Sunday, April 30, 2017

புதியதொரு விடியல் பிறக்கட்டும்

தொழிலாளர்களுக்கான உரிமைகள் வழங்கப்பட்டு  நூறு வருடம் கடந்து விட்டது. தொழிலாளர்களின் மீதான அடக்கு முறை எங்கோ ஒரு மூலையில் நடந்துகொண்டிருக்கிறது. புரட்சிகர மேதினம் ஏற கோஷத்துடன் ஒரு களத்தில் மேதினம் கொண்டாடப்பட்டது. சிவப்பு உடுப்பு, சிவப்புத் தொப்பி,சிவப்புக்கொடி என்பன  மேதின ஊர்வலத்தை சிவப்புமயமக்கியது. தொழிலாளர் தினமான மேதினம் இன்று  முதலாளிதத்துவ கட்சித் தலைமைகளின் தினமாக உருமாறி விட்டது.

மேதினத்தன்று அடக்கு முறைக்கு எதிராகக் கோஷம் எழுப்பிய தொழிலாளர்கள் இன்று எதிர்க்கட்சிகளைக் குறைகூறும் கோஷங்களையே முன்வைக்கிறார்கள். மேதினம் இது எங்களின் தினம் என்று கருதி வீதியில் இறங்கி சந்தோசம் அடைந்த  தொழிலாளர்கள் இன்று காணாமல் போய்விட்டனர். சாப்பாடு போக்குவரத்துச்செலவு,உற்சாக பானம் கொடுத்து தொண்டர்களை அழைத்து வரும் நிலையை சில கட்சித்  தலைமைகள் உருவாக்கி விட்டன.
தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதற்கு  முதலாளிகளிடம் இருந்து நிதி உதவியை சில கட்சிகள் பெறுகின்றன. தம்மைசச் சுரண்டிப் பெற்ற பணத்தில் இருந்துதான் தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம் என்பதை  ஏமாந்த தொழிலாளர்கள் உணரவில்லை. மேதினம் என்பது வருடாந்தத் திருவிழா போல் மாறிவிட்டது. அரசியல் கட்சிகள் தமது பலத்தை நிரூபிப்பதற்காக மேதினத்தை ஒரு களமாகப் பயன்படுத்துகின்றன. தொழிலாளர்கள் பகடைக்காய் போன்று பல கட்சிகளில் சங்கமமாகி உள்ளனர்.

பெரிய நிறுவனங்களிலும்  தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்கங்கள் உள்ளன. அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் சக்தி மிக்கனவாக இருக்கின்றன. ஒற்றுமையாகத் தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டிய தொழிலாளர்கள், கட்சி  ரீதியாகப் பிளவுபட்டு  தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் பரிதாப நிலை தோன்றியுள்ளது. தாம் வேலை செய்யும் தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செயற்படும் தொழிலாளர்கள். தமது நாளான  மேதினத்தை  ஒற்றுமையாகக் கொண்டாட முடியாது தவிக்கின்றனர். கட்சி அரசியல் அவர்களைப் பிரித்து வைத்துள்ளது.

சில நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் தொளிலாளர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகள் எதையும் கொடுப்பதில்லை. ஈ.பி.எப், ஈ.ரி. எவ் போன்றவற்றைக் கட்டுவதில்லை. அப்பந்தம் எதுவுமில்லாமலே  சில தொழிலாளர்கள் வால்;ஐக்கு அமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு முறையான விடுமுறை கொடுக்கப்படுவதில்லை. சில இடங்களில் வர்த்தக விடுமுறை தினங்களிளும் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது. எட்டு மணி நேர வேலை.மேலதிகக் கொடுப்பனவு, போனஸ், சம்பள உயர்வு போன்றவை பற்றிய அறிவு இல்லாமலே சில தொழிலாளர்கள் வேலைசெய்கின்ர்த்னர்.

