Sunday, March 29, 2009

திரைக்குவராதசங்கதி 6


தமிழ்த்திரை உலகில் பாடி நடிப்பவர்களுக்கு பதிலாக பின்னணிப் பாடகர்கள் அறிமுகமான கால கட்டத்தில் இசைக் கச்சேரி மேடைகளிலும் திரை இசை உலகிலும் புகழ்பெற்றவர் மதராஸ் லலி தாங்கி வசந்த குமாரி எனும் எம்.எல். வசந்தகுமாரி.
1948 ஆம் ஆண்டு முதல்
சுமார் 20 வருடங்கள் தமிழ்த்திரை இசையில் தனது மென்மையான குரலினால் சாதனை படைத்தõர். ஏனைய பாடகர்களுடன் ஒப்பிடுகையில் இவரது பாடல்கள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும் மனதை விட்டு நீங்காத பாடல்கள் பல உள்ளன.
இசைக் குடும்பத்தில் பிறந்த எம்.எல். வசந்தகுமாரி இரண்டு வயதாகும் போதே ஸ்வரங்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டாரம். இவருடைய தகப்பனான கூத்தனார் அய்யாசாமி அய்யர் கர்நாடக சங்கீதத்திலும் ஹிந்துஸ்தானி இசையிலும் புகழ் பெற்றவர். தாயார் லலிதாங்கி கோயம்புத்தூர் தாயி, ப்ளூட் சுப்பராவ், வீணை தனம் போன்றவர்களிடம் முறைப்படி கற்றுத் தேர்ச்சி பெற்றõர்.
தமது மகளான எம்.எல்.
வசந்த குமாரி தம்மைப்போல் பாடகியாக வருவதை பெற்றோர் விரும்பவில்லை. அதேவேளை மகளின் சங்கீத ஆர்வத்துக்கும் தடை விதிக்கவில்லை. மகளை சிறந்ததொரு வைத்தியராக்க வேண்டும் என்றே பெற்றோர் விரும்பினார்கள். பெற்றோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக கொன்வென்டில் படித்த எம்.எல்.வசந்த குமாரி சங்கீதத்தையும் கைவிடவில்லை.
தாயாரான லலிதா தாங்கி கச்சேரி செய்யும் போது மகளான எம்.எல். வசந்தகுமாரி பின்பாட்டுப் பõடினார். எம்.எல். வசந்தகுமாரியின் பாடலைக் கேட்டு மகிழ்ந்த அன்றைய பிரபல பின்னணிப் பாடகரான ஜி.என்.பாலசுப்பிரமணியம் அவரைத் தனது மாணவியாக்கினார். 13 ஆவது வயதில் எம்.எல்.வசந்தகுமாரி
பாடிய முதலாவது இசைத்தட்டு வெளியான அதே சமயம் முதன் முதலாக தனிக் கச்சேரியையும் நடத்தினார்.
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது சென்னை மீது ஜப்பான் குண்டு
போடப் போவதாக செய்தி பரவியதும் மக்கள் அனைவரும் நகரத்தை விட்டு வெளியேறினர். இதனால் அய்யாசாமி அய்யரின் வருமானம் வீழ்ச்சியடைந்தது. லலிதாங்கி நோயில் வீழ்ந்ததால் எம்.எல். வசந்தகுமாரி 15ஆவது வயதில் வசந்தத்தை இழந்து குடும்பப் பாரத்தை சுமந்தார்.
லட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலையாகி சிறையிலிருந்து வெளி வந்த ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜபõகவதர் ராஜமுத்தி என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்தார். ராஜமுக்தியில் எம்.கே. தியாகராஜபாகவதருக்கு இணை ஜோடியாக வி.என்.ஜானகி நடித்தார். வி.என். ஜானகிக்கு பின்னணி பாட தனக்கு இணையாக பாடக் கூடிய ஒருவரைத் தேடிய போது கச்சேரி மேடைகளிலும் இசைத்தட்டுகளிலும் ஒலித்த எம்.எல். வசந்தகுமாரியின் குரல்
அவரைக் கவர்ந்தது.
ராஜமுக்தி படத்தில் எம்.கே. தியாகராஜபாகவதருடன் இணைந்து இரண்டு பாடல்களையும், இரண்டு தனிப்
பாடல்களையும் அப்படத்தில் வில்லியாக நடித்த பானுமதியுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடினார். அதன் பின்னர் எம்.எல்.வசந்தகுமாரியின் வாழ்வில் வசந்தம் வீசியது.
நந்த கோபாலனோடு நான் ஆடுவேன். கண்ணன் மன நிலையே தங்கமே தங்கம், அய்யாசாமி ஆவோஜி சாமி, சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா, எல்லாம் இன்பமயம், கொஞ்சும்புறாவே, குயிலே உனக்கனந்தகோடி நமஸ்காரம், கூவாமல் கூவும் கோகுலம், தாயே
யசோதா, ஆடல் காணீரோ அந்திமயங்குதடி, ஆடாத மனமும் உண்டோ, முன்னம் அவனுடைய நாமம் கேட்டான், மஞ்சள் வெயில் மாலையிலே போன்ற பாடல்கள் இன்றும் மனதை வருடுகின்றன.
எம்.எல். வசந்தகுமாரியின் மகள் ஸ்ரீ வித்தியா மிகச் சிறந்த நடிகை என்று பெயர் பெற்றவர். தாயைப்போல் பிரபல பாடகி இல்லை என்றாலும் ஓரளவு இசை ஞானம் உடையவர். எம்.எல். வசந்த குமாரியின் சிஷ்யைகளில் ஒருவரான
சுதா ரகுநாதன் தன் குருவின் புகழை பரப்புகின்றார்
எம்.எல். வசந்தகுமாரியின் குரலில் வெளியாகிய திருப்பாவை, திருவெம்பாவை ஆகியன இந்து வைஷ்ணவ ஆலயங்களிலும் வீடுகளிலும் ஒலித்து அவரை ஞாபகப்படுத்துகின்றது.
ரமணி
மித்திரன் 29/03/2009

ஜெயாவிடம் சரணடைந்த ராமதாஸ்

தமிழக முதல்வர் கைவிட்டதால்
ஜெயாவிடம் சரணடைந்த ராமதாஸ்


இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழகக் கட்சிகள் அனைத்தும் தயாராகிவிட்டன. யாருடன் கூட்டணி என்று பகிரங்கமாக அறிவிக்காத டாக்டர் ராமதாஸும் விஜயகாந்தும் தமது முடிவை அறிவித்து விட்டனர்.
தமிழகத் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைத்த டாக்டர் ராமதாஸை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் கைவிட்டுவிட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கடந்த நாடாளுமன்றத் தேர்தøலயும் சட்ட மன்றத் தேர்தலையும் சந்தித்த டாக்டர் ராமதாஸ் முதல்வர் கருணாநிதியுடனான முரண்பாடுகளின் காரணமாக கூட்டணியில் இருந்து தூக்கி எறியப்பட்டார். தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டாலும் மத்தியில் காங்கிரஸின் தலைமையில் ஆட்சியில் இருப்பதாக டாக்டர் ராமதாஸ் அறிக்கைகள் விடுத்து தனது இருப்பை வெளிக்காட்டினார்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பலமான கூட்டணியில் சேர்வதற்கு தமிழகக் கட்சிகள் அனைத்தும் தீவிரம் காட்டின. அதேவேளை, டாக்டர் ராமதாஸும் விஜயகாந்தும் கூட்டணி பற்றி வெளிப்படையாகப் பேசாது மௌனம் காத்தனர்.
தனது கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்குவது யார் என்று பார்ப்பதிலேயே டாக்டர் ராமதாஸ் அதிக அக்கறை காட்டினார். காங்கிரஸின் கொள்கை பிடிக்காது இடதுசாரிகள் கூட்டணியை விட்டு வெளியேறியதால் அந்த இடத்தை நிரப்ப டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள்கட்சியின் வரவை தமிழக முதல்வர் கருணாநிதி எதிர்பார்த்தார்.
கூட்டணியில் இருந்து முறைகேடாக வெளியேற்றப்பட்டதனால் முதல்வர் கருணாநிதியின் அழைப்பை பாட்டாளி மக்கள் கட்சி பெரிதுபடுத்தவில்லை. டாக்டர் ராமதாஸின் மகன் டாக்டர் அன்பு மணி மத்திய அரசில் அமைச்சராக இருப்பதனால் அடுத்த தேர்தலின் போதும் பாட்டாளி மக்கள் கட்சி தம்முடன் தான் இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்த்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் முடிவை அறிவதற்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பெரிதும் முயற்சி செய்தனர். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் பிடி கொடுக்காது பொதுக் குழு முடிவு செய்யும் என்று கூறிவிட்டார்.
காங்கிரஸ் பொறுமை காப்பது போல் தமிழக முதல்வர் பொறுமையாக இருக்கவில்லை. தனது கட்சியின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் பெயரை முதல்வர் கருணாநிதி அதிரடியாக வெளியிட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர் அதில் இருக்கவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியை சேர்க்கக் கூடாது என்பதில் முதல்வர் கருணாநிதி உறுதியாக இருப்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலைச் சந்திக்கப் போகிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை முதல்வர் கருணாநிதிக்கு இருந்தது.
கொள்கை என்பது புறந்தள்ளப்பட்டு அதிக இடம் தருபவர்களுடன் கூட்டணி சேர்வது என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருந்துள்ளது. தமிழகத் தேர்தல்களில் வெற்றி பெற்ற கூட்டணியில் இடம்பிடித்திருந்த பாட்டாளி மக்கள் கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் தாவியதால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி தோல்வியடையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஆனால், விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் இந்தக் கணக்கை மாற்றி அமைக்கும் சக்தியைப் பெற்றுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தனித்து தேர்தலைச் சந்தித்த விஜயகாந்த் தேர்தலில் படுதோல்வியடைந்தாலும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வெற்றி வாய்ப்புக்களைத் தவிடு பொடியாக்கினார்.
விஜயகாந்தை தமது அணிக்குள் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சி பகீரதப் பிரயத்தனம் செய்தது. காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கு விஜயகாந்துக்கும் விருப்பம்தான். ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்வதற்கு விஜயகாந்த் விரும்பவில்லை.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் தான் என பிரசாரம் செய்யும் விஜயகாந்த் இன்னொரு முதல்வரின் தலைமையில் தேர்தலைச் சந்திக்க விரும்பவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் மீது வெறுப்படைந்திருப்பவர்களின் ஒரே தெரிவு விஜயகாந்த்தான். அவர்களின் வாக்குகளை நம்பியே விஜயகாந்த் தேர்தøலச் சந்திக்கிறார். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டதும் பாதிக்கப்பட போவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான்.
இடதுசாரிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் பலத்தை நம்பியே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலை சந்திக்கிறது. இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசும், தமிழக அரசும் கண் மூடிக் கொண்டிருந்ததையே இடதுசாரிகளும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தமது பிரசாரத்தில் முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இலங்கைத் தமிழர்களின் துயர் தீர்ப்பதற்காக ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதனையும் செய்யவில்லை. என்றாலும் இடதுசாரிகளினதும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் ஆதரவில் வெற்றி பெற்று விடலாம் என்று ஜெயலலிதா கனவு காண்கிறார்.
இவர்களின் பிரசாரத்தை முறியடிப்பதற்காகவே முதல்வர் கருணாநிதி தனது பக்கத்தில் திருமாவளவனை வைத்திருக்கின்றார். இலங்கைத் தமிழர்களுக்காக உரத்துக் குரல் கொடுக்கும் திருமாவளவனின் பதிலடி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக்கூட்டணிக்கு பலத்த அடியாய் இருக்கும்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் கூட்டணியே தமிழகத்தில் அதிகமான தடவைகள் வெற்றி பெற்றுள்ளது. அந்தச் சாதனை இம்முறையும் தொடர்வது சந்தேகமாக உள்ளது. தமிழகத்தில் ஆட்சி செய்யும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகள் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளன.
ராஜிவ்காந்தி கொல்லப்பட்டபோது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வியடைந்தது. ஆனால் அக்கட்சியின் வாக்கு விகிதம் குறையவில்லை.
ஆனால் இம்முறை புதிய கூட்டணிகள் புதிய சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கின்றன. கொள்கைகளும் சாதனைகளும் பின் தள்ளப்பட்டுள்ளன. உணர்ச்சிகளும் அவலங்களும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிப்பதில் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படலாம். நடுநிலையாளர்கள் யாரைத் தெரிவு செய்வார்கள் என்பதும் புதிராக உள்ளது.
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 29/03/2009

