Sunday, December 4, 2016

தலைமை இல்லாத தமிழக அரசியல்

 
தமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தலைமையில் பாரிய இடைவெளி விழுந்துள்ளது. சென்னை அப்பலோ  வைத்தியசாலையில்  ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு  70   நாட்கள் கடந்துவிட்டது. சுகவீனம் காரணமாக வீட்டில் சிகிச்சை பெற்றுவந்த கருணாநிதி கடந்த வாரம் ஆழ்வார்பேட்டை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் உடல் நிலைபற்றி விசாரிப்பதற்கு மத்திய தமிழக அமைச்சர்கள், அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், தொழிலதிபர்கள்  அப்பலோ வைத்தியசாலைக்கு படையெடுத்தனர். இப்போது கருணாநிதியின் முறை அவரின் உடல்நிலை பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மையாரும்  ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக அப்பலோ வைத்தியசாலைக்குச் சென்றது அரசியல் நோக்கர்களால் உற்று கவனிக்கப்பட்டது. தயாளுஅம்மையரும் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவும் சந்தித்ததற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தன. இப்போது கருணாநிதியின் உடல் நிலைபற்றி தயாளுஅம்மையாரிடம் சசிகலா விசாரித்ததை ஊடகங்கள் முக்கிய செய்தியாக வெளியிட்டன. ஜெயலிதா பூரணமாக சுகமடைந்து வீடுதிரும்ப வேண்டுமென கட்சிபேதமின்றி அனைவரும் பிரார்த்தித்தனர்.  விதி விலக்காக விஜயகாந்த் மட்டும் ஜெயலிதாவின் உடல் நிலை பற்றி விசாரிப்பதற்காக அப்பலோ வைத்தியசாலைக்குச் செல்லவில்லை.

 ஜெயலலிதா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதற்கு காய்ச்சல் நீர்ச்சத்துக் குறைவு ஆகியவையே கரணம் எனக்கூறப்பட்டது. அவருக்குச் சிகிச்சையளிப்பதற்காக இலண்டனில் உள்ள வைத்திய நிபுணர் ஐந்து முறை  அப்பலோவுக்கு விஜயம் செய்தார்.  ஜெயலலிதாவுக்கு  பிசியோதெரபி சிகிச்சை வழங்குவதற்காக சிங்கப்பூரில் இருந்து இருவர்  வரவழைக்கப்பட்டனர். எய்ம்ஸ் மருத்துவர் குழு ஜெயலலிதாவைப்  பார்வையிட்டது. சுமார் 27  வைத்தியர்கள் ஜெயலலிதாவுக்குச்  சிகிச்சையளித்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன கடந்த  4 ஆம் திகதி இரவு ஜெயலலிதாவுக்கு மரடைப்பு ஏற்பட்டதாக அப்பலோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்  தொண்டர்கள் கதிகலங்கிப்போயுள்ளனர். ஜெயலலிதா குணமடைந்து விட்டார். எப்போது வீடு திரும்புவதென்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என அப்பலோ அறிவித்தது. ஜெயலலிதா  சுகமடைந்து வீடு திரும்புவர் என சந்தோசத்தில் மிதந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்களும் தொண்டர்களும் அப்பலோவை முற்றுகையிட்டுள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு என்ன நடக்கும் என்ற பதற்றம் தமிழகத்தைத் தொற்றிக்கொண்டுள்ளது. இதற்கிடையில் அரசியல் காய் நகர்த்தல்களும் ஆரம்பமாகிவிட்டன. அண்ணா திராவிட  முன்னேற்றக்கழக சட்ட மன்ற உறுப்பினர் அனைவரையும் சென்னைக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி  உள்ளது. யார்மூலம்  இந்த உத்தரவு வெளியிடப்பட்டதென்ற விபரம் வெளியாகவில்லை. ஆதரவுக் கடிதம் பெறுவதற்காகவே அவர்கள் சென்னைக்கு அழைக்கப்படிருக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. ஜெயலலிதா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கையில் அவரது கட்சியைச்சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாக  தகவல் ஏற்கெனவே  வெளியானது. இந்த நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக  சட்ட மன்ற உறுப்பினர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டிருப்பது அதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

மோடியால் அறிவிக்கப்பட்ட  செல்லாக்காசு பற்றிய செய்திகள் அனைத்தும்  பின் தள்ளப்பட்டு ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய  செய்தி முன்னிலைக்கு வந்துள்ளது. ஜெயலலிதா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவருடைய உடல் நிலை பற்றி தமிழகம் ஆவலாக  இருந்தது. அவருடைய நோய், அவருக்குச்சிகிச்சை வழங்கப்படும் முறைபற்றிய  செய்தி அனைத்தும் இரகசியமாக கையாளப்பட்டன. எதிர்க்கட்சியினரின் வற்புறுத்தலால் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய அறிக்கை வெளியானது.  அந்த அறிக்கையை அப்பலோ நிர்வாகம் வெளியிடவில்லை என்ற பிரச்சினை எழுந்தது. பின்னர் அப்பலோவின் சார்பில் அவ்வப்போது அறிக்கைகள் வெளியாகின. அண்ணா திராவிட  முன்னேற்றக்கழகத்  தலைவர்களும் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி அவ்வப்போது தகவல் வெளியிட்டனர்.

தமிழக ஆளுனர் வித்யாசாகர், ராகுல்காந்தி, ஸ்டாலின், திருமாவளவன், வைகோ, ராமதாஸ், அன்புமணி உட்பட மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதாவைப் பார்க்க அப்பலோவுக்குச் சென்றார்கள். யாருடைய கண்ணிலும் ஜெயலலிதா சிக்கவில்லை. அப்பலோவில் யாரோ சொன்னதைக் கேட்டு கிழிப்பிள்ளைபோல   ஜெயலலிதா சுகமாக இருக்கிறார். என ஒப்புவித்தார்கள்.

தமிழக அரசியல் சதுரங்கத்தின் பகடைக் காயாக ஜெயலலிதாவை யாரோ பயன் படுத்துகிறார்கள். எம்.ஜி.ஆரின் உடல் நிலைபாதிக்கப்பட்டபோது அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சைபெற்று மீண்டும் வந்து முதலமைச்சரானார். சிங்கப்பூருக்குச் சென்று  சிகிச்சை பெற்றபின் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். முன்னாள் மத்திய அமைச்சர் மாறனின்  உயிரைக் காப்பாற்றுவதற்காக அம்புலன்ஸ் விமானத்தில் சிங்கப்பூருக்குக் கொண்டு சென்றார்கள்.  துரதிர்ஷ்டவசமாக அவரது உயிரைக் காப்பற முடியவில்லை. ஜெயலிதாவின் உடல் நிலை பற்றிய உணமைகளை ஏன் வெளியிடவில்லை. மேலதிக சிகிச்சைக்காக அவரை ஏன் வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லவில்லை என்ற கேள்விகளுக்கான பத்தி இப்போதைக்கு வெளிவராது மர்மமாகவே இருக்கப்போகிறது.
வர்மா


No comments: