிலங்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ராஜ்யசபை எம்பியாக பதவி  வகிக்கின்றனர். 55 ராஜ்யசபை  உறுப்பினர்கலின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் திகதி  முடிவடைகிறது. புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தல் ஏப்ரல் 26 ஆம்திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திருக்க்சி சிவா, மாக்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் அழ்ண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சசிகலா புஷ்பா, செல்வராஜ், முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. கடந்த முறை நான்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து இம்முறை  மூவர் மாத்திரம் தெரிவு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய சசிகலா புஷ்பா ஏற்கெனவே பாரதீய  ஜனதாக் கட்சியில் இணைந்துவிட்டார். கடந்த முறை கூட்டணிக்கட்சிகளின் உதவியுடன் இருவரைத் தெரிவு செய்த திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  இம்முறை மூவரைத் தெரிவு செய்யும் வாய்ப்பு உள்ளது.

முதலமைச்சர் வேட்பாளர் என்ற விலாசத்துடன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கிய அன்புமணியும், விஜயகாந்தும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். ராஜ்யசபாப் பதவி கிடைத்ததும் அன்புமணி அமைதியாகிவிட்டார். விஜயகாந்த் முன்னரைப்போல சுறுசுறுப்பாக இல்லை. என்றாலும் தமது கட்சியின் சார்பாக ஒருவர் எம்பியாக வேண்டும் என்பதில் விஜயாந்தின் மனைவி பிரேமலதா  உறுதியாக இருக்கிறார். தமது கட்சிக்கு ஒரு எம்பிப் பதவி தரும்படி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடி கொடுத்தார்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஏ..சி. சண்முகம், வாசன்  போன்றோரும் தமக்கு எம்பிப் பதவி வேண்டும் எனக்  கோரிக்கை விடுத்தனர். ஆனால். அவர்கள் அதனை வெளிப்படுத்தவில்லை. பிரேமலதா மட்டும் மிரட்டும் தொனியில் கோரிக்கை விடுத்தார். சட்டசபை தேர்தல் ஒப்பந்தத்தில் எம்பிப் பதவி இல்லை எனக்கூறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தட்டிக் கழித்து விட்டது.. இதே வேளை ஒப்பந்தத்தில்  இல்லாத வாசனை எம்பியாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தால் அன்புமணி எம்பியானார். மற்ற்வர்களுடன் ஒப்பந்தம் செய்யப்படவில்லை வாய் மூல  உறுதிமொழி வழங்கப்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வார்த்தை தவறி விட்டதாக  பிரேமலதா குற்றம் சாட்டியுள்ளார்.


தனது தம்பி சுதீஷை எம்பியாக வேண்டும் என்பது பிரேமலதாவின் ஆசை. தனது தாய் எம்பியாக வேண்டும் என பிரேமலதாவின் மகன் விரும்புகிறார். அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் கைவிரித்ததால் அந்த ஆசைகள் அனைத்தும் நிராசையாகின. அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியில் இருந்து  வெளியேற முடியாத நிலை இருப்பதால் பிரேமலதாவின் அடுத்த நடவடிக்கையை  அரசியல் உலகம் எதிர்பார்த்துள்ளது. உள்ளாட்சித்  தேர்தலில் அதிக இடங்கள் வேண்டும் என பிரேமலதா கேட்பார். இல்லையேல் ரஜினியின் கட்சியில் அவர் இணைவார் என்ற எதிர்பார்ப்புள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அண்னாதிராவிட முன்னேற்றக் கழகத்தவர்களும்,  முன்னாள் எம்பிக்களும் எம்பியாகும் ஆசையில் இருந்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகம் மூவரின் பெயரை உடனடியாக அறிவித்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட  இழுபறியின் பின்னர் மூவரின் பெயரை வெளியிட்டது.

காலியாகும் எம்பி பதவிக்கு முன்னாள் துணைசபாநாயகர் தம்பித்துரை, கே.பி.முனுசாமி ஆகிய இருவரையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. மூன்றாவது பெயரைக் கேட்டதும் அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களே அதிர்ந்து போயிள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனின் பெயர்  முன்மொழியப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியின் தலைவரைத் தெரிவு  செய்துள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அறிவித்துள்ளனர். எம்பி பதவி கேட்டு நச்சரித்த விஜயகாந்தின் கட்சியை நிராகரித்து வாசனுக்குக் கொடுத்த பின்னணியை ஆராய வேண்டியுள்ளது.
தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்  பதவியில் இருந்து  தமிழைசை  விலகியபின்னர் அந்த இடத்துக்கு வாசனை நியமிக்கப் போவதாக கிசுகிசுக்கப்பட்டது. வாசன் அதனை மறுத்துவிட்டார். 