Friday, March 27, 2009

அரசியலாகும் ஐ.பி.எல்.போட்டிகள்கிரிக்கட் ரசிகர்களின் உற்சாகத் திருவிழாவான 20/20 கிரிக்கட் சுற்றுப் போட்டி இந்தியாவில் இருந்து தென் ஆபிரிக்காவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோடிகளைக் குவிக்கும் கிரிக்கட்டில் அதிரடியான 20/20 போட்டியை நேரடியாகக் கண்டு ரசிக்கும் சந்தர்ப்பத்தை இந்திய ரசிகர்கள் இழந்து விட்டார்கள்.
ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவில் நடத்துவதற்காக அட்டவணை தயாரித்து முடிந்து மூச்சு விடுவதற்குள் இந்தியப் பொதுத் தேர்தல் என்ற அனல் காற்று வீசத் தொடங்கியது. கிரிக்கட்டா? பொதுத் தேர்தலா என்ற கேள்விக்கு பொதுத் தேர்தல்தான் முக்கியம் என்று இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அடித்துக் கூறிவிட்டார்.
பொதுத் தேர்தலின்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட உள்ளதால் கிரிக்கட் போட்டிகளுக்கு பாதுகாப்புத் தர முடியாது என்று இந்திய உள்துறை அமைச்சர் அழுத்தம் திருத்தமாகக் கூறி உள்ளார். தேர்தல் நடைபெறும் நாட்களில் போட்டிகள் நடைபெறாது என்று உறுதியளித்த ஐ.பி.எல். நிர்வாகம் மூன்று முறை அட்டவணையை மாற்றியது. பொதுத் தேர்தலில் முனைப்புடன் இருப்பதால் ஐ.பி.எல். போட்டிகளுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்காது மாநில அரசுகள் பாதுகாப்பு வழங்கினால் போட்டிகளை நடத்தலாம் என்று உள்துறை அமை ச்சு மீண்டும் கிடுக்குப்பிடி போட்டது.
தேசிய அணி வீரருக்கு கிடைக்கும் பணத்தை விட அதிகளவான பணத்தை ஐ.பி.எல். அணியில் உள்ள வீரர்கள் பெறுகின்றனர்.
தாய் நாட்டுக்காக விளையாடுவதா பணத்துக்காக ஐ.பி. எல்லில் விளையாடுவதா என்று சில வீரர்கள் தடுமாறுகிறார்கள். ஐ.பி.எல்லில் விளையாடினால் தேசிய அணியில் இடம் கிடைக்கும் என்ற எண்ணத்திலும் சில இளம் வீரர்கள் ஐ.பி.எல்லில் விளையாட ஆர்வம்காட்டுகின்றனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் ரீதியில் முரண்பட்டுக் கொண்டிருந்தாலும் ஐ.பி. எல்லில் இரு நாட்டு வீரர்களும் ஒரு அணியாக நின்று தமது வெற்றிக்காக போராடுகின்றனர்.
மும்பைத் தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதால் கிரிக்கட் போட்டியும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஐ.பி. எல்லிலும் விளையாடுவதற்காக பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைவதை அனுமதிக்க முடியாது என்று சிவசேனா போர்க் கொடி தூக்கியது.
பயங்கரவாதத்தை முறியடிக்க போதுமான தயார் நிலையில் உள்ளதாக அடிக்கடி அறிக்கை விடுக்கும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஐ.பி.எல். போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று கடுமையாக கூறியதால் ஐ.பி.எல். நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது.
கோடிகளில் புரளும் ஐ.பி.எல். போட்டியை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லாது இந்தியாவிலேயே நடத்துவதற்கே ஐ.பி.எல். நிர்வாகிகள் விரும்பினார்கள்.
கிரிக்கட் ரசிகர்கள் இந்தியாவில் மிக அதிகம். இந்தியாவில் போட்டி நடைபெறுவதனால் பார்ப்பதற்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என்ற எண்ணம் இருந்தது. இந்திய அரசுடன் சுமுகமாகப் பேசி திருப்திகரமான முடிவை எடுப்பதற்கு பல முறை முயன்றபோதும் இந்திய அரசாங்கம் சாதகமான பதிலை வழங்காமல் இழுத்தடித்தது. இந்திய அராங்கத்தின் இழுத்தடிப்பினால் சுதாகரித்துக் கொண்ட ஐ.பி.எல். தலைவர் லலித் மோடி ஐ.பி.எல். போட்டியை வெளிநாட்டில் நடத்துவதற்கு முடிவு செய்தார்.
இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பிரகாரம் ஐ.பி.எல். அட்டவணையை மாற்றுவது சிரமமான காரியம். 20/20 இரண்டாவது உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் நாள் நெருங்குவதாலும் வேறு கிரிக்கட் தொடர்கள் இருப்பதனாலும் ஐ.பி.எல். போட்டிகளின் திகதியை மாற்ற முடியாத நிலை உள்ளது. முதலாவது ஐ.பி.எல். போட்டி மிக பிரமாண்டமாக நடந்தது. அதனைப் பார்த்த பல வீரர்கள் அதில் விளையாட சந்தர்ப்பம் கிடைக்காததையிட்டு மனம் வருந்தினார்கள். இங்கிலாந்து வீரர்கள் கடந்த போட்டியில் விளையாடவில்லை. இந்தப் போட்டியை அவர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஐ.பி.எல். போட்டி இடம்மாறியதால் இங்கிலாந்து வீரர்கள் சற்று வருத்தத்துடன் உள்ளனர்.
இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரரான சச்சின் ஐ.பி.எல். ஆரம்பமாவதற்கு முன்னரே ஐ.சி.எல். ஆரம்பித்து 20/20 போட்டியை நடத்த திட்டமிட்ட கபில்தேவ் ஆகியோரும் ஐ.பி.எல். போட்டிகள் இடம்மாறியதை விரும்பவில்லை.
இந்தியாவில் 50 ஆயிரம் ரசிகர்களின் முன்னால் விளையாடும் உற்சாகம் வேறு இடத்தில் கிடைக்காது என்று கருத்தும் வீரர்கள் மத்தியில் உள்ளது.மே மாதம் 8 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதிவரை 59 போட்டிகள் நடத்த ஏற்பாடாகி உள்ளன. ஐ.பி.எல். போட்டியை நடத்துவதில் இங்கிலாந்துக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் கடும் போட்டி நிலவியது. இப்போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றி பெற்று விட்டது.
20/20 கிண்ணப் போட்டி இடம் மாறியதால் ஐ.பி. எல்லுக்கு சுமார் 200 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டு அணி வீரர்கள் முகாமையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனம் ஆகியவற்றுக்கான போக்குவரத்து தங்குமிட செலவு 100 முதல் 110 கோடி ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். 150 வீரர்களுக்குமான தங்குமிட செலவு 80 முதல் 100 கோடி ரூபா வரையில் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழையும் பாதுகாப்பும் அச்சுறுத்தியதால் ஐ.பி.எல். 20/20 போட்டி இங்கிலாந்தின் கையில் இருந்து நழுவியது. பாதுகாப்புக்கு தென் ஆபிரிக்க முழு உத்தரவாதமளித்துள்ளது.
இந்திய அரசு மனம் வைத்திருந்தால் 20/20 போட்டியை இந்தியாவில் நடத்தி இருக்கலாம் என்று கருதும் இந்திய ரசிகர்களும் உள்ளனர். பாதுகாப்பை காரணம் காட்டி இந்திய அரசு தட்டிக் கழித்துவிட்டது என்ற கருத்து பலமாக உள்ளது.
இந்திய அரசியலின் முன்னால் தாக்குப் பிடிக்க முடியாத கிரிக்கட் தென் ஆபிரிக்காவிடம் சரணடைந்துள்ளது.
ரமணி.
.
.
மெட்ரோ நியூஸ் 26/032/009

Sunday, March 22, 2009

திரைக்கு வராத சங்கதி 5


முறைப்படி சங்கீதம் கற்காது தனது இசைஞானத்தாலும் குரல்வளத்தாலும் நாடக மேடையிலும் தமிழ் சினிமாவிலும் கோலோச்சியவர் வி.என்.சுந்தரம். தஞ்சாவூர் மாவட்ட விகலூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஆலாஸ்ய சுந்தரம் நாடக மேடையில் புகழ் பெற்றபோது விளம்பரங்களில் பெயரை பெரிதாக எழுதுவதற்காக வி.என். சுந்தரம் ஆனார்.திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை, திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை போன்ற நாதஸ்வர ஜாம்பவான்களின் இசை ஜாலங்களை சுருதி பிசகாது தனது ஏழு வயதிலேயே பாடத் தொடங்கி விட்டார் வி. என். சுந்தரம். தங்கள் நாதஸ்வரத்தில் இருந்து வெளியாகும் உருப்படிகளை சிறுவன் சுந்தரம் பாடுவதைக்கேட்ட நாதஸ்வர மேதைகள் ஆச்சரியப்பட்டார்கள்.வி.என். சுந்தரத்தின் திறமையைக் கேள்விப்பட்ட நடராஜ கான சபா என்ற சிறுவர் நாடக கொம்பனியின் முதலாளி சுந்தரம்பிள்ளை சுந்தரத்தை தனது நாடகக் கொம்பனியில் சேர்த்தார். மாமிசமும், சைவமும் ஒரே இடத்தில் சமைக்கப்படுவதை சுத்த சைவனான சுந்தரத்தினால் ஜீரணிக்க முடியவில்லை. அதன் காரணமாக அங்கிருந்து விலகி மதுரை பாலவினோத சங்கீத கயா என்ற பாய்ஸ் கொம்பனியில் சேர்ந்தõர்.சிறந்த குரல் வளமும் எடுப்பான தோற்றமும் கொண்ட சுந்தரம் ராஜ பாட்டாக நடித்த பின்னாளில் இசைச்சித்தர் என்ற பட்டப் பெயருடன் பின்னணிப் பாடகராக சி.எஸ். ஜெயராமன் அவருக்கு ஜோடியாக பெண் வேடத்தில் நடித்தார்.
நாடகங்களில் மெய்மறந்து நடிகர்களின் மீது அபிமானம் கொண்டவர்களில் ஒருவரான கவிராயர் மதுரபாஸ்கரதாஸ், வி.என். சுந்தரத்தின் பரமரசிகரானார். சென்னையில் உள்ள இசைத்தட்டு நிறுவனம் இராமாயண நாடகத்தை இசைத்தட்டாக வெளியிடுவதற்கு ராமர் வேஷத்தில் பாட ஆள் தேவையென விளம்பரம் செய்தது. இதனை அறிந்த கவிராயர் மதுர பாஸ்கரதாஸ், வி.என். சுந்தரத்தையும் அழைத்துக் கொண்டு சென்னைக்குச் சென்றார். ராமர் வேஷத்தில் வேறு ஒருவர் பாடி விட்டார். வி.என். சுந்தரத்தின் பாடலைக் கேட்ட நிறுவன முகாமையாளர் எம்.என். ஐயங்கார் சுந்தரத்தை அங்கேயே தங்கும்படியும் வாய்ப்பு வரும் போது பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். அய்யங்கார் கூறிய வாய்ப்பு மார்க்கண்டேயர் என்ற படத்தின் மூலம் வி.என். சுந்தரத்துக்குக்கிடைத்தது. மார்க்கண்டேயர் படத்தில் நடிப்பதற்காக 16 வயதுடைய ஒருவரைத் தேடினார்கள். இதனை அறிந்த பாஸ்கரதாஸ் வி.என்.சுந்தரத்தை அழைத்துச் சென்றார். சுந்தரத்தின் பாடலைக் கேட்ட இயக்குநர் முருகதாஸன், படப்பிடிப்பாளர் ராம்நாத்தும் திருப்தியடைந்தார்கள்.
1934 ஆம் ஆண்டு வி.என். சுந்தரம் நடித்த மார்க்கண்டேயர் என்ற படம் வெளியானது. அதன் பின்னர் பட்டினத்தார், சந்தரஹாசன், சுந்தரமூர்த்தி நாயனார், கண்ணப்ப நாயனார், சங்கராச்சாரியார், சுபத்ரா அர்ஜுன மணிமான், ராஜசூயம், தள அமராவதி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
பாடல்களுக்கு முக்கியத்துவம் குறைந்து வசனங்கள் புகழ் பெற்ற காலத்தில் வி.என். சுந்தரத்துக்கு சினிமா வாய்ப்பு இல்லாமல் போனது.
கதாநாயகனான வி.என். சுந்தரம் பின்னணிப் பாடகரானார். மணமகள்,தெனாலிராமன், கூண்டுக்கிளி, மாலையிட்ட மங்கை, ஒளவையார் ஆகிய படங்களில் பின்னணி பாடினார்.கல்யாணம் பண்ணிப்பார்,பிரம்மச்சாரி, தெனாலிராமன்,வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய பாடங்களில் சிவாஜிக்காக பின்னணி பாடினார்.
1964 ஆம் ஆண்டு பாலையாவுக்காக பின்னணி பாட சந்தர்ப்பம் கிடைத்தது. மெட்டுப் படிக்காததால் பாமா விஜயம் படத்தில் இடம்பெற்ற வரவு எட்டணா செலவு பத்தணா என்ற பாடலில் வாயசைக்கும் நான்கு நடிகர்களுக்கும் ரி.எம். எஸ்.பின்னணி பாடினார்.திரை உலக வாழ்வு முடிந்ததும் நாடகங்களில் ரி.ஆர்.மகாலிங்கத்துக்கு ஜோடியாக பெண்வேடத்தில் நடித்தார்.
ரமணி
மித்திரன் 22/ 03 /2009

