Saturday, November 23, 2019

பண்டைய கால வரலாற்றைக் கூறும் ஓவியக்கலைவரலாற்று ஆதாரங்களை,  ஆவணங்களை வெளிக்கொணர்வதில் ஓவியம், முக்கிய பங்கு வகிக்கிறது. பண்டைக்கால வரலாற்றுப் பொக்கிஷங்கள் ஓவியமாக ஆங்காங்கே தமது இருப்பை வெளிப்படுத்துகின்றன. அஜந்தா,எல்லோரா போன்ற குகை ஓவியங்கள் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு ஓவியத்தின் மூலம் வரலாற்றின் காலத்தை நிர்ணயிக்க முடியும். எத்தனையாம் நூற்றாண்டில், எந்த மன்னரின் காலம் என்பதை ஓவியத்தின் வாயிலாக வரையறுத்துக் கூறும் சாதனங்கள் இப்போது உள்ளன.

நவீன தொழில்நுட்பங்கள் எவற்றினாலும் ஓவியத்தின் மாண்பு  குலையவில்லை. உன்னத வளர்ச்சியை நோக்கி ஓவியக்கலை முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஒவியம் பயிலும் மாணவர் தொகை அதிகரித்துள்ளது. ஓவியக் கண்காட்சிகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. 25 ஆயிரம், 30 ஆயிரம், 50 ஆயிரம் ரூபா கொடுத்து ஓவியங்களை வாங்கிச் செல்வதற்குப் பலர் ஆர்வமாக  இருக்கிறார்கள். நகரங்களில் வாழும்  வசதி படைத்தவர்கள் தமது பிள்ளைகளை ஓவியம் பயில  அனுப்புகிறார்கள். ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம்,தமிழ் ஆகிய பாடங்களில் எத்தனை புள்ளி எனக் கேட்பவர்கள் சித்திரம் படிக்கிறாயா எனக்கூடக் கேட்பதில்லை. ரி.பி. ஹண்ட் மெமோரியல் ஆர்ட் கலரியினால்  சாவகச்சேரியில் ஓவியம் படிக்கும் மாணவர்களின் தொகை அதிகரித்துள்ளது. 

சாவகச்சேரி றிபோக் கல்லூரியை மீள ஸ்தபித்ததில் பெரும் பங்கு வகித்த வணபிதா தோமஸ் பீற்றர் ஹண்ட்-டின் குடும்பத்தினால்  சாவகச்சேரியில்  ரி.பி. ஹண்ட் மெமோரியல் ஆர்ட் கலரி உருவாக்கப்பட்டடு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி சிக்காக்கோ பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபர் ஹேரெத்தினால் திறந்து வைக்கப்பட்டது. ஆண்டு ஒன்று முதல் ஆண்டு ஐந்து வகுப்பில் பயிலும் 90 மாணவர்கள், ஆண்டு ஆறு முதல் ஆண்டு ஒன்பது வரை பயிலும் 15 மாணவர்கள், க.பொ.த [சா/த], க.பொ.த [உ/த]] பயிலும் 15 மாணவர்கள் ரி.பி. ஹண்ட் மெமோரியல் ஆர்ட் கலரியில் படிக்கிறார்கள். தென்மராட்சி மாணவர்கள் மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தில் இருந்தும் மாணவர்கள் அங்கு சென்று படிக்கிறார்கள்.

தோமஸ் பீற்றர் ஹண்ட்-டின் மகன், தோமஸ் ஹண்ட். நில அளவையாளராக அரசாங்கத்தில்  பணி புரிந்தவர். பேராதனை பலகலைக் கழகத்தை நிர்மாணித்த  குழுவில் இவரும் ஒருவர்.  இவருடைய மகள் திருமதி அழகரத்தினம் யோகேஸ்வரியின்  எண்ணக்கருவில் உருவானது ரி.பி. ஹண்ட் மெமோரியல் ஆர்ட் கலரி. உடுவில் மகளிர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தான் வரைந்த ரோஸ் நிற வோட்டர் கலர்  சித்திரம் ஒன்றுதான் அவரது மனதில் இன்றைக்கும் இருக்கிறது. இலண்டனில் உயர்கல்வி, தாதியர் பயிற்சியை அடுத்து நாடு திரும்பியவர், டாக்டர் அழகரத்தினத்தைத் திருமணம் செய்தார். அவர் அக்கரப்பத்தனையில் மாவட்ட வைத்திய அதிகாரியாகப் பணியாற்றினார்.

இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக யோகமணியின் குடும்பம் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தது. மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி, பேரபிள்ளைகளைக் காண்டபின்னரும் யோகமணிக்கு   ஓவியத்தின்  மீதிருந்த ஆர்வம் குறையவில்லை.70 வயதில் தான் வசிக்கும் நகரத்தில் உள்ள ஓவியக்கல்லூரியில் சேர்ந்து ஓவியம் பயின்றார். அங்கு நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் யோகமணியின் 10 ஓவியங்கள் விலைப்பட்டன. அந்தப் பணத்தை தான் பயின்ற உடுவில்  மகளிர் கல்லூரிக்கு அனுப்பினார். யோகமணியின் விருப்பப்படி ஆசிரியர் அருள் ரமேஸ் ஓவியம் பயிலும் மாணவிகளுக்கு அப்பணத்தின் மூலம் சிறப்புப் பயிற்சிகளை வழங்கினார். உடுவில் மகளிர் கல்லூரியில் பயிலும் 30 மாணவிகளின்  ஓவியங்கள் கொழும்பு ரிடிசி பெரேரா ஆர்ட் கலரியில் காட்சிப்படுத்தப்பட்டன. அதிபர் சிராணி, ஆசிரியர் அருள் ரமேஸ் ஆகியோருடன் 150 பெற்றோர் ஓவியக்கண் காட்சிக்காக கொழும்புக்குச் சென்றனர்.

