Friday, February 28, 2014

ரசிகர்கள் சிரிப்பதனால் சந்தோஷப் படுகிறேன் ஆர்.யோகராஜன்

இலங்கை  ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்திப் பிரிவின் உதவியாளராகப் பொறுப்பேற்று தென்றல் நிகழ்ச்சிப் பணிப்பாளராக உயர்ந்திருப்பவர் இராஜபுத்திரன் யோகராஜா. வி.என்.மதியழகன், சற்சொரூபவதி நாதன், எழில்வேந்தன், சர்வானந்தா, ஜோர்ஜ் சந்திரசேகரன், எஸ்.புண்ணியமூர்த்தி, நடராஜசிவம், அப்துல் ஹமீத்  போன்றவர்களுடன் பணியாற்றிய இவர், இன்று புதிய தலைமுயினருடன் தனது கடமையை மேற்கொள்கிறார். வதிரி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியைக் கற்றார்.

தொழில் நிமித்தம் நீண்டகாலமாகக் கொழும்பிலே வசித்தாலும் ஊரின் மீது மாறாத பாசம்  பற்று கொண்டதனால் வதிரியைச் சேர்ந்த யோகராஜா என்பதில் பெருமிதம் கொள்கிறார். வானொலியில் பல பதவிகளைப் பெற்றிருந்தாலும் இவரது  நகைச்சுவைப் பாத்திரங்களே இவரை அடையாளப்படுத்தின. அப்பாவியான தோற்றமும், கதை பேசும் கண்களும்  இவரைப் பார்த்ததும் சிரிப்பை உண்டாக்கிவிடும்.
இவர் நடித்த பல பாத்திரங்களில் மறக்கமுடியாத டவுட்டு கணேசன், நேத்ரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுஜாதா தியனி எனும் கொரிய நாடகத்தில் டுக்கு மாமாவாக சிறியவர்களையும், பெரியவர்களையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறார். 

கே: நாடகம் நடிப்பதற்குரிய சந்தர்ப்பம் எப்படி ஏற்பட்டது?  நடிகனாக வரவேண்டும் என விரும்பினீர்களா?

ப: நடிப்பில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைதான் என்னை நடிகனாக்கியது. கொழும்பிலே எனது பெரியத்தான் சடகோபனின் வீட்டிலே இருந்தபோது திருகோணமலை துறைமுகத்தில் வேலை கிடைத்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவின் உதவி ஆசிரியர் பதவிக்கு ஆள் தேவை என விளம்பரம் வந்துள்ளதாக வி.ஏ. சிவஞானம் கூறி  என்னை விண்ணப்பிக்கத் தூண்டினார். பத்திரிகை ஆசிரியர் ஆர்.சிவகுருநாதன், இலக்கிய ஆளுமை உள்ள  சில்லையூர் செல்வராஜா, இசைப்புலமை மிக்க எல்.கே.பரராஜசேகரம் ஆகியோர் நேர்முகத் தேர்வு செய்தனர்.  நேர்முகம் முடிந்தபின், தம்பி உன்னால் ஏன் நடிக்கமுடியாது? நிச்சயமாக நடிக்கமுடியும் என்று எஸ்.கே.பரராஜசிங்கம் கூறினார். அப்போது நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. இன்று அது உண்மையாகியுள்ளது.



கே: உங்களுடைய முதல் நாடக அனுபவம் எப்படியிருந்தது?

ப: கிராமிய சஞ்சிகை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.ஏ. சிவஞானசுந்தரத்தின் வழிகாட்டலில் சில கவிதைகள் வாசித்தேன். அப்போதுதான் நாடகத்தில் நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.  கே.சண்முகத்தின் நாடகம் ஒன்று புதன்கிழமை ஒலிப்பதிவானது. ~~முகூர்த்த நேரம் முடியப்போகுது. தாலியைக் கட்டுங்கோ  கெட்டிமேளம்  கெட்டிமேளம்.|| இதுதான் நான் முதலில் பேசிய வசனம். வானொலி நாடகம் என்றாலும் நான் நன்றாகச் செய்தேனா என்று பயம் ஏற்பட்டது. அவர் எதையும் கூறமாட்டார்.  இரண்டு நாட்களின் பின்னர் ரைமிங் நல்லா இருக்கு என்றார். அதுவே எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அகளங்கனின் ~அம்மா நான் வெளிநாடு போறன்| என்ற நாடகமும் எனக்குப் புகழைத் தந்தது.

கே: மேடை நாடகத்தில் எப்படி அறிமுகமானீர்கள்?

ப: சில்லையூர் செல்வராஜனின் தணியாத தாகம் நூல் வெளியீட்டு விழாவுக்கு திருகோணமலைக்குச் சென்றபோது எஸ்.எஸ். கணேசபிள்ளையிடம் என்னை  சில்லையூர் செல்வராஜா அறிமுகப்படுத்தினார். மேடையிலே ஒத்திகையின்றி எஸ்.எஸ். கணேசபிள்ளை, ஏ.எம்.சி. ஜெயசோதியுடன் நானும் இணைந்து சில காட்சிகளில் நடித்தேன். கொழும்பிலே அசட்டு மாப்பிள்ளை| நாடகத்துக்கான ஒத்திகைக்குப் போனபோது  எனக்கு வேலைக்காரன் பாத்திரம் தந்தார். எனக்குப் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக நடித்தேன்.மறுநாள் சற்றுத் தாமதமாகப் போனேன். என் மனநிலையைப் புரிந்துகொண்ட எஸ்.எஸ். கணேசபிள்ளை என்னைத் தனியாக அழைத்து அந்தப் பாத்திரத்தின் தன்மையைக் கூறினார். எனது தம்பியின் பாத்திரம் இது. உன்னை எனது தம்பியின் இடத்தில் வைத்து இதனைத் தந்துள்ளேன். உனக்குத்தான் அதிக கைதட்டல் கிடைக்கும் என்றார். அவர் கூறியது போன்று அந்த நாடகத்தில் எனக்குத்தான் அதிக கைதட்டல் கிடைத்தது.

கே: எத்தனை நாடகங்களில் நடித்துள்ளீர்கள்? 

ப: நூறுக்கும் அதிகமான வானொலி நாடகம், 10 தொலைக்காட்சி நாடகம், 15 மேடை நாடகம்.

கே: உங்கள் தயாரிப்பில் அதிக ரசிகர்களைக் கவர்ந்தது எது?

ப : ~வயலோடு வசந்தம்| அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. ~வீடே நாடகம்|, ~முகத்தார் வீடு| ஆகியவை ரசிகர்களை வசீகரித்த நாடகங்கள். அவை முடிவுக்கு வந்ததும் எனது தயாரிப்பில் ~வயலோடு வசந்தம்|  ஒலிபரப்பானது. அதனைக் கேட்ட பேராசிரியர் கா.சிவத்தம்பி என்னை தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டினார்.

கே:  உங்களுடைய இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?

ப : அன்று எனக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் என்னைப் போன்றவர்களை வளர்த்தது தான் முக்கிய காரணம். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மலையகம் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டோம். இன்றும் அப்படித்தான் இருக்கிறோம்.  சார்க் நாடுகளின் ஊடகப் பிரிவு, பீ.பீ.சி., ஜேர்மனிய  வானொலி ஆகியவற்றின் பயிற்சிப் பட்டகள் எங்களை மிளிரச் செய்தன.

கே: திரைப்படத்தில் நடிக்க முயற்சி செய்யவில்லையா?

ப : எஸ்.எஸ்.கணேசபிள்ளையின் தம்பியின் மகன் ரவி அச்சுதனின்  ~மெதுவாக என்னைத் தொடு|  என்ற திரைப்படத்தில் நடித்தேன். கனடா, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளின் படப்பிடிப்பு நடைபெற்று கனடாவில் முழுமையான படமாக எடிட் செய்து வெளியிட்டார்கள். அதுவும் நகைச்சுவைப் பாத்திரம்தான். நான் வேறு பாத்திரம் கேட்டபோது,  ~~இதை  உங்களால் மட்டுமே செய்யமுடியும்|| என்றார். படம் வெளியான பின்னர் கனடாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ~மெதுவாக என்னைத்தொடு| படத்தில் நடித்ததற்கு பாராட்டிய அவர், தானும் அப்படத்தில் நடித்ததாகவும்  எனது உறவினர் என்றும் கூறினார். அவருடைய பெயர்  துரைமணி.






கே: சிங்கள நாடங்களில் நடிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையா?

ப : என்னுடைய மீசைக்காக சிங்கள நாடகத்தில் நடிக்க அழைத்தார்கள்.  நான் மறுத்துவிட்டேன்.

கே:  ஏன் மறுத்தீர்கள்?

ப : அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படும் பயங்கரவாதியாக நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்து விட்டேன். எத்தனையோபேர் இருக்க என்னை மட்டும் ஏன் பயங்கர வாதியாக நடிக்கத் தெரிவுசெய்தீர்கள் எனக் கேட்டேன். உங்கள் உடல் அமைப்பும் மீசையும் பொருத்தமாக இருக்கிறது என்றார்கள்.

கே: வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்களில் உங்களுக்குச் சந்தர்ப்பம் தந்தவர்கள் யார்?

ப : எஸ்.எஸ். கணேசபிள்ளை, எஸ். சண்முகம், அகளங்கன், ஜோர்ஜ்   சந்திரசேகரன், எஸ். ராமதாஸ், சி.சண்முகம், சில்லையூர் செல்வராஜா,  பி.விக்னேஸ்வரன் ஆகியோரின் நாடகங்களில் நடித்தேன். வி.ஏ.சிவ ஞானசுந்தரம் எனது வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்.

கே:  உங்களுடன் இணைந்து பணியாற்றியவர்கள் பற்றி?

ப : அது நீண்ட பட்டியல். மயில்வாகனம்சர்வானந்தா, வி. என். மதிஅழகன்,  சற்சொரூபவதி நாதன், எழில்வேந்தன், எஸ்.புண்ணியமூர்த்தி, நடராஜசிவம், எஸ்.ராமதாஸ், அப்துல் ஹமீத், ஏ.எம்.சி.ஜெயஜோதி, உடுவை தில்லை நடராஜா, கலிஸ்ராலூக்கஸ் பெர்னாண்டோ, வேதநாயகம் சக்திதரன் (இவர்தான் அசட்டு மாப்பிள்ளையாக நடித்தவர்) சோக்கல்லோ சண்முகம், ரஞ்சனி ராஜ்மோகன்,  ராஜசேகர், கமலினி செல்வராஜா, இரா.ரவீந்திரன், பி.விஸ்வநாதன், பி.விக்னேஸ்வரன் ,லோஷன்,வாமதேவன், இளையத்தம்பி தயானந்தா, அருணா செல்லத்துரை, ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.பாலசந்திரன் என மிக நீண்ட பட்டியல். இப்போது புதியவர்களுடன் சேர்ந்து கடமையாற்றுகின்ன். நாம் ஒரு குடும்பம் போலவே அன்றும் பணியாற்றினோம் இன்றும் பணியாற்றுகிறோம். 





கே: உங்கள் தயாரிப்பில் வெளியான நாடகங்கள் எவை?

ப :  புத்திஜீவிகள் வெளியேற்றத்தை மையமாக வைத்துத் தயாரித்த நாடகம் தான் ~பிறந்தமண்| இது வெள்ளவத்தை இராமக்கிருஷ்ண மிஷனில் நடைபெற்றது. இந்நாடகம் பற்றி அப்போது தினகரனில் ~பல விழாக்களை மிஞ்சிய நாடக விழா| என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியது. 

கே: உங்கள் நடிப்பைப் பாராட்டி விருதுகள் கிடைத்தனவா?

ப : அரச நாடக விழாவில் சிறந்த நடிகருக்கான விருது  போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.
  
கே: உங்கள் நடிப்புக்கு வீட்டில் எப்படி வரவேற்பு உள்ளது? வீட்டிலும் நடிப்பீர்களா? 

ப :  எனது முதல் ரசிகை மனைவிதான்.  நான் நடித்துப் பார்க்கையில் சில திருத்தங்களைக் கூறுவார். மேடையில் நடிக்கும்போது என்னையே  அவதானிப்பார். வீட்டுக்கு வந்தபின் நான் குனிந்து, கூனிக்கொண்டு நின்றதாகக் கூறி  அடுத்த மேடையேற்றத்தின்போது எப்படி நிற்கவேண்டும் என அறிவுரை கூறுவார். ஆனந்தவிகடன், குமுதம் சஞ்சிகைகளில் வரும் ஜோக்குகளை வாசித்து நடித்துப் பார்ப்பேன்.

கே:  நடிப்பில் இவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள். சிறுவயதில்  நாடகத்தில்  நடித்த அனுபவம் உள்ளதா?

ப :   இல்லை. படிக்கும் காலத்தில் ஒரே ஒரு  நாடகத்தில் நடித்துள்ளேன். ஜனககுமார், ரகு, பேரின்பம், ஆகியோருடன் சிறுவனாக  இருக்கும்போது பெண் வேடமிட்டு நடித்தேன்.  அதன்பின் நடிக்கவில்லை. பாடசாலையில் நாடகம், பேச்சுத் போட்டி எதிலும் கலந்துகொண்டதில்லை.



கே:  சிறுவயதில் நாடகங்களை விரும்பிப் பார்ப்பீர்களா?