மத்தியில் ஆட்சி அமைக்கும் கனவுடன் தேர்தலைச் சந்திக்கிறார் ஜெயலலிதா


இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்திவரும் அதேவேளை தமது கட்சியின் சார்பில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் நடவடிக்கையிலும் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகமும் அதிக அக்கறை காட்டுகின்றன.
கடந்த பொதுத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கட்சி தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கடந்த முறை போன்று இமாலய வெற்றியைப் பெற மாட்டாது என்றே தெரிகிறது.
2004 ஆம் ஆண்டு 2 இந்தியப் பொதுத்தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிச கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் அணி மாறி அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமானதால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு முதல் தடை விழுந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளைப் பட்டியலிட்டு வாக்குச் சேகரிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டுள்ளன. திராவிட முன்னேற்றக்கழக ஆட்சியின் இலவசத் திட்டங்களும் வாக்குகளை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதேவேளை இலங்கைத் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கம் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்திய அரசின் உதவி உள்ளதென்ற பிரசாரங்கள் தமிழ் இன உணர்வாளர்களின் வாக்குகளை திசை திருப்பச் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
நாற்பதும் நமக்கே என்ற பிரசாரம் இந்தமுறை பொய்த்துப் போகும் சூழ்நிலை உள்ளது என்றாலும், அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் உள்ளன.
புதிய வேட்பாளர்களை களமிறக்குவதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் பலருக்கு இம்முறை சந்தர்ப்பம் கிடைக்காது என்று கருதப்படுகிறது. தயாநிதி மாறன், ரி.ஆர்.பாலு போன்ற ஒரு சிலருக்குத்தான் இந்த முறை போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படும். புதிய தலைமுறைக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இளைய சமுதாயத்தினர் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தொகுதிப்பக்கம் அதிகம் எட்டிப் பார்க்கõதவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்பதை முதல்வர் கருணாநிதி சூசகமாக அறிவித்துள்ளார். ஸ்டாலின் அணி, அழகிரி அணி என்ற பேதம் இல்லாது கட்சிக்கு விசுவாசமானவர்களைத் தேர்வு செய்வதில் திராவிட முன்னேற்றக் கழகம் தீவிரமாக உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்பாடு சற்று வித்தியாசமாக உள்ளது. தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தமது ஜாதகத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் இடதுசாரிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மத்தியில் மூன்றாவது அணி ஆகியவற்றின் கூட்டணியின் சற்று பலமான நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளன.
இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசும் தமிழக அரசும், அசமந்தமாகச் செயற்படுவதாக இடது சாரிகளும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் குற்றம் சாட்டியுள்ளனர். இவைகள் நடத்தும் எழுச்சி போராட்டங்களுக்கு தமிழக மக்கள் மத்தியில் பலத்த வரவேற்புள்ளது. மத்திய, மாநில அரசுகள் விட்ட தவறுக்கு நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் நல்லபாடம் புகட்ட வேண்டும் என்று தா. பாண்டியன், வைகோ போன்றவர்கள் பிரசாரம் செய்துள்ளனர். இவர்களின் பிரசாரத்தின் பிரகாரம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றியைத்தேடி தருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினையில் அதிக அக்கறை காட்டாத ஜெயலலிதா கடைசி நேரத்தில் உண்ணாவிரதம் இருந்து இலங்கைத் தமிழ் மக்களின் துயர்தீர்க்க நிதி வழங்கியது உணர்வு பூர்வமானதா? நாடகமா? என்ற பட்டிமன்றம் தமிழகத்தில் நடைபெறுகிறது.
இடதுசாரிகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் முதுகில் சவõரி செய்யும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெறும் நம்பிக்கையில் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் அணிமாறும் காட்சிகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி ராமச்சந்திரனும், எல்.கணேசனும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஐக்கியமாகிவிட்டனர்.
வைகோவின் வலது கரமாக விளங்கிய கண்ணப்பன், திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசாரப் பீரங்கியான ராதாரவி, தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து விட்டார்.
செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன், கண்ணப்பன், ராதாரவி ஆகியோரின் வெளியேற்றம் அக்கட்சிகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
வ‌ர்மா
வீரகேசரி வாரவெளியீடு

22/ 03 /2009

Thursday, March 19, 2009

திரைக்குவராதசங்கதி 4


இசை அமைப்பாளர்களில் அதிகமானோர் ஹார்மோனியக் கலைஞர்கள். இதற்கு விதிவிலக்கானவர் டி.ஆர்.பாப்பா, மிகப் பிரபல்யமான வயலின்கலைஞர்களில் டி.ஆர்.பாப்பாவும் ஒருவர்.டி.ஆர்.சிவசங்கரன் என்ற இயற்பெயர்கொண்டவர் டி. ஆர்.பாப்பா. அவரின் தகப்பன் ராதாகிருஷ்ணபிள்ளை ஒரு வயலின் கலைஞர். வருமானம்குறைவான காரணத்தினால் டி.ஆர்.பாப்பாவின்படிப்பு தடைப்பட்டது. சிறு வயதிலேயே தஞ்சைதிருவையாறு உற்சவத்திற்கு டி.ஆர். பாப்பா சென்றபோது அவரது தகப்பனின் நண்பரான வயலின்வித்துவானான கும்பகோணம் சிவனடிபிள்ளைடி.ஆர்.பாப்பாவைத் தன்னுடன் விடும்படி அவரின் தகப்பனாரிடம் கேட்டார். அவரின் வேண்டு
கோளின்படி டி.ஆர். பாப்பாவை வயலின் மேதைகும்பகோணம் சிவனடி வேலுப்பிள்ளையிடம் ஒப்படைத்தார் தகப்பன்.
சிவனடி வேலு சில படங்களுக்கு வயலின் வாசித்தபோது டி.ஆர். பாப்பாவும் அவருடன் செல்வார். 1938 ஆம் ஆண்டு குருகுல வாசத்தை முடித்துக்கொண்டு தனிக்கச்சேரி செய்ய ஆரம்பித்தார்டி.ஆர்.பாப்பா.சேலம் மார்டன் ஆட்ஸ் மனோன்மணி படத்தைத்தயாரித்த போது அப்படத்தின் இசையமைப்பில் வயலின் கலைஞராகப் பணியாற்றினார்டி.ஆர்.பாப்பா, அதன்பின்னர் ஜு பிடர் பிக்ஸசில் அலுவலகப்பையனாக எம்.எஸ். விஸ்வநாதன் வேலை செய்
தார். பிரதம இசையமைப்பாளர் இல்லாதபோதுசில பாடல்களுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பார். அவரின் இசையை அங்குள்ள சிலர்பெரிதாக எடுக்கவில்லை. அப்பொழுதே எம்.எஸ். விஸ்வநாதன் சிறந்த இசை அமைப்பாளராகவருவார் என டி.ஆர்.பாப்பா கணித்தார். அதனைஎம்.எஸ்.விஸ்வநாதன் தொலைக்காட்சிப் பேட்டிஒன்றில் தெரிவித்தார்.டி.ஆர்.பாப்பாவின் வயலின் இசையை விமர்சகர்கள் அங்கீகரித்தார்கள். கல்கியின் மகள்
ஆனந்தி, சதாசிவத்தின் மகள் ராதா ஆகியோரின்நாட்டியங்களின்போது டி.ஆர்.பாப்பா வயலின்வாசித்தார்.
சிட்டால் பிலிம்ஸ் அதிபர் ஜோஸப் தனியத்டி.ஆர்.பாப்பாவுக்கு சினிமாவில் இசையமைக்கசந்தர்ப்பம் கொடுத்தார். ஆத்ம காந்தி என்ற மலையாளப்படத்தின் மூலம் சினிமா இசை அமைப்பாளரான டி.ஆர்.பாப்பா ஜோஸப் தனியத்தின் பலபடங்களுக்கு டி.ஆர்.பாப்பா இசையமைத்தார்.அவரின் ஆஸ்தான இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா என்றால் அது மிகையாகாது.உங்கள் படத்தின் இசையமைப்பாளர் கதாநாயகன் யாரென்று ஜோஸப் தனியத்திடம் கேட்டால்கொஞ்சமும் தாமதிக்காது டி.ஆர். பாப்பா என்பார்புதிய கதாநாயகர் பலரை அறிமுகப்படுத்தியவர்களில்ஜோஸப் தனியத்தும் ஒருவர். அவர் அறிமுகப்படுத்தியவர்களில் அதி உச்சத்தில் இருந்தவர்களில்
தென்னக ஜேம்ஸ் பொண்ட் என அழைக்கப்படும் ஜெய்சங்கரும் ஒருவர்.அறிமுக கதாநாயகனுக்கு 1000 அல்லது 2000ஆயிரம் ரூபõ கொடுக்கும் ஜோஸப் தனியத் இசையமைப்பாளர் டி.ஆர்.பாப்பாவுக்கு 15 ஆயிரம்
ரூபா கொடுப்பார்.
அன்பு படத்தில் ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடியஎன்ன என்ன இன்பமே வாழ்விலே எந்நாளும்என்ற பாடல் ஒலிப்பதிவு நடைபெற்ற போது கதாநாயகனான நடிகர் திலகம் அங்கே வந்தார். நான்பியானோ வாசிக்கும் போது பாடல் ஆரம்பித்தால்நன்றாக இருக்கும் என்றார். அவரின் ஆலோசனைப்படி பியானோ இசையுடன் பாடல் ஆரம்பமாகியது.
ரமணி