யுத்தத்தின் போது குண்டுவீச்சில் வீடு அழிந்து நிலத்தில் பாரிய பள்ளம் உண்டானது அதனை செப்பனிட்டு ஆர்ட் கலரி உருவாக்கப்பட்டது. ரி.பி. ஹண்ட் மெமோரியல் ஆர்ட் கலரியில் கடந்த ஒரு வருடத்தில் பாடசாலை மட்டத்திலான மாகாண, மாவட்ட கண்காட்சிகள் நடைபெற்றன. அங்கு பயிலும் மாணவர்களும் தமது ஓவியக்கண்காட்சியை அங்கு நடத்தினர். யாழ்ப்பாணத்தின்  பிரபலமான ஓவியர்கள் ரி.பி. ஹண்ட் மெமோரியல் ஆர்ட் கலரியில் தம் ஓவியக்கண்காட்சியை நடத்தினர். ஓவியர் ஆசைராசையா, ஓவியர் சிவதாசன் ஆகியோரின் காண்காட்சிகள் கடந்தமாதம் ரி.பி. ஹண்ட் மெமோரியல் ஆர்ட் கலரியில் நடைபெற்றன. ஓவிய ஆர்வலர்களும் வெளிநாட்டவரும் கண்காட்சிகளைப் பார்வையிட்டு பெறுமதியான பணம் கொடுத்த ஓவியங்களை வாங்கிச் சென்றனர்.  தனது ஓவியம் 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதை தன்னால் நம்ப முடியவில்லை என  ஓவிய ஆசிரியை தெரிவித்தார்.  ஓவியத்துக்குத் தேவையான வர்ணம்,தூரிகை போன்றன அங்கு  விற்பனை செய்யப்படுகிறது. கொழும்பில் இருந்து அவற்றை வரவழைத்து இலாபம் இல்லாமல் விற்பனை செய்கிறார்கள்.

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா,முள்ளிவாய்க்கால்,தீவகம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் வருமானம் குறைந்த  பிள்ளைகளின் படிப்புக்காக தன்னாலான உதவிகளை யோகமணி செய்து வருகிறார். தென்.மராட்சி பாடசாலை மட்டத்தில் ஓவியப்போட்டிகளை நடத்தி பரிசு வழங்கி ஓவியத்தின் மீதான ஆர்வத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதில் யோகமணி முன்னிலை வகிக்கிறார்.
ரி.பி.தோமஸ் ஹண்ட் ஓவிய ரென்பது அங்குள்ளவர்கள் சொல்லித்தான் தனக்குத் தெரியும் என்க்றார் யோகமணி. ஆட்சிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச ஓவியக்கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும் என்பது யோகமணியின் ஆசை.Sunday, November 3, 2019

அ.தி.மு.கவின் வெற்றிக்கு உரிமைகோரும் கூட்டணித் தலைவர்கள்


விக்கிரவாண்டி,நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமோக  வெற்றி பெற்றது. ஜெயலிதாவின் மறைவுக்குப் பின்னர் எடப்பாடியின் தலைமையில் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் பெற்ற முதல்  வெற்றி இதுவாகும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் வசம் இருந்த விக்கிரவாண்டியையும், காங்கிரஸின் கையில் இருந்த நாங்குநேரியையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியதால் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விக்கிரவாண்டியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக புகழேந்தியும், நாங்குநேரியில் காங்கிர வேட்பாளராக ரூபி மனோகரனும் அறிவிக்கப்பட்டபோதே எதிர்ப்பு கிழம்பியது. அவர்கள் இருவரும் வெளியூரைச் சேர்ந்தவர்கள். தொகுதியில் கட்சிப்பனி ஆற்ருபவர்கலைப் புறந்தள்ளி வெளியூரைச் சேர்ந்தவர்களை வேட்பாளராக்கியதே முதல் கோணலாகியது  அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களான முத்தமிழ்ச்செல்வன், நாராயணன் ஆகிய இருவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள். பாரதீய ஜனதா, அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்ருக்கு எதிரான அலை இருப்பதால் வெற்றி பெற்று விடலாம் என திராவிட முன்னேற்றக் கழகமும்,. காங்கிரஸும் நம்பின.

கூட்டணிக் கட்சிகள் அனைத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் இறக்கியது. திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றவில்லை. ஸ்டாலினும் மகன் உதயநிதியும் கலந்துகொண்ட கூட்டங்களில் மக்கள் அதிகளவு கூடினார்கள். ஆனால், எதிர்பார்த்த வாக்கு கிடைக்கவில்லை. கனிமொழி, திருமாவளவன் போன்றவர்கள்  பிரசாரம் செய்யவில்லை. விக்கிரவாண்டியில் எடப்பாடிக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான  போட்டி கடைசி நேரத்தில் ராமதாஸுக்கும் ஸ்டாலினுக்கும் எதிரான  போட்டியாக மாறியது. வன்னியரின் வாக்குக்காக இருவரும் பகீரதனப் பிரயத்தம் செய்தனர். வன்னியருக்கு எதிரான பொன்முடியின் நிலைப்பாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு காரனமானது.

 கடந்த தேர்தல்கலில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான வாக்குகளை கமலும் தினகரனும் பங்குபோட்டனர். இந்தத் தேர்தலில் அந்த வாக்குகள்  மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சென்றன. இடைத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான தேர்தல் அல்ல என்பதால் ஆலும் கட்சிக்கு மாக்கள் வாக்களித்தனர். வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயதால் ஆளும் கட்சி மக்கலைக் கவனித்தது.
இடைத்தேர்தலின்  வெற்றிக்கு  உரிமைகோரி ராமதாஸ் அரிக்கை வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கையில் எடப்பாடியின்  பெயர் இல்லை. விஜயகாந்த் காரில் இருந்து கை அசைத்ததால்தான் இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  வெற்றி பெற்றது என பிரேமலதா பெருமிதம் கொண்டார். எங்கள்ல் பிரசாரத்தால் தான் வெற்றி கிடைத்ததென பாரதீய ஜனாவின் சார்பில் பொன்னார் மார் தட்டினார். உள்ளூராட்சித் தேர்தலுக்காக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள்  இப்போதே துண்டு விரித்துள்ளனர்.