ப :  நாடகம் பார்ப்பதிலும் நான் அதிக ஆர்வம் காட்டவில்லை. வதிரிகோவி நேசனின் ~காலம் கெட்டுப் போச்சு|  என்ற தாளலய நாடகத்தையும், வதிரி கிருபாவின் ~அலீமா| எனும் நாடகத்தையும்  தேடிப் பார்த்தேன். கோவிநேசனின் தாளலய நாடகம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. கிருபாவின் அலீமா ஆச்சரியப்படவைத்தது. பின்னணி இசை நடிப்பு  என்பன அன்று புதுமையாக இருந்தன. லெப்டினன் கேணலாக நடித்த ராஜதுரையின் நடிப்பு  என்னைக் கவர்ந்தது.

கே: உங்களைக் காண்பவர்கள்  டுக்கு மாமா என்கிறார்களே! இந்தப் பெயர் எப்படி வந்தது?

ப :    ~சுஜாதா தியனி| என்ற கொரிய நாடகம் நேத்ரா தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகிறது. அந்த நாடகத்தில் டுக்கு மாமா என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றேன்..

கே:  டுக்கு மாமாவுக்கு குரல் கொடுப்பதற்கு உங்களைத் தேர்வு செய்தது யாது?

ப :     சுஜாதா தியனியை தமிழில் ஒளிப்பரப்புச் செய்வதற்கு குரல் தேர்வு செய்வதற்கு என்னையும் அழைத்தார்கள்.  அந்தப் பாத்திரங்களுக்குப் பொருத்தமான குரலுடைய சிலரைநான் சிபாரிசு செய்தேன். டுக்கு மாமா என்ற நகைச்சுவைப் பாத்திரத்துக்கு யாருடைய குரல்  பொருந்தும் என யோசித்தேன்.  அப்போது டுக்குமாமாவுக்கு குரல்கொடுக்க ஒருவரைத் தேர்வு செய்துவிட்டதாகக் கூறினர். அது யாராக இருக்கும் என இரண்டு நாட்களாக யோசித்தேன். சுஜாதா தியனி ஒலிப்பதிவு நடைபெறுவதாகவும்  என்னை வரும்படியும் தொலைபேசியில் அழைத்தார்கள். அங்கு போனதும் நீதான் டுக்கு மாமா என்றார்கள்.
நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். ஆனால், அந்தப் பாத்திரம் எனக்கு பல ரசிகர்களைத் தேடிக் கொடுத்துள்ளது.

கே:  அன்று உங்களுக்குப் பெருமை தேடித் தந்த பாத்திரம் டவுட்டு கணேசன். இன்று தொலைக்காட்சியில் டாடீ எனக்கொரு  டவுட்டு சினிமாவில் மட்டக்களப்பு யோகராசு எனக் கொரு டவுட்டு, கணேஷ் டவுட்டு என்று  நடிகர்கள் நடிக்கும்போது என்ன நினைக்கிறீர்கள்
.
ப :    நண்பர்களும் இதைப்பற்றி என்னிடம் கேட்பார்கள். ரசிகர்களால் மறக்க முடியாத பாத்திரம். புகழ்பெற்ற ~~அடங்காப்பிடாரி|| நாடகப் பாத்திரத்தை மனதில் வைத்துத்தான் டவுட்டு கணேசன் உருவாகினான்.

கே:   நகைச்சுவைப் பாத்திரத்தை விரும்பி நடிக்கிறீர்களா?

ப :    குணசித்திர பாத்திரங்களில் நடிக்க விரும்புகின். உருவத்தை மாற்றி நடிக்கவும் ஆசைப்படுகிறேன். நகைச்சுவை நடிகர் என்றும் முத்திரை குத்திவிட்டார்கள். கவலையை மறந்து மற்றவர் சிரிக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

கே:    தனிநடிப்பில் கவனம் செலுத்தினீர்களா?

ப :   இலங்கை வானொலியின் பவளவிழா நிகழ்ச்சியின் போது அன்றைய  பணிப்பாளர்  திருமதி அருந்ததி 
ஸ்ரீரங்கநாதன்  எனக்கொரு சந்தர்ப்பம்  தந்தார். சுமார் அரைமணி நேரமாக நடந்த அந்த நிகழ்ச்சி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. என்னுடன் பணியாற்றும் அனைவரையும் நகைச்சுவையாகக் கிண்டல் செய்தேன். தொலைக்காட்சியில் பணியாற்றும் பெண் ஊழியரை நான்  சந்திப்பதாக ஒரு காட்சி. அவரைப்பார்த்து நான் நான் கேட்ட கேள்விகள் சபையோரைக் குலுங்கக் குலுங்க சிரிக்கவைத்தன.
நீங்களே அந்தத் ரி.வி.  பெட்டியிலை வாறது. ரீ.வியிலைவரேக்கை  பவுடர் எல்லாம் போட்டு வடிவா இருக்கிறியள். ரேடியோவிலை அடிக்கடி நல்லூருக்கு அழைத்துப் போகிறம். என்று சொன்னியள். அது தான் நல்லூருக்குப் போறதுக்குப் பாயும் கொண்டு வந்தனான். எப்ப எங்களை அழைச்சுப்போகப் போறியள் என அவரைக் கேட்டேன். நல்லூர் தேர் தீர்த்த நேரடி ஒலிபரப்பு பற்றிய  விளம்பரத்தையே தான் அப்படிக் குறிப்பிட்டேன். இது வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தர்ப்பம்.

ரவி
 சுடர் ஒளி 23/02/14 

Thursday, February 27, 2014

உலகக்கிண்ணம் 2014

  ஈக்குவடோர் 
தென்னாபிரிக்காவிலிருந்து ஈக்குவடோர், வடஅமெரிக்காவிலிருந்து ஹொண்டுராஸ்  ஆகியன உலகக் கிண்ணப்போட்டியில் ஈ பிரிவில் சுவிட்ஸர் லாந்து, பிரான்ஸ் ஆகியவற்றுடன் மோதவுள்ளன. தரவரிசையில் ஈக்குவடோர் 23ஆவது இடத்திலும், யஹாண்டுராஸ் ஒரு இடம் கீழிறங்கி 43 ஆவது இடத்திலும் உள்ளன.

                    ஈக்குவடோர்

வெனிசுவெலா, பரகுவே, பெரு, ஆர்ஜென்ரீனா, கொலம்பியா, பொலிவியா, உருகுவே, சிலி ஆகியவற்றுடன் தகுதி காண்போட்டியில் விளையாடியது ஈக்குவடோர். 16 போட்டிகளில் விளையாடிய  ஈக்குவடோர் ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு போட்டிகளைச் சமப்படுத்தி ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து 25 புள்ளிகளுடன் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
 ஈக்குவடோர் 20 கோல்கள் அடித்தது. எதிராக 16 கோல்கள் அடிக்கப்பட்டன. 34 மஞ்சள் அட்டைகளும், இரண்டு சிவப்பு அட்டைகளும் ஈக்குவடோருக்கு எதிராகக் காட்டப்பட்டன. பிலிப்கசிடோ ஏழு கோல்களும், கிறிஸ்ரியன் பென்ற்ஸ் நான்கு கோல்களும் அடித்தனர்.

கொலம்பியாவைச் சேர்ந்த ரெனால்டோ ருடா  ஈக்குவடோரின் பயிற்சியாளராக உள்ளார். ஹொண்டுராஸுக்கு பயிற்சியாளராக இருந்தபோது கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட ஹொண்டுராஸ் தகுதிபெற்றது. இப்போது யஹாண்டு ராஸுக்கு எதிராக உள்ளார். மான்சிஸ்ரர் யுனைட்டட் கழக வீரரான அன்ரனி யோ வலன்சியா அணித் தலைவராக உள்ளார்.  ஈக்குவடோர் அணிக்காக 69 போட்டிகளில் விளையாடி ஐந்து கோல்கள் அடித்துள்ளார். பிறீகிக் ஸ்பெஷலிஸ்ற் என அழைக்கப்படும் எடிசொன்ம டெஸ் நம்பிக்கை நட்சத்திரமாக  உள்ளார். மான்சிஸ்ரர் சிற்றி கழகத்திலிருந்த இவரை ரஷ்ய கழகம் ஒன்று அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. 
அன்ரனியோ வலன்சியா, கிறிஸ்ரியன் நோபோ, பிலிப்கஸிடோ, ஜெபர் சன் மொன்டேரியோ, வால்டர் சுயோவி, செகுண்டோகஸ்ரிலோ ஆகியோர் அணியின் பிரதான வீரர்களாவர். யுலிசஸ்டிலா குரூஸ், அகஸ்ரின்டெல் காடோ, ஜோஸ் பரான்சிஸ்கோ செவ லோஸ் ஆகியோர் முன்னாள் வீரர் களாவர்.

2002ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட முதன் முதலாகத் தகுதிபெற்றது. 2006ஆம் ஆண்டு இரண்டா வது சுற்றுக்கு முன்னேறியது. மூன்றாவது முறை  உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றுள்ளது.
ஹொண்டுராஸ்


                  ஹொண்டுராஸ்

பனாமா, கியூபா, கனடா ஆகியவற்றுடன் மூன்றாவது தகுதிகாண் போட்டியில் விளையாடிய ஹொண் டுராஸ், 11 புள்ளிகளைப் பெற்று நான்காவது தகுதிகாண் போட்டியில விளையாடத் தகுதிபெற்றது. மூன்று போட்டியில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. ஹொண்டுராஸ் 12 கோல்கள் அடித்தது. எதிராக மூன்று  கோல்கள் அடிக்கப்பட்டன. கனடாவுக்கு எதிராக 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

அமெரிக்கா, மெக்ஸிகோ, பனாமா, கொஸ்ரரிகா, ஜமேக்கா ஆகியவற்றுடன் நான்காவது தகுதிகாண் போட்டியில் விளையாடியது ஹொண்டுராஸ். நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று மூன்று  போட்டிகளைச் சமப்படுத்தி மூன்று  போட்டிகளில் தோல்வியடைந்து 15 புள்ளிகளைப் பெற்று உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது.ஹொண்டுராஸுக்கு எதிராக 22 மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. ஜெரிபென்ஸ்  ரொன் ஒன்பது கோல்களும், கார்லோ கொஸ்ரி ஏழு கோல்களும் அடித் துள்ளனர்.
கொலம்பயாவைச் சேர்ந்த லூயிஸ் பெர்னாண்டோ சோஸி பயிற்சியாளராக  உள்ளார். 2006ஆம் ஆண்டு இவர் ஈக்குவடோர்  அணியின் பயிற்சியாளராக இருந்தபோது உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. வில்கன் பிலசியோர் ஹொண்டுராஸின்  நம்பிக்கை நட்சத்திரமாக  உள்ளார்.  அணித்தலைவரான கோல் கீப்பர் நொயல்வலராஸ் உள்ளார்.  1982ஆம் ஆண்டு முதல்முதலாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.  2010ஆம் ஆண்டு தகுதி பெற்ற ஹொண்டுராஸ் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெறும் போட்டியிலும் பங்கு பற்ற தகுதிபெற்றுள்ளது. அமரோகுவேரா, பகுரா வில்சன் பலகியயாஸ் ஆகியோர் முன்னாள் வீரர்களாவர்.
தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் குழு எச் இல் ஸ்பெய்ன், சிலி, சுவிட்ஸர்லாந்து ஆகியவற்றுடன் ஹொஹாண்டுராஸ் போட்டியிட்டது. ஒரு போட்டியைச் சமப்படுத்தி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து கடைசி இடம்பிடித்து வெளியேறியது. ஹொண்டுராஸ் ஒரு கோல் அடித்தது. எதிராக மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன.
சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், ஈக்குவடோர், ஹொண்டுராஸ் ஆகிய நாடுகள் உள்ள குழு ஈ யிலிருந்து சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ்,  ஆகியன இரண்டாவது சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது.