Wednesday, March 18, 2009

வெட்டோரி 118 ரைடர் 102 நியூசிலாந்து 279

இந்தியாநியூசிலாந்து அணிகளுக்கிடையே ஹமில்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவின் போது இந்திய அணி விக்கட் இழப்பின்றி 29 ஓட்டங்கள் எடுத்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி நியூசிலாந்தை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது 78.2 ஓவர்களில் 279 ஓட்டங்களை எடுத்தது.
அணித் தலைவர் வெட்டோரி 118 ஓட்டங்களும் ரைடர் 102 ஒட்டங்களும் எடுத்தனர். உதிரிகளாக இந்திய வீரர்கள் நான்கு ஓட்டங்களை விட்டுக் கொடுத்தனர். நியூ ஸிலாந்தின் ஏனைய ஒன்பது வீரர்களும் 55 ஓட்டங்களை மட்டுமே எடுத்தனர்.
மைக்ரொஸ் குப்பில் ஜோடி துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. சஹீர்கானின் பந்தை ட்ராவிட்டிடம் பிடிகொடுத்த குப்பில் 14 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து களமிறங்கிய பிளையினும் சஹீர்கானின் பந்தை டோனியிடம் பிடிகொடுத்து ஓட்டமெதுவும் எடுக்காது வெளியேறினார்.
நியூசிலாந்து 17 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது இரண்டு விக்கட்டுகளை இழந்தது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மக்ரொஸ் ஸுடன் ரவ்லர் ஜோடி சேர்ந்தார். இந்த இணையும் அதிக நேரம் நீடிக்கவில்லை. இஷாந்த் சர்மாவின் பந்தை ஷேவாக்கிடம் பிடி கொடுத்து மக்ரொஸ் 12 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். 18 ஓட்டங்கள் எடுத்த ரவ்லர் இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
ரைடருடன் ஜோடி சேர்ந்த பிரங்ளின் ஓட்டமெதுவும் எடுக்காது இஷாந்த் சர்மாவின் பந்தை டோனியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 51 ஓட்டங்களுக்கு நியூசிலாந்து ஐந்து விக்கட்டுகளை இழந்து தடுமாறியது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்கலம் மூன்று ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பட்டேலின் பந்தை லக்ஷ்மனிடம் பிடி கொடுத்து இவர் ஆட்டம் இழந்தபோது நியூசிலாந்து அணி 60 ஓட்டங்களையே எடுத்திருந்தது. ஆறு விக்கட்டுகளை குறைந்த ஓட்டங்களில் இழந்தபோது தடுமாறிய நியூசிலாந்துக்கு ரைடரும் வெட்டோரியும் கைகொடுத்தனர்.
இவர்கள் இருவரும் சதமடித்து ஏழாவது இணைப்பாட்டத்தில் 186 ஓட்டங்களை எடு த்து நியூசிலாந் தின் கௌரவத்தைக் காத்தனர். நியூசிலாந்தின் ஓட்ட எண்ணிக்கை யை உயர்த்துவதற்காக இவர்கள் இருவரும் அதிரடியாக விளையாடினர்.
பட்டேலின் பந்தை டோனியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்த வெட்டோரி 164 பந்துகளில் இரண்டு சிக்ஸர் 14 பௌண்டரி அடங்கலாக 118 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூசிலாந்து 246 ஓட்டங்களை எடுத்திருந்தபோது ஏழாவது விக்கட்டை இழந்தது. அடுத்துகளமிங்கிய மில்ஸ் ஓட்டமெதுவும் எடுக்காது பட்டேலின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். ஒபிரெயின் எட்டு ஓட்டங்களில் ஹர்பஜனின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
நியூசிலாந்தின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதற்காக இறுதி வரை போராடிய ரைடர் 102 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 162 பந்துகளுக்கு முகம் கொடுத்து 14 பௌண்டரிகள் அடங்கலாக 102 ஓட்டங்கள் எடுத்த ரைடர் இஷாந்த் சர்மாவின் பந்தை லக்ஷ்மனிடம் பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.
19.2 ஓவர்களில் பந்து வீசிய இஷாந்த் சர்மா 72 ஓட்டங்களைக் கொடுத்து நான்கு விக்கட்டுகளை வீழ்த்தினார்.
18 ஓவர்கள் பந்து வீசிய பட்டேல் 66 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கட்டுகளை வீழ்த்தினார். 16 ஓவர்கள் பந்து வீசிய சஹீர்கான் 70 ஓட்டங்களைக் கொடுத்து இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.
ஹர்பஜன் சிங் 22 ஓவர்கள் பந்து வீசி 57 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கட்டையும் மூன்று ஓவர்கள் பந்து வீசிய ஷெவாக் விக்கட் எதனையும் வீழ்த்தவில்லை. 18 ஓட்டங்களைக் கொடுத்தார்.
இந்திய அணி ஏழு ஓவர்களுக்கு துடுப்பெடுத்தாடியது. கம்பீர் ஆறு ஓட்டங்களுடனும் ஷெவாக் 22 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

Tuesday, March 17, 2009

திரைக்குவராதசங்கதி 3


நடிகர் திலகத்தில் கால் ஷீட்களை கவனித்துவந்தவர் அவரது தம்பி சண்முகம். படத்தைப் பற்றி யாராவது கதைக்க வந்தால் தம்பியைப் பாருங்க தப்பா என்று கூறிவிட்டுஇருந்து விடுவார். சகல காரியங்களையும்சண்முகம் முடித்து விட்டு படப்பிடிப்புக்குப்போகும் நாளை நடிகர் திலகத்திடம் கூறுவார்.நடிகர் திலகத்தின் ஆஸ்தான இயக்குனர்களில்ஒருவர் சி.வி. ராஜேந்திரன். சி.வி. ராஜேந்திரன் சிவாஜியை வைத்து இயக்கும்படங்கள் தோல்வியடைவது குறைவு. சண்முகமும், சி.வி. ராஜேந்திரனும் ஒருநாள்நடிகர் திலகத்திடம் சென்று ""இந்த நடிகரைப்பாருங்கள். உங்களுடைய அடுத்த படத்தில்அறிமுகமாகப் போகும் புதுமுகம் இவர்தான்'' என்றனர்.அந்தப் புதுமுக நடிகரைப் பார்த்த நடிகர்திலகம் ஆச்சரியப்பட்டார். அவர் நடிப்பாரா என்று சந்தேகப்பட்டார். ஆனால் அந்தநடிகரோ நடிப்பதற்கு தயாராக இருந்தõர்.
நடிகர் திலகத்துடன் அறிமுகமான அந்தநடிகர் வேறு யாருமல்ல அவர்தான் நடிகர்திலகத்தின் மகன் பிரபு. நடிகர் திலகமும்மூத்த மகன் ராம்குமாரும் இணைந்து அறுவடைஎன்றொரு படத்தில் நடித்தனர். படம்
வெற்றிபெறவில்லை. அத்துடன் நடிப்புக்குமுழுக்குப் போட்டு விட்டார் ராம்குமார்.இந்த நிலையில் இரண்டாவது மகனான பிரபு நடிக்க வந்ததை அறிந்த நடிகர் திலகம்கொஞ்சம் யோசித்தார். இறுதியில் பிரபு
நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்.1982 ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுதினத்தன்று நடிகர் திலகமும், பிரபுவும்இணைந்து நடித்த "சங்கிலி' வெளியானது.ஹிந்தியில் வெளியான "காளிச்சரன்' என்ற படத்தின் கதையே சங்கிலி.
பிரபு பொலிஸ் அதிகாரியாக வர வேண்டுமென்றே தகப்பன் விரும்பினார். விதிஅவரை நடிகனாக்கியது.சந்திப்பு, வெள்ளை ரோஜா, மிருதங்கசக்கரவர்த்தி ஆகிய படங்களில் தகப்பனும் மகனும் இணைந்து நடித்தனர். சின்னத்
தம்பி பிரபுவை உச்சாணிக் கொப்பில் ஏற்றியது.

இலட்சிய நடிகர் எனப்பெயர் பெற்றவர்எஸ். எஸ். ராஜேந்திரன். இவரை எஸ்.எஸ். ஆர். என்று அன்புடன் அழைப்பார்கள். இவருடைய தமிழ் உச்சரிப்பு மிகவும்அருமையானது. நடிகர் திலகத்துக்குஇணையாக வசனம் பேசி நடிக்கும் திறமை உள்ளவர் எஸ். எஸ். ஆர்.எஸ். எஸ். ஆரும் எம்.ஜி. ஆரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். திராவிடமுன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறிய மக்கள் திலகம் அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம் என்ற அரசியல்
கட்சியை ஆரம்பித்த போது அவருடன்இணைந்து அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் வெற்றிக்காகப் பாடுபட்டதுடன்அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் சட்டசபைத் தேர்தலில்நின்று வெற்றிபெற்றவர்.
லேனா செட்டியார் என்பவர் "ராஜா தேசிங்கு' என்ற படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாகவும் நாட்டியப் பேரொளி பத்மினி கதாநாயகியாகவும் நடிப்பது என்றுமுடிவு செய்தார்கள். எம்.ஜி.ஆரின் நண்பனாக என்.டி. ராமராவும் அவரது ஜோடியாக பானுமதியும் நடிப்பது எனவும் தயாரிப்பாளர் திட்டமிட்டார்."ராஜா தேசிங்கு' படத்துக்கு கவியரசுகண்ணதாசன் வசனம் எழுதினார். கவிய
ரசு கண்ணதாசனின் வசனங்களைப்படித்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்வாய்விட்டுச் சிரித்தார். அரச படமான "ராஜா தேசிங்தில்' கலைவாணர்வாய் விட்டுச் சிரிக்கக் கூடிய வசனம்என்ன இருக்கும் என்று தயாரிப்பாளர்யோசித்தார்.கவியரசரின் இந்த அழகானதமிழ் வசனத்தை என்.டி. ராமராவ்பேசினால் அலங்கோலமாகிவிடும். எஸ். எஸ். ஆர். நடித்தால்சிறப்பாக இருக்கும் என்று கலைவாணர் கூறினார். தயாரிப்பாளர்எஸ். எஸ். ஆரை அழைத்து எம்.
எம். ஜி.ஆரின் படைத் தளபதியும், நண்பனுமான மகமத்கான் வேடத்தில் நடிக்க சம்மதமா எனக்கேட்டார். எம்.ஜி. ஆருடன்நடிக்க யாருக்குத்தான் விருப்பம்இருக்காது. எஸ். எஸ். ஆர். உடனே சம்மதம் தெரிவித்து விட்டார்.எம்.ஜி. ஆருடன்நடிக்க பலரும் போட்டிபோடும் அதேவேளைபானுமதியுடன்இணைந்து நடிக்க எம்.ஜி.ஆர். விருப்பப்படமாட்டார். எம்.ஜி.ஆர்., பானுமதி, எஸ். எஸ். ஆர்., பத்மினி என இருக்கட்டும்என்று எம்.ஜி.ஆர் யோசனை கூறினார்.படப்பிடிப்புத் தளத்துக்குவந்த பானுமதிதனது ஜோடி எஸ்.எஸ்.ஆர். என அறிந்ததும் சத்தம் போட்டார்."ரங்கூன் ராதா' என்றபடம் வெளியாகி மிகப் பரபரப்பாகஓடிக்கொண்டிருந்த நேரமது. அதில் கதாநாயகனாக நடிகர் திலகம் நடித்தார். நடிகர்திலகத்தின் ஜோடியாக பானுமதி நடித்தார். பானுமதியின் மகனாக எஸ். எஸ்.ஆர். நடித்திருந்தார். கலைஞர் கருணாநிதிதயாரித்த அப்படம் பெரு வெற்றிபெற்றது."ரங்கூன்ராதா' படத்தில் எனக்கு மகனாகநடித்த எஸ். எஸ். ஆருக்கு ஜோடியாக நடிக்க முடியாதென பானுமதி மறுத்துவிட்டார்.
பானுமதியின் கோபத்தைப் பற்றி படஉலகம் நன்கு அறிந்திருந்தது. தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் அனைவரும்அவரை எதிர்த்து பேசத் தயங்குவார்கள்.எஸ். எஸ்.ஆருடன் ஜோடியாக நடிக்கமுடியாது என்று பானுமதி சத்தமாகப்
பேசினார். நிலைமையை உணர்ந்த எஸ்.எஸ்.ஆர். தயாரிப்பாளரிடம் சென்றுஎம்.ஜி.ஆரின் ஜோடியாக பானுமதி நடிக்கட்டும் என்றார். என்.எஸ்.கிருஷ்ணனுக்குஇப்பிரச்சினையைப் பற்றி தயாரிப்பாளர்அறிவித்தார். என். எஸ். கிருஷ்ணன் ஸ்டூடியோவுக்குச் சென்று எல்லோரையும்சமாதானம் செய்தார். அதன் பின்னர்படப்பிடிப்பு ஆரம்பமானது.கலைஞரின் "காஞ்சித் தலைவன்' படத்தில்எம்.ஜி.ஆரும் பானுமதியும் ஜோடிசேர்ந்தார்கள். எம். ஜி.ஆரின் தங்கையானவிஜயகுமாரியை காதலிக்கும் பாத்திரத்தில்எஸ். எஸ். ஆரை நடிக்க வைக்கவிரும்பியதால் எம்.ஜி. ஆரின் மூலம்தூதுவிட்டார் கலைஞர்."காஞ்சித் தலைவன்' படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. அவர்கள் இருவருக்கும் இடையில் இணைப்புப் பாலமாகஎஸ். எஸ். ஆர் செயற்பட்டார்.