இடைத்தேதலின்  வெற்றிக்கு கூட்டணிக்கட்சிகள் அனைத்தும் தான் காரணம் என எடப்பாடி பழனிச்சாமி பட்டியலிட்டார். இந்த வெற்றியினால் எடப்பாடியின் கை ஓங்குகி உள்ளது. பன்னீரின் பலம் குறைந்துள்ளது. விஜயகாந்தின் வீட்டுக்குச் சென்ற வி.சி.சண்முகம் இடைத்தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் ராமதாஸின் குரலே  ஓங்கி ஒலித்தது. ஆனால், விஜயகாந்தின் வீட்டுக்குச் சென்று நன்றி சொன்னதன் அரசியலை ராமதாஸ் உணர்ந்திருப்பார். உள்ளூராட்சித்தேர்தலின்போது உரசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

Monday, October 28, 2019

விருப்பமில்லாதவருக்கு எதிராக வாக்களிக்கும் நிலையில் உள்ள மக்கள்


தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய நாடு. அவர்தம் பாட்டனும் முப்பாட்டனும் கோலோச்சிய நாடு. ஒல்லாந்தரும் போத்துக்கேயரும் அழிக்க முயன்ற நாடு,  பிரிடிஸ்காரன்  பிரித்து வைத்தநாடு உலகில் உள்ள நாடுகளைப்போல் ஜனநாயகக்கடமை எம் நாட்டிலும் நடைபெறுகிறது. ஆனால், தம் அரசாங்கத்தைத் தேர்வு செய்யும் உரிமை இலங்கையில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு இல்லை. இலங்கை என்பது நம் தாய்த்திருநாடு என்பது அந்தப் பாட்டுடனே கடந்துபோய்விட்டது.

ஒருநாடு இரண்டு பெயர்கள். இலங்கை என்கின்றனர் தமிழர்கள்.சிங்களவர்கள்  ஸ்ரீலங்கா எனக் கூறுகின்றனர்.  இலங்கை சுதந்திரமடைந்து  71 ஆண்டுகளாகின்றன. 47 வருடங்களாகத் தாம் விரும்பிய அரசாங்கத்தை தமிழ் மக்கள் அமைக்கவில்லை.  தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆதரவளித்து சிங்களக் கட்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே தமிழர்கள் எடுத்தனர். அதனைக் கண்டு சிங்களத் தலைவர்கள் யாரும் வருந்தவில்லை. அதனையே தமது வாக்கு வங்கிக்குப் பயன் படுத்திக்கொண்டார்கள்.

இலங்கையில் தலை நிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்வை  சிங்களம் மட்டும்,தரப்படுத்தல்,விகிதாசாரம்  போன்றவை முட்டுக்கட்டைகளாக முடக்கின. சிங்களம்  பெளத்தம் என்பனவற்றுக்கு அரசியலமைப்பு முன்னிலை கொடுத்ததால் தமிழ் மக்களின் வாழ்வு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டது. இலங்கை  சுதந்திரமடைந்தபோது சிங்களத் தலைவர்களும், தமிழ்த் தலவர்களும்  ஒற்றுமையகச் செயற்பட்டனர். ஆட்சி அதிகாரப்போதை தலைக்கேறியதால் சிங்களத் தலமைகள் தமிழர்களை உதாசீனம் செய்யத்தொடங்கியது.  தமக்குரிய அங்கீகாரத்தையும் உரிமைகளையும் கேட்டுப்போராடி வெறுப்படைந்த தமிழ்த்தலைமைகள் தனிநாட்டுக்கோஷத்தை முன்வைத்தன. அதனை வேத வாக்காக ஏற்றுக்கொண்ட வடக்கு கிழக்கில் வாழும்  தமிழ் மக்கள்  47 வருடங்களாகத் தமக்குரிய அரசாங்கத்தைத் தேர்வு செய்யவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் மாறிமாறி இலங்கையை ஆட்சி செய்தபோதும்  வடக்கு, கிழக்கில் அவற்றால் ஆழமாகக்கால் ஊன்ற முடியவில்லை. ஆனாலும், விகிதாசாரத் தேர்தல் முறையால் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் சிங்களத்தலைமைத்துவக் கட்சிகள் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெறுகின்றன. பிரிந்திருந்த தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாகி  தமிழீழம் என்ற  கோரிக்கையுடம் தேர்தலில் போட்டியிட்ட போது  வடக்கு கிழக்கு தமிழர்கள் ஆதரித்தார்கள். பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் கட்சியாக அங்கீகாரம்  பெற்றது.

எந்தச் சூழ்நிலையிலும் சிங்கள அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுக்கக்கூடாது என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடு. ஆட்சி மாற்ற அரசியலில் சிக்குண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ரணிலின் அரசைக் காப்பாற்றியது. அரசியல் கைதிகள் விவகாரம், இராணுவத்தின் வசமுள்ள காணி விடுவிப்பு, காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறியமுடியாத நிலை என்பனவற்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது தமிழ் மக்கள்   வெறுப்படைந்துள்ளனர். அடுத்துவரும் தேர்தலில் கூட்டமைப்பின் பலம் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்கமுடியாதுள்ளது. சம்பந்தன்,மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளும் வெறுப்பான விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் தகுதியான ஒரு தலைவரைத் தெரிவு செய்ய முடியாத நிலை உள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் காரணமாக இலங்கை அரசியல்  களம்   சுறுசுறுப்படைந்துள்ளது. பிரதான கட்சிகள் தமது வேட்பாளரை களத்தில் நிறுத்தியுள்ளன. சுயேச்சைகளும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். தமக்கு விருப்பமான ஒருவரைத் தேர்வு செய்யும் நிலையில் தமிழர்கள் இல்லை. இலங்கையின் ஜனாதிபதியாக யார் வரக்கூடாது என்பதைத் தீமானிப்பவர்களாக தமிழர்கள் இருக்கிறார்கள். இந்த உண்மை சிங்களத் தலைமைகளுக்கும் நன்கு தெரியும்.