ரமணி 
சுடர் ஒளி 23/02/14

இன்னொன்று

சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் இன்னொன்று எனும் பெயரில் சஞ்சிகை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜனவரி,பெப்ரவரி 2014 இதழாக வெளிவந்துள்ள இச்சஞ்சிகை,  இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும் எனத்  தெரியவருகிறது. இன்னொன்று  என்ற இச்சஞ்சிகை ஒன்றைப் பற்றி மட்டுமல்ல என்ற மகுடத்துடன் வெளிவந்துள்ளது.
எல்லாவற்றையும் பேசுவது பற்றி எனும் தலைப்பில் ஆசிரியத் தலையங்கம் தீட்டப்பட்டுள்ளது. சமூக மாற்றத்திற்கான அனைத்துத் தளங்களிலும் போராட வேண்டியிருக்கிறது. இயங்கு தளங்களும் அவை செயற்படுவதற்கான இடைவெளிகளும் சுருங்கி வருகின்றன. வாசிப்பதும், கலந்து பேசுவதும் சமூகத்தின் அடிப்படையான பண்புகள். அதை வளர்த்தெடுத்து  சமூக மாற்றத்துக்கான பாதையில் பயணிக்க வேண்டியே  இன்னொன்று  இதழ் வெளி வருகின்றது  என தமது சஞ்சிகையின் நோக்கத்தை வெளிப்படுத்தி வாருங்கள்;  சேர்ந்து வாசிப்போம்; கலந்து பேசுவோம்;  சமூக மாற்றத்துக்காய் உழைப்போம் என ஆசிரியர் குழு அறைகூவல் விடுத்துள்ளது.
எங்கள் கிணறுகளும், குளங்களும் எங்களுக்குச் சொந்தமில்லாமல் போகும் ஒருநாளில் எனும் கட்டுரை தண்ணீர்ப் பிரச்சினையை தெளிவுபட விளக்குகிறது. தண்ணீருக்கு ஏற்படப்போகும் தட்டுப் பாட்டை கட்டியம் கூறுகிறது. 
தேர்வு எனும் கொடுங்கனவு மாணவரின் பரீட்சைப் பயத்தை வெளிப்படுத்துகிறது. அமெரிக்காவின் உளவு  நடவடிக்கை,  மின் தட்டுப்பாட்டுக்கு ஒரே தீர்வு அணுசக்திதான,   பசுமைக்குடிலும் பறிபோகும் மனித நலமும்,  முன்னாள் யுத்த வலயங்களிலிருந்து  ஒலிக்கும்  குரல்கள், உங்கள் தொட்டியில் கலந்திருக்கும் கண்ணீர், வண்ண மயமான  அபிவிருத்தி பாசிஸத்தின் அரசியல் முகமுடி ஆகிய பயனுள்ள கட்டுரைகள் சிந்திக்கத் தூண்டுகின்றன. ஒரு சில கவிதைகளும் இந்த இதழை அலங்கரிக்கின்றன. 
சூரன்  
சுடர் ஒளி 23/02/14

Wednesday, February 26, 2014

அழியாத கோலமாக மனதில் நிற்கும் கலைஞன்

சினிமா ரசிகர்களின் மனதில் அழகான வீடு கட்டி அழியாத கோலமிட்டு நிரந்தரமாக  வசிப்பவர் பாலுமகேந்திரா. தலைமுறைகளுடன் போட்டியிட்டு ஐந்து படங்கள் தருவேன் என்றவர் எதிர்பார்த்திருந்தவர்களை ஏமாற்றி விட்டுச்சென்று விட்டார். இயக்குநரின்படம் நடிகரின் படம் என்ற நிலையைக் கடந்து பாலுமகேந்திராவின் படம்  என்ற புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினார். கதை, இசை, இயக்கம், நடிப்பு எல்லாவற்றையும் கடந்து பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவக்காண ரசிகர்கள் படை எடுத்தனர். அவரின் கமரா காட்டும் காட்சிகள் அனைத் தும் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.

மட்டக்களப்பு அமிர்தகழியைச் சேர்ந்த பாலுமகேந்திராவை காலம் தென்னிந்தியாவில் காலூன்றச் செய்து சாதனையாளராக்கியது. உலகின் சிறந்த படங்களுடன் தமிழ்ப்படங்களையும் ஒப்பிட்டு விமர்சனம் செய்து கேலி செய்பவர்களின் முகத்தில் அடிப்பது போல ஈரான் படங்களைப் பார்த்து ஆச்சரியப்படாதீர்கள். எமது படங்களைப் பார்த்து அவர்க்ள ஆச்சரியப்படவேண்டும் என்று சவால் விடுத்தார். அந்தச்சவாலில் அவர் வெற்றிபெறுவார் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் வாழ்வை முடித்து விட்டுச் சென்றுவிட்டார்.
இலங்கையில் இருக்கும்போது படிக்கின்ற காலத்திலேயே  சிறுகதை, கவிதை, குறும் படம் என்பனவற்றில்  சிறந்து விளங்கினார். இலண்டனில் உயர்கல்வியை முடித்தபன் பூனே திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவு கல்வியில் தங்கப்பதக்கத்துடன் வெளியேறினார்.
1971ஆம் ஆண்டு நெல்லு என்ற மலையாளப் படத்தில் ஒளிப்பதிவாளராக   அறிமக மானார்.முதல் படமே அவருக்கு கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதைப் பெற்றுக்கொடுத்தது. 77ஆம் ஆண்டு கோகிலா என்ற படத்தை இயக்கினார்.இது அவருக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. 1979ஆம் ஆண்டு அழியாத கோலங்கள் மூலம் தமிழுக்கு வந்தார் இதுவும்   விருதுப்படமானது.
பாலு மகேந்திராவின் படங்கள் அனைத்திலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். இயக்குநர்களும், கதாநாயகர்களும் வெள்ளைத்தோல் பெண்களை தேடி அலைந்த வேளையில் கறுத்தப்பெண்களுடன் காவியப்படம் பலபடைத்தவர்.

ஷோபா என்ற அற்புதமான நடிகையை சினிமாவுக்குத் தந்தார். பாலு மகேந்திராவின் கமராவும்கதை சொல்லி நடிக்கும் சுமாரான அழகையும் மனதில் பதியும் அழகாகத் தருவதில் வல்லவர் கோடிக் கணக்கான பணத்தை இறைத்து படம் எடுப்பதே விடுத்து குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படத்தைக் கொடுக்கலாம் என்ப தில் இறுதிவரை  உறுதி யாக இருந்தார்.
அழியாத கோலங்கள் படத்தின் மூலம்  எதிர்மறையான விமர்சனங்கள் அவர் மீது சுமத்தப்பட்டது. சிறுவர்கள் நடிக்கும் வயது வந்தவர்களுக்கான  படம் அவர் சொல்லுக்குளானார்.  அழியாத கோலங்கள்  மாநில விருதுகளை அள்ளியபோது விமர்சகர்களின் வாய் அடைக்கப்பட்டது.


இயக்கம், ஒளிப்பதிவு, சிறந்த திரைக்கதை என்ற ரிவுகளில் பல விருதுகளைப் பெற்ற ஒரே கலைஞர். தேசிய விருதுகளையும். தமிழக கர்நாடக கேரள மாநில விருதுகளையும் பெற்று தனக்கு  நிகர் எவரும் இல்லை என்று நிரூபித்தவர். இவை தவிர நந்தி விருது, பிலம்பேர் விருது, என்பவற்றையும் இவர் விட்டுவைக் வில்லை.பூனே திரைப்படக்கல்லூரியிலிருந்து வெளியேறிய பாலுமகேந்திராவுக்கு முதல்பட வாய்ப்புக் கொடுத்தவர்  செம்மீன் மூலம் தேசிய விருதுபெற்ற இயக்குநர் ராமுகாரியத் சேது மாதவன், பரதன் ஆகியோரின் படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். தரமான படங்கள் மலையாளத்திலிருந்து வெளியா தால் தனது திறமையை வளர்ப்பதாகவே மலையாளக்கரையில் ஒதுங்கினார் பாலு மகேந்திரா.

பாலு மகேந்திராவின் புகழ் திரை உலகை ஆச்சரியப்படவைத்த வேளை தனது ஆஸ்தான நாயகியான ஷோபாவுடன் தமிழ்ப்படம் இயக்கத் தயாரானார். அப்போது முள்ளும் மலரும் என்ற படக்கதையுடன் மகேந்திரன் அவரைச் சந்தித்தார். முள்ளும் மலரும் நாவலை ஏற்கன வே,அவர் படித்திருந்ததனால் தனது அழியாத கோலங்கள்படத்தை  ஒத்திவைத்தார் முள்ளும் மலரும்  படத்தின் மூலம் ரஜினியின் தங்கையாக ஷோபா  தமிழுக்கு அறிமுகமானார். முள்ளும் மலரும் படத்தின் வெற்றிக்குப்பின் வெளியான அழியாத கோலங்கள் தமிழ்த்திரை உலகின் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது

நடிகர் திலகம் சிவாஜியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான  ஏற்பாடுகளைச் செய்தார். பாலும் மகேந்திராவின் இயக்கத்தில் நடிக்க சிவாஜி சம்மதித்தார். தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அது தடைப் பட்டது. மம்முட்டியை இயக்குவதற்கும் பாலு மகேந்திரா ஆசைப்பட்டார். அதுவும் கை கூடாமல் போனது.பாலுமகேந்திராவினால் ஈர்க்கப்பட்ட பலர் அவரைத் தமது படங்களில் ஒளிப்பதிவாளராக்க வேண்டும் என்றுவிரும்பிக் காத்திருந் தனர். எல்லாப் படங்களையும் அவர் ஏற்றுக் கொள்ள வில்லை. தான் இயக்கும்  படத்துக்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மணிரத்தினம், பாரதி ராஜாஆகியோர் இளை யராஜாவை விட்டு ரஹ்மானிடம் சென்றபோதும் இவர் இளையராஜாவைக் கைவிட்டதில்லை.

ரோஜாபடத்தின் மூலம் ரஹ்மான் இசை, உலகில் பரபரப்பை ஏற்படுத்தியபோது தேசியவிருது தேர்வுக்குழுவின் தலைவராக பாலு மகேந்திரா பணியாற்றினார்.இறுதிச்சுற்றில் இளையராஜாவுக்கும் பாலுமகேந்திராவுக்கும் சமவாக்குகள் கிடைத்தன.  பாலுமகேந்திராவின் வாக்குத்தான் தேசிய விருது பெறுபவரைத்  தீர்மானிக்கும் என்ற நிலை இருந்தது. புதியவரான 22 வயது இளைஞனுக்கு வாக்களித்து ரஹ்மானின் இசைப்பயணத்துக்கு உற்சாக மூட்டினார்.
பாலு மகேந்திராவின் படங்கள் அதிகமானவை இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்தும் கணவனைப்பற்றியதாகவே இருக்கும். அவரின் கதைகளைப் போல வாழ்க்கையிலும் அகிலா, ஷோபா, மெளனிகா என்ற மூன்று பெண்கள் குறுக்கிட்டார்கள். ஷோபாவும், மெளனிகாவும் நடிகைகள்  வாழ்க்கையை ஒளிவு மறைவுயின்றி தனது வாழ்க்கையின் மறுபக்கத்தை  வெளியிட்டார். ஷோபாவுடனான தொடர்புகள் பற்றி கிசுகிசு வெளிவந்த போது பெரிதாக அதை வெளிக் காட்டவில்லை. ஷோபாவின் தற்கொலை அவரை பாதித்தது. மெளனிகாவை தாலிகட்டிய மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
வாழ்க்கையில் துன்பங்களைச் சந்தித்த பாலு மகேந்திரா  யாரிடமும் எதையும் இரந்து கேட்கவில்லை. தனது  கஷ்டங்களை வெளிக் காட்டவில்லை. வாசிப்பு அவரின் இரத்தத்தில் ஊறியது. தனது உதவியாளர்களும் வாசிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.கள். அவரின் பட்டறையில் வளர்ந்த பாலா, ராம், வெற்றி மாறன், சீனுராமசாமி ஆகியோர் தேசிய விருதுப்படங்களைத் தந்ததால் மூலம்  குருவுக்கு  காணிக்கை செலுத்தியுள்ளனர்.

ஊர்மிளா 
சுடர் ஒளி 23/02/14

Tuesday, February 25, 2014

தமிழ் சினிமாவின் பார்வையில் ஈழம் வணிகமாக்கப்பட்ட வலிகள்

இலங்கை, இந்திய தமிழ் இளைஞர்களை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கிறது  தென் இந்திய சினிமா. சிவாஜி - எம்.ஜி.ஆர்., கமல்-! ரஜனி, விஜய் - அஜித், சிம்பு - தனுஷ் என்று காலம் காலமாக தமிழ் இளைஞர்களில்  சிலர் இக்கதாநாயகர்களின் அடிமையாக இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். என்ற  மூன்றெழுத்து மந்திரம் தமிழக அரசியலில் இன்னும் செல்வாக்குச் செலுத்துகிறது.
கலை அம்சம் உள்ள படங்களை ஒருபுறம் ஓரம் கட்டிவிட்டு வியாபார ரீதியில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்கின்றனர். உலகெங்கும் வாழும்  இலங்கைத்  தமிழ்ர்களை  நம்பி  பல  படங்கள் வெளிவந்தன. சில படங்களில் வசனங்களும்,  பாடல்களும்  தமிழர்கள் மீது பச்சாதாபம் கொள்வது போல் வியாபார நோக்கத்திலேயே தயாரிக்கப்பட்டன என்பதை வலியோடு வெளிப்படுத்தியுள்ளார் இ.சு.முரளிதரன்.

இ.சு.முரளிதரன் எழுதிய தமிழ் சினிமாவின் பார்வையில் ஈழம் வணிகமாக்கப்பட்ட வலிகள் என்ற இப்புத்தகம் ஜீவநதியின் 27ஆவது வெளியீடாக வந்துள்ளது.இதில் உள்ள 16 கட்டுரைகளில் 15 கட்டுரைகள்  ஜீவநதியில் பிரசுரமாகின. தமிழ், சிங்களம், ஈரான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இத்தாலி, ஆங்கிலத் திரைப்படங்கள் பற்றிய இவரது பார்வை வித்தியாசமானவையாக உள்ளது.
தமிழ்த் திரைப்படத் தலைப்புகள் ஒரு குறும்பார்வை என்ற முதலாவது கட்டுரையில் திரைப்படத் தலைப்புகள் பற்றி அலசுகிறார். வட மொழித் தலைப்பு, ஆங்கிலத் தலைப்பு என்பன  பற்றியும் இத்தனை எழுத்துகளில் தலைப்பிட்டால் படம் வெற்றிபெறும் என்ற சினிமா  நம்பிக்கையையும் கூறுகிறார். இரண்டு எழுத்துப்படங்கள், புதிய காதல், சின்ன என்ற சொற்களில் ஆரம்பிக்கும் தலைப்புகள் கோட்டை என்ற சொல்லில் முடியும் படங்கள் பற்றிய பட்டியலைத் தந்துள்ளார்.
ஆங்கிலப்படக் கதையை தமிழில் சுட்ட விவரத்தைத் தந்துள்ளார். கமலின் வெற்றி பெற்ற அதிகமான படங்களின் கதை ஆங்கிலப் படங்களில் இருந்து அப்படியே நகலெடுத்தது  என்பதை திரைப்படங்களில் நகலெடுப்பு என்ற தலைப்பில் கட்டுரையாகத் தொகுத்துள்ளார். அன்பேசிவம்,  மகளிர் மட்டும், நளதமயந்தி,  அவ்வைசண்முகி என்பன ஆங்கிலப் படங்களின் அப்பட்டமான பிரதி என்பது பல  இரசிகர் களுக்குத் தெரியாது.