ரமணி

Sunday, March 15, 2009

தமிழக முதல்வரை தடுமாற வைத்தஜெயலலிதாவின் உண்ணாவிரதம்இலங்கைப் பிரச்சினையில் அதிக அக்கறை காட்டாது புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிவந்த ஜெயலலிதா திடீரென இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்ததால் தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்திய மத்திய அரசையும், தமிழக அரசையும் மிகக் கடுமையாகத் தாக்கிவரும் வைகோவும், தா. பாண்டியனும், ஜெயலலிதாவுடன் கைகோர்த்துக் கொண்டு புதிய கூட்டணியை அமைத்துள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கத்தையும், தமிழக அரசாங்கத்தையும் எதிர்ப்பதில் ஜெயலலிதாவும், வைகோவும், தா. பாண்டியனும் ஒருமித்த குரல் கொடுத்து வந்தாலும், இலங்கைப் பிரச்சினையில் வைகோவும், தா.பாண்டியனும் ஒரேகருத்துடன் செயற்படுகிறார்கள். இவர்களின் கருத்துடன் இதுவரை ஒத்துப்போகாத ஜெயலலிதா இலங்கைத் தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுத் தேர்தலுக்காக இந்தியா தயாராகிவருகிறது. தமிழக தேர்தல் களத்தில் இலங்கைப் பிரச்சினையும் மிக முக்கிய இடத்தை வகிக்கப்போகிறது. இந்திய அரசின் சாதனை அது விட்ட தவறுகள், பொருளாதார முன்னேற்றம், வீழ்ச்சி என்பவற்றுடன் இலங்கைப் பிரச்சினையும் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கப்போகிறது.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவி செய்யாமல் இலங்கை அரசாங்கத்துக்கு ஆயுத உதவி செய்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்ற பிரசாரம் தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதா இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்ததும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உண்டியல் மூலம் நிதிசேகரித்ததும் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது. 24வருடங்களுக்கு முன்னர் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த ஜெயலலிதா மீண்டும் உண்ணாவிரதம் இருந்தார்.
ஜெயலலிதாவின் உண்ணா விரதத்தின் பின்னணியில் பொதுத் தேர்தல் இருப்பது உண்மை என்றாலும் வைகோவும் தா.பாண்டியனும் தாம் எதிர்பார்த்ததை நிறைவேற்றிவிட்டனர் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு செய்யப்படும் சகல உதவிகளும் புலிகளுக்கு செய்யும் உதவியாகவே கணித்து வந்த ஜெயலலிதா மனம் மாறி உண்ணாவிரதம் இருந்தமை தமிழக முதல்வருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோ, சுப்பிரமணிய சுவாமி ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் மிக முக்கிய ஆலோசகர்களாக இருக்கின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்ப்பதில் இவர்கள் இருவரும் முன்னணியில் உள்ளனர். சோ, சுப்பிரமணிய சுவாமி ஆகிய இருவரின் விருப்பத்துக்கு மாறாக ஜெயலலிதா நடந்து கொண்டமை வைகோ, தா. பாண்டியன் ஆகிய இருவருக்கும் கிடைத்த வெற்றியாகவே கருத வேண்டியுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் படும் இன்னல்கள் கண்டு கொதித்தெழுந்த முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு பல தடவை எச்சரிக் கைவிடுத்தார். அவர் விடுத்த எச்சரிக்கை எல்லாம் காற்றில் கரைந்த கற்பூரமாகியதால் அதனைச் சமாளிப்பதற்காக பல அறிக்கைகளை வெளியிட்டு தனது ஆதங்கத்தைத் தீர்த்துக் கொண்டார்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், தமிழகத்தில் நிரந்தரமான வாக்கு வங்கி உள்ளது. தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு தமிழ் மக்களுக்குரிய நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம் அக்கட்சிகளின் தொண்டர்களிடையே உள்ளது. இப்படிப்பட்ட தொண்டர்களின் வாக்குகள் தேர்தலில் இடம்மாறும் சந்தர்ப்பம் உள்ளது. இது திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தலாம்.
இப்படிப்பட்ட தொண்டர்கள் நிச்சயமாக அண்ணாதிரõவிட முன்னேற்றக்கழகத்துக்கு வாக்களிக்கமாட்டார்கள். இவர்களின் வாக்குகளால் பாரதீய ஜனதாக் கட்சி பயனடையும் வாய்ப்பு உள்ளது.
பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் இலங்கைத் தமிழ் மக்கள் இவ்வளவு தூரம் அல்லல்பட்டிருக்கமாட்டார்கள் என பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தப் பிரசாரம் தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைத் தமிழ் மக்கள் படும் அவலங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவுடன் மாற்றுக்கருத்துள்ள வைகோவும், தா.பாண்டியனும் கூட்டணி சேர்ந்ததை விமர்சித்தவர்கள் இப்போது அடங்கிப்போயுள்ளனர்.
பொதுத் தேர்தலில் வெல்லப் போகும் கூட்டணி எது எனத் தெரியாது டாக்டர் ராமதாஸ் தடுமாறுகிறார். பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழிந்த நிலையிலும் முடிவெடுக்க முடியாது டாக்டர் ராமதாஸ் தடுமாறுகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியினுள் இரண்டு கருத்து இருப்பதால்தான் டாக்டர் ராமதாஸ் தடுமாறுகிறார் என்று சில செய்திகள் கசிந்துள்ளன. ஜெயலலிதாவுடன் இணைய வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ், காடுவெட்டி குரு போன்றோர் விரும்புவதாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தொடர வேண்டும் என்று டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி விரும்புவதாகவும் தெரிகிறது. மாற்றுக் கருத்துடைய குழுவுக்கு மகன் தலைமை தாங்குவதால் டாக்டர் ராமதாஸ் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றே கருதப்படுகிறது.
திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியில் இருப்பதாக திருமாவளவன் கூறுகிறார். காங்கிரஸை எதிர்ப்பவர்களுக்கும், காங்கிரஸ் கொடியை எரிப்பவர்களுக்கும் கூட்டணியில் இடம் இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
இதன் காரணமாக திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியில் எஞ்சியுள்ள திருமாவளவனும் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொதுத் தேர்தலைச் சந்திக்க முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் தயாராகிவிட்டனர்.அவர்களின் பின்னால் உள்ளவர்களும் தம்மை வெளிப்படுத்தி உள்ளனர். டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் இரகசியப் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.பேச்சுவார்த்தை வெற்றி பெற்ற பின்னர் உத்தியோகபூர்வமாக தமது முடிவை அறிவிப்பார்கள்.
வர்மா

வீரகேசரி வாரவெளியீடு
15 03 2009

Saturday, March 14, 2009

இரண்டில் ஒன்று கூறு


யுத்தத்துக்கு செல்லுமுன்
இறுதியாக வானத்தை பார்க்கிறாயா?
அல்லது
நமதுதேசம் அழியப்போகிறதென
வருந்துகிறாயா?
இரண்டில் ஒன்றை
கூறி விட்டுச்செல்

தாட்ஷாவர்மா
08 08 2008

Wednesday, March 11, 2009

ஷேவாக்கின் சாதனையுடன் தொடரை வென்றது


நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் வெற்றி பெற்று நியூஸிலாந்து மண்ணில் புதிய சாதனை படைத்தது இந்தியா.
இந்தியா நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றது. ஒரு போட் டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
ஒருநாள் போட்டித் தொடரை சமப்படுத்துவதா தோல்வியடைவதா என்ற பலப் பரீட்சையில் இறங்கிய நியூஸிலாந்து, 84 ஓட்டங்களினால் தோல்வியடைந்து தொடரை இழந்தது. ஷேவாக்கின் அதிரடி ஓட்டங்களை இடையிடையே மழை குழப்பியதால் டக்லூயிஸ் முறைப்படி இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களை எடுத்தது.
ரைடட், மக்கலம் ஜோடி சிறப்பாக ஆரம்பத்தைக் கொடுத்து 19.1 ஓவர்கள் விளையாடி 102 ஓட்டங்களை எடுத்தனர். 57 பந்துகளுக்கு முகம் கொடுத்த ரைடட், 6 பவுன்டரிகள் அடங்கலாக 46 ஓட்டங்கள் எடுத்த போது யுவராஜ் சிங் பந்தை ரெய் னாவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். ரவ்ளர் 5 ஓட்டங்களுடனும் குப்தில் 25 ஓட்டங்களுடனும், வெளியேறினர்.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய மக்களம் 95 பந்துகளுக்கு முகம் கொடு த்து 2 சிக்சர்களும் 7 பவுன்டரிகளும் அடங்கலாக 77 ஓட்டங்கள் எடுத்தார்.
ஓரம் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். மக்கிளிசனி ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் எலியட் ஆட்டமிழக்காது 35 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இஷாந்த் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும், சஹீர்கான், யுவராஜ் சிங், பதான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
271 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 23.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 201 ஓட்டங்கள் எடுத்ததால் டக்லூயிஸ் முறைப்படி 84 ஓட்டங்களினால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அணியின் வெற்றிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு மிக முக்கியம் என்பதை இந்திய வீரர்களான ஷேவாக்கும், கம்பீரும் நிரூபித்தனர்.
மழை குறுக்கிட்டதால் 47 ஓவர்களில் 281 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ஓவருக்கு 5.97 ஓட்டங்கள் அடிக்க வேண்டிய நிலையில் இந்திய அணி களமிறங்கியது. நிலைமையை உணர்ந்த ஷேவாக் அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பித்தார்.
10 ஒவர்களில் விக்கெட் இழப்பின்றி 82 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் 43 ஓவர்களில் 263 ஓட்டங்கள் என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஒரு ஓவருக்கு 6.11 ஓட்டங்கள் என்ற நிலையில் இந்திய அணி களமிறங்கியது. நியூஸிலாந்து வீரர்களின் பந்தை நாலாதிசையிலும் விரட்டிய ஷேவாக் 31 பந்துகளில் எட்டு பவுன்டறிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் அடித்தார். 52 பந்துகளைச் சந்தித்த கம்பீர் ஐந்து பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களை எடுத்தார்.
60 பந்துகளைச் சந்தித்த ஷேவாக் நான்கு சிக்ஸர், 13 பௌண்டரிகள் அடங்கலாக 103 ஓட்டங்கள் அடித்து நியூஸிலாந்தில் புதிய சாதனை செய்தõர்.
1998 ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் 62 பந்துகளில் முன்னாள் இந்திய அணித்தலைவர் அஸார்தின் 100 ஓட்டங்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
23.3 ஓவர்களில் இந்திய அணி 201 ஓட்டங்கள் எடுத்திருக்கும் போது மீண்டும் மழை குழப்பியதால் டக்வேத் லூயிஸ் முறைப்படி 84 ஓட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நியூஸிலாந்து மண்ணில் முதன் முதலாக இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
ஷேவாக் ஆட்டமிழக்காது 125 ஓட்டங்களையும், கம்பீர் ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களையும் எடுத்தனர். ஆட்டநாயக னாக ஷேவாக் தெரிவானார்.