மோடியின் சிபார்சினால்தா வாசனின் பெயர் அறிவிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்களை அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் மறுத்தாலும் அதனை யாரும் நம்பத் தயாராக இல்லை. ஆறு மாதங்களுக்கு முன்னர் சீன ஜனாதிபதியை சந்திக்க பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது வாசனுடன் அதிக  நேரம் பேசியதும், வாசன் டெல்லியில் மோடியைச் சந்தித்ததும் எதற்காக எனும் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது. தம்பித்துரைக்கு டெல்லித் தொடர்புகள் அதிகமுள்ளது. தம்பித்துரையை விட அதிக தொடர்புகளையும் அனுபவத்தையும் கொண்டவர் முன்னாள் மத்திய அமைச்சர் வாசன்.  அவருடைய  தெரிவு அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  பலத்தைக் கூட்டும் என்பதில் சந்தேகமில்லை.  விஜயகாந்தின் கட்சிக்கு எம்பிக்கள் யாரும் இல்லை. டெல்லியில் அரசியல் செய்வதற்கு தகுதியானவர் யாரும் இல்லை என்பதால் விஜயகாந்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணித்துள்ளது.

தமிழகத்தின் டெல்டா பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு செல்வாக்கு இல்லை. வாசன் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். அவரின் மூலம் முக்குலத்தோர் வாக்குகளைப் பெற முடியும் என அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர்கள்  எதிர்பார்க்கிறார்கள். வாசனை அமைச்சராக்கி தமிழகத்தில் தாமரையை மலரச்  செய்ய பாரதீய ஜனதாக் கட்சி எதிர் பார்க்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பச் செய்து ஏமாற்றிய வியஜகாந்தை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏமாற்றுகிறது.

திருச்சி சிவா, வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரைன் பெயரை திராவிட முன்னேற்றக்  கழகம் அறிவித்துள்ள்ளது. டெல்லி அரசியலில் நீண்ட கால அனுபவமுள்ள திருச்சி சிவா  நான்காவது முறையாக எம்பியாகிறார். அவரின் தெரிவு எதிர் பார்க்கப்பட்ட ஒன்று. வைகோவுக்காக மாற்ரு வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்து வாபஸ் பெற்றவர் இளங்கோ அடுத்த முறை தருகிறேன் என உறுதியளித்த ஸ்டாலின் தன் வார்த்தையைக் காப்பாற்றியுள்ளார். அந்தியூ செல்வராஜின் பெயர் அனைவரையும் ஆச்சரியப்படுத்துயுள்ளது. 75 வருட கால இந்திய அரசியல் வரலாற்றில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இரண்டாவது எம்பியை திராவிட முன்னேற்றக் கழகம் தந்துள்ளது. அச் சமூகத்தின்  முதலாவது எம்பி வி.பி. துரைசாமியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம்  தெரிவு செய்யப்பட்டவர்.

திராவிட முன்னேற்றக் கழகம் மூவரின் பெயரை அறிவித்தபோது இஸ்லாமியர் ஒருவருக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்தது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் இஸ்லாமியருக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. 17 மானிலங்களில் 55 உறுப்பினர்களுக்காகன தேர்தல் நடைபெற உள்ளது. பாரதீய ஜனதாக் கட்சி உறுப்பினர்களின் தொகை அதிகரிக்கும். ஆனால், பெரும்பான்மை பெறமுடியாது. 34 சட்டசபை உறுப்பினர்கள் ஒரு எம்பியைத் தெரிவு செய்வார்கள். தமிழக சட்ட சபையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சபாநாயகர் உட்பட125 உறுப்பினர்கள். மூவரைத் ஹெரிவு செய்வதில் எந்த சிக்கலும்  இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 98 உறுப்பினர்கள் உள்ளனர். கங்கிரஸின் எட்டு உறுப்பினர்களின் தயவினால் மூவர் தெரிவாவார்கள். மனித நேயக் கட்சியின் ஒரு உறுப்பினரும் சுயேச்சையாக தினகரனும் தமிழக  சட்ட சபையில் உள்ளனர்.