சமாதானம் என்ற கோஷத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க முதலில்   போட்டியிட்டபோது சமாதானத்தை விரும்பிய தமிழர்கள் அவருக்கு வாக்களித்தனர். சமாதானப்பறவையை வல்லூறு விரட்டியது. அதன் பின்னர் ஜனாதிபதி தேர்தல் மீதான ஆர்வம் தமிழ் மக்கள் மத்தியில் இல்லாமல் போனது. சரத் பொன்சேகாவும், மஹிந்த ராஜபக்‌ஷவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது மஹிந்தவுக்கு எதிராக அதிகமான தமிழ் மக்கள் வாக்களித்தார்கள்.  புலிகளை அழித்த  போரின் வெற்றி அவரை ஜனாதிபதியாக்கியது. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியும் மஹிந்தவும் முட்டி மோதியபோது மீண்டும் மஹிந்தவுக்கு எதிராகவே தமிழர்கள் வாக்களித்தனர்.

மைத்திரியின் அரசியல் பின்புலம் அவருடைய கொள்கை என்பனவற்றின்மீது  தமிழ் மக்கள் அதிக நம்பிக்கை வைத்தனர். நல்லிணக்கம் எனும் சொல் மயங்கவைத்தது. அரசியல் சதுரங்கத்தில் சிக்கிய ஜனாதிபதி மைத்திரியின் மீதான நம்பிக்கை சிதறியது.  அரசியல் எதிரிகளின் சவால்களை முறியடிப்பதிலேயே  தனது ஆட்சிக்காலத்தை முடிக்கிறார் ஜனாதிபதி மைத்திரி. மீண்டும் ஒரு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தமிழ் மக்கள் தயாராகிவிட்டார்கள். இப்போது மஹிந்த வின் இடத்தில் அவரது சகோதரர் கோதபாய. சகோதரரை ஜனாதிபதியாக்கி தான் பிரதமராவதே அவரது இலக்கு. ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு எதிராக ஜனாதிபதி களத்தில் நிற்பவர் சஜித்  பிரேமதாச.

பண்டாரநாயக்க குடும்பத்தின் கைகளில் இருந்த இலங்கை அரசியல் இப்போது ராஜபக்‌ஷ குடும்பத்தின் கைகளுக்குச் சென்று விட்டது. அவர்களை எதிர்ப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி  பிரேமதாசவின் வாரிசான சஜித் தயாராகிவிட்டார். இலங்கையின் ஜனாதிபதியாக யார்வெற்றி பெற்றாலும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் எவையும் தீர்க்கப்பட மாட்டாது என்பது  உண்மை.

Monday, October 14, 2019

கடவுளின் குழந்தைகள்


அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது"
என்பது ஒளவையார் பாடல்
இதன் பொருள் யாதெனில், உலகில் மிகவும் அரியது எது என்றால், மானிடராகப் பிறப்பது தான் அரியது. மானிடராகப் பிறந்தாலும் கூன்,குருடு, செவிடு முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது.
எதைய்யா குறை அங்கத்தில் இருக்கும் குறையா இல்லவே இல்லை. பல நிலைகெட்ட மனிதர்களின் நெஞ்சத்துக் கண் இருக்கும் கறையே உலகின் மிகப்பெரும் குறை. அந்தக் குறையை உள ரீதியாக  சிந்திக்க வைத்தவர்கள் வாய் பேசமறுத்த, காது கேட்க மறுத்த மாற்றுத் திறனாளிகள்.
ஐம்புலன்களில் ஏதாவது ஒன்றின் சீரிய இயக்கம் மறுக்கப்படும் போதே குறைகள் ஏற்படும். அது உடலியல் ரீதியான குறை. இறைவன் முழுமையானவன் அந்த முழுமையிலிருந்தே மானுடர்களாகிய நாம் தோன்றியுள்ளோம். இருப்பினும் இத்தகைய மாற்றுத்திறனாளிகளினதும், விசேட தேவை உடையவர்களினதும் பிறப்பானது இறைவன் குறித்த எண்ணக்கருவில் முரண்பாட்டை ஏற்படுத்தும்..


ஆனால், இறைவன் ஒன்றை கொடுக்க மறுத்தால் நிச்சயம் நமது வாழ்க்கையை வளப்படுத்த இன்னொரு திறனை அள்ளி வழங்கியிருப்பான்.
இந்த வார இறுதி நாட்கள் வதிரி டைமன்  மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளான வாய் பேசமுடியாத காது கேட்க முடியாதவர்களின் கிரிக்கட்,உதைப்பந்தாட்ட போட்டிகள்  நடைபெற்றன.
. வடமராட்சி செவிப்புலனற்றோர் விளையாட்டுக் கழகத்தின் 7ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் . வடமராச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்து வருகை தந்திருந்தனர். கிரிக்கெற்,உதைபந்தாட்டம் ஆகியவற்றின் விதிகள் அனைத்தும் அவர்களுக்குத் தெருந்திருந்தன. கிறிக்கெற்ரில் வடமராட்சி சம்பியனாகியது. உதைபந்தாட்டத்தில்  மட்டக்களப்பு சம்பியனாகியது. இருதிப்போட்டி முடிந்ததும் மைதானத்தில் தமது சீருடையைக் கழற்றி தலைக்கு மேலே சுழற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.சிறந்த உதைபந்தாட்ட வீரன், சிறந்த கோல்காப்பாளர், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர் போன்ற விருதுகளும் வழங்கினார்கள்.
ஃபேஸ்புக், வட்ஸப், வைபர், வீடியோ   போன்றவை அவர்களுக்கு   கைகொடுக்கின்றன. தமது தொடர்பாடல்கள் அனைத்தையும் போனில் உள்ள வீடியோ மூலம்  மேற்கொள்கிறார்கள். நேரடி ஒளிபரப்புச் செய்கிறார்கள்.