Tuesday, March 10, 2009

திரைக்குவராதசங்கதி 02


திரைப்படத்தின் மீது ஆர்வத்தினை ஏற்படுத்துவதில் புகைப்படம் மிக முக்கியமானது. தனது அபிமான நடிகர் அல்லது நடிகை எப்படிப்பட்ட உடையில் தோன்றுவார், அவர்களின் முகபாவம் எப்படி இருக்கும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தியாக்குபவர் புகைப்படக் கலைஞர்.
சினிமாவுக்கு ஏற்ற முகமா என்பதை புகைப்படங்கள் தான் தீர்மானிக்கின்றன. புகைப்படக் கலைஞர் தனது திறமையை வெளிப்படுத்தினால் தான் திரைப்படத்தில் நடிக்க அனுமதி கிடைக்கும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முகம் திரைப்படத்துக்கு ஏற்றதாக இல்லை என்று தயாரிப்பாளர் பெருமாளிடம் சிலர் கூறினார்கள். புகைப்படம் எடுத்துப் பார்த்தால் முகம் தகுதியானதாக இல்லையா என்பது தெரிந்து விடும் என்பதனால் அந்தக் காலத்து புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான ஆர்.என். நாகராஜ் ராவ், சிவாஜி என்று புகழப்பட்ட கணேசனை புகைப்படம் எடுத்தார். கணேசன், சிவாஜியாக மாறுவதற்கு முதன் முதலில் புகைப்படம் எடுத்தவர் ஆர்.என். நாகராஜ்ராவ்.
நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. தனது முகம் சினிமாவுக்கு ஏற்ற முகம்தானா என்பதை அறிவதற்கு விரும்பினார். சிவாஜியின் எதிர்பார்ப்பை உணர்ந்த புகைப்படக் கலைஞரான ஆர்.என். நாகராஜ் ராவ், சிவாஜிக்கு தைரியமூட்டினார். முகம் தோற்றம் எல்லாம் சினிமாவுக்கு உகந்ததாக உள்ளது. சிறந்த முறையில்உங்களை படமெடுக்கிறேன் என்று சிவாஜியை உற்சாகப்படுத்தினார்.
ஆர்.என். நாகராஜ் ராவ் எடுத்த புகைப்படங்கள் மிகச் சிறப்பானதாக அமைந்தன. பாடல்கள் ஆட்சி செய்த தமிழ்த் திரைப்படத்தை வசனங்களால் மாற்றியமைத்த புதிய வரலாற்று நாயகனாக தோன்றினார் சிவாஜி.
ஒப்பற்ற நடிகர் ஒருவரை தமிழ்த்திரை உலகம் பெறுவதற்கு காரண கர்த்தாவாக இருப்பவர் ஆர்.என். நாகராஜ் ராஜ். நடிகர் திலகத்தை மட்டுமல்ல மக்கள் திலகத்தையும் பல கோணங்களில் படமெடுத்து புகழ்பெற்றவர். 1977 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தோன்றியது. நடிகனால் நாடாள முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்து தமிழக முதல்வரானார் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகரைப் படமெடுத்த புகைப்படக் கலைஞர்கள் தமிழக முதல்வரைப் படமெடுக்க முண்டியடித்தனர்.தமிழக முதல்வர் தனது மதிப்புக்குரிய புகைப்படக்கலைஞரான ஆர்.என். நாகராஜ் ராவைத் தேடுகிறார். அங்கே அவர் இல்லை. முதல்வரின் ஆணைப்படி ஆர்.என். நாகராஜ் ராவ் அழைக்கப்படுகிறார். முதல்வரின் ஆசனத்தில் பல கோணங்களில் படமெடுத்தார். ஆர்.என். நாகராஜ்ராவ் தான் முதல்வரின் ஆசனத்தில் தன்னை முதல் முதலில் படமெடுக்க வேண்டும் என்ற எம்.ஜி.ஆரின் ஆசை நிறைவேறியது. அதன் பின்னர்தான் மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தமிழ்த்திரை உலகின் இரு பெரும் திலகங்களின் மதிப்பைப் பெற்ற ஆர்.என். நாகராஜ் ராவ் மங்கம்மா சபதம் என்ற படத்தின் மூலம் தான் முதன் முதலாக சினிமாவுக்கு அறிகமானார்.
சுதேச மித்திரன், ஹிந்து ஆகிய பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக வேலை செய்த அவரை திரை உலகில் அறிமுகப்படுத்தியவர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன். 1943 ஆம் ஆண்டு வெளியான மங்கம்மா சபதம் மூலம் திரை உலகில் நுழைந்த ஆர்.என். நாகராஜ் ராவ், 1985 ஆம் ஆண்டு ஆர்.எம். வீரப்பன் தயாரித்த காக்கிச் சட்டை என்ற படத்தில் கடைசியாகப் பணியாற்றினார்.
42 ஆண்டுகள் தமிழர் திரை உலகில் மங்காத புகழுடன் விளங்கினார் ஆர்.என். நாகராஜ் ராவ்.
திரைப்படத்தின் மிக முக்கியமான அம்சங்களில் புகைப்படமும் ஒன்று. திரைப்படத்தின் மீது அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் புகைப்படங்களை பத்திரிகைகளில்
வெளியிடுவது அன்றிலிருந்து இன்று வரை இருக்கும் நடைமுறைகளில் ஒன்று.
அந்தக் காலப் புகைப்படங்கள் கறுப்பு வெள்ளையாக இருக்கும். இன்றைய புகைப்படங்கள் நவீன உத்திகளைப் பயன்படுத்தி கிரபிக்ஸ்களை உள்ளடக்கியதாகவும் உள்ளன.
அந்தக் காலத்தில் சினிமாவில் நடிக்க விரும்பும் பெண்கள் ஹரிபாபுவிடம் மேக்கப் போட்டுக் கொண்டு நாகராஜ்ராவிடம் சென்று புகைப்படம் எடுப்பார்கள். நாகராஜ்ராவின் புகைப்படங்களின் மூலம் பல நடிகைகள் திரை உலகில் மிளிர்ந்ததனால் கைராசிக்காரர் என்ற பட்டப் பெயர் அவருக்கு கிடைத்தது.
நாகராஜ்ராவின் புகைப்படங்களை விளம்பரப்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்த பெருமை ஜெமினி பட அதிபர் எஸ்.எஸ். வாசனுக்குரியது.
புஷ்பவல்லி என்ற நடிகையை "பேரழகி புஷ்பவல்லி' எனவும் காஞ்சனமாலாவை கண்ணழகி காஞ்சனாமாலா என்றும் விளம்பரப்படுத்தினார் எஸ்.எஸ். வாசன்.
தமிழ்த்திரை உலகில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்களில் ஒருவர் வெங்கடாச்சாரியர். நூற்றுக்கும் அதிகமான படங்களில் பணியாற்றி நடிக, நடிகைகளின் மதிப்பைப் பெற்றார். பிரபலமான நடிகையின் அரைநிர்வாண படமொன்று பலரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. வெங்கடாச்சாரியரால் எடுக்கப்பட்ட புகைப்படமென்பதால் பரபரப்பாகப் பேசப்பட்டது.
திரையுலகின் ஒழுக்கசீலரான வெங்கடாச்சாரியரா இப்படத்தை எடுத்தார் என்று பலரும் கேட்டனர். உண்மையிலேயே அப்படத்தை வெங்கடாச்சாரியர் எடுக்கவில்லை. பிரபல நடிகை போஸ் கொடுக்கவும் இல்லை. யாரோ ஒருவர் நடிகையின் முகத்தை அரை நிர்வாண படத்துடன் இணைத்து வெளியிட்டார். சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் செல்வாக்காக வெங்கடாச்சாரியர் இருந்ததனால் உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார்.
சுதேச மித்திரனில் புகைப்படக் கலைஞராக கடமையாற்றிய பி. ரங்கநாதனை திரைப்படத்துறைக்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்தவர் நடிகர் சகஸ்ரநாமம். இயற்கைக் காட்சிகளை மனம் லயிக்கும் வண்ணம் படம் பிடிப்பதில் இவர் வல்லவர்.
ரங்கநாதன் எடுத்த ஜெயலலிதாவின புகைப்படம் அந்தக் காலத்தில் பல பத்திரிகைகளில் அட்டைப்படமாக பிரசுரமாகியது. மோனாலிசாவின் புன்னகையை ஒத்த ஜெயலலிதாவின் கம்பீரப் புன்னகையை ரசிக்காதவர்களே இல்லை எனலாம்.
புகைப்படமெடுத்தால் ஆயுள் குறைந்து விடும் என்று மூட நம்பிக்கை முன்னொரு காலத்தில் இருந்தது. இறந்த பின்னர் படம் எடுத்து சுவரில் தொங்கவிடுவார்கள். இறந்தவருக்கு அலங்காரம் செய்து கதிரையில் இருத்தி படம் எடுப்பார்கள் ஜெயம் கொண்டம் என்ற சிறிய ஊரில் இறந்த ஒருவரைப் புகைப்படம் எடுக்க அந்தக் கிராமத்தில் ஸ்டூடியோ வைத்திருத்த வேணு என்பவரை அழைத்துச் சென்றார்கள். கமராவை சரியாக வைக்காததனால் கலை இல்லாத புகைப்படம் கிடைத்தது. ஊர் மக்களுக்குப் பயந்து சென்னைக்கு ஓடிச் சென்றார். இயக்குநர் முக்தா சீனிவாசனைச் சந்தித்து போட்டோ கிராபராக வேலை செய்ய அனுமதிகேட்டார்.
வேணுவின் புகைப்பட கதையைத் தெரிந்த அரசியல்வாதி ஒருவர் முக்தா சீனிவாசனை எச்சரித்தார். தன்னை நம்பிவந்த வேணுவை கைவிட முக்தாசீனிவாசன் விரும்பவில்லை. அவரைப் பங்காளியாக்கி திரைப்படம் தயாரித்தார் முக்தாசீனிவாசன். அவரின் வழிகாட்டலில் திரைப்படத்துறைக்குள் நுழைந்த வேணுசெட்டியார் முள்ளும் மலரும் போன்ற தரமான படங்களை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கினார்.
ரமணி
மித்திரன்
01./08.03.2009

Monday, March 9, 2009

திரைக்கு வராத சங்கதி 1


ஏ.வி.எம். தயாரிப்பில் ரஜினி நடித்து வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய படம் எஜமான் ஏ.வி. எம்மின் தயாரிப்பில் தான் நடிக்க வேண்டும் என்று ரஜினி விரும்பி நடித்த படம்.
திரை உலக விருந்து ஒன்றின்போது ஏ.வி.எம்.மின் படங்கள் இனிமேல் ஓடாது என்று அங்கிருந்த தயாரிப்பாளர் ஒருவர் புலம்பினார். ரஜினி, வைரமுத்து ஆகியோரும் அந்த விருந்தில் இருந்தார்கள். அந்தத் தாரிப்பாளரரின் புலம்பலுக்கு யாரும் பதில் கூறவில்லை. உலகின் மிகப் பெரிய சாதனை செய்த ஏ.வி. எம்மை ஒருவர் தரக் குறைவாகப் பேசியதை வைரமுத்துவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மறுநாள் தொலைபேசியில் ஏ.வி.எம். சரவணனிடம் இரவு நடந்த விஷயங்களை கூறிக் கவலைப்பட்டார். ஏ.வி.எம். முக்கும் இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்கும் ரஜினிகாந்த் கால்ஷீட் தராமட்டார் என்ற தகவலை வைரமுத்து மூலம் அறிந்த ஏ.வி.எம். சரவணன் அதனைப் பெரிது படுத்தவில்லை. ரஜினியுடனான தமது நட்பு என்றைக்கும் நிலைக்கும் என்று கூறினார் ஏ.வி.எம். சரவணன்.
எஸ்.பி. முத்துராமனின் யுனிற் ரஜினியைச் சந்தித்து தமது படத்தில் நடிக்கும் படி கேட்டது அதற்கு ஒப்புதல்
கொடுத்த ரஜினி, அப்டத்தை ஏ.வி.எம். தயாரிக்க வேண்டும் என்று கூறினார். ஏ.வி.எம். படத்திலும் எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்திலும் ரஜினி நடிக்க மாட்டார் என்று புலம்பிய தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுப்பதற்கு ரஜினி திட்டமிட்டார்.
எஸ்.பி. முத்துராமன், ஏ.வி.எம். சரவணனைச் சந்தித்து ரஜினியின் விருப்பத்தைக் கூறினார். ரஜினியின் படத்தினால் எஸ்.பி.முத்துராமனுக்கு கிடைக்கவிருக்கும் இலாபத்தில் பங்கு போட ஏ.வி.எம். சரவணன் விரும்பவில்லை.
ஏ.வி.எம். மின் படத்தில் ரஜினி நடிக்க மாட்டார் என்று புலம்பிய தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுப்பதை விட எஸ்.பி. முத்துராமனின் யுனிட்டுக்கு இலாபம் கிடைக்க வேண்டும் என்பதையே ஏ.வி.எம். சரவணன் விரும்பினார்.
ஏ.வி.எம். சரவணைச் சந்தித்த ரஜினிகாந்த் நம்ம படத்தை தீபாவளிக்கு ரிலிஸ் பண்ணலாமா சார் எனக் கேட்டார்.
ஏ.வி.எம். சரவணனுக்கு எதுவும் புரியவில்லை. ரஜினி எந்தப் படத்தைப் பற்றிக் கூறுகிறார் எனத் தெரியாது.
என்ன படம் ஸார் சொல்றீங்க பூஜை எதுவும் போடவில்லையே என்றார்.
ஆர்.வி. உதயகுமாரை வைத்துப் படம் எடுத்து தீபாவளிக்கு ரிலிஸ் பண்ணனும்'' என்றார் ரஜினி.
முதலில் எஸ்.பி. முத்துராமனின் படம் முடியட்டும் அதன் பின்னர் நம் படத்தைப் பற்றிக் கதைக்கலாம் என்று ஏ.வி.எம். சரவணன் உறுதியாகச் கூறினார். ஏ.வி.எம்.சரவணனின் உறுதியான பதிலால் எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் பாண்டியன் படம் வெளியானது. ரஜினியின் வெற்றிப் படங்களில் பாண்டியனும் ஒன்று.
பாண்டியன் வெளியான பின்னர் ஏ.வி.எம். தயாரிப்பில் ரஜினி நடித்த எஜமான் படம் வெளியானது. எஜமான் எதிர்பார்த்த வகையில் பரபரப்பாக இல்லை. ரஜினி ரசிர்களுக்கு விருந்தாக அப்படம் அமையவில்லை. ஒரு சில இடங்களில் படம் சரியாகப் போகவில்லை.
அப்படத்தைப் பார்த்து விட்டு திலகவதி என்ற பெண்மணி எழுதிய கடிதம் படத்தின் வியாபாரத்தை சூடாக்கியது.
""எஜமான் படம் பார்த்தேன். வானவராயர் மாதிரி ஒரு மாப் பிள்ளை கிடைத்தால் நான் கல்யாணம் செய்து கொள்வேன்.'' என்று திலகவதி எழுதிய கடிதத்தை விளம்பரப் படுத்த விரும்பிய ஏ.வி.எம். நிறுவனம் அப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று விபரத்தைக் கூறி அனுமதி கேட்டது.
விளம்பரத்தில் தனது படம் வெளியானால் அப்பா கோபிப்பார் என்று திலகவதி கூறினார். தகப்பனைக் கண்டு அனுமதி பெறுவதற்காக ஏ.வி.எம்.மின் விளம்பர மேலாளர் அர்ஜுனும் சண்முகமும் இரவு 11 மணிவரை காத்திருந்தனர்.
திலகவதியின் தகப்பன் பெருந்தன்மையுடன் அனுமதிக் கடிதம் கொடுத்தார். திலகவதியின் கடிதம் விளம்பரமாக வெளியானதும் எஜமான் படம் சூடு பிடிக்கத் தொடங்கியது.
வைத்தீஸ்வரி என்ற பெண்ணும் எஜமான் போன்ற கணவனை எதிர் பார்ப்பதாக கடிதம் எழுதினார். இரண்டு விளம்பரங்களும் மாறி மாறி வெளியானதால் ரசிகர்களின் ஆதரவு பெருகியது.