தமிழ் சினிமாவின் பார்வையில் ஈழம் வணிகமாக்கப்பட்ட வலிகள் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையின் மூலம் இலங்கையின் விடுதலைப் போராட்டம் கொச்சைப்படுத்தப் பட்டுள்ளதாகக் குமுறுகிறார். ஈழத்தை முதன்மைக் கருவாகக்கொண்டு  வெளிவந்த திரைப் படங்கள் எமது துயரத்தை வணிகமாக்கியுள்ளதை வலியோடு விவரிக்கிறார்.காற்றுக்கென்ன வேலி, உச்சிதனை முகர்ந்தால், இராமேஸ்வரம், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுதப் போராட்டம், நந்தா, தொனாலி, நான் அவனில்லை 2, பில்லா2-, புன்னகை மன்னன், ஆயிரத்தில் ஒருவன், பாலை, ஏழாம் அறிவு ஆகிய படங்களின் கதை காட்சிகள், வசனங்கள் என்பன இலங்கை மக்களின் வலிகளை வெளிப்படுத்தவில்லை.
இலங்கையில் நடக்கிற யுத்தம் நிறுத்து, ஈழத்தில் போர் ஓய்ந்து தேன் முல்லை, பூப்பூத்து, ஸ்ரீலங்கா நீயானால் எல்.ரி.ரி. நானால், அய்யய்யோ அய்யய்யோ மூடு, அந்த சந்திரிக்காவும், பரபாகரனும் சம்பந்தியாகனும், நிலவு சாயும் நேரம்,  மீன்கள் பாடும் தேன் நாடு, நல்லூரின் வீதி  திரிந்தோமடி, விடை கொடுங் கள் நாடே, கடல் வாசல் தெளிக்கும் வீடே போன்ற பாடல்கள் இலங்கைத் தமிழர்களைக் குறிவைத்து எழுதப்பட்டன.
தமிழ்த் திரைப்படங்களில் குறியீடு ஆழமறியாத ஒரு  தேடல். தமிழ்த் திரைப்படங்களில் கலை இயக்குநர்களின் வகிபாகம், மணிரத்தினம் சினிமாவில்  நிஜமாந்தர்களின் நிழல், கனதியான முயற்சிகளில் கால் கோள், பதேர் பாஞ்சாலி கனவுருவரைபுகளால்  கருத்தியல் திருட்டு ஆகிய கட்டுரைகள் இவரின் சினிமாத்தேடலை வியப்புறச் செய்கின்றன.
ஸ்ரேயா கோஐல், முரளிதரனை கிறங்க வைத்துள்ளார். ஸ்ரேயா கோஐலின் குரல், வசீகரம், உச்சரிப்பல்  மயங்கியவர்கள்  தமிழில் அவரின் தவறான உச்சரிப்பைக் கண்டுகொள்ள வில்லை என்பதை முரளிதரன் வெளிப்படுத்தி யுள்ளார். நகைச்சுவை நடிகரான நாகேன் குணசித்திர நடிப்பை  வியப்புடன் வெளிப்படுத்து கிறார்.
 சிங்கள மக்களும் விழிப்புணர்வைத் தந்த புறஹந்த களுவளு என்ற சிங்களப்படத்தை யும் தன் பாணியில்  விமர்சித்துள்ளார். நுங்கு விழிகள், நளதமயந்தி, புழுவிற்கும் சிறகு முளைக்கும் ஆகிய கவிதைத் தொகுப்புகளைத் தந்த இ.சு.முரளிதரனின் காத்திரமானப் படைப்பு இப்புத்தகம். 

சூரன்  
சுடர் ஒளி 09/02/14

யாதும் ஊரே


நாகரீகப் பெட்டகப் பாதுகாப்பிற்கு வலுச்சேர்க்கும் யாதும் ஊரே ஒழி ஆவணத் தொடர் தயாரிப்பு 
-ஒரு அறிமுகக் குறிப்பு -

மனித வாழ்க்கை என்பது பரந்து பட்டது .உலகளாவிய ரீதியில் பார்க்கின்ற போது பல்வேறு பிராந்தியங்களாக மனித வாழ்வு பரந்து காணபட்டாலும் கூட ஒவ்வொரு இன மத சார் பண்பாட்டியல் கலாசாரங்களை முன்வைத்து அவை வேறுபட்டும் மாறுபட்டும் காணப்படுகின்றன .
உண்மையில் மனிதனானவன்  நிகழ் வெளி வாழ்வை  பெரிதும் முக்கியப்படுத்தும் அளவிற்கு தான் சார்ந்த அல்லது பிறர் சார்ந்த பொதுமை சார்ந்த கடந்தகால வால்வியர்தடன்கலையும் அவற்றின் முக்கியத்துவங்களையும் கண்டு கொள்ளும் நிலை அருகி வருகின்ற ஒரு காலகட்டத்தில் உலக நகரங்கள் பற்றியும் ,பரந்து பட்ட பிராந்தியங்களின் பண்பாடு ,புராதான கலாசாரங்களை முன்வைத்து யாதும் ஊரே என்கின்ற ஒரு ஒளி ஆவணத் தொடர்  லண்டனில் வசிக்கு பிரபல ஊடகவியலாளரும் ,ஆய்வாளருமாகிய தவ   சஜிதரனை பிரதம   செயர்ப்பாட்டாலராக கொண்டு அவர் சார்ந்த குழுவினரால் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது .

கடந்த வாரம் இணையத்தில் வெளியான இந்த முயசியின் முதல் தொடராக பிருத்தானிய அருங் காட்சியகத்தின் புராதன வரலாறு குறித்த ஒரு ஆவணமாக வெளிவரவுள்ளதாக அந்த முதலாவதாக வெளியாக காணொளி எமத்து தெட்டத்  தெளிவாக புலப்படுத்தியிருன்தது .உண்மையில் தமிழில் வெளிவர இருக்கின்ற இந்த  முயற்சி பெரிதும் பாராட்டப் படவேண்டிய ஒன்று ஆகும் .உண்மையில் இன்றைய காலகட்டத்தில் மனித வாழ்வில் புராதனம் ,அல்லது பண்டைய வரலாறு குறிந்த ஆய்வியல் நோக்கில் வெளிவரும் படைப்புகளின் தேக்க நிலை அரிதாக காணப்படும் இக்காலத்தில் உலக நாகரீகங்கள் ,பன்பாட்டியர் கோலங்கள் ,புராதன நாகரிக சின்னங்கள் என வாழ்வின் மிக முக்கியமான பல சுவாரஷ்ய தகவல்களை இந்த ஒளி ஆவணத் தொடர் தரும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை .இந்த  ஆவணத் தொடர் முயசி ஆனது காலம் காலமாக    பேணிப் பாதுகாக்கப்படவேண்டிய ஒரு விடயமாகிறது .உலக வரலாறு ,பண்பாட்டியல் தேடல் என எல்லாவற்றிற்கு ம் இணையத்தில்  தங்கி இருக்காது இப்படியான இந்த ஒளி ஆவணத் தொடர் மூலம் மென் மேலும் நாம் வரலாற்றை அறிந்து கொள்ளக் கூடிய ஒரு அரிய வாய்ப்பு உருவாகியிருக்கின்றது என்றே சொல்ல வேண்டும் ,இந்த ஒரு வார காலத்தில் இணையத்தில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்களால் இந்த முன்னோட்டம் பார்வையிடப் பட்டிருக்கின்றது ,எனவே பல சுவாரஷ்யமான தேடல்களின் பதிவுகள் ,புதிய விடயங்கள் என எல்லாவற்றையும் ஒரு வரலாற்றுப் பொக்கிஷமாக :யாதும் ஊரே "என்ற தலைப்பில் வெளியாக இருக்கின்றது ,எனவே இந்த அரிய முயசியை செய்துவரும் ஊடகவியலாளர் தவ சஜிதரன் மற்றும் அவர் சார் குழுவினருக்கு நன்றிகளையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளவேண்டியதில் ஒவ்வொரு வாசகர்களின்  பணியும் மிக முக்கியமானதொன்றாக இருக்கின்றது .

வெற்றி -துஷ்யந்தன்

 சுடர் ஒளி 23/02/14

Monday, February 24, 2014

அரசியலான நீதிமன்ற தீர்ப்பு


ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனையை  எதிர்பார்த்துக் காத்திருந்த முருகன்,பேரறிவாளன் சாந்தன் ஆகிய மூவருக்குமான  மரணதண்டனைத் தீர்ப்பை இரத்துச் செய்த நீதிமன்றம் அவர்களின் விடுதலையை தமிழக அரசின் தலையில் சுமத்தியது. பெப்ரவரி 18ஆம் திகதி நீதி மன்றம் வழங்கிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பு உலகெங்கும் உள்ள தமிழ் மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

மரணத்தின் வருகையை எதிர் பார்த்திருந்த மூவரும் தப்பிவிடுவார்கள் என்ற நிம்மதிப்பெருமூச்சு தமிழர் மத்தியில் நிலவியது. 134 நாடுகள் தூக்குத்தண்டனையை ஒழித்து விட்டன. 58 நாடுகள் தூக்குத்தண்டனையை அமுல்படுத்துகின்றன. தூக்குத்தண்டனையை உலகில் இல்லாமல் செய்யவேண்டும் எனப்  பல இயக்கங்கள் குரல் கொடுத்துவரும் வேளையில்  சத்தியத்தை உலகுக்குப் போதித்த காந்தி மகான் பிறந்த நாட்டை ஆட்சி செய்பவர்கள் மன்னிப்பு வழங்கத் தயாராக இல்லை.

நீதிமன்றத்தீர்ப்பு வெளியானதும் அனைவரினதும் பார்வை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நோக்கித் திரும்பயது. ஜெயலலிதா என்ன செய்யவேண்டும் என்று பலரும் ஆலோசனை தெரிவித்தார்கள். சிலர் வேண்டுகோள் விடுத்தனர். கருணாநிதியும் தன் பங்குக்கு ஜெயலலிதாவுக்கு ஆலோசனை கூறினார்.முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் உயிருடன் மீட்க வேண்டும் என்பதில் மிகக்கடுமையாக உழைத்தவர் வைகோ. இந்த வழக்குக்காக அவர் டில்லிக்கும் சென்னைக்குமிடையே பறந்த தூரம் மிக அதிகம். இந்தியாவின் மிகப் பிரபலமான சட்டவல்லுனரான ராம்ஜத்மலானியை வாதாடுவதற்காக அழைத்ததில் வைகோவின் பங்கு முக்கியமானது.

அதிரடியாக முடிவெடுக்கும் ஜெயலலிதாவின் அறிவிப்பு முருகன், சாந்தன்,பேரறிவாளன் உட்பட ஆயுள் கைதிகளாக  இருக்கும் நளினி, ரொபேட் பயாஸ், ஜெயக்குமார்,ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலைசெய்யத் தீர்மானித்திருப்பதாக அறிவித்து ஜெயலலிதா மத்திய அரசுக்கு மூன்றுநாள் தவணை விதித்தார்.ஜெயலலிதாவின் மிரட்டலை  மத்திய அரசு மிகப் பாரதூரமாகக் கருதியது. மத்திய அரசை மாநில அரசு மிரட்டிப் பணியவைக்கும் முன் மாதிரிக்கு இடம்கொடுக்க விரும்பாத மத்திய அரசு, ஏழு கைதிகளின் விடுதலையை எதிர்த்து மனுத்தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதா ஆற அமர்ந்து யோசிப்பதற்காக  இரண்டுவார காலஅவகாசம் கொடுத்த நீதிமன்றம் பதிலளிக்கும்படி
கேட்டுவிட்டது.
1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா, ராஜிவ்காந்தியுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டார். ராஜிவ்காந்தி யின்  படுகொலை எதிர்பாராத விதமாக ஜெயலலிதாவுக்கு பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது.ராஜீவின் படுகொலைதான் தன்னை முதல்வராக்கியதென்பதைக் காலப்போக்கில் மறந்துவிட்டார் ஜெயலலிதா. 23 வருடங்களின் பின்னர் ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலை தமிழக அரசியலில் இன்னொரு புயலை உருவாக்கப் போகிறது.ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிப்பதற்கு சிறப்பு புலனாய்வுக்குழு நியமிக்கப் பட்டது. குற்றவாளிகளை இனம் காண்பதற்கு தடய அறிவியல் நிபுணர் கார்த்திகேயன்  தலைமையிலான குழு இரவு பகலாக உழைத்தது. கார்த்திகேயனின் புலன் விசாரனை தான்  தற்கொலைத்தாக்குதல் என்பதை உறுதிசெய்தது.