இவர்களைக் கொண்டு எம்மை நாமே மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். காரணம் மைதானத்தில் என்ன நிகழ்வு நடந்தாலும் மைதானம் சுத்தமாகிறதோ இல்லையோ எமது வீட்டை பழைய நிலைக்கு கொண்டு வர இரண்டு நாட்களேனும் தேவை.
ஆனால், கடவுளின் குழந்தைகள் இவரகளிடமிருந்து நாம் கற்க வேண்டிய பண்பாடும், மனிதத்துவமும் அளப்பரியது. அவர்களைப் பார்க்கும் போது அவர்களின் பழக்கவழக்கத்தைப் பார்க்கும் போது ஐந்து புலன்களும் சீராக இயங்கி அதைத் தீய வழியில் வழி நடத்துவதை விட இவர்களின் வாழ்க்கை இறைவனுக்கு மிக அருகில் இவர்களை இருத்தி வைத்துள்ளது போல உள்ளது.
மானுடராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மாஇல்லை இல்லை மனிதப்பண்புடன் பிறக்கவே மாபெரும் தவம் செய்திருக்க வேண்டும். புலன் குறையாக இருப்பினும் அவர்கள் நிறைவானவர்கள், அவர்களது திறன்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.
அவர்கள் வீட்டிற்கு  வரும் ஒவ்வொரு நேரமும் மெதுவாக கேட்டைத் திறந்து மெதுவாக பைப்பைத் திறந்து தண்ணி அருந்திவிட்டு கேட்டை பூட்டிவிட்டு சென்றார்கள்

 சுத்தத்தை அவர்களிடம் காணக்கூடியதாக இருந்தது. மைதானத்தில் தாம் பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் அப்புறப்படுத்தினார்கள். மைதானத்தில் பரிமாறிய உணவுப் பொருட்களின் தட்டுகள் வன் டே கப் அனைத்தையும் உடனுக்குடனேயே அப்புறப்படுத்தினார்கள்.
தாம் உண்ட உணவுப் பொதிகளைக் கூட காணி ஒன்றினுள் இட்டார்கள். இவ்வளவு ஏன் விளையாட்டு முடிந்ததும் சுத்தப்படுத்தி வந்த குப்பைகளை   அனுமதி கேட்ட பின்னரே   எரித்துவிட்டு சென்றார்கள்.
என்ன இல்லை அவர்களிடம் இறைவன் அவர்கள் கூடவே தான் இருக்கிறார். என்ன ஒரு பண்பாடு பழக்க வழக்கம். அவர்களை மெச்ச வார்த்தைகள் இல்லை.
 அவர்களிடமிருந்து என்னால் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு விடயம் யாதெனில் எங்களால் ஏனையோருக்கு எந்தவொரு தீங்கும் வரக் கூடாது என்பதே.அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல. உண்மையில் திறமைசாலிகள், பண்பாட்டாளர்கள் அவர்களே. மனித்துவத்தை மறந்து இருக்கும் நாம் தான் மாற்றுத் திறனாளிகள்.
யார் யாருக்கோ எல்லாம் தட்டும் கைகளை இவர்களுக்காகவும் தட்டுங்கள். நீங்கள் கை தட்டியவர்கள் உங்களை மறந்தாலும் இவர்கள் மறக்க மாட்டார்கள். காரணம் இவர்களே மனித நேயப் பண்புடன் கூடிய மனிதர்கள்.

Tuesday, October 1, 2019

தமிழக கட்சிகளின் செல்வாக்கை நாடிபிடிக்கும் இடைத்தேர்தல்


விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் நடைபெறும் இடைதேர்தலுக்கான வேட்பாளர்களை பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன. விக்கிரவாண்டியில் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்தும், நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்தும் வேட்பாளரைக் களம் இறக்கி உள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். விகிரவாண்டி தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான ராதாமணி மரணமானதாலும், நாங்குநேரி தொகுதியின்  காங்கிரஸ் கட்சியின்  உறுப்பினரான வசந்தகுமார் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று இராஜினாமாச் செய்ததாலும் அடுத்த மாதம் 21 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபையின் ஆட்சிக்காலம்  19 மாதங்கள் மட்டுமே இருப்பதனால் பலமான வேட்பாளர்களைப் பிரதான கட்சிகள் அனைத்தும் தவிர்த்துள்ளன. அதிகளவு  பணத்தைச் செலவு செய்வதற்கும்  பின்னடிக்கும் நிலை உள்ளது. ஆனாலும்,  வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் மூன்று கட்சிகளும் உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்று இடைத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. தனது கூட்டணியின் பிரதான கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியை ஓரம் கட்டிவிட்டு இடைத் தேர்தலைச் சந்திக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகிவிட்டது.

 தமிழகத்தில் பாரதீய ஜனதாக் கட்சிக்கு எதிர்ப்பு பலமாக இருப்பதனால் இடைத் தேர்தல் பிரசாரத்தில் அக்கட்சியைக் கழற்றிவிட்டுள்ளது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இடைத் தேதலில் பிரசாரம் செய்வதற்க்கு ராமதாஸ், விஜயகாந்த்,சரத்குமார் ஆகியோரிடம் உதவி கேட்ட அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதீய ஜனதாக் கட்சியின் பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. இடைத் தேர்தல் பிரசாரத்துக்கு தமக்கு அழைப்பு வரவில்லை என முன்னாள் அமைச்சர் பொன்னார் வருத்தப்பட்டுள்ளார்.

விக்கிரவாண்டியில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மோதுகின்றன. இது ஸ்டாலினுக்கும்  எடப்பாடிக்கும் இடையேயான மோதலாக வெளிப்பார்வைக்குத் தெரிந்தாலும் பொன்முடிக்கும், சி.வி, சண்முகத்துக்கும் இடையேயான மோதலாகவே விக்கிரவாண்டியில் பார்க்கப்படுகிறது. பொன்முடிக்கு மிக நெருக்கமானவரான புகழேந்தியை விக்கிரவாண்டியில் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக்கி உள்ளது. இவர்  விக்கிரவாண்டியைச்  சேர்ந்தவரல்லாததால் உள்ளூரில் கொஞ்சம் புகைச்சல் உள்ளது.