மித்திரன்
ரமணி
28 02 2009

சாதனைகளுடன் வென்றது இந்தியா


நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 58 ஓட்டங்களால் இந்திய அணி வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் நான்கு விக்öகட்டுகளை இழந்து 392 ஓட்டங்கள் எடுத்தது
நியூஸிலாந்து பந்து வீச்சாளர்களை புரட்டி எடுத்த ஷேவாக் மூன்று ஓட்டங்களுடன் மில்ஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கம்பீர் 27 பந்துகளுக்கு 15 ஓட்டங்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.
மூன்றõவது இணைப்பாட்டத்தில் விளையாடிய சச்சின், யுவராஜ் ஜோடி மிகச் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிரடியாக உயர்த்தியது.
ஷேவாக் ஆட்டமிழந்ததனால் மகிழ்ந்திருந்த நியூஸிலாந்து வீரர்கள் சச்சினின் அதிரடியைச் சமாளிக்க முடியாது திணறினர். 60 பந்துகளுக்கு முகம் கொடுத்த யுவராஜ்சிங் ஆறு சிக்ஸர் 10 பௌண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்கள் எடுத்தார்.
யுவராஜ், சச்சின் ஜோடி 138 ஓட்டங்கள் எடுத்தது. இவர்கள் இருவரும் இணைந்து 76 பந்துகளில்100 ஓட்டங்கள் எடுத்தனர்.
யுவராஜ் ஆட்டமிழந்ததும் சச்சினுடன் ஜோடி சேர்ந்தார் டோனி. இவர்கள் இருவரும் இணைந்து 135 ஓட்டங்களை அடித்தனர்.
மிகச் சிறந்த முறையில் துடுப்படுத்தாடிய சச்சின் டெண்டுல்கர் 163ஓட்டங்கள் எடுத்தபோது தசைப்பிடிப்பு காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.
59 பந்துகளில் 50 ஓட்டங்களையும் 101 பந்துகளில் 100 ஓட்டங்களையும் 137 பந்துகளில் 150 ஓட்டங்களையும் எடுத்த சச்சின் டெண்டுல்கர் 133 பந்துகளில் ஐந்து சிக்ஸர் 16 பௌண்டரிகள் அடங்கலாக 163 ஓட்டங்கள் எடுத்தõர். இது சச்சினின் 43ஆவது சதமாகும். ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தில் முத ன் முதலாக சதமடித்தார்.
கடந்த ஆண்டு மார்ச் 2 ஆம் திகதி சிட்னியில் 117 ஓட்டங்கள் அடித் தார்.
சச்சின் வெளியேறியதும் டோனியுடன் இணை ந்த ரெய்னாவின் அதிரடி நியூசிலாந்து வீரர்களை தடுமாற வைத்தது.
58 பந்துகளுக்கு முகங் கொடுத்த டோனி இர ண்டு சிக்ஸர் ஐந்து பௌண்டரிகள் அடங்கலாக 68 ஓட்டங்கள் எடுத்தார்.
கடைசி நேரத்தில் விஸ்வரூபமெடுத்த ரெய்னா 18 பந்துகளில் ஐந்து சிக்ஸர் உட்பட 38 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆட்டநேர முடிவின் போது இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 392 ஓட்டங்கள் எடுத்தது. நியூஸிலாந்தில் இந்திய அணி அடித்த அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும். 18 சிக்ஸர்கள் அடித்து தென் ஆபிரிக்காவின் சாதனையை சமப்படுத்தியது. மில்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும் பட்லர், எலியட் ஆகியோர் தலா ஓரு விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
10 ஓவர்கள் பந்து வீசிய சுதி 105 ஓட்டங்களை கொடுத்தார்.
393 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி, இந்திய அணியை மிரட்டியது. நியூசிலாந்து அணி 45.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 334 ஓட்டங்கள் எடுத்தது.
மில்ஸ், மக்கலம் ஜோடி 166 ஓட்டங்கள் எடுத்து இந்திய அணியை மிரட்டியது. 68 பந்துகளைச் சந்தித்த மக்கலம் மூன்று சிக்ஸ்ர், 6 பௌண்டரிகள் அடங்கலாக 71 ஓட்டங்களில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.
80 பந்துகளைச் சந்தித்து நான்கு சிக்ஸர்கள் 12 பௌண்டரிகள் அடங்கலாக 105 ஓட்டங்கள் எடுத்த ரெய்டர் ஆட்டம் இழந்ததும் இந்திய அணியின் கை ஓங்கியது.
ரவ்லர் 7, குப்தில் 1, எலியட் 18, ஓராம் 7 மைக் கிலைன் 7,பட்லர் 24 ஓட்டங்களில் ஆட்டமிழக்க இந்திய அணி வெற்றியின் அருகில் சென்றது.
மில்ஸ், சுதி ஜோடி இந்திய அணியின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் விளையாடியது. மில்ஸ் 54, சுதி 32 ஓட்டங்களில் ஆட்டம் இழந்ததும் இந்திய அணியின் வெற்றி உறுதியாகியது.
சஹீர்கான், யுவராஜ்சிங், ஹர்பஜன்சிங் ஆகியோர்தலா இரண்டு விக்கெட்டுகளையும் பிரவீன் குமார், பதான் ஆகியோர் தலா ஒரு விக்öகட்டையும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனாக சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டார். இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னணியில் உள்ளது. நான்காவது ஒருநாள் போட்டி 11 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறும்.

Sunday, March 8, 2009

கொள்கையை மறந்து கூட்டணி சேரும் கட்சிகள்இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் திகதிகள் அறிவிக்கப்பட்டதால் கட்சிகள் சுறுசுறுப்படையத் தொடங்கிவிட்டன. திராவிட முன்னேற்றக்கழகமும் காங்கிரஸ் கட்சியும் ஒரே அணியில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.
அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸ்சிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியன ஓரணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டன.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருந்து பிரிந்த செஞ்சி ராமச்சந்திரனும், எல். கிருஷ்ணனும் தமது கட்சியை திராவிட முன்னேற்றக்கழகத்துடன் இணைக்கத் தயாராகிவிட்டனர்.
திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணியில் சேருவதற்கான பேச்சுவார்த்தையை சரத்குமார் ஆரம்பித்து விட்டார். அவருடைய மனைவி ராதிகா பேச்சுவார்த்தையை நடத்துவதால் பேச்சுவார்த்தை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
விஜயகாந்தும், டாக்டர் ராமதாஸும் யாருடன் கூட்டு சேர்வது என்று இன்னமும் முடிவு செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தையை விஜயகாந்த் ஆரம்பித்து விட்டதாக செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன. மக்களுடன்தான் கூட்டணி என்ற விஜயகாந்த் சற்று இறங்கிவந்து விட்டார் போல் தோன்றுகின்றது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியா, அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியா வெற்றி பெறும் என்று தெரியாது குழம்பியுள்ள டாக்டர் ராமதாஸ், சோனியா மீதும் முதல்வர் கருணாநிதி மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதால் ஜெயலலிதாவின் பக்கம் செல்லும் வாய்ப்பு மிக மிகக் குறைவு.
இலங்கைத் தமிழ் மக்களுக்காக ஒருமித்து குரல்கொடுக்கும் கட்சிகள் அனைத்தும் பிரிந்து நின்று தேர்தலைச் சந்திக்க உள்ளன.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகமும், கம்யூனிஸ்ட் கட்சியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் போட்டியிடுகின்றன. விடுதலைச் சிறுத்தைகள், திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டுப் பிரியப் போவதில்லை.
இலங்கைப் பிரச்சினையை முன்னெடுத்து பிரசாரம் செய்ய முடியாத நிலையில் இக்கட்சிகள் உள்ளன. இலங்கைத் தமிழ் மக்கள் படும் இன்னல்களினால் பெரிதும் கவலையடைந்திருக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கு தமிழக அரசியல் கட்சிகள் எவையும் ஆதரவு தெரிவிக்கவில்லை. நாம் ஆட்சி அமைத்தால் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு கௌரவமான தீர்வு காணப்படும் என்று பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் கூறிவருகின்றனர். அவர்களின் குரலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் எவையும் செவிசாய்க்கவில்லை.
இந்திய மத்திய அரசை தீர்மானிக்கும் மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று. தமிழகத்தில் இருந்து 40 பிரதிநிதிகள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் 40 தொகுதிகளையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது. கடந்த பொதுத் தேர்தலைப் போன்று 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது இயலாத காரியம்.
மத்திய அரசினதும், தமிழக அரசினதும் இன்றைய நிலைப்பாட்டை தமிழக மக்களில் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும், இலங்கைத் தமிழ் மக்களின் துயர் தீர்ப்பதற்கு காத்திரமான பங்களிப்பு வழங்காமை, மும்பைத் தாக்குதலின் பின்னர் அதற்குக் காரணமான பாகிஸ்தானை அச்சுறுத்தாது உலக நாடுகளின் அனுதாபத்தைப் பெறுவதற்கான முயற்சியில் இருப்பவை போன்ற காரணங்களினால் மத்திய அரசின் மீதும் தமிழக அரசின் மீதும் தமிழக மக்கள் வெறுப்படைந்துள்ளனர். ஆகையினால் 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற முடியாத நிலை உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றின் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் சக்தியாக விஜயகாந்த் தலைமையிலான கட்சி உள்ளது.
தமிழக சட்ட மன்றத்தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பின்னடைவுக்கு விஜயகாந்தின் கட்சியும் ஒரு காரணம். அதேபோன்று திராவிட முன்னேற்றக்கழகம் அறுதிப் பெரும்பான்மை பெறாதமைக்கும் விஜயகாந்தின் கட்சிதான் காரணம்.
தனது தலைமையிலான கூட்டணிக்குள் விஜயகாந்தைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் விஜயகாந்தின் கட்சித் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமையிலான கூட்டணி பெருவெற்றி பெறும்.
தமிழக அரசியல் கட்சிகள் தமது செல்வாக்கை நிரூபிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்திவரும் இவ்வேளையில் இலங்கைத் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக அமைப்புகள் ஒன்றிணைந்து இயக்குநர் சீமானை வேட்பாளராக்க முயற்சி செய்கின்றன.
இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் இலங்கைத் தமிழ் மக்களின் துயரைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை, இராமநாதபுர மீனவர்களை கடலில் சுட்டுக்கொலை செய்ததற்காக இலங்கை அரசுக்கு சிறு எச்சரிக்கை கூட விடுக்கவில்லை என்பன போன்ற காரணங்களை முன்வைத்து சீமானை களமிறக்க இந்த அமைப்புகள் முயற்சி செய்கின்றன.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய குற்றச்சாட்டில் இயக்குநர் சீமான் சிறையில் உள்ளார். அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடையாக சட்டப் பிரச்சினை ஏதாவது இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். சீமான் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால் அவரது ஆதரவான ஒருவரை களமிறக்க இந்த இயக்கங்கள் முயற்சி செய்கின்றன.
இலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் இயக்கத்தின் சார்பில் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால் வைகோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் போன்றவர்கள் அந்தத் தொகுதியில் எப்படிப் பிரசாரம் செய்வார்கள். அந்தத் தொகுதி தமக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி என்றால் தமது வேட்பாளரை வாபஸ் பெறுவார்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
மொழிப் பிரச்சினையை முன்வைத்துத் தான் திராவிட கட்சிகள் தமிழகத்தில் ஆழமாகக் காலூன்றியுள்ளன. அவர்களின் முன்னால் இலங்கைத் தமிழ் இனப்பிரச்சினை முன்வைக்கப்பட்டுள்ளது.
தலைவர்களினதும் கட்சிகளினதும் கொள்கைக்காகவே இதுவரை தமிழக மக்கள் வாக்களித்தார்கள். இந்தத் தேர்தலில் தமிழக தலைவர்களின் கருத்துகளும் வாக்காளர்களின் உணர்வுகளும் வேறுவேறு திசையில் உள்ளன.
கொள்கைக்கும் உணர்வுக்கும் இடையேயான போட்டியில் ஜெயிக்கப்போவது யார் என்பதை இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