இந்தியாவின் முன்னாள்  பிரதமர்இந்தியாவின் முன்னாள்  பிரதமரின் மகன், முன்னாள்  பிரதமரின் பேரன்,  இத்தனை சிறப்புகள் மிக்க ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்பதே இந்திய மக்களின் ஒரே குறிக்கோளாக இருந்தது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 41 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப் பட்டனர். பிரபாகரன், பொட்டம்மான், அகிலா உட்பட 26பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்.ராஜீவ் காந்தியைக் கொலை செய்த சூத்திரதாரியாக இந்தியாவால் தேடப்பட்ட சிவராசன், சுபா உட்பட ஐவர் தற்கொலை செய்தனர். மேலும் ஒன்பதுபேர்  மரணமானார்கள். 12 பேர் இறந்த குற்றவாளிகளாக  அறிவிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட 26பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
ஜெயின் கமிஷன் மூலம் விசாரணை நடத்தப்பட்டது. 1,044 சாட்சிகள், 1,477 ஆவணங்கள், 10 ஆயிரம் பக்கங்களில் அறிக்கை வெளியிடப்பட்டது. 1997ஓகஸ்ட் 14ஆம் திகதி 26பேரும் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப் பட்டது. மரண தண்டனைக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்டது.
1998ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி நளினி,சாந்தன், பேரறிவாளன்,முருகன் ஆகிய நால்வருக்கும் மரணதண்டனை விதிக்கப் பட்டது. ரொபேட்பயஸ் , ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு ஏனைய 19பேரும் விடுதலை செய்யப் பட்டனர்.
நளினி,சாந்தன், பேரறிவாளன்,முருகன் ஆகிய நால்வரும் ஜனாதிபதியிடம் கருணை மனு சமர்ப்பித்தனர். அன்றைய  ஜனாதிபதியான பிரதீபா பட்டேல் இவர்களின் கருணை மனுவை நிராகரித்தார். நால்வருக்கும் தூக்கு உறுதி என்ற நேரத்தில் ராம் ஜெத்மலானி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை மனு சமர்ப்பிக்கப்பட்டது.
2002ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக  இருந்தபோது நளினியின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கருணை மனு நிராகரிப்பதற்கு நீண்டகாலம்  எடுத்தது தவறு என்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதாசிவம்  வரலாற்றுப்புகழ்பெற்ற தீர்ப்பை வழங்கினார். மூவரின் தூக்கையும் இரத்துச் செய்த  நீதிபதி தமிழக அரசு விரும்பினால் அவர்களை  விடுதலை செய்யலாம் என்றார்


நீதிமன்றத் தீர்ப்பைக் கேள்விப்பட்ட தமிழர்கள் இன்னொரு சுதந்திர  தினத்தைக் கொண்டாடினார்கள். காங்கிரஸ் கட்சியைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் தமது உறவினர்  விடுதலை செய்யப்பட்டதைப் போன்றே உணர்ந்தார்கள். ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபோது துடித்துப்போன தமிழகம் ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை பட்டாசு கொளுத்தி இனிப்புப் பரிமாறிக் கொண்டாடியது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்தழிக்கப்பட்டபோதும், நோயுற்றிருக்கும்  தகப்பனைப் பார்ப்பதற்கு நளினியை அனுமதித்தால் சட்டம் நீதி  அச்சுறுத்தப்படும் என தமிழக அரசு கூறியபோதும் அரசை வசைபாடியவர்கள் இன்று போற்றிப் புகழ் கிறார்கள்.
ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன், நீதிபதி கேடி தோமஸ், நீதிபதி குத்வரா ஆகியோரின் தீர்ப்பு எல்லாவற்றையும் தாண்டி  வந்த ராஜீவ் கொலை வழக்கில் அவ்வவ்போது பல சந்தேகங்கள் தோன்றின. இவர்கள் அனைவரும் நிரபராதிகள் என்பதை வெளிப்படுத்தும் பல புத்தகங்கள் வெளிவந்தன.  விசாரணையின் போது நடைபெற்ற சில தில்லு முல்லுகளை சில அதிகாரிகள் பின்னாளில் வெளியிட்டனர். பேரறிவாளரின் வாக்கு மூலத்தை திருத்தி எழுதியதாக ஓய்வுபெற்ற சி.ப.ஐ. அதிகாரி மனச்சாட்சியைத் திறந்து  அண்மையில் ஒப்புதல் வாக்குமூலமளித்தார்.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர் விசாரிக்கப்படவில்லை. சிலரிடம் வாக்கு மூலம் பெறப்படவில்லை. சந்திரசாமி போன் றோர் மீதான சந்தேகம் தீர்க்கப்படவில்லை. பொதுவாக எழும் இக்கேள்விகளுக்கான பதிலை  எந்தவொரு விசாரணை அதிகாரியும் கொடுக்க வில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் தமிழக மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகத் தன் பக்கம் திருப்பயுள்ளார் ஜெயலலிதா. பலம் இல்லாத கூட்டணியின் மூலம் நாப்பதும் நமக்கே என்ற கோஷம் நிஜமாகுமா என்ற சந்தேகம் எழுந்தது. அந்தச் சந்தேகத்தை ஜெயலலிதா தீர்த்து வைத்துள்ளார்.

ஜெயலலிதாவின் அதிரடியினால்  தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் கதி கலங்கிப் போயுள்ளனர். விஜயகாந்துடனும், கருணாநிதியுடனும் இணைந்து போட்டியிடலாம் என்று கடைசிவரை நம்பக் கொண்டிருந்த காங்கிரஸின் நிலை பரிதாபமாக உள்ளது. ஜெயலலிதாவின்  முடிவுக்கு எதிராக மத்திய அரசு இடைக்காலத்தடை விதித்ததனால் காங்கிரஸ் கட்சியுடன் இணையும் தனது முயற்சியைக் கைவிடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் விஜயகாந்த்.காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலினின் படிவாதத்துக்கு மறுப்புச் சொல்ல  முடியாத நிலை யில் அனுசரித்துப் போகிறார் கருணாநிதி. காங்கிரஸைத் தாக்காது  மழுப்பலாகப் பேசி வந்த கருணாநிதி அடங்கி ஒடுங்கவேண்டிய நிலை உள்ளது.மோடி அலை மூலம் தமிழ் நாட்டில் ஊன்றிக் கால்பதிக்கலாம் என்ற கனவில் உள்ள  பாரதீய ஜனதாக் கட்சியின் பாடு திண்டாட்டமாக உள்ளது. ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் விடுதலை என்ற ஒன்றைச் சொல்லின் வீரியத்தின்முன் மோடி அலை சிதைந்து போய்விட்டது.


முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின் உயிரைக் காப்பாற்ற அல்லும் பகலும் போராடிய வைகோவின் நிலை பரிதாபமாக உள்ளது.  கைதிகளின் விடுதலைக்கு ஜெயலலிதா உரிமை கோருவதனால் வைகோவை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. திராவிட முன்னேற்றக்கழகத்தில் கருணாநிதிக்கு அடுத்த தலைவராக இருந்த போது ஓரம்கட்டப்பட்டார். தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலின் கடைசி நிலைக்குச் சென்றபின் ஜெயலலிதாவுடனும், கருணாநிதியுடனும்  மாறிமாறி கைகோத்தார்.ஏளனமும் அவமரியாதையும் வாட்டியதால் கூட்டணியிலிருந்து விலகினார்.பாரதீய ஜனதாக்கட்சியுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளார். அரசியலில் பல சித்து விளையாட்டுகளைச் செய்த சுப்ரமணிய சுவாமி தனது கட்சியுடன்  பாரதீய ஜனதாக் கட்சியில் சேர்ந்துள்ளார். வைகோவின் கொள் கையும், சுப்பரமணிய சுவாமியின் கொள்கையும் எதிரும் புதிருமானவை. வைகோவிடம் காணப்படும் தமிழ் உணர்வு  சுப்பரமணிய சுவாமியிடம் இல்லை. கீரியும் பாம்பும் ஒரே கட்சியில் இணைந்துள்ளன.

தூக்குத் தண்டனைக் கைதிகளை விடு தலை செய்யவேண்டும் என்று தமிழகம் எங்கும் போராட்டம் நடைபெற்றது. இலங்கைத் தமிழர்களுக்கு  நீதி கிடைக்கவேண்டும் என்று தமிழகம் எங்கும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. காங்கிரஸ் கட்சி யைத் தவிர சகல கட்சிகளும் இப் போராட்டத்தை முன்னெடுத்தன. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் இப்போராட்டங்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
 செங்கொடியின் தியாகம் அனைவரையும் கதிகலங்கவைத்தது. மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும்; மூவரும் விடுதலை செய்யப்படவேண்டும்  என்று தன் உயிரைத் தியாகம் செய்தார் செங்கொடி. மூன்று உயிர் களைக் காப்பாற்றுவதற்காக  தன் உடலைக் கருக்கி விழிப்பை ஏற்படுத்தினார். செங்கொடி யின் தியாகம் வீண்போகவில்லை. செங்கொடி யின் ஆசை நிறைவேறும் என்ற வாலியின் வாக்கு பலித்தது.
ராஜீவ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராகுல்,மன்மோகன் ஆகியோர் கடும் தொனியில் குரல்கொடுத்துள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் காங்கிரஸ் அந்நியப்பட்டுப் போயுள்ளது.

ஜெயலலிதா, வைகோ, கருணாநிதி ஆகிய மூவரும் ஏழுபேரின் விடுதலைக்காக ஒருமித்து குரல் கொடுத்துள்ளனர். ஏழு பேரின் விடுதலை காங்கிரஸ் கட்சிக்கு கெளரவப் பரச்சினையாக மாறியுள்ளது. பழிக்குப் பழிவாங்கவேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.
முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரின்  மரண தண்டனையைக் குறைத்த நீதிமன்றம் தமிழக அரசு அவர்களை விடுதலை  செய்யலாம் என்று கூறியது. ஜெயலலிதா விரும்பினால் அவர்களை விடுதலை செய்யலாம் என்ற கருத்தே அனைவரிடமும் இருந்தது. மத்திய அரசு தலையிட்ட பின்னரே இதில் உள்ள சட்டப்பிரச்சினை வெளியே தெரிய ஆரம்பித்தது.
சிறைத்துறை ஆணையாளர், வேலூர் சிறை கண்காணிப்பாளர்  உட்பட ஆறு பேர் கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு நியமித்து   கருத்துக்கேட்கவேண்டும். அக்குழுவின் பரிந்துரையை  மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசு உள்துறை அமைச்சுடன் ஆலோசனை செய்து  முடிவை அறிவிக்கும். இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் தன்னிச்சையாக ஜெயலலிதா நடந்துள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது.
தமிழக அரசுக்கு நீதிமன்றம் இரண்டு வார அவகாசம் கொடுத்துள்ளது. தமிழக அரசின் பதிலிலேதான் ஏழுபேரின் எதிர்காலமும் தமிழ் மக்களின் உணர்வும் அடங்கியுள்ளது. மத்திய அரசுக்கு செக் வைத்து வீழ்த்திய ஜெயலலிதாவுக்கு செக்வைக்கும் சந்தர்ப்பத்துக்காக காத்திருக்கிறது மத்திய அரசு

வர்மா
 சுடர் ஒளி 13/02/14 

Sunday, February 23, 2014

ஒளி அரசி


இல்லத்தரசியின் தோழியான ஒளி அரசியின் மாசி மாத  இதழ் காதலர் தின ஸ்பெஷல் என்ற அட்டைப்பட வாசகத்துடன் வெளிவந்துள்ளது. நல்லதொரு குடும்பம் என்ற இலக்கை இல்லத்தரசிகளின் ஆதரவுடன்தான் அடையமுடியும். இல்லறத்தை இனிதாக்கும் பெண் அர்ப் பணிப்புடன் செயற்படும்போது  நல்ல தொரு குடும்பம்  என்ற இலக்கை அடையலாம் என்ற ஆசிரியர் தலையங்கம் பெண்களுக்குப் பெருமை சேர்க்கிறது.

நட்சத்திர இல்லத்தரசியாக ஜொலிக்கிறார் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபனி வரதலிங்கம். இம்மாத முஸ்லிம் மங்கையாக சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி அதிபர் ஹாஜியானி ஹபீறா சலிம் திகழ்கிறார்.
குடும்பத்தின் குலவிளக்கு பெண், ரொமான்ஸ் இரகசியங்கள், உள்ளத்தை உருக்கும் உண்மைச்சம் பவம் வளர்இளம் பராயத்தைக் கடந்த பெண்களுக்கான மருத்துவக் கவனிப்புப் பற்றிய ஆலோசனையை டாக்டர் எஸ். அருள் ராமலிங்கம் வழங்கியுள்ளார். உளத்தூய்மை அழகை வெளிப்படுத்தும், அசாதாரண வெற்றியின் பின்னணிகள் பற்றி வெற்றியாளர் வாபன் ஷர்மா வின் அனுபவம், பெண்கல்வியின் முக்கியத்துவம், வீட்டுப் பராமரிப்பைச் சீராக்கும் வழிகள்,  விலை கொடுத்து வாங்கும் நோய்கள் போன்ற ஆக்கபூர்வமான கட்டுரைகள் இந்த இதழை அலங்கரிக்கின்றன.