சி.வி.சண்முகத்தின்  சொற்படி  முத்தமிழ்ச்செல்வனை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக்கி உள்ளது. வேலூரில் அடைந்த தோல்வியை சரிக்கட்ட சி.வி.சண்முகம் விக்கிரவாண்டியை கையில் எடுத்துள்ளார். விக்கிரவாண்டியின் வெற்றி பொன்முடிக்கும், சண்முகத்துக்கும் அத்தியாவசியமானதால் வெற்ரி பெறுவதற்காக இருவரும் கடும் முயற்சி செய்வார்கள். விக்கிரவாண்டியின் முன்னாள் உறுப்பினர் ராதாமணி, அந்தத் தொகுதிக்கு அதிகம் நன்மை   செய்யவில்லை என்றாலும் பொன்முடியின் உறுதிமொழிக்கு கொஞ்சம்  செல்வாக்குள்ளது.

நாங்குநேரியில் போட்டியிடுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பியது. காங்கிரஸ் அடம்பிடித்து தொகுதியை வாங்கியது. நாங்குநேரியின் முன்னாள் சட்டசபை உறுப்பினர் வசந்தகுமாரை நம்பித்தான் காங்கிரஸ் கட்சி ரூபி மனோகரனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ரூபி மனோகரன் நாங்குநேரியைச் சேர்ந்தவரல்ல என்ற குற்றச்சாட்டை அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர். உள்ளூர்காரரான நாராயணன் என்பவரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக்கியுள்ளது.

நாங்குநேரியிலும், விக்கிரவாண்டியிலும் தனக்கு விசுவாசமானவர்களையே எடப்பாடி  வேட்பாளராகியுள்ளார். ஒரு தொகுதியில் தனக்கு வேண்டியவரை வேட்பாளராக்குவதற்கு பன்னீர்  முயற்சி செய்தார். எடப்பாடியின் சதுரங்க ஆட்டத்துக்குமுன் பன்னீர் தோற்றுப்போனார். சீமானின் நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை நிருத்தியுள்ளது. இயக்குநர் கெளதமன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஆனாலும், போட்டி பிரதான கட்சிகளுக்கிடையில்தான் எனபதில் சந்தேகமில்லை.

Friday, September 27, 2019

சைவப்பெரியார் சூரன் பெருமானார்


இலங்கை சைவநெறிக் கழகமும் யாழ்ப்பாண விழாவும்

கடந்த சனிக்கிழமை ( 21 -09 - 2019) யாழ்ப்பாணம்,இணுவில் அறிவாலயம் மண்டபத்தில் வெகுசிறப்பாக இலங்கை சைவநெறிக் கழகத்தின் இருநூல் அறிமுகவிழா நடைபெற்றது.

விழாவுக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர்களுடன் சைவஞானபானு ஆறு.திருமுருகன் அவர்களும் வருகை தந்திருந்தார்கள். பல கல்விமான்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழா புதியதொரு அத்தியாயத்தினைத் தோற்றுவித்துள்ளதென்பது எம் நம்பிக்கை. இவ்விழா சிறப்புற மூவர் முதன்மைக்காரணர். எமது கழகத்தின் காப்பாளர்களாகிய விடைக்கொடிச்செல்வர்,சைவநெறிக் காவலர் சைவத்திரு.சி.தன்பாலா அவர்களும்,கொழும்பு கதிர்வேலாயுதசுவாமி கோயில் அறக்காவலர் சைவத்திரு.கரகரத்தினம் ரகுநாதன் அவர்களும் கழகத்தின் யாழ்.ஒருங்கிணைப்பாளர் சைவத்திரு.ஜீவா.ஷஜீவனும் அவ்முதன்மைக்காரணர்.

எமது கழகத்தினால் 2018ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 7ம் நாள் சைவம்போற்றுதும் விழா வெகுசிறப்பாக கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. அதுவே எமது அமைப்பின் முதலாவது விழாவாகும். இலக்கியத்தையும் பண்பாட்டையும் சைவசித்தாந்தத்தையும் இணைக்கும் கந்தபுராணப்பாரம்பரியத்தின் நீட்சியாக, சைவவிழாவாக இவ்விழா திகழ்ந்ததென்பதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்காதென்பது திண்ணம். அனைவராலும் பாராட்டப்பட்ட இவ்விழாவினைத் தொடர்ந்து, எமது இருநூல் வெளியீட்டுவிழா கொழும்பில் நடைபெற்றது. இவ்விழா, எமது ஒழுக்கமைப்பில் ஒரு சறுக்கலாகவே இருந்ததென்பது உண்மை. விழாவின்போது எமது கைகளில் வெறும் 20 புத்தகங்களே இருநூல்களிலும் கிடைத்திருந்தன. எனவே முதன்மை,சிறப்பு விருத்தினர்களுக்கு மாத்திரமே கையளிக்கக்கூடியதாகவிருந்தது.விழாவின்போது அச்சகத்தாரால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டுவிடுமென்ற உத்தரவாதம், இறுதியில் பலிக்காமல்ப்போய்விட்டது.எனினும், விழாவில் கலந்துகொண்ட பேச்சாளர்களின் தரமான உரைகள், விழாவின் தரத்துக்கு மகுடமாய் விளங்கியதெனலாம்.
அதனைத்தொடர்ந்துஇ எமது கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்ற இருநூல் அறிமுகவிழாவில் கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்களுடன் பலகல்விமான்கள் கலந்துகொண்டனர். அவ்விழாவும் சைவம்போற்றுதும்போல் ஓர்வெற்றிவிழாவாகவே அமைந்திற்று. அவையில் 110 பேர் குறைந்தபட்சம் கலந்துகொண்டதை உறுதிப்படுத்திக்கொண்டோம். அதிலும் விழாமுடியும்வரை அனைவரும் இருக்கையைவிட்டு எழும்பாது,இலயித்திருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. இலங்கையின் மட்டக்களப்பு,மலையகம்,யாழ்ப்பாணம் என்னும் பலபிரதேசங்களின் சங்கமாக எமது அமைப்புத் திகழ்வதை முதன்மை,சிறப்பு விருந்தினர் கொண்டாடினர். சைவத்திற்கு நடந்துவரும் கேடுகளை பல்கலைக்கழகப் பெருந்தகையினர் உணர்ந்துகொண்டு,மாற்று உபாயகங்களைக் கைக்கொள்ளவேண்டியதன் அவசியத்தினை வெளிப்படுத்தினர். இன்றுவரை அதற்குரிய பணிகளை அவர்கள் முன்னெடுப்பதாக, நம்பிக்கையூட்டிவருகின்றனர்.