 தினக்கூலிகளுக்கு எந்த விதமான விடிவும் இதுவரை பிறக்கவில்லை. மழை,ஹர்த்தால்  , போராட்டம் போன்ற நடைபெற்றால் அந்தத் தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபமானது. ஒருவர் வேலைக்குப் போனால்தான் அன்று  அடுப்பு எரியும் என்ற நிலையில் பல குடும்பங்கள் வாழ்கின்றன.  தொழிலாளர்களுக்கு விடிவு பிறந்து நூற்றாண்டு  கடந்த பின்னரும்  கூலித்தொழிலாளர்களுக்குக் கிடக்க வேண்டிய உரிமைகள் எவையும் கொடுக்கப்படுவதில்லை.

தொளிலரல்ர் தினம் என்பது இப்போது வருடாந்தத்  திருவிழா போல் மாற்றமடைந்துள்ளது.  மேதினத்துக்குச் செல்லவில்லை என்றால் உயர் அதிகாரியின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது என்ற பயத்தின் காரணமாகவும் சில தொழிலாளர்கள் மேதினத்துக்குச் செல்வர்கள். விலை உயர்ந்த காரில் வரும் கட்சித்தலைவர் உரத்த குரலில் பேசுவார். தொழிலாளர்கள் கைதட்டி ஆர்ப்பரிப்பர்கள். கூட்டம் முடிந்ததும் தலைவர் காரில் தனது பங்களாவுக்குப் போய்விடுவார்..தொழிலாளி பொடி நடையாகத் தனது குடிசைக்குத் திரும்புவார்.


தொழிலாளர்களை ஒற்றுமையாக வைத்திருக்க வேண்டிய மேதினம், அவர்களைப் பிரித்து வைத்து வேடிக்கை காட்டுகிறது.

Tuesday, April 18, 2017

பணத்தால் முடக்கப்பட்ட ஜனநாயகம்

தமிழகத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் களமாகக் கருதப்பட்ட ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் இரத்துச்செய்யப்பட்டதால் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல்கள் அனைத்தும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையேயான  பலப்பரீட்சையாகவே இருந்தன. பிளவுபட்டிருக்கும் அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இடமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நோக்கப்பட்டது.


அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஏட்டிக்குப் போட்டியாக செயற்பட்டதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சிக் கொடியும் சின்னமும் முடக்கப்பட்டன.. தொண்டர்கள்  மன ஓட்டத்தை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. சசிகலாவின் அணியைச் சேர்ந்த    தினகரனின் ஆதரவாளர்கள் பணம் கொடுத்ததை மற்றைய கட்சிகள்  ஆதாரத்துடன் தேர்தல் கமிஷனிடம் புகார் செய்தன. புகார் தொடர்பாக தேர்தல் கமிஷன் விசாரணை செய்து செய்த அதே வேளையில் அமைச்சர்விஜயபாஸ்கருடைய வீட்டில்  வருமானவரித்துறை  அதிரடிச்சோதனை நடத்தியது அந்தச் சோதனையின் போது ஆர்.கே.நகரில் பணம் விநியோகம் செய்த ஆதாரம் கைப்பற்றப்பட்டதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்துச்செய்யப்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியான உடனேயே எமது வேட்பாளர் ஐம்பதாயிரம் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறுவார் என தினகரன் அறிவித்தார். சசிகலா அணி ஓ.பி.எஸ் அணி என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாகப் பிரிந்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் சிலர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பின்னால் சென்றுள்ளனர். இக்கட்டான  நேரத்தில்  கட்சியை வழி நடத்திச்செல்லும் ஜெயலலிதா உயிருடன் இல்லை. அவரது மரணத்துக்கு சசிகலா தான் காரணம் என பன்னீர் அணியினர் பிரச்சாரம் செய்கின்றனர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்று துண்துகளாக உடைந்திருக்கிறது. ஆர்.கே. நகரின் செல்வாக்கு மிக்க அரசியல்வாதியான மதுசூதனன் பன்னீர்ச்செல்வத்தின் பக்கத்தில் இருக்கிறார். இந்த நிலையில் சசிகலா நியமிக்கும் வேட்பாளர் எப்படி வெற்றி பெறுவார் என்ற சந்தேகம் எழுந்தது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முடிவுகள் அனைத்தும் ஜெயலலிதாவின் முடிவாகவே இருக்கும் ஜெயலலிதா மறைந்த பின்னர் அவரின் இடத்தைப் பிடிக்க முயன்ற சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கிறார்.ஜெயலலிதா,சசிகலா ஆகியோரின் இடத்தைப் பிடிப்பதற்கு  முடிவு  செய்த தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பணத்தை  வாரி இறைத்தார். தினகரனின் வெற்றிக்காக கோடிக்கணக்கில் பணத்தை விநியோகித்த அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் சிக்கிய ஆதாரங்களால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்துச்செய்யப்பட்டது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில்  62  வேட்பாளர்கள் போட்டியிடத் தகுதி பெற்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்துக்கு ஆதரவான தேர்தல் அதிகாரியை மற்ற வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். அத்தொகுதியின்  அரச அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் போறோர் முறைகேடு  செய்யலாம் என தேர்தல் கமிஷனுக்கு புகார்  செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தேர்தல் அதிகாரி,அரச அலுவலர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட சுமார் 60  பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க மாநில  தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியின் மேற்பார்வையில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார். இந்தியாவிலேயே முதன் முறையாக 70  கண்களிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.  10 துணை இராணுவ கம்பனிப் படை நிலை நிறுத்தப்பட்டது. இத்தனை முன்னேற்பாடுகள் செய்தும் ஒரு இடைத்தேர்தலை நடத்த முடியாது தேர்தல் கமிஷன் தோல்வியடைந்து விட்டது.  தினகரன் வெற்றி பெறமாட்டார்  என்றே ஆரம்பத்தில் அனைவரும் ஒருமித்துக் கருத்துத் தெரிவித்தனர். மதுசூதனன் வெற்றி பெறுவார் அல்லது இரண்டாவது இடத்தைப் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சசிகலாவின் அணியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் விரும்பவில்லை என்ற முடிவை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெளிப்படுத்தும் என நோக்கப்பட்டது.
தினகரனின் செயற்பாடுகள் அனைத்தும் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையில் அமைந்துள்ளதால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்துச் செய்யப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கரைக் குறிவைத்து 55  இடங்களின் நடைபெற்ற அதிரடிச்சோதனையில் முக்கியமான பல ஆவணங்களும் 4.50 கோடி ரூபாவும் கைப்பற்றப்பட்டன. ஆர்.கே.நகரில்   89 கோடி ரூபா விநியோகம்செய்த பத்திரங்களும் கைப்பற்றப்பட்டது.முக்கிய அமைச்சர்கள் பெயரும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பண விபரமும் அந்த ஆவணங்களில் அடக்கம்.

அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன்,காமராஜ்,டெல்லிப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் விஜயபாஸ்கரின் வீட்டுக்குச் சென்று வருமானவரித்துறை அதிகாரிகளைக் கடமை செய்யவிடாது தடுத்தனர்.முக்கிய ஆவணம் ஒன்றை  தளவாய் சுந்தரம் சாரதியிடம் கொடுக்க அவர் அதனை மதிலுக்கு வெளியே எறிந்தார். மதிலுக்கு அப்பால் நின்றவர் அதனை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார். தமிழக ஆளும் கட்சி தனது எல்லையை மீறி செயற்பட்டு வருகிறது. அதிகாரிகள் கடமையைச்செய்ய விடாது தடுத்த  மூவர்மீதும்   வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக்  கூட்டணியில் இருந்து ஜெயலலிதாவின் துதிபாடிய சரத்குமார் கூட்டணியை விட்டு வெளியேறினார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டான பின்னர் சசிகலா தரப்புடன் இணைந்தார். அதன் பின்னணியில் பணம் கைமாறப்பட்டிருக்கலாம்  என்ற சந்தேகம் ஏற்பட்டது.   சரத்குமார் விட்டிலும் அவரின் மனைவி ராதிகாவின் ராடன்  நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை அந்தச்சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் கீதாலட்சுமி விட்டிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.விஜயபாஸ்கர்,சரத்குமார்,ராதிகா,கீதாலட்சுமி ஆகியோரிடம் வருமான வரித்துறையினர்  விசாரணை செய்து வருகின்றனர்.

இலஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம். ஆனால், ஆர்.கே.நகரில் இலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சகஜமாகிவிட்டது. .தனது  வெற்றியைத் தடுப்பதற்காக பாரதீய ஜனதா சதிசெய்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை இரத்துச்செய்ததாக தினகரன் தெரிவித்துள்ளார். இலஞ்சம் கொடுத்தவரைத் தகுதி  நீக்கம் செய்துவிட்டு தேர்தலை நடத்தி இருக்க வேண்டும் என்பதே அதிகமானோரின் கருத்தாகும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்முடிவு பல தலைவர்களின் பலவீனத்தை  வெளிப்படுத்தி இருக்கும்.

இந்திய மத்திய அரசு, தேர்தல் கமிஷன் ஆகியவற்றின் பலவீனமே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இரத்தானதுக்குக் காரணம்,.இலஞ்சம் கொடுத்தவர்கள் மீதும், இலஞ்சம் கொடுத்த வேட்பாளர் மீதும் நடவடிக்கை எடுத்திருந்தால் இலஞ்சம் கொடுப்பதை ஓரளவுக்குத் தடுத்திருக்கலாம்.தினக் கூலி  செய்பவர்களின் கண்ணில் இரண்டாயிரம் நான்காயிரம்  ரூபாவைக் காட்டினால் அவர்கள் அதனை இழக்க விரும்பமாட்டார்கள்.  இலஞ்சம் கொடுத்தவ்ர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் இலஞ்சம் கொடுப்பதைத் தடுக்கலாம்.
வர்மா.

Monday, April 3, 2017

நட்சத்திர வீரர்கள் இல்லாத ஐ.பி.எல்

கிரிக்கெற் ரசிகர்களின்  ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் 10 ஆவது .பி.எல் திருவிழா 5 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகிறது.ஹைதரபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இரவு 8  மணிக்கு நடைபெறும்  முதலாவது போட்டியில் ஹைதரபாத்  சன்ரைஸ் ,பெங்களூர் ரோயல்சலஞ்  ஆகிய அணிகள் மோத  உள்ளன. மேமாதம்  21  ஆம் திகதி இதே மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறும்.


தாய் நாட்டு கிரிக்கெற் அணியின் வெற்றிக்காக தேசியக்கொடி பிடித்து  வெறித்தனமாக கோஷம் போட்ட ரசிகர்கள் இந்திய நகரைப் பிரதிபலிக்கும் அணியின் வெற்றிக்காக குரல் கொடுக்கத் தயாராகிவிட்டனர். தனது அணியின் வெற்றிக்காக எதிர்த்து விளையாடிய அணி வீரருடன் மூர்க்கமாக மல்லுக்கட்டியவர்கள் அந்த அணி வீரருடன் ஒன்றிணைந்து விளையாடத் தயாராகிவிட்டனர். இந்திய அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்றது. அப்போது இந்திய வீரர்களும் அவுஸ்திரேலிய வீரர்களும் விளையாட்டுணர்வை மறந்து மைதானத்தில் மோதிக்கொண்டனர். வரத்தைப் பிரயோகம் எல்லை மீறியது.  நண்பன் இல்லை எதிரிதான் என்ற பிரகடனம் செய்யப்பட்டது. அவுஸ்திரேலியப் பத்திரிகைகள் இந்திய அணித்தலைவர் கொஹ்லியை வசைபாடின.  அவற்றை எல்லாம் மறந்து போனமாதம் நாங்கள் எதிரிகள். இந்த மாதம் நாம் நண்பர்கள் என்பதை வெளிப்படுத்த வீரர்கள் தயாராகிவிட்டார்கள்.
 கிரிக்கெற்றின் உச்சம் தொட்ட வீரர்களுக்கு கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுக்கும் போட்டி ஐ.பி.எல். வளர்ந்து வரும் இளம் வீரரை திடீரென அதிர்ஷ்ட சலியக்குவது ஐ.பி.எல் தான்.அனுபவம் வாய்ந்த வீரர்களை ஏலத்தில் எடுக்காது மூக்கறுப்பது ஐ.பி.எல்லின் விஷேட தகமை.  தமக்குத் தேவையான வீரர்களை  ஏலத்தில் எடுத்து கோடிக்கணக்கில் பணத்தை  வாரி இறைத்த  அணிகளின் உரிமையாளர்களுக்கு வீரர்களின் உடல் நிலை அதிர்ச்சியளித்துள்ளது.