நல்லதொரு குடும்பம் கட்டுரை போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை இல்லத்தரசியின் சுயதொழில் வழி காட்டல், சமையல் குறிப்பு, பாரதீ குறும்பட விமர்சனம், காலத்தால் அழியாத தெய்வீகக்காதல், அம்காபதி அமராவதி காதல், பொதிகை மணம்,  மனைவி தேடிக் கொடுத்த காதலி, தொடர்கதை,  விளையாட்டு, ஈ.மெயிலைக் கண்டு தமிழின் விவரம் என்பனவும் ஒளி அரசிக்கு சிறப்புச் சேர்க்கிறது.
பெப்ரவரி மாதம் பிறந்த சிறுவரின் அழகிய வண்ணப்படம், புதுமணத்தம்பதிகளின் வாழ்த்தும் மணக்கோலப் படங்கள் என்பவற்றை இலவசமாகப் பிரசுரிப்பதன்  மூலம் ஒளி அரசி பெருமைப்படுகிறாள். சிறுவர்களுக்கான கணித, புதிர்ப்போட்டிகள் என்பனவற்றுடன் சமய அறிவு விருத்திக்கான பரிசுப் போட்டிகளும் ஒளி அரசியில் உள்ளன.
ஊர்மிளா
 சுடர் ஒளி 16/02/14



Saturday, February 22, 2014

மெக்சிக்கோ1970

மெக்ஸிக்கோவில் 1970ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இத்தாலியை வீழ்த்தி பிரேஸில் சம்பியனானது. ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி முதன் முதலாக வட அமெரிக்க நாட்டில் நடைபெற்றது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெறுவதற்காக 75 நாடுகள் போட்டியிட்டன. 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் ஆபிரிக்கக் கண்டத்தில் இருந்து மொராக்கோ தகுதி பெற்றது. ஆர்ஜென்ரீனா, பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல் ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெறவில்லை.
ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து மொராக்கோ, ஐரோப்பாவிலிருந்து பெல்ஜியம், பல்கேரியா, செக்கஸ்லோவாகியா, இங்கிலாந்து, ஜேர்மன், இஸ்ரேல், இத்தாலி, ரொமானியா, சோவியத் யூனியன், சுவீடன், வட மத்திய அமெரிக்காவிலிருந்து எல்சல்வடோர் மெக்ஸிக்கோ தென் அமெரிக்காவிலிருந்து பிரேஸில், பெரு, உருகுவே ஆகியன உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.

16 நாடுகளும் நான்கு குழக்களாகப் பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிலும் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. ஒவ்வொரு குழுவிலும் அதிக புள்ளிகளைப் பெற்ற தலா இரண்டு நாடுகள் காலிறுதிக்குத் தெரிவாகின.பிரேஸில் பெரு மேற்கு ஜேர்மன், இங்கிலாந்து இத்தாலி, மெக்ஸிக்கோ உருகுவே, சோவியத் ரஷ்யா ஆகியன காலிறுதியில் விளையாடின. காலிறுதியில் வெற்றி பெற்ற பிரேஸில் இத்தாலி, உருகுவே, மேற்கு ஜேர்மனி ஆகியன அரையிறுதியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. உருகுவேக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிரேஸில் ஜேர்மனுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இத்தாலி ஆகியன இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன. அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்த மேற்கு ஜேர்மன், உருகுவே ஆகியவற்றுக்கிடையிலான போட்டியில் 10 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஜேர்மன் மூன்றாவது இடத்தையும் உருகுவே நான்காவது இடத்தையும் பிடித்தன.
இங்கிலாந்தில் நடைபெற்ற எட்டாவது உலகக் கிண்ணஉதைபந்தாட்ட போட்டியில் இறுதிவரை முன்னேறி தோல்வி அடைந்த மேற்கு ஜேர்மனி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 1958, 1962ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் சம்பியனான பிரேஸில் சம்பியனான கனவுடன் இறுதிப் போட்டியில் இத்தாலியை எதிர்த்த விளையாடியது பரபரப்பான இறுதிப் போட்டியில் 1 0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி சம்பியனானது பிரேஸில். இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இத்தாலி இரண்டாமிடத்தைப் பிடித்தது.

பிரேஸில் 19 கோல்களும் மேற்கு ஜேர்மனி 17 கோல்களும் இத்தாலி 10 கோல்களும் அடித்தன. மேற்கு ஜேர்மனியை சேர்ந்த கிரேட் முல்லர் 10 கோல்கள் அடித்தார். ஜய்சின்ஹோ (பிரேஸில்) ஏழு கோல்கள் அடித்தார்.
உருகுவேக்கு எதிராக ஆறு தடவை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. ஜேர்மனி வீரர் கிரேட் முல்லருக்கு கேடன் ஷý வழங்கப்பட்டது. கிரேட் முல்லர் (மேற்கு ஜேர்மனி) ஜய்சின்ஹோ (பிரேஸில்) கியுபிலஸ் பெரு அணி வீரர்கள் கோல்டன் ஷýவுக்காக பரிந்துரை செய்யப்பட்டனர்.
பெருநாட்டு வீரர் கியுபிலஸ் சிறந்த இளம் வீரராகத் தெரிவானார். 1958ஆம் ஆண்டு சிறந்த இளம் வீரருக்கான விருது வழங்கப்பட்டது. 1958ஆம் ஆண்டு பீலே ( பிரேஸில், முதன் முதலில் சிறந்த இளம் வீரர் விருதைப் பெற்றார். 1962ஆம் ஆண்டு அல்பேட் (ஹங்கேரி, 1966 ஆம் õண்டு பெக்கன் பலூர் ( மே. ஜேர்மனி) ஆகியோர் இளம் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் முதன் முதலாக கலரில் ஒளிபரப்பப்பட்டன. ஒரு வீரர் காயமடைந்தால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு வீரர் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு அணியிலிருந்து இரண்டு மாற்று வீரர்கள் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. இரண்டு அணியும் சம புள்ளி பெற்றால் கோல்களின் அடிப்படையில் சராசரி புள்ளி கணக்கிட்டு அணிகள் தரப்படுத்தப்பட்ன.

பிரேஸில் வீரர் பீலே கடைசியாக விளையாடிய உலகக் கிண்ணப போட்டி இங்கிலாந்து அணித் தலைவர் பொபி மோரே திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்து, பிரேஸில் ஆகிய நாடுகளுக்கிடையிலான போட்டியின் முதல் நாள் இரவு இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் முன்னால் ஆடிப் பாடிய பிரேஸில் ரசிகர்கள் இங்கிலாந்து வீரர்களின் தூக்கத்தைக் குழப்பினர். 32 போட்டிகளில் 95 கோல்கள் அடிக்கப்பட்டன. 1603975 ரசிகர்கள் மைதானங்களில் போட்டிகளைப் பார்வையிட்டனர். சிவப்பு அட்டையும் மஞ்சள் அட்டையும் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

ரமணி 
சுடர் ஒளி 16/02/14

Friday, February 21, 2014

ஈ பிரிவின் சிறந்த வீரர்கள்.

ஐரோப்பிய நாடுகளான சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், தென்னமெரிக்காவின் ஈக்குவடோர், வடஅமெரிக்காவின் ஹொண்டுராஸ் ஆகியன உலகக்கிண்ணப் போட்டியில்  குழு ஈ யில் உள்ளன. இந்த நான்கு அணிகளிலும் உள்ள சிறந்த வீரர்களை உள்ளடக்கிய அணி ஒன்று தெரிவு செய்ய்பட்டுள்ளது.

கோல்கீப்பர், மூன்று பின்கள வீரர்கள், ஒரு மத்திய களவீரர், ஒரு முன்கள வீரர் அடங்கிய எட்டு பிரான்ஸ் வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். இரண்டு சுவிஸ் வீரர்களும் ஒரு ஈக்குவடோர்  வீரரும் அணியில் உள்ளனர்.நான்கு பிரான்ஸ் வீரர்களும்,சுவிஸ்வீரர் ஒருவரும் மேதிலக வீரர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்.

கோல் கீப்பர் ஹீகோ லியோரிஸ் (பிரான்ஸ்), பின்கள வீரர்கள்  லிஸ்செஸ்னர் (சுவிஸ்) ,அடில்ரமி,  (பிரான்ஸ்)  கெல் சிலிஸி  (பிரான்ஸ்) மத்தியகள வீரர்கள் அன்ரனிமோ வலென்சியா (ஈக்குவடோர்)  கோகான் இன்ல (சுவிஸ்) , பலசிமதுலி (பிரான்ஸ்),சமீர் நஸ்ரி (பிரான்ஸ்), பராங்ரிபெரி (பிரான்ஸ்) , முன்கள வீரர் கரிம் பொன்யஸமா (பிரான்ஸ்) 
மேலதிக வீரர்கள் ஸ் ரீவ் மன்டன்டா (பிரான்ஸ்) பகரிசக்னா (பிரான்ஸ்), ஸிகுரில்(சுவிஸ்) பல்பனியா (பிரான்ஸ்)
யஹாண்டூராஸ் நாட்டு வீரர்கள் யாருமே இந்த அணியில் இடம்படிக்க வில்லை. பரான்ஸ்,சுவிஸ். ஆகிய அணி களில் பலம்வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

சுவிஸை ஈக்குவடோரும் பிரான்ஸை யஹாண்டூராஸும் முதல் முதலில் உலகக்கிண்ணப் போட்டியில் சந்திக்க உள்ளன். பிரான்ஸும், சுவிட்ஸர்லாந்தும், 36 முறை சர்வதேசப் போட்டிகளில் சந்தித்துள்ளன. 2006ஆம் ஆண்டு  உலகக்கிண்ணப் போட்டியில் இரண்டு நாடுகளும் விளையாடியபோது சமநிலையில் முடிந்தது.
ஹொண்டூராஸும், ஈக்குவடோரும் 13 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய எட்டுப்போட்டிகள்  சமநிலையில் முடிந்தன. ஹொண்டூராஸும், சுவீஸும் 2010ஆம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் மோதி சமநிலையில்  முடிந்தது.  ஈக்குவடோருக்கு எதிராக விளையாடிய பிரான்ஸ் வெற்றிபெற்றது. 
ரமணி 
சுடர் ஒளி 16/02/14

Thursday, February 20, 2014

ஜிவநதி

வெப்பத்தால் பரிதவிக்கும் பூமியின் நிலை பற்றிய  க.செல்வனின்    ஓவியம், எழுத்தாளர்  வி. ஜீவகுமாரன், பாரதியாரும், மனைவியும் ஆகியோரின் அட்டைப்படம் ஆகியவற்றுடன் மாசிமாத  ஜீவநதி வெளிவந்துள்ளது. நேற்றைய மனிதப் புதை குழி, இன்றைய மனிதப் புதைகுழி , நாளைய மனிதப்  புதைகுழி என்ற தலைப்புடன் ஆசிரியர் தலையங்கம் நியாயத்துக்கான  குரலாகப் பதியப்பட்டுள்ளது.

தொடர் பாடலிலும், இலக்கியங்களிலும் தேய்வியம்பல் என்ற காலத்தின்  தேவையான கட்டுரையை பேராசிரியர் சபா.ஜெயராஜா தந்துள்ளார். ஊடகத்துறையில் உள்ளவர்கள் கண்டிப்பாக  படிக்கவேண்டிய கட்டுரை இது. 1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க் கவிதை என்ற தலைப்பில்  பேராசிரியை கலாநிதி அம்மன் கிளி முருகதாஸின் தொடர்கட்டுரை பாரதியார் கவிதைகளை புடம்போடுகிறது.
முருகபூபதியின் வீட்டுக்குள் சிறைப்பட்ட நாட்கள் உண்மையிலேயே சொல்லவேண்டிய கதைதான். ம.செல்வதாஸின்  திரைப்பட பாடலாசிரியர்கள் தொடரில் புதுமைப்பித்தன், சுரதா, மேத்தா ஆகியோரின் பாடல்களை தந்துள்ளார்.

விவாத மேடையில் கல்வித்திணைக்கள பிரசுரங்களில் உள்ள  கடந்தகால விவாதங்களுக்கு இ.சு.முரளிதரன் பதிலளித்துள்ளார். கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் உள்ள சில தகவல் பிழைகளைச் சுட்டிகாட்டி அவற்றைப் பரிசீலனை செய்ய வேண்டும் என சாரல்நாடன் வலியுறுத்துகிறார்.

பன்மைத்துவம் பற்றிய புரிதலை முதல் முதலாகத் தருகின்ற கவனிக்கப்படவேண்டிய மூன்று புத்தகங்கள் பற்றி கெக்கிராவ ஸஹானா தனது எண்ணக்கருத்தை வெளியிட்டுள்ளார். எம்.சி.ரஸ்மினின் சமூக வானொலி, போர்க்கால சிங்கள இலக்கியங்கள் ஒரு பன்மைத்துவ ஆய்வு (1983-2007) ஆகிய இரண்டு  நூல்கள் பற்றியும் மேமன் கவியின் மொழி வேலி கடந்து நவீனசிங்கள இலக்கியங்கள் பற்றிய ஒரு பார்வை எனும் நூல் பற்றியும் தன்மதிப்பைத் தந்துள்ளார். எழுத்தாளர் பொலிகையூர் சு.க.சிந்துதாசனின் கடலின் கடைசி அலை எனும் கதை நூலின் விமர்சனத்தை அ.பெளநந்தி தந்துள்ளார்.

எழுத்தாளர் வி.ஜீவகுமாரனின் நேர் காணல் ஜீவநதிக்குச் சிறப்புச் சேர்க்கிறது. ஜீவநதியின் ஆசிரியர்  பரணியின் கேள்விகளும் ஜீவகுமாரனின் பதில்களும் சிந்திக்கத் தூண்டுபவையாக உள்ளன. பல விருதுகளையும் பெருமைகளையும் பெற்ற ஜீவகுமாரன் தன்னடக்கத்துடன் பதிலளித்துள்ளார்.