வர்மா

விபரீத விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது லாகூரில் கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ள ப்பட்ட கொடூரத் தாக்குதலினால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாதம் தலை விரித்தாடுகிறது. அது "தீவிரவாதிகளின் சொர்க்கபுரி' என்று கூறிய அவுஸ்ரேலிய வீரர்கள் அங்கு சென்று விளையாட மறுப்புத் தெரிவித்துள்ளனர். அண்டை நாடான பாகிஸ்தான் மீது கறைபடிவதை விரும்பாத இந்தியாவும், இலங்கையும் பாகிஸ்தானில் பயங்கரவாதமும் இல்லை, வன்முறையும் இல்லை என்பதை கிரிக்கெட் உலகுக்கு தெரியப்படுத்துவதற்காக அங்கு சென்று விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுத்து வந்தன.
இந்தியாவும் பாகிஸ்தானும் அரசியல் ரீதியாக மோதிக்கொண்டாலும் தமது நல்லெண்ண நடவடிக்கையாக கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தின. இந்திய அணி பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் அணி இந்தியாவிலும் விளையாடி கிரிக்கெட் வேறு அரசியல் வேறு என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டின.
கடந்த ஆண்டு மும்பை மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்öகட் உறவையும் முறித்துக் கொண்டது. மும்பைத் தாக்குதல்களினால் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் இரத்தாகியது.
பாகிஸ்தான் மீது நம்பிக்கை வைத்திருந்த இந்தியாவும் கிரிக்கெட் விளையாட மறுத்ததனால் பாகிஸ்தானை காப்பாற்ற இலங்கை முன்வந்தது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் அவ்வப்போது தலைதூக்கினாலும் கிரிக்கெட் வீரர்கள் அதனால் பாதிக்கப்படவில்லை.
லாகூரில் இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலால் ஆறு வீரர்கள் காயமடைந்தனர். இந்த அதிர்ச்சியிலிருந்து வீரர்கள் இன்னமும் மீளவில்லை. பாகிஸ்தானில் குண்டு வெடிப்புத் தாக்குதல் நடைபெற்றால் உடனடியாக ஏதாவது ஓர் இயக்கம் அதற்கு உரிமை கோரி விடும்.
இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று நாட்கள் கடந்தும் இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. இதே
வேளை, இத்தாக்குதலை நடத்தியது யார் என்பதை பாகிஸ்தான் புலனாய்வுப் பிரிவு இது வரை கண்டுபிடிக்கவில்லை.
குண்டு வெடிப்பு புரட்சி, இராணுவ ஆட்சி என்பனவற்றுக்கு பழகிப் போன பாகிஸ்தான் மக்கள் கிரிக்கெட் மீது மிகுந்த பற்று வைத்திருக்கிறார்கள். இலங்கை அணி மீதான தாக்குதலின் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் விளையாடுவதற்கு எந்த நாடும் முன்வரப் போவதில்லை. இது பாகிஸ்தான் மக்களின் மீது விழுந்துள்ள பலமான அடியாகும். இலங்கை வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கொதித்தெழுந்த பாகிஸ்தான் மக்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். பயங்கரவாதிகளின் விபரீத விளையாட்டு பாகிஸ்தான் மக்களை பாதித்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடும் பாகிஸ்தான், கிரிக்கெட்டை காப்பாற்ற என்ன செய்யப் போகிறது என்பதை அறிய கிரிக்கெட் உலகம் காத்திருக்கிறது. ரமணி

மெட்ரோநியூஸ்
06 03 2009

மஹேல‌ வின் தலைமை மாறுமா

லாகூரில் கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தாக்குதலால் அணித்தலைவர் மஹேலவின் விருப்பம் ஒன்று நிறைவேற முடியாமல் தடுக்கப்பட்டு விட்டது.
பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியின் பின்னர் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக மஹேல அறிவித்திருந்தார். இந்திய அணியுடனான தோல்வியின் பின்னர் 2020 போட்டியின் தலைமை டில்ஷானின் கைகளுக்குச் சென்றது. அதன் பின்னர் அணித்தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக மஹேல அறிவித்தார்.
இலங்கை அணியை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றவர் என்ற பெருமையுடன் தனது தலைமைப் பத
வியை கைவிட மஹேல விரும்பினார். முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடியது. அணித்தலைவர் மஹேல இரட்டைச் சதமடித்து தனது அணியை வலுவூட்டினார். முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் தலைவர் யூனுஸ்கான் 313 ஓட்டங்கள் குவித்து இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். முதலாவது இன்னிங்ஸில் இலங்கை அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 644 ஓட்டங்கள் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் முதலாவது இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டை இழந்து 765 ஓட்டங்களை எடுத்ததால் முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்தது. இரண்டாவது டெஸ்ட்டின் வெற்றி பெற்று வெற்றி நாயகன் என்ற பெயருடன் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து வெளியேறலாம் என்று மஹேல ஜயவர்தன எதிர்பார்த்திருந்தவேளையில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதனை தவிடுபொடியாக்கிவிட்டது.
மஹேலவின் தலைமைப் பதவி முடிந்து விட்டதா? தொடருகிறதா என்பது இன்னமும் தௌண்ளளிவாகவில்லை. இலங்கை அணியின் அடுத்த சுற்றுப்போட்டிவரை மஹேல தலைவராக இருப்பார் என்றே கிரிக்கெட் உலகம் எதிர்பார்க்கிறது.
வானதி

மெட்ரோநியூஸ்
06 03 2009

Friday, March 6, 2009

விதிவிலக்கு


கடல்வளம்
மலைவளம்
செறிந்துள்ள
நாட்டில்
மனித உரிமைக்கே
பஞ்சம்
இதில் நீ
மட்டும்
விதிவிலக்கா?

தாட்ஷாவர்மா
0208 2008

Monday, March 2, 2009

காங்கிரஸை அழைக்கும் ஜெயலலிதா


காங்கிரஸ் கட்சிக்கு பகிரங்க அழைப்பு விடுத்ததன் மூலம் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியவற்றுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் ஜெயலலிதா.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தான் தமிழக காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று டில்லியில் உள்ளவர்கள் உரத்துக் கூறினாலும், காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் சிறு மோதல்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
தென் இந்திய மாநிலங்களின் மேலிடப் பொறுப்பாளராக இதுவரை இருந்த அருண்குமார் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர் குலாம் நபி ஆசாத்.
1991 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். ஆஸ்கார் பெர்னாண்டஸ், ஷீலா க்ஷித் ஆகியோருடன் இணைந்து குலாம் நபி ஆசாத் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே 1991 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்தது காங்கிரஸ் கட்சி.
2004 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைந்திருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி என்பன திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடம் சரணடைந்து விட்டன. இந்தக் கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி முடிவெடுக்க முடியாது தடுமாறுகிறது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கருதும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் டில்லியிலும் தமிழகத்திலும் உள்ளனர். தென்னிந்திய மாநில மேலிடப் பொறுப்பாளராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டதால் இவர்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணி உறுதியாக உள்ளது என்று கூறிய இடதுசாரித் தலைவர்கள் ஜெயலலிதாவின் அழைப்பைக் கேட்டு திகைத்துப் போயுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே இடதுசாரிகள் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்ந்தனர். ஆனால், ஜெயலலிதா ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்தது இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருத வேண்டியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிடியிலிருந்து வெளியேற வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஜெயலலிதாவின் அழைப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. இலங்கைப் பிரச்சினையில் ஜெயலலிதாவின் கருத்தும் காங்கிரஸின் கருத்தும் ஒன்றாகவே உள்ளது. ஆகையினால் இரு கட்சிகளும் இணைவது சிறந்தது என்ற கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் பரவலாக உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கினால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது என்ற உண்மை வெளிப்படையானது. ஆனால், காங்கிரஸின் வாக்கு வங்கியை நம்பியே இலங்கை விவகாரத்தில் முதல்வர் தீவிரமாக செயற்படவில்லை என்பது மறைமுகமான உண்மையாகும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி இணையும் சாத்தியக்கூறு மிக மிகக் குறைவு. இவை இரண்டும் இணைந்தால் அதன்பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயற்பாடுகள் மிக மிகத் தீவிரமாகி விடும். இலங்கைப் பிரச்சினையை கையிலெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தமிழக முதல்வர் தள்ளப்படுவார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் இடதுசாரிகளின் பாடு திண்டாட்டமாகி விடும்.


அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டிய இக்கட்டான நிலைமைக்குத் தள்ளப்படும் இடதுசாரிகள் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சரணடைவார்கள்.
இதேவேளை, இலங்கைப் பிரச்சினையும், வக்கீல்களின் போராட்டமும் தமிழக முதல்வரின் கரங்களை விட்டுப் போய் விட்டன. தமிழக ஆட்சியை அகற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் விரிக்கும் வலையில் விழ வேண்டாம் என்று முதல்வர் கருணாநிதி வக்கீல்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.வக்கீல்களின் போராட்டம் நீதிமன்ற வளாகத்தினுள் வன்முறையாக மாறியது. வக்கீல்களும், பொலிஸாரும் நீதிமன்ற வளாகத்தினுள் மோதும் வரை பிரச்சினைகளை வளர விட்ட தமிழக முதல்வர் அப்பிரச்சினையின் பின்னணியில் எதிர்க்கட்சிகள் இருப்பதாக குற்றம் சாட்டியது அவரின் இயலாமையை வெளிப்படுத்துகிறது.
ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள தமிழக முதல்வர் சகல பிரச்சினைகளையும் வைத்தியசாலையில் இருந்து தீர்ப்பதற்கு முயற்சி செய்கிறார்.
வக்கீல்களும் பொலிஸாரும் சமரசம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் முதல்வர் விடுத்த உண்ணாவிரத மிரட்டலுக்கு யாரும் அடிபணியவில்லை. வக்கீல்களின் பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் பிரச்சினை விஸ்வரூபமெடுத்திருக்காது.
மிகச் சிறந்த அரசியல்வாதி, ராஜதந்திரி எனப் புகழப்படும் தமிழக முதல்வர் கருணாநிதி தன் முன்னாலுள்ள சில பிரச்சினைகளை துணிவுடன் எதிர்கொள்ளத் தயங்குகிறார். இந்தத் தயக்கம் திராவிட முன்னேற்றக்கழகத்துக் அபகீர்த்தியையும் அவமானத்ததையும் ஏற்படுத்தும் காரணியாக மாறிவிடும் என்பதை அவர் இன்னமும் உணரவில்லை
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு
01 03 2009