உடல் தகுதி இன்மை, காயம் போன்ற காரணங்களால் ஐ.பி.எல்லின் நட்சத்திர வீரர்கள் விளையாடாததால்  ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். இந்திய வீரர்கள் தொடர்ந்து 13  டஸ்ட் போட்டிகளில் விளையாடியதால் இந்திய வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த வெளிநாட்டு வீரர்களும் ஐ.பி.எல்லின் இருந்து விலகி உள்ளனர். ஆரம்பப் போட்டிகளில் விளையாட முடியாத வீரர்கள் சிலர்  கடைசிபோட்டிகளில் விளையாடும் நம்பிக்கையில் உள்ளனர். ஒரு சில வீரர்கள் ஐ.பி.எல்லில் விளையாடுவதில்லை என முடிவெடுத்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி நான்காவது  டெஸ்ட்டில் விளையாடவில்லை. பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணித் தலைவரான   கோஹ்லிக்கு  காயம் இன்னமும் குணமடையாததால் அவர்  விளையாடமாட்டார். இந்தியாவின் இன்னொரு வீரரான லோகேஷ் ராகுல் காயம் காரணமாக ஐ.பி.எல்லில் இருந்து விலகி உள்ளார். ஹோக்லியின் இடத்தை  டிவில்லியஸ் நிரப்புவர் என எதிர்பார்க்கப்பட்டது. காயம் காரணமாக தென்.ஆபிரிக்காவில் நடைபெற்ற போட்டிகளில் அவர் விளையாடவில்லை.  92 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய டிவில்லியஸ் இரண்டு சதம் 20 அரைச்சதம் உட்பட  2586   ஓட்டங்கள் அடித்துள்ளார்.ஹோக்லி, டிவில்லியஸ் ஆகிய இருவரும் இல்லாததால் பெங்களூர் அணியின் கப்டனாகும் வாய்ப்பு வட்சனுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதரபாத் சன்ரைஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான முஷ்டாபிர் ரஹ்மான் இல்லாதது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவு.கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் சன்ரைஸ் சம்பியனாவதற்கு முஷ்டாபிர் ரஹ்மானின் பந்து வீச்சும் ஒரு காரணம். மிச்சேலும் அஸ்வினும்  இல்லாதது ரைசிங் புனேக்கு பெரும் பதிப்பு. ஆறு அல்லது எட்டு வாரங்கள் அஸ்வின் ஓய்வில் இருக்க வேண்டும் என  வைத்திய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 

டெல்லி டேடெவிர்ஸ் அணியின் வீரர்களான குயின்ச்டன் டிகாக் ,டுமினி ஆகிய இருவரும் ஐ.பி.எல்லில் விளையாடமாட்டோம் என அறிவித்துள்ளனர். ஆரம்பப் போட்டிகளில் மத்தியூஸ் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவு. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாத முரளி விஜய், மாட்டின் குப்தில் ஆகிய இருவரும் ஐ.பி.எல்லில் இருந்து வெளியேறியதால் பஞ்சாப் சிக்கலில் உள்ளது. கடை நேரத்தில் நட்சத்திர வீரர்கள் காயமடைந்து வெளியேறியதால் அவர்களின் இடத்தை நிரப்பக்கூடிய வீரர்களைப் ப புதிதாகச் சேர்க்க முடியாததால் இருப்பவர்களை வைத்துக்கொண்டு சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.

கொல்கட்டாவின் வீரரான அந்தரே ரஸ்ஸலின் நிலை பரிதாபமாக உள்ளது. உக்க மருந்து  பாவித்தமையால் இரண்டு வருடத்தடை காரணமாக ஐ.பி.எல்லில் அவர் விளையாட முடியாது. இந்திய அணியின் கப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறிய டோனியை ஐ.பி.எல்லில் கப்டனாகப் பார்க்கலாம் என்ற  அவரது ரசிகர்களின் ஆசையில் மண்  விழுந்துள்ளது.
வர்மா