க.சட்டநாதன், செ.செல்வராஜா, தெணியான்,  ஆகியோரின் சிறுகதைகளும், சு.க.சிந்துதாசன், ஏ.பாரிஸ், நாச்சியாதீவு பர்வீன் கா.தனபாலன், த.ஜெயசீலன், எஸ்.தேனுஷா ஆகியோரின் கவிதைகளும் இம்மாத ஜீவநதியை அலங்கரிக்கின்றன

ஊர்மிளா
 சுடர் ஒளி 16/02/14


Wednesday, February 19, 2014

உலகக்கிண்ணம் 2014

சுவிட்ஸர்லாந்து 
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்ற சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், ஈக்குவடோர், ஹொண்டூராஸ் ஆகியன குழு ஈயில் இடம்பிடித்துள்ளன. சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் ஐரோப்பய கண்டத்திலிருந்து தகுதி பெற்றுள்ளன. தரவரிசையில் சுவிட்ஸர்லாந்து எட்டாவது இடத்திலும், பிரான்ஸ் 20ஆவது இடத்திலும் உள்ளன.
         
                                            சுவிட்ஸர்லாந்து

சுவிட்ஸர்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்லோவேனியா, நோர்வே, அல்பேனியா, சைப்பிரஸ் ஆகியன,  குழு ஈ யில் தகுதி காண்போட்டியில் விளையாடின. சுவிட்ஸர்லாந்து ஏழு போட்டிகளில் வெற்றிபெற்று மூன்று போட்டிகளை  சமப்படுத்தியது. சுவிட்ஸர்லாந்து 17 கோல்கள் அடித்தது. எதிரணிகள் ஆறு கோல்கள் அடித்தன. ஏழு போட்டிகளில் சுவிட்ஸர்லாந்துக்கு எதிராக விளையாடிய அணிகள் கோல் அடிக்க வில்லை. 24 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து   உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்ற சுவிட்ஸர்லாந்துக்கு எதிராக 19 மஞ்சள் அட்டைகள் காண்பிக்கப்பட்டன.

பிரபல்யமான முன்களவீரரான ஒட்மர் ஹிற்ஸிபில்ட் சுவிஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். ஜேர்மன் கழகத்தின் பயிற்சியாளராக இருந்தபோது தனது அணியை இரண்டு முறை ஐரோப்பய சம்பியனாக்கினார். 2008ஆம் ஆண்டு சுவிஸ் அணியின் பயிற்சியாளராகப் பொறுப் பேற்றார்.

துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த கோகான் இன்லெர் அணித் தலைவராக உள்ளார். 29 வயதான இவர், மிகச் சிறந்த மத்தியகள வீரராவார். ஆறு அடி நான்கு அங்குல  உயரமான டீகோபெனக் லியோ கோல் கீப்பராக இருப்பது சுவிஸ் அணிக்குச் சாதகமானது.
பபியன் ஐகரி மூன்று கோல்களும், மரியோ கவரனோவிச், எக்ஸேன்டன் ஐகிரி ஆகியோர் தலா இரண்டு கோல்களும் அடித்துள்ளனர். பொஸ்னியா, கொசாவோ, நாட்டைச் சேர்ந்த பலர் சுவிஸ் அணியில் உள்ளனர்.

1934ஆம் ஆண்டு முதல் முதல் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடிய சுவிஸ், 10ஆவது தடவையாக தகுதிபெற்றுள்ளது. 1934/38/54ஆம் ஆண்டு களில் கால் இறுதிவரை முன்னேறியது. 2009ஆம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட போட்டியில் சம்பியன்  அதே ஆண்டு பீச்சொக்கரில் இறுதிப்போட்டிவரை முன்னேறி தோல்வியடைந்தது. அலெக் சாண்டர் பெரி, ஹரீபன், சபு, ஜொகான் வொகெல், ஹகன், யகிள் ஆகியோர் சுவிஸ்  அணியின் முன்னாள் வீரர்களாவர்.

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் குழு எச்சில் ஸ்பெய்ன், சிலி, ஹொண்டூராஸ் ஆகியவற்றுடன் மோதியது. மூன்று போட்டிகளில் விளையாடிய சுவிஸ், ஒரு வெற்றி ஒரு தோல்வி ஒரு போட்டியை சமநிலையில் முடித்து நான்காம் இடம்பிடித்தது. சுவிஸின் அந்த ஒரேயயாரு வெற்றி சரித்திரப் பிரசித்திப்பெற்ற  வெற்றியாக அமைந்தது. உலக சம்பியனான ஸ்பெய்னை 1-0 கோல் கணக்கில் வீழ்த்தியது.


                                                              பிரான்ஸ்
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்ததனால் பிளே ஓவ் போட்டியில் விளையாடி  உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்குத்  தகுதி பெற்றது பிரான்ஸ்.
ஸ்பெய்ன், பிரான்ஸ், பின்லாந்து ஜோர்ஜியா, பெரலாஸ் ஆகியன குழு ஐயின் தகுதிபெற போட்டியிட்டன. ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளைச் சமப்படுத்தி  ஒரு போட்டியில் தோல்வியடைந்த பிரான்ஸ், 17 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. பிரான்ஸ் 15 கோல்கள் அடித்தது. எதிராக ஆறு கோல்கள் அடிக்கப்பட்டன.

பிளேஓவ் போட்டியில் உக்ரைனும், பிரான்ஸும் சந்தித்தன. முதலாவது போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த உக்ரைன் வெற்றிபெற்றது. பிரான்ஸ் கோல் அடிக்கவில்லை. முதல்போட்டி முடிவு பிரான்ஸுக்கு சிக்கலை ஏற்படுத்தியது.  இரண்டாவது போட்டியில் பிரான்ஸ் மூன்று கோல்கள்  அடித்தது. உக்ரைன் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இரண்டு நாடுகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றாலும் அதிக கோல்கள் அடித்த பிரான்ஸ் பிரேஸிலுக்குச் செல்லத் தகுதிபெற்றது. 16 மஞ்சள் அட்டைகளும் ஒரு சிவப்பு அட்டையும் பிரான்ஸுக்கு எதிராகக் காட்டப்பட்டன.

1998ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தைப் பெற்ற பிரான்ஸ் அணித்தலைவர் டிடிர்டெஸ் சாம்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். ஹுகோலியோரில் தலைவராகவுள்ளார். பிராங்ரிபெரி நான்கு கோல்களும், ஒலிவர் இரண்டு கோல்களும் அடித்துள்ளனர். பிராங்ரிபெரியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. மேஸி, ரொனால்டோ, ஆகியோருடன் பலொன் டி ஓ விருதுருக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.எரினல் கடி, யயாஹான், கபே, ரெமி, சமிர் நஸ்ரி (மான் சிஸ் சிற்றி) பற்றி ஈவரா (மான்சிஸ்ர் யுனைட்டட்) மமடு ஐகோ (லிவர்பூல்) ஆகிய வீரர்கள் கைகொடுப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
1998ஆம் ஆண்டு ஒலிம்பிக்  சம்பயன் 2001, 2003ஆம் ஆண்டுகளில் கொன் படறேசன் சம்பியன், 2007ஆம் ஆண்டு 17 வயதுக்குப்பட்ட  போட்டியிலும், 2005ஆம் ஆண்டு பீச் சொக்கரினும் சம்பியனானது. ஐஸ்ட் பொஸ்ரெளி, மைக்கல்  பிளட்டின், ஸினெடிஸினன் ஆகியோர் பரான்ஸ் அணியின் முன்னாள் வீரர்களாவர். 

தென்னாபிரிக்காவில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் ஏ பிரிவில் மெக்ஸிகோ, உருகுவே, தென்னாபிரிக்கா ஆகியவற்றுடன் விளையாடியது. ஒரு போட்டியை சமப்படுத்தி, இரண்டு போட்டிகளில் தோல்வி கண்டது. கடந்த  உலகக் கிண்ணப் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் பெற்ற  தோல்வியிலிருந்து மீள வேண்டிய நிலையில் உள்ளது பிரான்ஸ்.
ரமணி 
சுடர் ஒளி 16/02/14

Monday, February 17, 2014

நந்தாப்புகழ் பெற்ற நடிகமணி வி.வி.வைரமுத்து -வி.என்.மதியழகன்


வெண்கலக்குரலால் ரசிகர்களின் மனதில்  வாழும் நடிகமணி வி.வி.வைரமுத்துவுக்கு  இலங்கையில்  சிலை வைக்கவேண்டும் என்கிறார் சிரேஷ்ட ஒலி,ஒளி பரப்பாளரான வி.என்.மதியழகன் இவர்,  தற்போது கனடாவில் உள்ள தொலைக் காட்சி நிறுவனம் ஒன்றில் ஆலோசகராகக் கடமையாற்றுகிறார்.
வைரமுத்துவைப் பற்றிப் பேசுகையில்,  தன்னை மறந்து உணர்ச்சி வசப்படுகிறார் வி.என்.மதியழகன். நந்தாப்பு புகழ்பெற்ற  நாயகன் வி.வி.வைரமுத்து என்ற புத்தகத்தை விரைவில் வெளியிட உத்தேசித்துள்ளார். இப் புத்தகம் முதலில் கனடாவில் வெளியிடப்படும். அதன்  பின்னர் இலங்கை,  ஐரோப்பிய நாடுகள் உட்பட தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும்  வெளியிடவேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் உள்ளது.அரிச்சந்திரா, அல்லி அர்ஜுனா, பக்தநந்தனார், பவளக்கொடி, அருணகிரிநாதர், பூதத்தம்பி, கண்டி அரசன் ஆகிய நாடகங்கள் மூலம் மங்காப் புகழ்பெற்றவர் நடிகமணி வி.வி.வைரமுத்து. இவர் நடித்த மயானகாண்டம் 3,000 தடவைக்கு மேலாகவும்,  பக்த நந்தனார் 1,000 தடவைக்கு மேலாகவும் மேடையேறியது.

 யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஒலிப்பதிவு நிலையத்தில் ஒருநாள் இரவு ஏழு மணிக்கு வி.வி.வைரமுத்துவின் மயானகாண்டம்  ஒலிபரப்பனார்கள். அதைக் கேட்க கூட்டம் கூடியது. முதியவர்கள் தலையாட்டி  ரசித்ததைப் பார்த்த அக்கடையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர், அதனை நிறுத்திவிட்டு அக் காலத்தில் பிரபலமான சினிமாப் பாடல்  ஒன்றை  அலறவிட்டார். சிறிது நேரம் நின்று பொறுமை இழந்தவர்கள் மெதுவாகக் கலையத்தொடங்கினார்கள். அந்தக் குறும்புக்கார ஊழியர் வை முத்துவின்  மயானகாண்டத்தை விட்ட இடத்தில் இருந்து ஒலிபரப்பனார். கலைந்த கூட்டம் கூடத்தொடங்கியது.
இரசிகர்கள் தம்மை மறந்திருந்த வேளையில்  அந்த ஊழியர், இரண்டு தடவைகள்  வைரமுத்துவின் பாடலை நிறுத்தி சினிமாப்பாட்டை ஒலிபரப்பினார். பொறுமை இழந்த ஒருவர் கடைக்குள்ளே சென்று, வைரமுத்துவின் பாட்டை போடு. இல்லையென்றால்  விடிய கடை இருக்காது என்று மிரட்டினார். அந்த மிரட்டல் கைகொடுத்ததனால் தடைப்படாது வைரமுத்துவின் மயானகாண்டம் ஒலிபரப்பானது.

கேள்வி: நடிகமணி வைரமுத்துக்கு சிலை வைக்கவேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது?

பதில்: நான் வாழும் கனடாவில் சுமார் 150 நாடுகளின் மக்கள்  உள்ளனர். பல மொழி, மதம், கலாசாரம், கலை, பண்பாடு உள்ள  நாடு  கனடா. கனடாவில் வாழ்பவர்கள் தம் தாய்நாட்டின் அறிஞர்கள், கலைஞர்கள்,  தலைவர்கள், சமூகத்தின் சாதனையாளர்கள் ஆகியோரை கனடா மக்களுக்கும், இளைய சமூகத்துக்கும்  அறிமுகப் படுத்துகிறார்கள். இல்ங்கையின் இரண்டு தேசியக் கலைஞர்கள் கவனிக்கப்படாமல் உள்ளனர். ஒருவர் நடிகமணி வி.வி.வைரமுத்து. மற்றையவர் லயஞான சிரோன்மணி தட்சிணாமூர்த்தி.
கனடாவில் மூன்றாம் வகை புதிய கலாசார விழிப்பொன்று ஏற்பட்டுள்ளது. இளம் சந்ததிக்கு தம் கலாசாரத்தை அறிமுகப்படுத்துகிறார்கள்.  அதன் பாதிப்புத்தான் இப்படி ஒரு சிந்தனையைத் தூண்டியது.

கே: வைரமுத்துவின் மீது  அபிமானம் ஏற்படக் காரணம் என்ன?

ப: அவரது குரலின் ஆளுமை. நவீனதொழில் நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படாத காலத்தில் தனது வெண்கலக் குரலில் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர். அவர் பால பண்டிதர். இந்தியாவில் நாடகம் கற்றவர். தனக்கென ஒரு பாணியை உருவாக்கியவர். காத்தான், வடமோடி, தென்மோடி, காமன் கூத்துகளுக்கு  ஒரு கட்டுக்கோப்பு உண்டு. திறமை உள்ளவர்கள் அதற்குள் நடித்து கைதட்டல் பெறலாம். சங்கரதாஸ் சுவாமிகளின் அடியொற்றிய இந்திய நாடகங்களை தனக்கென ஒரு பாணியில் அமைத்து நடித்தார். அது வைரமுத்துவின் பாணியாக பரிணமித்தது.

கே: வைரமுத்துவுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது?  