இவ்விழாவினைத் தொடந்து  யாழ்ப்பாணத்தில் இருநூல் அறிமுகவிழா கைக்கெட்டியது. யாழ்ப்பாணத்தில் ஏறத்தாழ 50 பேரே விழாவுக்கு வருகை தந்திருந்தனர். ஆனால் வந்திருந்த அனைவரும் கனதியானவர்களென்பதில் மாற்றுக்கருத்தில்லை. நாம் குறைந்தபட்சம் 40 பேர்வரையே அவைகூடும் என்று அனுமானித்திருந்தமையால்  ஏற்கனவே இதுபோன்ற நூல்வெளியீட்டு விழாக்களுக்கு அன்புக்கட்டளைகளால் ஆட்களை இழுத்துவருகின்ற பழக்கமே தற்சமய யாழ்ப்பாண வழக்கமாக இருக்கின்றதென்ற அங்குள்ள பெரியவர்களின் விழாவுக்கு முன்னைய அனுபவப்பகிர்வுகளினால்  கூட்டத்திற்குரிய எண்ணிக்கை- திருப்திகரமானதேயாகும்.
ஸ்மார்த்தத்தின் பிடிக்குள் வீழ்ந்துகொண்டிருக்கும் சைவத்தினை மீட்டெடுத்து இளைஞர்களின் தோளில் ஏற்றவேண்டுமென்று கனவுகாணும் இளைஞர்கள் சிலரும் தாமே முகநூலினூடாக அறிந்து  அவைக்கு வந்திருந்தமை இரட்டிப்பு மகிழ்ச்சியை ஊட்டியது.

இவ்விழா இருநிகழ்வுகளை பிரதானமாகக் கொண்டிருந்தது.
1. நூல் அறிமுகம்
2. இந்துவெனும் பெயரில் சைவத்தை வீழ்த்தி  அசுர வளர்ச்சிகண்டுவரும் ஸ்மார்த்தம்.
நூல் அறிமுகத்தில். சிவப்பிரகாசககதவம் நூல் அறிமுகவுரையை ஆற்றுவதற்கு தயாராகவிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளரின் உறவினர் தவறிவிட்டமையினால்  அவரால் கலந்துகொள்ளமுடியாத இயலாமைக்குள் உள்ளாயினார். எனினும் திருவருட்துணையால் விரிவுரையாளர் சைவத்திரு.ஜெயந்திரன் அவர்கள் முன்வந்து  வெறுமனே 15 நிமிடத்தயார்ப்படுத்தலில்  சிறப்புரையை வழங்கினார். உண்மையில் இவ்விழாவில் அவருக்கு பேசவேண்டுமென்று நான் அவரிடம் கடந்தவருடமே கதைத்திருந்தேன்.எனினும் அது நேரப்பிரச்சினைகளால் விழாத்திட்டமிடலில் சித்திக்கவில்லை.ஆனால்  கொடுத்த வாக்கைத் தவறிவிட்டோம் என்னும் மனவருத்தம் அடிநெஞ்சுக்குள் இருந்தவாறேயிருந்தது. ஈற்றில்  திருவருள் அவரையே சிவத்தைப் பிரகாசிக்க நியமித்தமை எம்மை வியப்புள் ஆழ்த்திற்று. திருவருள் நிச்சயம் உண்டு!!!!!!!
அலகிலா ஆடல்-சைவத்தின் கதை நூல் அறிமுகவுரையும் அற்புதமாக நிகழ்த்தப்பட்டது. காரசாரமான கருத்துப்பகிர்வுகளுடன் கூடிய பொதுச்செயலாளரின் ஏற்புரை- ஒரு கந்தபுராண அரங்கேற்றத்தின் காட்சியை கண்முன்னே கொணர்திற்று.
ஸ்மார்த்த இந்துத்துவம்  சைவசமயத்தின் கொடிமுதல் கோயில்வரை செய்துள்ள சீரழிப்புக்களையும் ஸ்மார்த்தம்-சைவம் வேறுபாடுகளையும் பட்டியலிட்டு நாம் நடத்திய  கணினி அரங்களிக்கை நிகழ்ச்சி - அவையோரை விழிப்புக்குள்ளாக்கியதென்பதில் நம்பிக்கையுண்டாயிற்று. எமது அரங்க அளிக்கையை முடித்ததும்  அவையிலிருந்து ஒருவர் எழும்பினார். ஒருநிமிடம் கதைக்கலாமோ என்று வினாவினார். எதிர்ப்புக்குரலோவென்று யோசித்தவாறு அனுமதித்தோம். "இங்குள்ள பெருந்தகைகள் நினைத்தால் சைவத்தைக் காப்பாற்றலாம்" என்று கூறி  இப்படியொரு அரங்க அளிக்கையை நடத்தி உண்மைகளை இங்குள்ளவர்கள் உணருமாறு வழியேற்படுத்தியமைக்கு நன்றியென்று கூறினார். சைவத்தின் மகுடமென்று இணுவிலுக்கு ஒருபெயருண்டென்று கேள்விப்பட்டுள்ளேன்.ஆனால்  அவையே அவருக்குக்கொடுத்த கரகோசத்தில் அது உறுதியாயிற்று.கண்ணாரக்கண்டேன்.