ப: அவருடைய மணிவிழா காங்கேசன்துறை ராஜேஸ்வரி தியேட்டரில் நடைபெற்றபோது அதை ஒலிப்பதிவு செய்தேன். அது ஒலிபரப்பானபின் தொடர்பு நெருக்கமானது. அதன்பின் வானொலியில்   நாடக மேடைப் பாடல்கள் ஒலிபரப்பானபோது நெருக்கம் அதிகமானது. அவர்  தனது  கைப்பட பல நாடக மேடைப் பாடல்களை எழுதித் தந்துள்ளார். அவற்றைப் பொக்கிஷமாகப்  பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

கே! வைரமுத்துவைப் பற்றிய தகவல்களை இளம் சமுதாயத்துக்கு எப்படி வெளிப்படுத்தப் போகிறீர்கள்?

 ப:! நந்தாப்பு புகழ்பெற்ற  நாயகன் வி.வி. வைரமுத்து என்ற புத்தகம் ஒன்றை முதலில் வெளியிடப்போகிறேன்.சுமார் ஒரு வருடமாக இந்தப் புத்தகத்துக்காக  பல ஆய்வுகளை மேற் கொண்டேன். பேராசிரியர் எஸ்.தில்லைநாதன்,  குழந்தை ம.சண்முகலிங்கம், பேராசிரியர் சு.வித்தியானந்தன், பி.விக்னேஸ்வரன் ஆகியோரின் கட்டுரைகள் வைரமுத்துவின் கையெழுத்துப் பிரதிகள் என்பனவும் இப் புத்தகத்தில் இடம்பெறும். அடுத்ததாக அவரது வெண்கலச்சிலை ஒன்றை இலங்கையில் நிறுவவேண்டும். ஒரு குழுவாகச் செயற்பட்டு இதனைச் செய்ய வேண்டும்.



கேவைரமுத்துக்குரியமுக்கியத்துவம்இலங்கையில்கொடுக்கப்படவில்லை என நினைக்கிறீர்களா?

ப:புதிய சமுதாயத்துக்கு வைரமுத்து வைப்பற்றி அதிகம் தெரியாது. வைரமுத்து, தட்சணாமூர்த்தி,  டானியல். டொமினிக் ஜீவா போன்றவர்களின் வாழ்க்கையை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்த வேண்டும்.

கே: கனடாவில் வைரமுத்துவின் நாடகங்களை மேடையேற்ற முயற்சி எடுத்தீர்களா? 

ப:! அங்கு நடிகர்களை சேர்த்து ஒத்திகை பார்ப்பது சற்றுச் சிரமமானது. அங்கு வாழும் நாடகக் கலைஞர்கள்  ஒன்றிணைத்து நாடகங் களை  ஏற்பாடுசெய்ய விரும்புகிறேன். ஜேர்மனியில் அவரது   மகன் சாரங்கன் தனது பிள்ளைகளுடன் வசந்தகான சபா மூலம் நாடகங்களை மேடையேற்றுகிறார்.   கனடாவின் வானொலி,  தொலைக்காட்சிகளில் கலை கலாசார நிகழ்ச்சிகளின்போது நமது  மரபுவழிக்  கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறோம்.   நடமாடி ராஜரத்தினத்தின் மகள் பூங்கொடி ராஜரத்தினம் சில நிகழ்ச்சிகளை செய்கிறார்.  

கே: உங்கள் மனதில் அடிக்கடி தோன்றும் பழைய சம்பவங்கள் எவை?

ப: பல சம்பவங்கள் அடிக்கடி வந்து போகும். வைரமுத்து என்னை செல்லத் தம்பி என்று அழைப்பார். கே.எம். வாசகரை பெரிய தம்பி என்பார்.  திருமதி நவநீதகிருஷ்ணன் தம்பதிகளின் பேட்டியை ஒலிபரப்பு செய்தபின் தினகரனின் அன்றைய ஆசிரியர் ஆர்.சிவ குருநாதன் அதைப் பற்றி ஆசிரிய தலையங்கம் எழுதினார். கலை கலாசாரங்கள் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டியவை. இளைஞர்களும் அரசியல்வாதி களும்  சிந்தித்துச் செயற்பட வேண்டும் என்று குறிப்பட்டார்.

கே: வைரமுத்துவை கடைசியாக எப்போது சந்தித்தீர்கள்?

ப:!  சங்கீத கோவலன் நாடகத்தை ஒலிப் பதிவு செய்வதற்காக கொழும்புக்கு வந்தார். ஒலிப்பதிவுக்கு  முதல் நாள் மஹியங்கனையில் கம்உதாவ நிகழ்ச்சி நடைபெற்றது. ரூபவாஹினி ஒளிபரப்புக்காக  நான் மஹியங்கனைக்குச் செல்லவேண்டிய நிலை. தயாரிப்பாளர் சோம சுந்தரம், ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர்  ஒலிப்பதிவு செய்வார்கள் எனக் கூறினேன். நான் அவருக்கு ஒரு கடிதம் அனுப்பினேன். கடிதம் கிடைக்க முதல் கொழும்புக்கு வந்துவிட்டார். வீட்டுக்குப் போய் கடிதத்தைப் பார்க்கிறேன் என்றார். கடிதத்தைப் படிக்காமலே போய் விட்டார். இலங்கை ரூபவாஹினியில் ஒலிபரப்பான முதல் மரபு வழி நாடகம் அவருடையது.

கே: வைரமுத்துவின் உங்கள் கருத்துக்கு இலங்கையில் வரவேற்பு உள்ளதா?

ப ஆம், பலரும் வரவேற்றார்கள். ஊடகங்கள் அனைத்துக்கும்  முக்கியத்துவம் கொடுத்தன.  கலைகளை வளர்க்க வேண்டியது ஊடகங்களின் கடமை. எந்தையும் தாயும் ரசித்து மகிழ்ந்து இரசித்த  கலையை நாம் பாது காக்க வேண்டும். இலத்திரனியல் ஊடகங்கள் மண்வாசனைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அது மக்கள் மனதில் ஆழமாகப் பதியும். ஈழத்து மெல்லிசைப் பாடல்கள், பொப்பாடல்கள் என்பன அன்று வானொலியில் ஒலிபரப்பான போது  மக்களிடம் பெரிய வரவேற்பு இருந்தது. நமது கவிஞர், பாடகர், நமது இசை என்று நாம் பெருமைப்படவேண்டும்

ரவி
 சுடர் ஒளி 16/02/14 

கூட்டணிக்குழப்பத்தில் பா.ஜ.க


வட இந்தியா எங்கும் மோடி அலை வீசுவதனால் தென் இந்தியாவிலும் வலுவான கூட்டணி அமைக்கலாம் என்ற பாரதீய ஜனதாக்கட்சி யின் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது. திராவிடக்கட்சிகளுடனும், காங்கிரஸ் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று மேடை தோறும் முழுக்கமிட்ட விஜயகாந்தை வளைத்துப்போட்டால் தமிழகத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்ற  பாரதீய ஜனதாக்கட்சியின் கனவு தவிடு பொடியாகி விடும் போல் உள்ளது.

பாரதீய ஜனதாக்கட்சியுடன் விஜயகாந்த் கூட்டணி சேர வேண்டும் என்று முதலில் முயற்சி செய்தவர் தமிழருவி மணியன். காங்கிரஸ்,  திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் பரம எதிரியான இவர் தமிழகத்தில் இருந்து இரண்டு கட்சிகளையும் தூக்கி எறிய வேண்டும் என்று சபதமெடுத்தார். அவரின் முயற்சியினால் பாரதீய ஜனதாக்கட்சி மிகவும்  மகிழ்ச்சியடைந்தது. காங்கிரஸும், திராவிட முன்னேற்றக் கழகமும் கதிகலங்கின.

விஜயகாந்தை தமது கூட்டணியில் சேர்ப்பதற்கு திராவிட முன்னேற்றக்கழகமும், காங்கிரஸ் கட்சியும் தூதுக்கு மேல் தூது அனுப்பின. எதற்கும் அசையாது பொறுமையாக சகல கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்திய விஜயகாந்தின் பார்வை இப்போது காங்கிரஸின் பக்கம் சாய்ந்துள்ளது. விஜயகாந்தின் இந்த வியூகம் பாரதீய ஜனதாக்கட்சியை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காங்கிரஸையும், திராவிட முன்னேற்றக்கழகத்தையும்  அரசியலி இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும் என்று விஜயகாந்துக்கு தமிழருவி  மணியன் போதித்தார். அவரின் போதனையை புறம் தள்ளிய விஜயகாந்த் சோனியா விடம் கருணாநிதியிடமும் சரணடையும் வகையில்  வியூகம் அமைத்து வருகிறார்.

விஜயகாந்த், வைகோ, டாக்டர், ராமதாஸ் ஆகியோருடன் வலுவான கூட்டணி ஒன்றை அமைப்பதற்குரிய நடவடிக்கையை பாரதீய ஜனதாக்கட்சி முன்னேடுத்தது வைகோவும்,டாக்டர் ராமதாஸும் பாரதீய ஜனதாக்கட்சியுடன் இணைவார்கள். விஜயகாந்த்  விரைவில்  முடிவை அறிவிப்பார் என பாரதீய ஜனதாக்கட்சி நம்பியது. யாருடன் கூட்டணி என்பதை அறுதியிட்டுக் கூறாமல் தனது மதிப்பை உயர்த்தும் விஜயகாந்தின் போக்கு  புரியாமல் அரசியலில் தலைவர்கள் வெறுப்படையத் தொடங்கினர். கூட்டணி  சேர்வதும் சேராததும் விஜயகாந்தின் விருப்பம் என்ற ரீதியில் விஜயகாந்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.

மோடி தமிழகத்துக்கு வந்தபோது வைகோவையும்,டாக்டர் ராமதாஸையும் மேடையேற்ற வேண்டும் என்று பாரதீய ஜனதாக்கட்சி விரும்பியது.  அந்த விருப்பத்தை வைகோவும், டாக்டர் ராமதாஸும்  நிராகரித்துவிட்டனர். கூட்டணித்தொகுதி பேரம் முடித்த பின்பே மேடை ஏற வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக உள்ளனர்.  கருணாநிதியும், ஜெயலலிதாவும் கடைசி நேரத்தில்  காலைவாரியதால் சூடுபட்ட வைகோ கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சூன்பே கூட்டணித் தலைவர்களுடன்  மேடை ஏறுவேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.வைகோவின் சார்பில் மல்லை சத்யா உட்பட சிலர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.  வைகோ வாழ்த்துச செய்தியை வெளியிட்டார். மோடி தங்கியிருந்த ஹோட்டலுக்குச்  சென்ற வைகோ தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மோடியை வைகோ சந்தித்ததனால் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டுச்சேர முடியாத வைகோவுக்கு மோடியுடன் சேர்வதைத் தவிர வேறு தெரிவுஇல்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி சேரப் போகிறேன் என்று தெரியாமலேயே தனது கட்சி போட்டியிடும் தொகுதி களையும்  வேட்பாளர்களையும் அறிவித்து தேர்தலையே  கேலிக்கூத்தாக்கிய டாக்டர் ராமதாஸ் தான் கேட்கும் தொகுதிகள் ஒதுக்கபடவில்லை என்றால்  கூட்டணி இல்லை  என்று அறிவித்துள்ளார்.தமிழகத்தில் நாடாளுமன்ற, சட்டசபைத் தேர்தல்களின் போது வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய வைகோவையும், டாக்டர் ராமதாஸையும்  வருந்தி அழைத்து யாரும் கூட்ட ணியில் சேர்ப்பது இல்லை.அந்த இடத்தை விஜயகாந்த் பிடித்து விட்டார். விஜயகாந்தின் வளர்ச்சி இவர்கள் இருவருக்கும் பாதகமாக அமைந்துள்ளது. விஜயகாந்த் கேட்கும் தொகுதிகளைக் கொடுப்பதற்கு மத்திய, மாநில, கட்சிகள் தயாராக இருக்கின்றன. பேச்சாற்றல், செயலாற்றல் மிக்க தலைவர்கள் யாருமே விஜயகாந்தின் கட்சியில் இல்லை. மக்களைக் கட்டிப்போடும் வகையிலான  கவர்ச்சிகர மாகப் பேசும் சக்தி விஜயகாந்துக்கு இல்லை வாக்குகளை சிதறடிக்கும் சக்தி அவருக்குள்ளது.  அதன் காரணமாகத்தான் அவருடன் கூட்டணி சேர வேண்டும் என பலம் மிக்க கட்சிகள் விரும்புகின்றன

விஜயகாந்தும், டாக்டர் ராமதாஸும் பாரதீய ஜனதாக்கட்சியின் எல்லைக்கு வெளியே நின்று கண்ணாமூச்சி   விளையாடுவதனால் அவர்களை கைவிட வேண்டிய நிலைக்கு பாரதீய ஜனதாக்கட்சி தள்ளப்பட்டுள்ளது.தமிழகத்தில் பலமான கூட்டணி என எதிர் பார்க்கப்படடது. பாரதீய ஜனதாக்கட்சி பலவீனமடைந்துள்ளது.  பாரதீய ஜனதாக் கட்சியின் பலவீனம் ஜெயலலிதாவுக்கு தெம்ப ளித்துள்ளது. திராவிட முன்னேற்றக்கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் விஜயகாந்த் சேர்ந்தால் தமிழகத்தில் பாரதீய ஜனதாக்கட்சி மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடும் அபாயம் உண்டு.
வர்மா
 சுடர் ஒளி 16/02/13