எம் அரங்க அளிக்கையின் பின்னர்  சைவஞானபானு அவர்கள் சைவத்தினைக் காப்பதற்கு முதலில் செய்யவேண்டியவையென்று பல நடைமுறைச்செயற்திட்டங்களைக் கூறினார். அவற்றை இலங்கை சைவநெறிக் கழகம் ஏற்கனவே முன்னெடுத்துவருகின்றமையை சைவப்புலவர் சைவநெறிச்செம்மல் செல்லத்துரை ஐயா அவர்கள் அவைக்குத் தெளிவுபடுத்தியதோடு குழந்தைக்கு உயிர் இருந்தால்த்தான் அது தவழ நடக்கப்பழக்கமுடியுமென்பதையும்-உயிரில்லாத குழந்தைக்கு தவழ,நடக்கப்பழக்குவதில் பயனில்லையென்பதையும் உணருமாறு நல்லுரையொன்றை ஆற்றினார்கள். சைவத்தின் தத்துவம்,தனித்துவம் காத்தாலத்தான், சைவசமயத்தின் ஏனைய விழுமியங்களைக் கட்டமைக்கமுடியுமென்பதற்கு நாவலரின் பணிகளிலிருந்து நாம் தெளியலாம். சைவம் அழியாதென்று கொடுக்கும் நம்பிக்கைகளெல்லாம்  இலங்கையைத் தமிழர் ஆளலாமென்று சேர்.பொம்.அருணாசலம்கொடுத்த நம்பிக்கையை ஒத்ததேயென்பதை அவையோர் உணர்ந்திடவேண்டுமென்று எண்ணிய எமக்கு  சைவநெறிச்செம்மல் அவர்களின் உரை திருப்தியாக்கிற்று.
பல்கலைக்கழக சமஸ்கிருதப்பீடத்தலைவர் சிவத்திரு. பாலகைலாசநாத ஐயர் அவர்கள், "எம்மைச் சிந்திக்கத்தூண்டியுள்ளது" என்று உரையாற்றினார்கள். அவரது உரை திருவருள் சைவத்தைக் கைவிடாது என்பதன் வெளிபாடாகவிருந்தது. முதுநிலைப்பேராசிரியர் வேதநாதன் ஐயா அவர்கள் ஆற்றிய உரையும்  அவர் எம்முடன் தனிப்பட்டரீதியில் கதைத்தவிடயங்களும்- இலங்கை சைவநெறிக் கழகம் சரியான பாதையில் நடப்பதால்- தடைகளும் இடர்களும் ஏராளம் சந்திக்கவேண்டியிருக்கும் என்னும் அவர்தம் அனுபவத்தினை எம்முள் விளைக்கச்செய்திற்று.

இவ்விழாவில், சிவபூமிச் சைவமுதலிகள்,தேசிகர்,தாதையர் பிரகடனத்தில் தங்கம்மா அப்பாக்குட்டியார் போன்ற பெருந்தகையினர் சேர்க்கப்படவில்லையென்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. இங்கு சைவக்கற்புக்கு பங்கமில்லாது வாழ்ந்தார் மட்டுமே பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பதை இலங்கை சைவநெறிக் கழகம் வெளிப்படுத்தவிரும்புவதோடு பல சைவக்கற்புடை பெரியார்கள் இப்பிரகடனத்தில் உள்ளடக்கப்படாமைக்குக் காரணம் - அவர்களெல்லோரும் இப்பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டவர்களின் பணிகளைத் தொடர்ந்தோரேயொழிய-தொடக்கியவர் அல்லர் என்பது பொருட்டாகும். இவைபற்றி விரிவான உரையாடல்களுக்கு இலங்கை சைவநெறிக் கழகம் தயாரகவேயுள்ளது. ஏற்கனவே வேளாளர்களாலும் சிவப்பிராமணர்களும் மட்டுமே சைவப்பெரியார்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இலங்கைச்சைவ சமூகத்தில்  அவர்கள் மட்டுமே பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்  சைவப்பெரியார் சூரன் பெருமானாரைப் பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளாமைபற்றி வருந்துவதற்குப்பதில்  சைவப்பாடப்புத்தகங்களில் இணைக்கப்பட்டுள்ள தங்கம்மா அப்பாக்குட்டியார்  இப்பிரகடனத்தில் இல்லையென்று வெளிவந்த வருத்தம்- எமக்குப் பெரும் ஏமாற்றமேயாகும்!!!! இணுவிலில் அனுபட்ச ஆஞ்சநேயர் தனிக்கோயிலுக்கு வித்திட்ட தங்கம்மா அப்பாக்குட்டியாருக்கும் அனுபட்சக்கோயிலில் நடந்துவந்த மிருகபலியை தம்முயிரைத் தியாகம்செய்யவெளிக்கிட்டுத் தடுத்துநிறுத்தி சம்புபட்சக்கோயிலாக மாற்றிய சைவப்பெரியார் சூரன் பெருமானாரும் ஒரேதாராசில் வைத்து அளக்கப்படக்கூடியவர்கள் அல்லர்!!!! ஆதலாலேயே பிரகடனத்தில் இல்லை!

விழா முடிந்ததும் எமது கழகத்தின் உறவுகள் "அண்ணா நீங்கள் பலருடைய எதிர்ப்பை சம்பாதிக்கின்றீர்களே.......எங்கள் கழகத்தினை வளரவிடுவார்களா???'' என்றனர். அதைத்தான் முதுநிலைப் பேராசிரியர் வேதநாதன் பெருமானாரும் எமக்கு அறிவுறுத்தியிருந்தார் என்று அவர்களிடம் கூறிவிட்டு எல்லாம் திருவருட்சம்மதம் என்றேன்!!!!!
மருத்துவர்.சைவத்திரு.கி.பிரதாபன்
தலைவர். இலங்கை சைவநெறிக் கழகம்